Verified Web

ஊடகவியலாளர்களை அச்சுறுத்த இடமளியோம்

2018-07-05 04:08:09 Administrator

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக பாரிய தொகை நிதி­யினை சீன நிறு­வனம் ஒன்று வழங்­கி­ய­தாக அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வெளி­யாகும் 'நியூயோர்க் ரைம்ஸ்' பத்­தி­ரிகை அண்­மையில் புல­னாய்வுக் கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.

சுமார் ஒரு வருட கால­மாக இலங்­கையின் பல்­வேறு அர­சாங்க நிறு­வ­னங்கள், அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து திரட்­டப்­பட்ட ஆதாரபூர்வமான தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே குறித்த கட்­டுரை எழு­தப்­பட்­டி­ருந்­தது.

சர்­வ­தேச ரீதி­யா­கவும் உள்­நாட்­டிலும் பலத்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்ள இக் கட்­டு­ரை­யா­னது மஹிந்த தரப்­புக்கு பாரிய தலை­வ­லியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து விட­யத்தை திசை திருப்பும் வகையில் இந்த கட்­டு­ரைக்கு தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கு உத­விய உள்­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் குறி­வைத்து அச்­சு­றுத்­தல்­ வி­டுக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் தமது ஆட்சிக் காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை தாக்­கி­யமை, அச்­சு­றுத்­தி­யமை மற்றும் கொலை செய்­தமை தொடர்பில் ஏலவே குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­கொண்­டுள்ள மஹிந்த தரப்­பினர், தற்­போது எதிர்க்­கட்­சி­யி­ன­ராக இருக்­கின்ற நிலை­யிலும் இவ்­வாறு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் ஊட­கங்­க­ளையும் அச்­சு­றுத்த முனை­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

இது தொடர்பில் நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கையின் சர்­வ­தேச செய்தி பிரி­வு­க­ளுக்­கான ஆசி­ரியர் மைக்கல் சிலக்மன் நேற்று முன்­தினம் வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்கை ஒன்றில்  '' த ரைம்ஸ் செய்தி தொடர்பில் ராஜ­ப­க்ஷ­வுக்கு ஏதா­வது பிரச்­சனை இருக்­கு­மாயின் த நியூயோர்க் ரைம்ஸ் சிரேஷ்ட ஆசி­ரி­யர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றோம். இலங்கை பத்­தி­ரி­கை­யா­ளர்­களை மிரட்­டு­வ­தற்கு பதி­லாக த நியூயோர்க் ரைம்ஸ் உடன் தொடர்­பு­கொள்­ளு­மாறு நாம் கேட்­டுக்­கொள்­கின்றோம்'' எனக் குறிப்­பிட்­டுள்ளார். அத்­துடன்  ''இவ்­வா­றான நட­வ­டிக்­கையின் மூலம் இத்­த­கைய உண்­மை­யான விட­யங்­களை மூடி­ம­றைப்­ப­தற்கும் பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் இலங்கை மக்­களின் பொது­ந­லன்­க­ளுக்­கான தக­வல்­களை பெற்­றுக்­கொள்ளும் உரித்தை இல்­லாது ஒழிப்­பற்கே  இறு­தியில் வழி­வ­குக்கும். இலங்கை அதி­கா­ரிகள் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் அவர்கள் எந்­த­வொரு நிறு­வ­னத்­து­டனும் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வதை அதி­கா­ரிகள் உறு­தி­செய்­வார்கள் என்று த ரைம்ஸ் எதிர்­பார்க்­கி­றது'' என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எனவேதான் குறித்த கட்­டு­ரையின் தவ­றான தக­வல்கள் இருப்பின் அது தொடர்பில் அப் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் பீடத்­துக்கு உரிய முறையில் தெளிவு­ப­டுத்­தினால் அது தொடர்பில் ஆராய்ந்து மறுப்­பையோ விளக்­கத்­தையே பிர­சு­ரிக்க ரைம்ஸ் பத்­தி­ரிகை நட­வ­டிக்கை எடுக்கும். அதை­வி­டுத்து இத­னுடன் தொடர்­பு­டைய உள்ளூர் ஊட­க­வி­ய­லா­ளர்களை அச்­சு­றுத்­து­வது எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­தல்ல.

இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவு ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதாகும்.

அந்த வகையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மேற்படி செய்தி தொடர்பில் விசாரணைகளை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli