Verified Web

தேர்தலை நோக்கிய ஆவேச பேச்சுக்கள்

2018-07-06 03:45:23 Administrator

சஹாப்தீன் 

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் காலத்திற்கு காலம் ஆட்சி அமைக்கும் பெரும் தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருப்பதனை நாம் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு வருகின்றோம். அமைச்சர் பதவிகளுக்காகவும், வேறு சொகுசு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் என்ற பேரில் பணம் சம்பாதித்துக் கொள்வதற்காகவுமே அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான தேவைகளுக்காக அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்கள், நாங்கள் சமூகத்திற்காகவே அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக்  கொள்வதற்கும் வெட்கப்படுவதில்லை.

முஸ்லிம் கட்சிகளினது தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்கள் வரை முஸ்லிம் சமூகத்தின் தேவைக்கும், உரிமைக்கும் முன்னுரிமை கொடுப்பதில்லை. அரசாங்கத்தினாலும், பேரினவாதிகளினாலும், இனவாதிகளினாலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செய்யப்படும் தீங்குகள் யாவற்றையும் முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பொறுத்துக் கொண்டு இருக்குமாறுதான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்திற்காக குரல் கொடுத்து அரசாங்கத்தின் பொல்லாத பார்வைக்கு ஆளாகி விடக் கூடாதென்பதே இவர்களின் எண்ணமாகும். சமூகம் வாழ வேண்டுமென்று சிந்திக்காது தாமும், தமது குடும்பமும் வாழ வேண்டுமென்று நினைக்கின்றார்கள். இத்தகைய சிந்தனைகள் அவர்களை கோடிகளுக்கு அதிபதியாக்கியுள்ளது. ஹலால்களை மீறி சுகங்களை தடைகளின்றி அனுபவிக்க வழி ஏற்பட்டுள்ளது. அதீத பாவத்தில் உள்ளவர்களை முஸ்லிம்கள் தங்களின் அரசியல் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய தவறாகும்.

 

எதிராகப் பேசுதல்

அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் இருந்து கொண்டிருக்கும் இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளையிட்டு பேசாதிருந்தாலும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்திலும், தேர்தல் காலத்திலும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன் வைப்பதனையும், அரசாங்கத்தினை எச்சரிக்கை செய்வதனையும் வழக்கமாகக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் அரசாங்கத்தின் அனைத்துக் காரியங்களிலும் நியாயங்களை காண்பவர்களாவும், அரசாங்கத்திற்கு துதி பாடுகின்றவர்களாகவும் இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம் அரசியல் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இந்த வழக்கமான போக்கை அண்மைக் காலங்களில் அதிகமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விசனங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். ஆயினும், அண்மையில் வரக்காபொலவில் நடைபெற்ற வாழ்வாதார பொருட்களை வழங்கும் வைபவமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பற்றியும் கடும் தொனியில் பேசியுள்ளார். அதாவது, அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனால் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். வில்பத்து விவாகாரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அறிக்கையை வெளியிடவில்லை. ஜனாதிபதி அந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் இந்தப் பேச்சு சிங்கள ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. வில்பத்துக் காட்டினை முஸ்லிம்கள் அழித்துள்ளார்கள். இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் துணையாக செயற்பட்டுள்ளார். இவரைச் சிறையில் அடைக்க வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றெல்லாம் பௌத்த இனவாதிகளும், அமைப்புக்களும் தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதிலுள்ள உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காகவே ஜனாதிபதியினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆயினும், அவர் அதனை வெளியிட வேண்டும். இதிலுள்ள உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு ஜனாதிபதி தயக்கம் காட்டக் கூடாது.

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், ஐ.நாவின் நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்குமான ஆலோசகர் கீதா சப்ஹர்வால் ஆகியோர்களோடு நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது, சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டக் கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயற்பட்டிருந்தால் அம்பாறை, கண்டி இனக் கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும். வன்செயல்களுக்கு துணைபோன அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வெறுப்பூட்டும் சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, அம்பாறை, கண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற இனக் கலவரத்தை இரண்டு குழுக்களுக்கு இடையில் நடைபெற்றதொரு சம்பவமாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் இல்லாத அல்லது தேர்தல் நெருங்காத காலங்களில் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் ஏற்படும் போது அதனை திசை திருப்புவதற்காக மாற்றுக் கருத்துக்களை தெரிவித்துக் கொள்வதும், தேர்தல் காலங்களில் அல்லது தேர்தல் நெருங்கும் காலங்களில் அதே குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்திக் கொள்ளுவதும்தான் முஸ்லிம் கட்சிகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிலைப்பாடாக இருந்து கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.மன்சூர் ஆகியோர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இறக்காமம் மாயக்கல்வி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட போது அது பற்றி சரியான நிலைப்பாட்டை வெளியிட முடியாதவர்கள், அந்த சிலையை இரண்டு வாரங்களில் அகற்றுவேன் என்று ரவூப் ஹக்கீம் உறுதிமொழி வழங்கியமையை நிறைவேற்ற வேண்டுமென்று அழுத்தம் கொடுக்காதவர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

மக்களை ஏமாற்றுதல்

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினால் மட்டும் போதாது, முஸ்லிம்களின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் காலங்களில் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும், அரசாங்கத்தை கண்டித்தும் அறிக்கைவிடுவதனாலும், பேசுவதனாலும் முஸ்லிம்களுக்கு நன்மைகள் ஏற்படுவதில்லை. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் போலி உரிமைக் குரலுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் அணி திரள வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத் தருவோம், கரையோர மாவட்டத்தை பெற்றுத் தருவோம், முஸ்லிம் பிரதேசங்களை சிங்கப்பூர் போன்று மாற்றுவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியவர்கள் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பௌத்த இனவாதிகளினதும், அரசாங்கத்தினது புறக்கணிப்புக்கள் குறித்தும் முஸ்லிம்கள் எதிர்ப்புக்களைக் காட்டிய போது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை அடக்குவதற்கு பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். உங்களின் குரலாக இருந்து காணி முதல் அனைத்தையும் மீட்டுத் தருவோம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இறுதியில் ஊமை வேடம் ஏற்றுக் கொண்டார்கள்.

முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகளில் உள்ள போலித்தன்மைகளை புரிந்து கொள்ளாது நம்பிக்கை வைக்கக் கூடாது. பேருவளை, தர்காநகர் தாக்கப்பட்ட போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன் வைத்தவர்கள் அதே அரசாங்கத்திலேயே தொடர்ந்தும் இருந்தார்கள்.

இன்றைய அரசாங்கத்தின் காலத்தில் கிந்தோட்ட, அம்பாறை, கண்டி ஆகிய இடங்களில் முஸ்லிம்களின் மீது இனவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஆயினும், இன்று வரைக்கும் இந்த அரசாங்கத்தில் உள்ளார்கள்.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதனையும் செய்து கொள்வதற்கு முடியாதவர்கள் இன்று அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

விலகாதிருப்பது ஏன்?

அரசாங்கம் முஸ்லிம்களின் விவகாரங்களை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றது. பௌத்த இனவாதிகளின் தாளத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஆடிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய அரசாங்கத்தில் இன்னமும் பங்காளிகள் என்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர் என்றும் பதவிகளை வகித்துக் கொண்டிருப்பது எதற்காக? அரசாங்கம் முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றால் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும். இதனைச் செய்யாது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது முஸ்லிம்களை ஏமாற்றும் தேர்தல் கால நடவடிக்கையாகும். ஆயினும் அரசாங்கத்தின் தவறுகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்பதற்காக பொது எதிர் அணியினரை பலப்படுத்த முடியாதென்று, தாங்கள் அரசாங்கத்தில் நிலைத்திருப்பதற்கும் காரணம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதும், ஆளுந் தரப்பாக இருப்பதும் முஸ்லிம் சமூகத்திற்காக என்றிருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போது தொடர்ந்து அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசாங்கத்தினதும், பௌத்த இனவாதிகளினதும் அதர்மத்தை அங்கீகரிப்பதாகவே இருக்கும். இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதர்மத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை தாங்கள் தர்மத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதோ அல்லது எதிர் அணியினரை பலப்படுத்துவதோ நோக்காக இருக்க முடியாது. யார் பலம் பெற்றாலும், பலவீனப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே ஒரு முஸ்லிம் மக்கள் பிரதிநிதியின் எண்ணமாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக எந்த நோக்கத்தை அவர் முதன்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவரை முஸ்லிம்களின் அரசியல் தலைவராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ ஏற்றுக் கொள்ள முடியாது.

சந்தர்ப்பவாதிகள்

முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பாலும் சந்தர்ப்பவாதிகளாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக் கொண்டால் இவர்களின் சந்தர்ப்பவாதத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தார்கள். இதன் மூலம் மஹிந்தராஜபக்ஈஷவை குஷிப்படுத்தினார்கள். அதற்குரிய வெகுமானங்களையும் பெற்றுக் கொண்டார்கள். ஆட்சி மாறிய போது 18வது திருத்தத்தில் உள்ளவற்றை வலுவற்றதாக்கக் கூடிய 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள். இதற்கு வாக்களித்து அதற்குரிய கூலியைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்கும், அதன் மூலம் பக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்வதற்குமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவளித்தார்கள். உள்ளூராட்சி சபைகளின் தேர்தலின் பின்னர் தமது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை கண்டு மாகாண சபைத் தேர்தல் விகிசாரப் படி நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கலப்பு தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் சுட்டிக் காட்டிய போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கு விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்று சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் கைகளைச் சுட்டுக் கொண்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் தேர்தல் முறை மாற்றத்தின் மூலம் எப்படி இருக்குமென்று முன்கூட்டியே கணித்துக் கொள்ள முடியாதவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை கொடுக்கும் வரை முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது. தேர்தல் முறை மாற்றத்திலும் அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதும், வெகுமானங்களைப் பெற்றுக் கொள்வதும்தான் இவர்களின் கொள்கையாக இருக்கின்றது. இக்கொள்கைகளைக் கொண்டுள்ளமையால்தான் முஸ்லிம்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக அடமானம் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
-Vidivelli