Verified Web

ட்ரம்ப் கிம் சந்திப்பு: ஒரு புதிய தொடக்கம்

2018-06-19 05:17:02 Administrator

தி இந்து ஆங்கிலம்,
தமிழில்: வெ.சந்திரமோகன்

மார்க் ட்வெய்ன், “புனை­வைக்­காட்­டிலும் நிஜம் விநோ­த­மா­னது. ஏனெனில், புனைவு என்­பது சாத்­தி­யக்­கூ­று­க­ளுக்கு நெருக்­க­மா­னது. நிஜம் அப்­படி அல்ல” என்றார். அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்­புக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்­னுக்கும் இடையில், ஜூன் 12இல் சிங்­கப்­பூரில் நடந்த சந்­திப்­பை­விட சிறப்­பான விஷயம் எதுவும் இல்லை. இந்த சந்­திப்பில் இரு தலை­வர்­க­ளும் வெற்­றி­க­ர­மாகப் பங்­கெ­டுத்­ததன் பின்­ன­ணியில், ‘ரியா­லிட்டி ஷோ’ நிகழ்ச்­சி­க­ளில்­கூட இல்­லாத அள­வுக்கு சஸ்பென்ஸ்  நிகழ்­வு­களும் நிறைந்த விறு­வி­றுப்­பான அத்­தி­யாயம் உண்டு.

18 ட்ரில்­லியன் டாலர் பொரு­ளா­தா­ரமும், 13 லட்சம் வீரர்­களைக் கொண்ட இரா­ணு­வமும் (இதில் 28,500 பேர் தென் கொரி­யாவில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்) கொண்ட, உலகின் மிகப் பழ­மை­யான ஜன­நா­யக நாடு­களில் ஒன்­றான அமெ­ரிக்­காவின் அதி­ப­ரான ட்ரம்பும், 40 பில்­லியன் டால­ருக்கும் குறை­வான பொரு­ளா­தா­ரமும், 12 லட்சம் பேர் கொண்ட ராணு­வமும், அணு­சக்­தியும் கொண்ட சர்­வா­தி­கார நாடான வட கொரி­யாவின் மூன்­றா­வது தலை­முறைத் தலை­வ­ரான, 34 வய­தான கிம் ஜோங் உன்னும் வழக்­கத்­துக்கு மாறான ஒரு ஜோடிதான்.

சோத­னையும் சவால்­களும்

சில மாதங்­க­ளுக்கு முன்னர், அணு சோதனைத் திட்­டங்­க­ளையும், ஏவு­கணைப் பரி­சோ­த­னை­க­ளையும் வட கொரியா அதி­க­ரித்து வந்­ததைத் தொடர்ந்து இரு நாடு­களும் வார்த்­தைப்போர் நடத்­தி­வந்த நிலையில், இரு நாடு­களும் பரஸ்­பரம் அணு­குண்டு தாக்­குதல் நடத்­திக்­கொள்­ளுமோ என்று அச்­சப்­படும் சூழல் உரு­வா­னது. 2017 செப்­டம்­பரில் ஆறா­வது முறை­யாக அணு­குண்டு சோத­னையை நடத்­திய வட கொரியா அதை வெப்ப அணுக்­கரு குண்டு (ஹைட்­ரஜன் குண்டு) என்று அறி­வித்­தது கூடுதல் அதிர்­வு­களை உரு­வாக்­கி­யது. கிம் நடத்­திய பரி­சோ­த­னை­களில் குறைந்­த­பட்சம் மூன்று சோத­னைகள் வெற்­றி­ய­டைந்­த­துடன், அவை ஆயுதப் பட்­டி­ய­லிலும் சேர்க்­கப்­பட்­டன. இதன் மூலம், அமெ­ரிக்கா மீதே நேரடித் தாக்­குதல் நடத்தும் அள­வுக்கு வட கொரியா முன்­னே­றி­வ­ரு­வது தெளி­வா­னது.

“இது­வரை உலகம் பார்த்­தி­ராத அள­வுக்கு உக்­கி­ர­மான தாக்­கு­தலை வட கொரியா எதிர்­கொள்ள நேரும்” என்று எச்­ச­ரித்தார் ட்ரம்ப். இதை­ய­டுத்து, குவாம் தீவே (பசுபிக் பெருங்­க­டலில் அமெ­ரிக்­கா­வுக்குச் சொந்­த­மா­னது) பற்­றி­யெ­ரியும்” என்று பதி­லடி கொடுத்தார் கிம். ட்ரம்போ, “ராணுவம் தயார் நிலையில் இருக்­கி­றது” என்று எச்­ச­ரித்தார். ஐ.நா. பாது­காப்புக் கவுன்சில் பல­முறை கூட்­டப்­பட்­டது. வட­கொ­ரியா மீதான பொரு­ளா­தாரத் தடைகள் மேலும் இறு­கின. “தன்­னையும் தனது ஆட்­சி­யையும் அழித்­துக்­கொள்ளும் தற்­கொலைத் தாக்­கு­தலில் ஈடு­பட்­டி­ருக்கும் ராக்கெட் மனிதர்” என்று கிம்மைப் பற்றி குறிப்­பிட்டார் ட்ரம்ப். “மன­நிலை பாதிக்­கப்­பட்ட அமெ­ரிக்கக் கிழத்தை வழிக்குக் கொண்­டு­வ­ருவேன்” என்று சூளு­ரைத்தார் கிம்.

கிம் ஆற்­றிய புத்­தாண்டு உரை ஒரு மாற்­றத்தைத் தொடங்­கி­வைத்­தது. அணு­சக்தி தடுப்புத் திறனை வட கொரியா அடைந்­து­விட்­ட­தா­கவும், (பெப்­ர­வ­ரியில் குளிர்­கால ஒலிம்பிக் போட்­டிகள் நடத்­த­வி­ருந்த நிலையில்) தென் கொரி­யா­வு­ட­னான உறவில் புதிய தொடக்­கத்தை ஏற்­ப­டுத்த விரும்­பு­வ­தா­கவும் கிம் குறிப்­பிட்டார். அதன் பிறகு விஷ­யங்கள் வேக­மாக நடந்­தே­றின.

மார்ச் மாதம், தென் கொரி­யாவின் மூத்த அதி­கா­ரிகள் வட கொரி­யா­வுக்கு சென்­றனர். வட கொரி­யா­வுக்கு எதி­ரான ராணு­வ­ரீ­தி­யான மிரட்­டல்கள் குறைக்­கப்­பட்டால், ஆட்­சிக்­கான பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்டால் கொரிய தீப­கற்­பத்தில் அணு­வா­யுத நீக்கம் குறித்து பேசத் தயா­ராக இருப்­ப­தாக கிம் குறிப்­பிட்டார். ஏப்ரல் 27இல் பன்­முன்­ஜோமில் இரண்டு கொரியத் தலை­வர்­க­ளுக்கும் இடை­யி­லான உச்சி மாநாடு நடக்­க­வி­ருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்­துக்கு முன்னர், ஏப்ரல் 21இல், ஏவு­கணைப் பரி­சோ­தனைக் கட்­டுப்­பாட்டை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தது வட கொரியா. பன்­முன்ஜோம் உச்சி மாநாடு வெற்­றி­க­ர­மாக நடந்­தது.

இது­தொ­டர்­பாக, அமெ­ரிக்­கா­வுக்கு முழு­மை­யான தக­வல்­களைத் தென் கொரிய அதி­கா­ரிகள் அளித்­ததைத் தொடர்ந்து, கிம்மைச் சந்­திக்கத் தயா­ராக இருப்­ப­தாக ட்ரம்ப் குறிப்­பிட்டார்.

பழைய வர­லாறு

இதற்கு முன்­னரே, வட கொரி­யாவின் அணு­சக்தித் திட்­டங்கள் தொடர்­பாகப் பேச அமெ­ரிக்கா முயற்­சி­செய்­தது. அணு­வா­யுதப் பரவல் தடுப்பு ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வெளி­யே­றப்­போ­வ­தாக வட கொரியா மிரட்­டி­யதைத் தொடர்ந்து, முதன்­மு­த­லாக 1994-இல் இரு நாடு­க­ளுக்கும் இடையில் ஓர் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது. ஆனால், 2002இல் வட கொரி­யாவைத் தீய­சக்தி என்று ஜோர்ஜ் புஷ் அரசு விமர்­சித்­ததைத் தொடர்ந்து அந்த ஒப்­பந்தம் ரத்­தா­னது. அணு­வா­யுதப் பரவல் தடுப்பு ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வட கொரியா வெளி­யே­றி­யது. 2004இல் அணு ஆயுத நீக்கம் தொடர்­பாகக் கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­பட்­டது. ஆனால், வட கொரியா மீது புதிய பொரு­ளா­தாரத் தடை­களை அமெ­ரிக்கா கொண்­டு­வந்­ததால், இந்த முயற்சி சீர்­கு­லைந்­தது.

2006இல் வட கொரியா தனது முத­லா­வது அணு­குண்டு சோத­னையை நடத்­தி­யது. அதைத் தொடர்ந்து சூழல் மாறி­விட்­டது. வட கொரி­யாவின் திறன் கணி­ச­மாக அதி­க­ரித்­தது. இது தென் கொரி­யா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் கவ­லை­ய­ளித்­தது. தென் கொரி­யாவில் ஏவு­கணைத் தடுப்புப் படை­களை அமெ­ரிக்கா நிறுத்­தி­வைத்­தி­ருப்­பதால் சீனாவும் கவ­லை­ய­டைந்­தது. இந்தச் சூழ­லில்தான் மாற்­றங்கள் நடந்­தி­ருக்­கின்­றன.

காத்­தி­ருக்கும் சவால்கள்

ஆயுதப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்தும் விஷ­யத்தில் வட கொரி­யா­விடம் முழு­மை­யான, மாற்ற முடி­யாத நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கா எதிர்­பார்க்­கி­றது. வட கொரி­யாவோ, நிலை­யான அர­சுக்கு பாது­காப்பு, பொரு­ளா­தாரத் தடை­க­ளி­லி­ருந்து விலக்குப் பெற விரும்­பு­கி­றது. சீனாவைச் சார்ந்­தி­ருக்கும் நிலையை மாற்­றவும் விரும்­பு­கி­றது. சீனா, நடு­நிலை வகிப்­பதை நீடிக்க விரும்­பு­கி­றது. தென் கொரியா பதற்­றத்தைக் குறைத்­துக்­கொள்ள விரும்பும் அதே­ச­மயம், அமெ­ரிக்­காவின் படைகள் அங்கு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர வேண்டும் என்றும் நினைக்­கி­றது. இவற்­றுக்­கெல்லாம் காலமும், தொடர்ச்­சி­யான பேச்­சு­வார்த்­தையும் தேவை.

சிங்­கப்­பூரில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் கூட்­ட­றிக்­கையில் விரி­வான தக­வல்கள் இல்லை. ஆனால், அர­சியல் உறு­திப்­பாடு இருக்­கி­றது. அணு­சக்தி விவ­கா­ரத்தை மட்­டுமே பேசு­வது என்­றில்­லாமல், 1953 போர் நிறுத்த ஒப்­பந்­தத்­துக்கு மாற்­றாக, நிரந்­தர அமைதி ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன், அணு­வா­யுத நீக்­கத்­துக்கு முன் நிபந்­த­னை­யாக வட கொரிய அர­சுக்குப் பாது­காப்பு உத்­த­ர­வாதம் வழங்­கப்­ப­டு­வ­துதான் அமெ­ரிக்க – வட கொரிய உறவின் புதிய தொடக்­கத்தை சாத்­தி­யப்­ப­டுத்தும் என்­பதை இந்த ஒப்­பந்தம் தெளி­வாக வெளிப்­ப­டுத்­து­கி­றது.

உச்சி மாநா­டு­களின் முடி­வுகள் கல­வை­யா­னவை. 1972இல், சீனத் தலைவர் மா சே துங்குடனான முதல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் சீனா சென்றது, உலக அரசியல் சக்திகளின் அமைப்பை மாற்றியது. அதன் தாக்கம் இன்றுவரை எதிரொலிக்கிறது. 1986இல்அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சோவியத் தலைவர் மிகெயில் கோர்பச்சேவை ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் சந்தித்ததையடுத்து, எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

எனினும், நடைமுறை அரசியலே வென்றது. ட்ரம்ப் – கிம் சந்திப்பைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை எப்படி விரிவடையும் என்று கணிப்பது கடினம். ஆனால், இது ஒரு புதிய தொடக்கம்!
-Vidivelli