Verified Web

கண்டி: குற்றவாளிகள் தப்பிக்கிறார்களா

20 days ago Administrator

கண்டி மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இடம்பெற்ற வன்முறைகளுடன் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள அதேநேரம் அரசியல்வாதிகளும் களத்தில் நின்று வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எந்தளவு தூரம் விரைவுபடுத்தப்படும் எனும் கேள்வியை இன்று பலரும் எழுப்புகின்றனர்.

எனினும் இவ்வாறு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் சத்தமின்றி பிணையில் விடுதலை செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய கடந்த வாரமும் நான்கு முக்கிய சந்தேக நபர்கள் பிணையில் விடுதலையாகியுள்ளனர். இவர்களில் அப் பிரதேச அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

இனவாத  வன்முறைக் கும்பல் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களைத் தாக்கி தீ வைத்த சமயம் அங்கு பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிசார் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்தனர். இதற்கு ஒரு படி மேலே போய் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் நடத்தினர்.

கண்டி திகன நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து இரு மௌலவிமார் மீது பொலிசார் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் பலத்த ஆதாரமாகவுள்ளன. அத்துடன் மற்றுமோர் இடத்தில் முஸ்லிம்களின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவங்களில் பல வீடியோ காட்சிகளாகப் பதிவாகியுள்ளதுடன் இவற்றை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வீடியோ ஆதாரங்களுடன் கூடிய கடிதங்களும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் மேற்படி வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளான பொலிசார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பாரபட்சமற்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறியுள்ளதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுவரை வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கம் போல தொடராக விளக்கமறியலில் வைக்கப்பட்டே வருகின்றனர். இந் நிலையில்தான் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டையே படுகுழியில் தள்ளியுள்ள, நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ள இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை விசேட நீதிமன்றத்தில் விசாரிப்பதன் மூலமாக விரைந்து தண்டனை பெற்றுக் கொடுக்க முடியுமாகவிருக்கும்.

அந்த வகையில் விசேட நீதிமன்றப் பொறி முறை மூலம் வன்முறைகளுக்குத் துணை போன, முஸ்லிம்களை தாக்கிய படையினர் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்க வேண்டும்.

சகல முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் இதுவிடயத்தை பேசு பொருளாக்கி ஊடகங்களினதும் இராஜதந்திரிகளினதும் சர்வதேச நாடுகளதும் கவனத்தை ஈர்த்து அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும்.  தற்போதைய பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் எம்.பி.க்கள் இந்த விடயத்தை அழுத்திப் பேச வேண்டும். இவ்வாறு ஆரவாரமின்றி குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்படுவதானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை எந்தவகையிலும் உத்தரவாதப்படுத்துவதாக அமையமாட்டாது. இது பற்றி முஸ்லிம் சமூக தலைமைகளும் மனித உரிமை அமைப்புகளும் கூடுதல் கரிசனை செலுத்துவதுடன் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli