Verified Web

விஜயகலாவின் கருத்து ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

2018-07-04 05:13:15 Administrator

சிறுவர் பாது­காப்பு மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சரும் யாழ். மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கையில் தெரி­வித்த கருத்து தேசிய ரீதி­யாக பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

''வடக்குக் கிழக்கில் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மானால் புலி­களின் கை மீண்டும் ஓங்க வேண்டும். நாம் 2009 மே மாதம் 18 ஆம் திக­திக்கு முதல் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் காலத்தில் எப்­படி வாழ்ந்தோம் என்­பதை ஒவ்­வொரும் உணர்­வு­பூர்­வ­மாக உணர்­கின்றோம். உண்­மை­யி­லேயே இன்­றைய நிலையில் நாம் உயி­ருடன் வாழ வேண்­டு­மானால் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும். பாட­சா­லைக்குச் செல்லும் எமது பிள்­ளைகள் மீண்டும் வீடு திரும்ப வேண்­டு­மானால் வடக்கு கிழக்கில் புலி­களின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என நாம் எண்ணும் நிலை உரு­வா­கி­யுள்­ளது'' என அவர் இதன் போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஜனா­தி­ப­தியின் மக்கள் நட­மாடும் சேவை திட்­டத்தை ஆரம்­பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இக் கருத்தை அவர் முன்­வைத்­தி­ருந்தார். அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, வஜிர அபே­வர்­தன மற்றும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் , பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன், சர­வ­ண­பவன் ஆகியோர் உள்­ளிட்ட பெருந்­தி­ர­ளானோர் முன்­னி­லை­யி­லேயே அவர் இக் கருத்தை பகி­ரங்­க­மாக முன்­வைத்­தி­ருந்தார்.

இந் நிலையில் இந்தக் கருத்­தா­னது தென்­னி­லங்கை அர­சி­யலில் பெரும் களே­ப­ரத்தை உண்­டு­பண்­ணி­யுள்­ளது. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்ற அமர்வை ஒத்­தி­வைக்­கு­ம­ள­வுக்கு பெரும் சர்ச்சை வெடித்­தது. குறிப்­பாக இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான எம்.பி.க்கள் கூட இந்தக் கருத்தை வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தனர். கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்­களும் இந்த விவ­கா­ரத்தை கையி­லெ­டுத்து கார­சா­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சட்­டமா அதி­பரை அறி­வு­றுத்­தி­யுள்ளார். விஜ­ய­க­லாவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்க வேண்டும் எனும் கோரிக்­கை­களும் தற்­போது வலுப்­பெறத் தொடங்­கி­யுள்­ளன.

வடக்கில் அதி­க­ரித்து வரும் குற்றச் செயல்­களைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பி­லேயே அவர் இந்தக் கருத்தை முன்­வைத்­தி­ருந்தார். வடக்கில் குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மானால் வட மாகாண சபைக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட வேண்டும் என சில தினங்­க­ளுக்கு முன்னர் வட மாகாண முத­ல­மைச்­சரும் ஒரு கருத்தை முன்­வைத்­தி­ருந்தார். எனினும் பயங்­க­ர­வாத இயக்­க­மென முத்­திரை குத்­தப்­பட்டு, போர் நட­வ­டிக்கை மூலம் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட புலிகள் இயக்­கத்தின் கையை மீண்டும் ஓங்க வைக்க வேண்டும் என விஜ­ய­கலா முன்­வைத்த கருத்தே இங்கு பார­தூ­ர­மா­ன­தாகும்.

விடு­தலைப் புலி ஆத­ரவு சக்­திகள் குறிப்­பாக இவ்­வா­றான கருத்­துக்­களை அடிக்­கடி முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும் அது தொடர்பில் யாரும் அலட்டிக் கொள்­வ­தில்லை. ஆனால் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற வகையில் இக் கருத்து பெரும் சர்ச்­சை­யையும் வாதப் பிர­தி­வா­தத்­தையும் தோற்­று­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்­க­தொன்­றல்ல.

இக் கருத்து தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், தனது விளக்­கத்தை முன்­வைக்க கட­மைப்­பட்­டுள்ளார். இன்றேல் இந்த விவ­கா­ரத்தை பௌத்த இனவாத சக்திகள் கையிலெடுத்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் 'மீண்டும் புலிகள் வருகிறார்கள்' எனும் பிரசாரத்தை வீரியமாக முன்னெடுக்க வாய்ப்பாக அமைந்துவிடும். அது தேவையற்ற இன முறுகல்களுக்கே வழிவகுப்பதாக அமையும். இது தொடர்பில் விரைந்து விளக்கமளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே உடனடித் தேவையாகும்.