Verified Web

விழுமியங்களின் பலவீனம்

2018-06-28 05:23:30 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் மேலத்­தேய கலா­சா­ரமும், தொழில்­நுட்ப வளர்ச்­சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வரு­கின்றன. இத்­தாக்­கத்தின் கார­ண­மாக சமு­தாய ஆரோக்­கியம் பல்­வேறு நிலை­களில் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஒழுக்க விழு­மி­ய­மிக்க ஆரோக்­கி­ய­மான சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது சவா­லாக மாறி­விட்­டது. ஏனெ­னில், சிறு­வர்கள் முதல் வளர்ந்­த­வர்கள் வரை  தொலைக்­காட்சி, வானொலி, கையடக்கத் தொலை­பே­சியை, சமூக வலைத்­தளப் பயன்­பாடு என்­ப­வற்­றுக்கு அடி­மைப்­பட்டு வரு­கின்­றனர். இதனால், குறிப்­பாக சிறு­வர்கள் மற்றும் வளர்ந்­த­வர்­க­ளி­டையே விழு­மி­ய­மிக்க மனிதப் பண்­புகள் அகன்று செல்லும் நிலையில் வக்­கிர எண்­ணங்கள் அதி­க­ரித்து அவ்­வெண்­ணங்கள் செயல்­வ­டிவில் வெளிப்­ப­டுத்­தப்­படும் அங்­கீ­க­ரிக்க முடி­யாத பல சம்­ப­வங்கள் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்று வரு­வதைக் காண­மு­டி­கி­றது.

பல சிறு­வர்கள் கார்ட்டூன் பார்ப்­ப­திலும் ‘வீடியோ கேம்’ விளை­யா­டு­வ­திலும் அதிக நேரத்தை செல­வி­டு­கின்­றனர். அதே­போன்று, கட்­டி­ளமைப் பரு­வத்­தினர் பலர் கைய­டக்கத் தொலை­பேசி பயன்­பாட்­டிலும் ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’ போன்ற சமூக வலைத்­தளப் பாவ­னை­யிலும் அதிக காலத்தை செல­வி­டு­கின்­றனர். இவ்­வா­றான செயற்­பா­டுகள் பல்­வேறு சாதக மற்றும் பாதக நிலை­களை பயன்­பாட்­டா­ளர்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்றன.

தொழில்­நுட்ப பரி­ணாம வளர்ச்­சியின் ஒரு­பக்கம் மனித சமு­தா­யத்­திற்கு நல­மாக அமை­கின்­ற­போ­திலும், அதன் மறு பக்கம் பாத­க­மா­கவும் அமைந்­து­வி­டு­கி­றது. எந்­த­வொரு விட­யமும் அதன் அளவை மீறி செல்­கின்­ற­போது ஆரோக்­கி­ய­மற்ற நிலை­யையே தோற்­று­விக்கும். இத­னை­யொட்­டி­ய­தாக அதி­க­மாக வீடியோ கேம் விளை­யா­டு­வது உள­வியல் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் என்று உலக சுகா­தார ஸ்தாபனம் கடந்த வரு­டங்­களில் எச்­ச­ரித்து வந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி வீடியோ கேம் விளை­யாட்­டுக்கு அடி­மைப்­ப­டு­வதை ‘Gaming Disorder’  என்ற உள­வியல் பாதிப்­பாக வகைப்­ப­டுத்­தப்­பட்டு உலக சுகா­தார ஸ்தாப­னத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளை­யா­டு­வது நண்­பர்­க­ளையும், குடும்­பத்­தி­ன­ரையும் எரிச்­ச­ல­டையச் செய்­வ­துடன் மன­நல பாதிப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள உலக சுகா­தார ஸ்தாபனம் சர்­வ­தேச நோயியல் வகைப்­ப­டுத்­தலில் வீடியோ கேம் விளை­யாட்­டையும் உள­வியல் பாதிப்­பாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருப்­பது, எதுவும் அள­வுக்கு மிஞ்­சினால் அமிர்­தமும் நஞ்­சாகும் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தோடு வழி­காட்­டலின் பல­வீ­னத்­தையும், விழு­மி­யங்­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களும் வளர்ந்­த­வர்­களும் விலகி வரு­வ­தையும் எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

சிறு­வர்­க­ளி­னதும், கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­ன­ரதும் மித­மிஞ்­சிய செயற்­பா­டுகள் அள­வு­க­டந்து செல்­லாது தவிர்க்­கப்­பட வேண்­டு­மாயின், அவர்கள் ஆரோக்­கி­ய­மான வழி­காட்­டல்­க­ளுடன், விழு­மியப் பண்­பு­க­ளு­டனும் வளர்க்­கப்­ப­டு­வது அவ­சி­மா­க­வுள்­ளது. ஏனெனில், நாக­ரிகம் என்ற பெயரில் அநா­க­ரிகம் வெகு­வாக சமு­தா­யத்­திற்குள் ஊடு­ருவி வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இதனால், கலா­சார சீர­ழி­வுகள் ஏற்­பட்­டி­ருக்கும் இக்­கால கட்­டத்தில் முறை­யான வழி­காட்­டல்கள் ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவும் பல­மா­ன­தா­கவும் அமை­வ­தோடு பல­வீ­ன­ம­டைந்­துள்ள விழு­மி­யங்­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக விழு­மியக் கல்­விக்­கான முக்­கி­யத்­து­வமும் அவ­சி­மா­க­வுள்­ளது.

ஒரு பிள்­ளையின் சிறப்­பான வளர்ச்­சியில் சமூக முக­வர்­க­ளான பெற்­றோர்­களும், ஆசி­ரி­யர்­களும், சம­வ­யதுக் குழு­வி­னரும், சமய போத­கர்­களும் அதி­முக்­கிய பங்கு வகிக்­கின்­றனர். சமூக முக­வர்­களின் வழி­காட்­டல்கள் பல­வீ­ன­ம­டை­கின்­ற­போது, பிள்­ளை­களின் விழு­மியப் பண்­புசார் வளர்ப்பும், வளர்ச்­சியும் திசை­மா­று­வ­துடன் எதிர்­பா­ராத விப­ரீ­தங்­க­ளையும், மர­ணங்­க­ளையும் கூட ஏற்­ப­டுத்தி விடு­கி­றது.

தங்­க­ளுக்கு சாத­க­மான சூழல் அமை­கின்­ற­போது சிறு­வர்­களும், கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­னரும் விழு­மி­யங்­க­ளுக்கு அப்பால் சென்று வழி­காட்­டல்­களை மிஞ்­சிய செயற்­பாட்டை பரீட்­சிக்க முற்­ப­டு­கின்­றனர். இதனால், அவர்கள் பல்­வேறு விப­ரீ­தங்­களை எதிர்­நோக்­கு­வ­துடன் சமூக, பொரு­ளா­தார ரீதி­யிலும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­துக்­கின்­றனர். நாக­ரிகம் என்ற போதைக்குள் விழுந்­துள்ள இளம் சமு­தா­யத்­தினர் அதன் விளை­வு­க­ளையும் எதிர்­நோக்கி வரு­கின்­றனர். அண்­மைக்­கா­ல­மாக இத்­த­கைய சம்­ப­வங்கள் பர­வ­லாக இடம்­பெ­று­வதைக் காண­மு­டி­கி­றது. 

ஆரோக்­கி­ய­மற்ற சம்­ப­வங்­களும் எதிர்­பா­ராத விளை­வு­களும்

நாட்டில் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில், அதில் பங்­கா­ளர்­க­ளா­கவும் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும் சில சிறு­வர்­களும், வளர்ந்­த­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். அண்­மையில் சிலா­பத்தைச் சேர்ந்த பாட­சாலை மாணவர் ஒருவர் சக மாண­வர்­க­ளினால் தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் குறித்த மாணவர் உயிரிழந்­துள்­ள­மையும், இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட மாண­வர்கள் கைது செய்­யப்­பட்டு பின்னர் நன்­ன­டத்தைப் பிரிவில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­மையும் வீடு மற்றும் பாட­சா­லை­களில் காணப்­படும் வழி­காட்­ட­லி­லுள்ள பல­வ­வீ­னத்தைப் புடம்­போட்­டி­ருப்­ப­தோடு விழு­மியக் கல்­வியின் அவ­சி­யத்­தையும் வழி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது எனக் கருத வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன், பாலியல் வன்­கொ­டு­மைகள், வீட்டு வன்­மு­றைகள் என பல கோணங்­களில் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­வ­கின்­றனர்.  கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் சுளி­பு­ரத்தில் 6 வயது பாட­சாலை மாணவி கழுத்து இறுக்­கப்­பட்டு கொலை­செய்­யப்­பட்ட பின் கிணற்றில் வீசப்­பட்ட நிலையில் கண்­டெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வமும் இக்­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­வரின் வாக்­கு­மூலம் வளரும் சமு­தா­யத்­தினர் உள­வியல் பாதிப்­புக்­கு­ளாகி வரு­கின்­றனர் என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­துடன், மாண­வர்கள் மற்றும் வளர்ந்தோர் மத்­தியில் அதி­க­ரித்து வரு­கின்ற விழு­மி­யங்­களின் பல­வீ­னமும், விழு­மி­ய­மற்ற நடத்­தை­களும், செயற்­பா­டு­க­ளும்தான் பின்­னணி வகிக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­கி­றது. இவை ஒரு புற­மி­ருக்க, அறி­யாமல் புரி­யப்­ப­டு­கின்ற அல்­லது சூழலின் சாதக நிலை­மை­யி­னாலும், நவீன ஊட­கங்­களின் தாக்­கத்­தி­னாலும் அவற்­றுக்கு அடி­மை­யா­வ­த­னாலும் ஏற்­ப­டு­கின்ற விளை­வுகள் பெறு­ம­தி­மிக்க உயிர்­க­ளையும் காவு­கொள்­கின்­றன.

சிறு­வர்கள் வழி­த­வ­று­வ­தற்கும் பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வங்­க­ளுக்கு உள்­ளா­கு­வ­தற்­கு­மான சூழலை ஏற்­ப­டுத்­தி­விட்டு அவை ஏற்­பட்ட பின்னர் அவை குறித்து கவலை கொள்­வதில் எவ்­வித அர்த்­த­மு­மில்லை என்­பதை கவ­லை­யோடு சுட்­டிக்­காட்­டு­வது கடப்­பா­டா­க­வுள்­ளது. ஏனெனில், அண்­மைக்­கா­ல­மாக இத்­த­கைய பரி­தாப சம்­ப­வங்­க­ளினால் பல சிறு­வர்கள் மர­ணித்­துள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அதே­போன்று, கட்­டி­ளமைப் பரு­வத்­தி­னரும் வழி­காட்­டல்­களை மீறிய அல்­லது அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வழி­காட்­டல்­களின் பல­வீனம் கார­ண­மாக பல்­வேறு பாதக  நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு உடல், உள பாதிப்­புக்­குள்­ளா­கு­வ­துடன் உயி­ரி­ழப்­புக்­க­ளையும் சந்­தித்து வரு­கின்­றனர். அத்­தோடு, அவர்கள் மாத்­திரம் பாதிப்­ப­டை­வது மாத்­தி­ர­மின்றி ஏனை­ய­வர்­க­ளையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கு­வ­துடன் துய­ரத்­திற்­குள்ளும் தள்­ளி­வி­டு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் பிர­பல பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட கைக­லப்­புக்கள் கோஷ்டி மோதல்­க­ளாக மாறி பலர் காயப்­ப­டவும் பலர் கைது செய்­யப்­ப­டவும் வழி­வ­குத்­தன. அவ்­வாறு பாட­சாலை மாணவ, மாண­வியர் பல்­வேறு கார­ணங்­களின் நிமித்தம் மனச்­சோர்­வுக்­குட்­பட்டு தற்­கொலை செய்­வதும், தற்­கொலை முயற்­சி­களை மேற்­கொள்­வ­தையும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் தலை­நகர் கொழும்பில் மாத்­தி­ர­மின்றி நாட்டின் பல பிர­தே­சங்­க­ளிலும் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கி­ன்றன என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

அதே­போன்று, கடந்த காலங்­களில் இடம்­பெற்ற துன்­பியல் சம்­ப­வங்கள் மனி­தா­பி­மானம் கொண்­ட­வர்­களின் உள்­ளங்­களை வேத­னையில் நனைத்து வரு­கி­றது. அதுதான் சுற்­றுலா செல்லும் மாண­வர்­களும், வளர்ந்­த­வர்­களும், கடல், ஆறு, குளம், நீர் வீழ்ச்சி என்­ப­வற்றில் குளிக்கச் சென்று உயி­ரி­ழக்கும் பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வங்­க­ளாகும். இவ்­வா­றான பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வங்­க­ளினால் அண்­மைக்­கா­ல­மாக உயி­ரி­ழப்­புக்கள் அதிகம் ஏற்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

உரிய வழி­காட்டல் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­கின்ற போதிலும் அவற்றை கருத்­திற்­கொள்­ளாது செயற்­ப­டு­வ­தனால் இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கி­றதா அல்­லது வழங்­கப்­ப­டு­­கின்ற வழி­காட்டல் ஆலோ­ச­னைகள் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளதா என்ற கேள்­வி­களும் பல்­வேறு தரப்­புக்­க­ளி­லி­­ருந்து எழுப்­பப்­ப­டு­வ­தையும் காண முடி­கி­றது. இது தவிர, மது, புகைத்தல் மற்றும் போதை­வஸ்துப் பாவ­னைக்கு அடி­மைப்­ப­டு­வது, வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோக செயற்­பா­டு­களில் ஈடு­படு­வது அவற்­றிற்­குள்­ளா­கு­வது போன்­ற­வற்­றி­னாலும் எதிர்­கால வள­முள்ள சந்­த­தி­யினர் வாழ்­நாட்­களைக் காவு­கொள்ளச் செய்­யப்படுகின்­றனர். இவ்­வாறு பதி­வாகும் துன்­பியல் சம்­ப­வங்கள் வீட்­டிலும், பாட­சா­லை­யிலும், மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும் வழங்­கப்­ப­டு­கின்ற வழி­காட்­டல்­களைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கின்­றன; விழு­மி­யங்­களை பல­வீ­ன­ம­டையச் செய்­தி­ருக்­கின்­றன.

சமு­தா­யத்­தினால்  அங்­கீ­க­ரிக்க முடி­ய­ாத நிகழ்­வுகள், அவற்றில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் அல்­லது அவற்­றினால் பாதிப்­புக்குள்­ளா­கின்­ற­வர்­களின் நடத்­தை­கள், மன­வெ­ழுச்சி குறித்­தான உள­நலப் பரீட்­சித்தல் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஒரு­வரின் உடல் தகைமை எவ்­வாறு உள்­ளது என்­ப­­தற்­காக மருத்­துவப்  பரி­சோ­தனை இடம்­பெ­று­கின்­ற­போ­திலும், உள­ந­லத்­துக்­கான பரீட்­சித்தல் பொது­வாக இந்­நாட்டில் இடம்­பெ­று­வ­தில்லை என்ற நிலையில் உள­ந­லத்­துக்­கான ஆலோ­ச­னை­களும் வழி­காட்­டலும் அவ­சி­ய­மா­க­வுள்­ள­துடன் விழு­மியக் கல்­வியின் அவ­சி­யமும் உண­ரப்­ப­டு­வது முக்­கி­ய­மா­க­வுள்­ளது. ஏனெனில், மேலைத்­தே­யத்­த­வர்­களின் விழு­மி­ய­மற்ற நடத்­தை­களை நாக­ரி­க­மென்று எண்­ணி­யி­ருக்கும் சில இள­வ­ய­தினர் அவற்றைப் பின்­பற்ற முயல்­வ­தா­னது பல ஆபத்­துக்­களை எதிர்­நோக்கச் செய்­கி­றது

நாக­ரி­கத்தின் ஆபத்­துக்கள்

இள­வ­யதி­னரின் நாக­ரிக நடத்­தைகள் அநா­க­ரி­கத்தை நோக்கி நகர்ந்து செல்­வ­தனால்  பல்­வேறு விளை­வு­க­ளுக்கு அவர்கள் முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. குறிப்­பாக ஆண், -பெண் நட்பு என்­பது பாலியல் உறவை அடைந்­து­கொள்­வது என்ற அர்த்­தத்­திற்­குள்­ளாகி அதற்­கான தவ­றான வழி­களைத் தேடிக்­கொண்டு அலையும் இளைய சமூ­கத்தின் எண்­ணிக்­கையை அறைகள் வாட­கைக்கு என்ற விளம்­ப­ரத்­துடன் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள வியா­பா­ரத்தை கணிப்­பிட்டுக் கண்­டு­கொள்ள முடி­வ­துடன், ஒவ்­வொரு வரு­டத்­திலும் பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற காதலர் தினத்தில் வாட­கைக்­காகப் பதிவு செய்­யப்­ப­டு­கின்ற அறை­களின் எண்­ணிக்­கையைக் கொண்டும் மதிப்­பிட்­டுக்­கொள்ள முடி­கி­றது.

இவ்­வா­றான தகாத உற­வு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற இந்­நோய்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் இள­வ­ய­தி­ன­ராக உள்­ள­தாக சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டு­கி­றது. இலங்­கையில் 10 வய­திற்கும் 19 வய­துக்­கு­மி­டைப்­பட்­ட­வர்கள் பாலியல் நோய்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர் என்ற அதிர்ச்சித் தக­வல்கள் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தோடு எதிர்­கால சந்­த­தி­யி­னரின் இந்த ஆபத்­தான நிலை குறித்து சக­லரும் சிந்­திப்­ப­தையும் அவ­சி­யமாக்­கி­யி­ருக்­கி­றது.

பாலியல் சம்­பந்­த­மான  நோய்­க­ளுக்­காக சிகிச்சை பெற வரு­வோரில் பாட­சாலை மாணவ, மாண­வி­யர்­களும் இருப்­ப­தாக மருத்­துவ அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இவை தொடர்பில் பெற்­றோர்­க­ளும், ஆசி­ரியர் சமூ­கத்­தி­னரும்  கூடு­த­லாகக் கவனம் செலுத்த வேண்­டு­மென வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­துடன், எதிர்­கா­லத்தில் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து இருப்­ப­தாக எச்­ச­ரித்­து­முள்­ளனர்.

பாலியல் நோய்த்­தொற்­றா­னது அதி­க­ளவில் தகாத பாலியல் நடத்­தை­களின் கார­ண­மா­கவே ஏற்­ப­டு­கி­றது. விழு­மி­யங்கள் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு இடம்­பெ­று­கின்ற விப­சா­ரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்­து­விட்­டன. மதங்­க­ளையும், கலா­சா­ரத்­தையும்  மதிக்­கின்ற நமது நாட்­டிலும் விப­சாரம் அதி­க­ரித்­து­விட்­டது. மசாஜ் சிகிச்சை நிலை­யங்கள் என்ற போர்­வையில் நடத்­தப்­ப­டு­கின்ற பல விப­சார நிலை­யங்கள் பொலி­சா­ரினால் முற்­று­கை­யி­டப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அவ்­வப்­போது கைது செய்­யப்­படும் சம்­ப­வங்­களும் இடம்­பெ­று­கின்­றன. 

சமூக வலைத்­த­ளங்கள் என்றும் கைய­டக்கத் தொலை­பேசி என்றும் தொழி­நுட்ப வளர்ச்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள வச­தி­களின் கார­ண­மாக தகாத உற­வுகள் ஏற்­பட்டு அதனால் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டிய ஒழுக்க விழு­மி­யங்கள் சிதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தகாத பாலியல் உற­வு­க­ளினால் பாலியல் நோய்கள் மாத்­தி­ர­மல்ல, உயிர்ப்­ப­லி­களும் ஏற்­ப­டு­கின்­றமை இளைய தலை­மு­றை­யி­னரின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சமூக ஆர்­வ­லர்கள் கவலை வெளி­யி­டு­கின்­றனர்.

இலங்­கையில் 96 வீத­மானோர் பாலியல் காட்­சி­களைப் பார்ப்­ப­தற்கும், பிறரின் குற்­றங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­குமே  இணை­யங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தாக ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இதி­லி­ருந்து நாக­ரி­கத்தின் வெளிப்­பா­டுகள் அநா­க­ரி­கத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தையும் தகாத பாலியல் உற­வுகள், அவ­சி­ய­மற்ற கருக்­க­லைப்­புக்­க­ளையும், சிசுக்­கொ­லை­க­ளையும் இலங்­கையில் அதி­க­ரிக்கச் செய்­துள்­ள­மை­யையும் காண முடி­கி­றது.

வரு­ட­மொன்­றுக்கு 4000,000 பெண்கள் கரு­வு­று­கின்­ற­போ­திலும், இதில் 15,000 கருக்கள் சட்­ட­வி­ரோ­த­மாகக் கருக்­க­லைப்பு செய்­யப்­ப­டு­கி­றது.  இச்­சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்­பினால்  கரு­வு­று­கின்ற  பெண்­களில் 10 வீதத்­தினர் உயி­ரி­ழக்­கின்­றனர். அத்­தோடு, 24,000 இள­வ­தி­யி­னரும் கர்ப்­ப­ம­டை­வ­தா­கவும், இதற்குப் போதிய கல்­வி­ய­றி­வின்மை, வறுமை, தகாத உற­வுகள் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பவை கார­ண­மாக இருப்­ப­தா­கவும் நாளா­ளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 650 சட்ட விரோதக் கருக்­க­லைப்­புக்கள் இலங்­கையில் இடம்­பெ­று­வ­தா­கவும் சுகா­தாரத் தரப்புத் தர­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

திரு­ம­ண­மா­காத பல யுவ­திகள் தகாத உறவின் மூலம் கரு­வுற்று கருக்­க­லைப்பு செய்­வ­தையும், கருவைக் கலைக்க முடி­யா­த­வர்கள் பிள்­ளை­களைப் பெற்று அச்­சி­சுக்­களை வீதி­யோ­ரங்­க­ளிலும். காடு, பற்­றை­க­ளிலும் எறிந்­து­விட்டு செல்­வ­தையும் அதற்­காக அத்­த­கை­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வதும் இலங்­கையில் இடம்­பெ­று­கின்ற குற்றச் செயல்­களின் பட்­டி­யலில் ஒன்­றாகக் காணப்­ப­டு­கி­றது. நாக­ரிகம் என்ற போர்­வையில் விழு­மி­யங்கள் மாசு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­மையே இந்­நி­லை­மை­க­ளுக்­குக் கார­ண­மா­கி­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

விழு­மியக் கல்­வியும் வழி­காட்­டலும்

அநா­க­ரிகப் போதைக்குள் விழுந்து தத்­த­ளிக்கும் இளம் சமு­தா­யத்­தி­ன­ருக்கு ஒழுக்க விழு­மி­யங்­க­ளோடு வாழ்­வ­தற்­கான வழி­காட்­டல்கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். சமூக, பொரு­ளா­தார, குடும்ப சீர­ழிவை ஏற்­ப­டுத்தும்  ஒழுக்­க­வி­ழு­மி­ய­மற்ற நடத்தைப் பிறழ்­வு­க­ளி­லி­ருந்து எதிர்­கால சமூ­கத்தைப் பாது­காக்­கவும்  ஒழுக்க விழு­மி­ய­மிக்க எதிர்­கால சமூ­கத்தை உரு­வாக்­கவும் விழு­மியக் கல்­வித்­திட்­டமும் விர­ச­மற்ற பாலியல் கல்­வியும் முறை­யாக பாட­சா­லை­களில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை குறித்து சம­கா­லத்தில் பேசப்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் மாணவப் பரு­வத்­தி­லுள்­ள­வர்­களும் பாலியல் நோய்த் தொற்­று­கைக்­குள்­ளாகி வரு­கின்­றனர். இது தொடர்பில் மாண­வர்கள் அறி­வூட்­டப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இதற்கு பாட­சா­லை­களில் பாலியல் கல்வி கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்ற கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்டு வந்­தாலும்,  மாண­வர்­களை அறி­வூட்­டு­வ­தற்­காக பாட­சா­லை­களில் பாலியல் கல்வி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது இக்­கல்வி நட­வ­டிக்­கை­களும் அதன் பாடப்­ப­ரப்­புக்­களும் பாலியல் நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விப்­ப­தாக அமைந்து விடாத வகையில் இப்­பா­டத்­துக்­கான பாட­வி­தான அல­குகள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

சமூக ஒழுங்குப் பிறழ்­வுகள், பயில் நிலை வழி­யாகச் சீர்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் பாட­சாலைக் கலைத்­திட்­டத்தில் அனு­ப­வங்கள்  உள்­ள­டக்­கப்­பட வேண்டும். பாட­சாலைக் கலைத்­திட்ட அமைப்­பி­ய­லையும் அதன் சம­கால செயல் நிலை­க­ளையும் ஆராய்ந்து பார்க்­கும்­பொ­ழுது  மாண­வர்­க­ளி­டை­யேயும் ஒரு­சில ஆசி­ரி­யர்­க­ளி­டை­யேயும் ஆரோக்­கிய மன­வெ­ழுச்­சிக்­கு­ரிய பயிற்­சிகள் போதாமல் இருப்­பது தெளி­வா­கி­றது. இதனைப் புடம்­போடும் வகையில், கடந்த வாரம், வவு­னி­யா­வி­லுள்ள பிர­பல பாட­சா­லையில் ஓரு சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இப்­பா­ட­சா­லையில் தரம் 10இல் கல்வி கற்கும் ஒரு மாண­வரும் அவ­ரது நண்­பர்­க­ளும் நகைச்­சு­வை­யாக உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­வேளை அங்கு வந்த ஆசி­ரியர் ஒருவர் மாண­வர்­களைத் தாக்­கி­யுள்ளார். இதனால் ஒரு மாண­வனின் தலையில் வெடிப்­பேற்­பட்டு அம்­மா­ணவன் சிகிச்­சைக்­காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது ஆசிரியர், மாணவர்களிடையான உறவையும், பாடசாலை விழுமியத்தையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால மாணவ சமூகத்தினதும் சில ஆசிரியர்களினதும் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை. அவ்வாறுதான் சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் நடத்தைக் கோலங்களும் காணப்படுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக ஒரு விரிவுரையாளர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பவமானது விழுமியங்கள் கேள்விக்குட்பட்டுள்ளது.

ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள்  மிளிர்கின்றன.  பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது. நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூக விரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்காலச் சமூகம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

விழுமியங்களும், வழிகாட்டல்களும் பலவீனமடைகின்றபோது பிள்ளைகள் வழிதவறுவதையும் பரிதாப உயிரிழப்புக்களை சந்திப்பதையும் தவிர்க்க முடியாது. ஆதலால், ஒரு பிள்ளையின்  சமூக முகவர்களான பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டல் ஆலோசனகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதுடன் பாடசாலைகளில் விழுமியக் கல்வியும், வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகளும் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்.

வீட்டுச் சூழலிலும், பாடசாலையிலும் பலவீனமடைந்துள்ள விழுமியங்களும் வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகளும் சமூக முகவர் நிலையங்களிலும், மத வழபாட்டுத் தளங்களிலும் பலமிக்கதாக்கப்படுவது காலத்தின் அவசியமாகும். இதன்மூலமாக சமூக விழுமியங்களையும்  ஒழுக்க நெறிகளையும் பின்பற்றுகின்ற, கட்டுக்கோப்புக்குள் வாழுகின்ற எதிர்கால ஆரோக்கியமான நாகரிகமிக்க சமூகமொன்றை கட்யெழுப்ப முடியுமென்பதுடன் பரிதாபகரமான, நாகரிகமற்ற நிகழ்வுகளையும் அதன் பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது நிதர்சனமாகும்.
-Vidivelli