Verified Web

ஆன்மிகவாதியே இப்படியென்றால் அரசியல்வாதியின் நிலை என்ன

2018-06-26 05:20:38 Administrator

ஏ.ஜே.எம்.நிழாம்

பொது­ராஜ விகா­ரைக்கு முன் பல நூறு பிக்­கு­களின் பங்­கேற்­புடன் ஞான­சா­ரரை விடு­விக்­கு­மாறு கோரி இம்­மாதம் 18 ஆம் திகதி கொழும்பு கோட்­டையில் சத்­தி­யாக்­கி­ரகம் நிகழ்ந்­தது. இதில் பேசிய சுமங்­கல நந்­த­தேரர், “நியா­ய­மற்ற விட­யத்­துக்­காக ஞான­சா­ர­ருக்குக் கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. படை­யி­ன­ருக்கு அரசால் இழைக்­கப்­படும் அநீ­தி­களைக் கண்டு பொறுக்க முடி­யா­ம­லேயே ஞான­சாரர் கோப­முற்று எதிர் தரப்பை ஏசினார். சட்­டப்­படி இது குற்­ற­மா­யினும் மத ரீதியில் குற்­ற­மல்ல. சந்­தி­யாவை இவர் அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட்டு முதலில் இணக்­கப்­பாட்டு சபைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்தும் எதிர் தரப்பு அழுத்­தங்­களால் சம­ர­சத்­துக்கு வர மறுத்­து­விட்­டது. அத­னால்தான் இவ்­வ­ழக்கு நீதி­மன்­றத்­துக்கு வந்து யாரும் எதிர்­பா­ராத நிலையில் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நாட்டின் பொதுச்­சட்­டத்­துக்கு அனை­வரும் கட்­டுப்­பட்டே ஆக­வேண்டும் என்­பதால் இதை விமர்­சிக்க முடி­யாது.

இவரை விடு­விக்கக் கோரி பொது அமை­தியை சீர்­கு­லைக்­கவோ, ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை வழங்­க­வோ­மாட்டோம். அவை இவ­ரது கொள்­கை­க­ளுக்கு முர­ணா­ன­வை­யாகும். ஆறு மாத சிறை வாழ்வு இவ­ரது மத ஆளு­மையை மேம்­ப­டுத்தும் வழி­யா­கவே இருக்கும். நாட்டின் தற்­போ­தைய சட்­டங்கள் கத்­தோ­லிக்க முறைப்­படி உள்­ள­வை­யாகும். எமது நாட்டுப் பிர­ஜை­க­ளுக்கு வேறு நாட்டு பொதுச்­சட்­டத்தால் வழங்­கப்­ப­டு­வது முறை­யான விடு­தலை அல்ல. தற்­போதும் கூட நாம் மற்ற நாட்­டுக்கு அடி­மைப்­பட்டே இருக்­கின்றோம். ஞான­சாரர் கடந்த காலங்­களில் நாட்­டுக்கு மேற்கு நாடுகள் புரிந்த நெருக்­க­டி­களை எதிர்த்து குரல் கொடுத்­தவர். அதனால் அவை இவரை வெறுத்தே வந்­தன. அரசு பயன்­ப­டுத்­திய அதே சட்­டத்தை நாமும் பயன்­ப­டுத்தி விடு­விக்கும் உபா­யத்தை நாடுவோம்” என்று சுமங்­கல நந்­த­தேரர் குறிப்­பிட்டார்.

ஆக கைதா­கி­யதை விடவும் காவி­யுடை கழற்­றப்­பட்­டதே பாரிய பிரச்­சி­னை­யாகி இருக்­கி­றது. இதுபற்றி ராம்ஞ்ய, அஸ்­கி­ரிய, மல்­வத்து மகா நாயக்­கர்கள் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் முறைப்­பாடு செய்யப் போகி­றார்­களாம். அமைச்­சர்­க­ளி­டமும் கூறப்­போ­கி­றார்­களாம். இப்­போதே இது பற்றி பொது­ப­ல­சேனா நாட்டின் சகல பௌத்தத் தலை­வர்­க­ளையும் சந்­தித்தும் வரு­கின்­ற­னராம். பொது­ப­ல­சே­னாவின் கோரிக்­கைப்­ப­டியே அஸ்­கி­ரிய மல்­வத்து ராம்ஞ்ய நிக்­கா­யாக்கள் இதில் மும்­முரம் காட்­டு­கின்­ற­னவாம்.

ராம்ஞ்ய நிக்­காய மகா­நா­யக்க நா பானே பேம சிரி­தேரர், ஞான­சா­ர­ருக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்கை தவறு எனவும், பிக்­குவின் காவி­யு­டையைக் கழற்றி, மறியல் உடையை அணி­வித்­தது தவறு எனவும், சங்க சபையின் அனு­ம­தி­யின்றி அப்­படிச் செய்­தி­ருக்­கக்­கூ­டாது எனவும் கடூ­ழிய சிறைத் தண்­டனை பெற ஞான­சாரர் எத்­த­வறும் செய்­த­தாக நாம் கரு­த­வில்லை எனவும் கூறி­யுள்ளார்.

அஸ்­கி­ரிய பீட தேரர்கள் ஞான­சா­ரரின் கைதை மீள் பரி­சீ­லனை செய்ய அர­சுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் எனவும், காவி­யுடை கழற்­றப்­பட்­டது தவறு எனவும் ஞான­சா­ரரின் அனு­ம­தி­யின்றி அது நிகழ்ந்­தி­ருப்­பதால் அவர் பிக்­கு­வல்ல என்­றா­கி­வி­டாது. வலுக்­கட்­டா­ய­மாகக் கழற்­றப்­பட்­டதை அனு­ம­திக்­க­மாட்டோம். பௌத்­தத்தை அவ­ம­திக்கும் இச்­செ­யலை உடனே ஜனா­தி­பதி கவ­னிக்க வேண்டும். ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் இதற்குப் பொறுப்­பான அமைச்­சர்­க­ளி­டமும் இதைக் கூறுவோம் என்­றார்கள்.

ஸ்ரீகெட்­டம்பே ராஜோப்­பு­வனா விகா­ரையின் தேரர்கள் இது பற்றிக் குறிப்­பி­டு­கையில்; இவை மோச­மா­னவை, பிக்­கு­களின் தலை­மைகள் இவை பற்றி ஒரு நிலைப்­பாட்­டுக்கு வர­வேண்டும். இவை அரசு தரப்பு மூல­மாக சரி­யாகக் கையா­ளப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் போவது கடமை என்­றனர்.

ஞான­சா­ர­ருக்கு நீதி­மன்­றமே சிறைத்­தண்­டனை வழங்­கி­யுள்­ளதால் நாம் ஒரு­போதும் நாட்டின் சட்­டத்தை விமர்­சிக்­க­வில்லை. ஆறு மாதங்­களோ, ஒரு வரு­டமோ, ஆயுள் தண்­ட­னையோ நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். அது பற்­றிக்­கூற நாம் விரும்­ப­வில்லை. எனினும் அவ­ரது காவி­யு­டையைக் கழற்றி, மறியல் உடையை அணி­வித்­த­தையே எதிர்க்­கிறோம். இது தவ­றாகும். ஒரே குற்­றத்­துக்கு இரு தண்­ட­னைகள் வழங்­க­மு­டி­யாது. என்ன குற்­றங்­க­ளுக்­காக பிக்­குவின் காவி­யு­டையைக் கழற்­றலாம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பாலியல் தொடர்பு, களவு, கொலை ஆகி­ய­வற்றை புரிந்த பிக்கு கைதி­யானால் அவ­ரது காவி­யு­டையைக் கழற்­றலாம். இவற்றில் எதையும் ஞான­சாரர் செய்­ய­வில்லை.

எனவே, சிறைச்­சாலை ஆணை­யா­ளரும் அதி­கா­ரி­களும் அவ­ரோடு கலந்­தா­லோ­சித்து அவ­ரது யோச­னைப்­படி செய்­தி­ருக்க வேண்டும். இவர் சிறிய குற்­றத்­துக்கே சிறைத் தண்­டனை பெற்­றுள்ளார். எனினும் காவி­யுடை கழற்­றப்­பட்டே சிறை வைக்­கப்­பட்­டுள்ளார். இவர் விடு­த­லை­யான பின் சாசன உறுப்­பு­ரிமை இருக்­காது. பன்­ச­லையும் இல்லை. சாதா­ரண மனி­த­னா­கவே விடு­த­லை­யாவார். எனவே இந்த தண்­டனை நியா­ய­மா­னது எனக் கூற­மு­டி­யுமா? மகா­நா­யக்க தேரர்கள் இது பற்றி ஜனா­தி­ப­தி­யி­டமும் நீதி­ய­மைச்­ச­ரி­டமும் ஞான­சா­ர­ருக்­காக சிபா­ரிசு செய்ய வேண்டும் எனப் பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இவர் ஜய­வர்­த­ன­புர சர்­வ­க­லா­சாலை பாலி மற்றும் பௌத்த கல்வி பீடப் பேரா­சி­ரியர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். மேலும் இவர் குறிப்­பி­டு­கையில், “ஞான­சா­ரரின் செயற்­பா­டு­களை நான் அனு­ம­திக்­கவும் இல்லை. ஏற்­றுக்­கொள்­ளவும் இல்லை. எனினும் சாதா­ரண குற்­றத்­துக்­காக இது துற­விப்­பட்டம் இல்­லாமற் போகு­மாயின் அதை நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இவர் செய்த குற்­றத்­திற்­காக கைதி­யா­னது சரிதான். அதற்­காக காவி­யுடை கழற்­றப்­பட்டு மறியல் உடை அணி­விக்­கப்­பட வேண்டும் என்­பது சட்­டத்தில் இருக்­கி­றதா? என்­பதே முக்­கிய கேள்­வி­யாகும். கைதி ஒரு துறவி என்றால் அதற்­கேற்ற சட்­டங்கள் பின்­பற்­றப்­பட வேண்டும்” என்றார்.

இந்த பேரா­சி­ரி­யரின் கூற்­றுப்­படி இவர் நாட்டின் சட்­ட­திட்­டத்தை ஏற்று ஞான­சா­ர­ருக்கு நீதி­மன்­றமே சிறைத்­தண்­டனை விதித்­தி­ருப்­பதை சரி காண்­கிறார். காவி­யுடை கழற்­றப்­பட்டு மறியல் உடை அணி­விக்­கப்­பட்­ட­தையே தவறு என்­கிறார். ஆறு மாத சிறை ஒரு தண்­டனை எனவும், காவி­யுடை கழற்­றப்­பட்டு மறியல் உடை அணி­விக்­கப்­பட்­டதை மறு தண்­டனை எனவும் இவர் கரு­து­வ­தா­லேயே ஒரு குற்­றத்­துக்கு இரு தண்­ட­னைகள் வழங்­க­மு­டி­யாது என்­கிறார். காவி­யுடை கைதியின் உடை­யல்ல. ஞான­சாரர் பிக்­கு­வாக இருக்­கை­யில்தான் காவி­யுடை, கைதி­யானால் மறியல் ஆடை. இது இரட்டை தண்­ட­னை­யா­வது எப்­படி? பாலியல் தொடர்பு, களவு, கொலை ஆகி­ய­வற்றில் ஒன்றைப் புரிந்த பிக்கு கைதானால் மட்­டுமே காவி­யு­டையைக் கழற்­ற­லாமாம். இவை மூன்­றுமா பாரிய குற்­றங்கள். பிக்கு மது அருந்­த­லாமா? போதைப்­பொ­ருட்கள் விற்­க­லாமா? போதைப்­பொருள் பாவிக்­க­லாமா? சூது விளை­யா­ட­லாமா? கடத்தல் செய்­ய­லாமா? நாட்டின் அமை­தியைக் குலைக்க கிளர்ச்சி செய்­ய­லாமா? அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் செய்­ய­லாமா? பிற மதத்­தி­னரை இம்­சிக்­க­லாமா? பிற மதங்­களைத் தூற்­ற­லாமா? தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு தலைமை தாங்­க­லாமா? காவி­யு­டையை முழங்­கா­லுக்கு மேலே உயர்த்­திக்­கொண்டு சண்­டித்­தனம் புரி­ய­லாமா? கட்சித் தலை­மைக்­குள்ளும், அமைச்­சுக்­குள்ளும் போய் அடா­வ­டித்­தனம் பண்­ண­லாமா?

வலிய சென்று நீதி­மன்­றத்­துக்குள் புகுந்து விரல் நீட்டி நீதி­ப­தியை எச்­ச­ரிக்­க­லாமா? வழக்­கா­ளி­யிடம் பிச்சை எடு என்று நீதி­மன்­றி­லேயே திட்­ட­லாமா? சாசன விதி­மு­றைகள் இவற்­றுக்குத் தடை விதிக்­க­வில்­லையா? விப­சாரம், கொள்ளை, கொலை ஆகி­ய­வற்றை புரிந்த பிக்­கு­களின் காவி­யு­டையை மட்­டும்தான் கழற்றி மறியல் உடை ‘ஜம்பர்’ அணி­விக்க வேண்டும். வேறு பெரும் குற்­றங்கள் செய்த பிக்­கு­களை சிறைக்குள் காவி­யு­டை­யு­ட­னேயே வைக்க வேண்­டுமா? பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க குற்­ற­வா­ளியை விசா­ரித்து, குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டால் தண்­டனை வழங்­கு­வ­தற்கே நீதி­மன்றம் இருக்­கின்­றது. அதற்குள் அத்­து­மீ­றிச்­சென்று வழக்­கா­ளியைத் திட்டி நீதி­ப­தியை விரல் நீட்டி எச்­ச­ரிப்­பது சாதா­ரண குற்­றமா?

காவி­யுடை புத்­தரின் புனித உடை­யாகும். அதை அணிந்­தவர் அக­புற சுத்­த­மு­டை­ய­வ­ரா­கவும் ஒழுக்­க­முள்­ள­வ­ரா­கவும் இருக்க வேண்டும். அவ்­வாறு வாழ முடி­யா­விட்டால், அந்த பிக்­குவின் காவி­யு­டையை யாரும் கழற்ற வேண்­டி­ய­தில்லை. அவரே கழற்­றிக்­கொள்ள வேண்­டி­ய­துதான். இத்­த­கை­ய­வ­ருக்கு சாசன உரிமை எதற்கு? வணக்­கஸ்­தலம் எதற்கு? சாதா­ர­ண­மா­னவர். புனி­த­மா­னவர் அல்­லவே. அறி­யா­தவன் செய்த குற்­றத்தை விடவும் அறிந்து குற்றம் செய்­த­வனின் பாவம் அளப்­ப­ரி­ய­தாகும். புத்­தரின் போத­னை­க­ளையும் ஒழுக்க வாழ்­வையும் விட்­டு­விட்டு வெறும் காவி­யு­டைக்குள் மட்­டுமே புத்­தரை வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். முதலாம் பராக்­கி­ர­ம­பாகு போலி பிக்­கு­களின் காவி­யு­டை­களை வருடா வருடம் களைந்­த­தாக வர­லாறு குறிப்­பி­டு­கி­றது.

ஒரு பிக்­குவின் காவி­யு­டையைக் கழற்றி அவ­ருக்கு மறியல் ஆடை அணி­விக்­கும்­படி சட்­டத்தில் இருக்­கி­றதா? என பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ கேட்­கிறார். முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டார நாயக்­கவைக் கொன்ற பிக்­கு­க­ளான மாபிட்­டி­கம புத்த ரக்­கித்த தேரரும், தல்­துவை சோம­ராம தேரரும் காவி­யு­டைகள் கழற்­றப்­பட்டு ‘ஜம்பர்’ அணி­விக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

அப்­படி கொலை, களவு, விப­சாரம் ஆகி­ய­வற்றைச் செய்த பிக்­கு­க­ளுக்கு மட்­டுமா, அவர்கள் கைதி­க­ளானால் காவி­யு­டைகள் கழற்­றப்­பட்டு ஜம்­பர்கள் அணி­விக்­கப்­பட வேண்டும். பரி­சுத்த ஒழுக்­க­வான்­களைத் தவிர வேறு    யாரும் காவி­யுடை அணி­யக்­கூ­டாது. புத்­தரின் எல்லா சூத்­தி­ரங்­களும் இதை மிகவும் தெளி­வாகக் குறிப்­பி­டு­கின்­றன.

 

 புத்­த­ரற்ற ஞான­சா­ரரா?

எனினும், ஞான­சா­ர­ருக்கு பொது மன்­னிப்பு பெற்­றுக்­கொ­டுக்­கவும் அவ­ருக்கு மறியல் ஆடை அணி­விக்­கப்­பட்­டதை எதிர்த்தும் மகா­நா­யக்க தேரர்கள் ஜனா­தி­ப­தி­யோடு பேசி வரு­கி­றார்­களாம். யாப்­பின்­படி ஜனா­தி­ப­திக்கு அந்த அதி­காரம் உண்டு. ஒரு வேளை அது இவ­ருக்குக் கிடைக்­கவும் இடம்­பாடு உண்டு. அவ்­வாறு நிகழ்ந்­தாலும் சிறை சென்­றதும் மறியல் ஆடை அணிந்­ததும் வர­லாற்றில் பதி­யப்­பட்டே இருக்கும். இவ­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­வதன் மூலம் கைதி­க­ளாக இருக்கும் ஏனைய பிக்­கு­களும் கோரலாம் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கிறார்.

நீதி­மன்­றங்கள் வழங்கும் தீர்ப்­பு­களை யாராலும் விமர்­சிக்க முடி­யாது. குற்­ற­வாளி யாரா­யினும் தண்­டனை பெற்றே தீர­வேண்டும். பண்­டாரநாயக்­கவைக் கொன்ற சோம­ராம தேர­ருக்குத் தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. நீதி­மன்­றத்தை தூஷித்­த­தற்­காக ஒரு எம்­.பிக்கு இரு வருட சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. நமது நாட்டு சட்டக் கட்­ட­மைப்பை எவ­ராலும் தடுக்­க­மு­டி­யாது. எவ­ருக்கும் ஆர்ப்­பாட்டம் செய்ய உரி­மை­யுண்டு. ஞான­சா­ரரின் காவி­யு­டையைக் கழற்றி ஜம்பர் அணி­விக்­கப்­பட்­டது பற்றி பலர் எதிர்க்­கின்­றார்கள். இது முதல் தட­வை­யல்ல. இதற்கு முன்பும் கூட பிக்­கு­களின் காவி­யு­டைகள் கழற்­றப்­பட்டு சிறை­களில் ஜம்­பர்கள் அணி­விக்­கப்­பட்­டுள்­ளன. அப்­போது யாரும் இச்­செ­யலை எதிர்க்­க­வில்லை. தற்­போதும் கூட சிறை­களில் 15 பிக்­குகள் இருக்­கின்­றார்கள். தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ குருமார் மூவரும் இருக்­கவே செய்­கி­றார்கள். அவர்­களும் கூட ஜம்­பர்­க­ளையே அணிந்­துள்­ளார்கள். அதே சட்­டமே ஞான­சா­ர­ருக்கும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தற்­போ­துள்ள சட்­டத்தின் 106 ஆம் பிரி­வுப்­ப­டியே இது அமு­லா­கி­றது. சிறைச்­சா­லைக்­கென தனிச்­சட்டம் இருப்­பதால் அதுவே இவற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. நாட்டில் இருப்­பது ஒரே சட்டம். அதன்­படி பிர­ஜைகள் அனை­வரும் சமம். மகா நாயக்­கர்கள் அல்ல யார் எதிர்த்­தாலும் பிக்­கு­க­ளுக்கு சலுகை வழங்­கப்­பட வேண்­டு­மாயின் தனிச்­சட்டம் இயற்­றப்­பட வேண்டும் என்றார். ஞான­சார தேரரின் காவி­யுடை கழற்­றப்­பட்ட விட­ய­மாக நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், ‘சிறைச்சாலைச் சட்டம் யாவருக்கும் பொது’ என்கிறார்.

பிக்குவின் காவியுடையைக் கழற்றும் உரிமை அவர் உபசம்பதா பெற்றிருந்த சங்க சபைக்குரியதாயினும் அது சாதாரண மத அங்கீகாரமே தவிர நாட்டின் சட்டமல்ல. நாட்டின் சட்டத்தை யாவரும் மதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். பௌத்த மதத்தின்படி காவியுடை அணியத் தகுதியற்றவர் தானே கழற்றிக்கொள்ள வேண்டும். இதை அமுல்படுத்த நிக்காயாவுக்கோ, அதன் தலைவருக்கோ முடியும். அதில் தலையிட அரசுக்கோ, அரச நிர்வாகிகளுக்கோ உரிமையில்லை. ஒரு கைதியை சிறைச்சாலை சட்டப்படி வழி நடத்துவதே எமது நாட்டின் சட்ட விதி.

பெளத்த உபதேசிகள் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும். சமூகத்தில் நற்பண்புகளை மதித்து வாழ வேண்டும். இதர இனங்களுக்கும் மதங்களுக்கும் கௌரவமளிக்க வேண்டும். அனைவருக்கும்  சமமாக வாழும் உரிமையை வழங்க வேண்டும். எவ்வகையிலும் அழுத்தங்களையோ, தடைகளையோ பிரயோகிக்காது யாவரும் வாழும் விதத்தில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றார். உண்மையில் இவ்விடயத்தில் ஞானசாரர் எனும் பிக்குவை விடவும் சாதாரண பௌத்த பெண்மணியான நீதியமைச்சர் தலதா அத்துகோரள உயர்ந்துவிட்டார். ஞானசாரர் சந்தியா எனும் சிங்களப்பெண்ணிடம் மாட்டிக்கொண்டு தலதா அத்துகோரள எனும் சிங்களப் பெண்ணிடம் அறிவுரை பெற்றுக்கொண்டார்.

குறிப்பு : இக்கட்டுரை ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டது.

-Vidivelli