Verified Web

தேசிய பிறைக் குழு மறுசீரமைக்கப்படுமா

2018-06-18 04:47:43 Administrator


ஷவ்வால் மாத தலைப்பிறை விவகாரம் இம்முறையும் சமூகத்தில் பாரிய சர்ச்சைகளையும் பிளவுகளையும் தோற்றுவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

எது நடக்க கூடாது என நாம் எதிர்பார்த்தோமோ அதுவே நடந்துள்ளது. 2013 இல் கிண்ணியாவில் பிறை கண்ட விடயத்தில் பெரிய பள்ளிவாசலும் உலமா சபையும் விட்ட தவறுகளிலிருந்து இன்னமும் போதுமான பாடம் படிக்கவில்லையா எனும் சந்தேகத்தை இம்முறை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ரமழான் 28 இல் ஷவ்வால் தலைப்பிறை தென்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கான சாத்தியங்கள் ஏலவே எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் பிறை தென்பட்டமை குறித்து அறிவித்தால் அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அன்றைய தினம் பிறைக் குழு கூடியது. எனினும் இரவு 7.30 மணி வரை பிறை தென்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் இரவு 9 மணியளவில் நாட்டின் பல பாகங்களிலும் பிறை கண்டமை பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இந்நிலையில் பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் நள்ளிரவில் மீண்டும் பிறைக் குழு கூடி பிறை தென்பட்டமை பற்றிய தகவல்களை ஆராய்ந்தது. இறுதியில் குறித்த சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டதுடன் நோன்பைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் பிறை கண்டவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு மறுநாள் பெருநாள் கொண்டாடுவதற்கான அறிவிப்புகளை பல அமைப்புகள் வெளியிட்டன. மேலும் பலர் மறுநாள் நோன்பு நோற்பதில்லை எனவும் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுவது எனவும் தீர்மானித்தனர். உலமா சபையின் தலைமையக நிர்வாகத்திலுள்ள பிரபல உலமாக்கள் கூட இதே நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தனர். பல இஸ்லாமிய இயக்கங்களும் இதே நிலைப்பாட்டை அறிவித்தன.

இதற்கிடையில் இந்த விவகாரத்தை அணுகுவதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நடந்து கொண்ட முறை பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. பெரிய பள்ளிவாசலில் அன்றிரவு குழுமியோர் சண்டித்தனமாக நடந்து கொண்டமையும் பள்ளிவாசலின் புனிதத்தை கூட மதிக்காது நடந்து கொண்டமையும் உலமாக்களை தாக்க முற்பட்டமையும் வெட்கத்துக்குரியதாகும்.

பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் அளவுக்கதிகமான ஆதிக்கத்தை பெரிய பள்ளிவாசல் பிரயோகிப்பது இதிலிருந்து தெளிவாகிறது. உலமா சபை கூட இந்த விடயத்தில் சத்தியத்தை தெரிந்து கொண்டும் மறைப்பதாகவும் பெரிய பள்ளியை மீறி எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப் பின்னணியில்தான் தேசிய பிறைக்குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் பிறை விடயத்தில் பெரிய பள்ளிவாசலின் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல் பிரமுகர்களும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கடந்த ஓரிரு நாட்களுக்குள் நூற்றுக் கணக்கான கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கை குறித்து அமைச்சு தீவிர கரிசனை செலுத்த வேண்டியது அவசியமாகும். முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து, சந்தோசமாக கழிக்க வேண்டிய பெருநாள் தினங்களை சர்ச்சைக்குள் தள்ளும் இந்த துரதிஷ்ட நிலை இனிமேலும் தொடர அனுமதிக்க முடியாது. இது விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தீர்க்கமான நிலைப்பாட்டுக்கு உடன் வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli