Verified Web

முன்னுரிமை

2018-06-14 04:58:50 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

புனித நோன்பின் பிரி­யா­வி­டைக்­கான மணித்­து­ளிகள் நெருங்­கி­யி­ருக்கும் நிலையில் இந்­நோன்­ப­ளித்த பரிசே ஈதுல்பித்ர் நோன்புப் பெரு­நா­ளாகும். அருளை அள்­ளித்­தந்து அகம் நிறைய ஆனந்த மழை பொழிந்து அகன்று செல்­ல­வுள்ள ரமழான் மாதம் தந்த இப்­பெ­ருநாள் தினத்­திற்­கு­ரிய பிறை பார்ப்­ப­தற்­கான நாள் எது என்­பதில் தொடர்ச்­சி­யாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், இது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இருப்­பினும், தெளிவில் புரி­தலும், புரிந்­து­ணர்­வின்­மை­யாலும் தொடர்ச்­சி­யாக வாதப் பிர­தி­வா­தங்கள், கருத்­தா­டல்கள், கருத்­து­மோ­தல்கள் என சமூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள சில­ரினால், ஊட­கங்­களில் குறிப்­பாக சமூக ஊட­கங்­களில் குரல் பதி­வு­க­ளா­கவும், கருத்துப் பதி­வேற்­றங்­க­ளா­கவும் கடந்த சில நாட்­க­ளாக பதி­வேற்­றப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. 

கடந்த காலங்­களில் உலமா சபையின் தலைமை மற்றும் பிறைக்­குழு விட்ட தவ­றுகள் மீட்­டப்­ப­டு­கின்ற இவ்­வே­ளையில், சென்ற வெள்­ளிக்­கி­ழமை கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில்  நடை­பற்ற குத்பா பேரு­ரையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்­தியின் ஜும்ஆ பேரு­ரை­யிலும் சிலர் தெளிவும், புரி­த­லு­ம­டை­ய­வில்லை என்­ப­தையும் மறை சிந்­த­னை­கொண்ட விமர்­ச­னங்­களைக் கொண்டு புரிய முடி­கி­றது.

இவ்­வி­மர்­ச­னங்­களில் ஒரு சில நியா­யங்கள் இருந்­தாலும் இந்­நி­யா­யங்கள் பல்­லினம் வாழும் இந்­நாட்டில் ஏட்­டிக்­குப்­போட்­டி­யாக கருத்­துக்­ளையும், குரல் பதி­வு­க­ளையும் பதி­வேற்­று­வ­தா­னது பிற்­கா­லத்தில் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு பாத­கத்­தன்­மையை உரு­வாக்கும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஷவ்வால் பிறையின் சர்ச்சை

ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையை உள்­நாட்டில் கண்டு பெருநாள் கொண்­டா­டு­வதா அல்­லது சர்­வ­தேச ரீதியில் குறிப்­பாக, சவூதி அரே­பி­யாவில் காணும் பிறையின் அடிப்­ப­டையில் பெருநாள் கொண்­டா­டு­வதா என்­பதில் பலர் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக பிறை காண்­ப­திலும் பெருநாள் கொண்­டா­டு­வ­திலும் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள ஆன்­மீக இறை அழைப்­பா­ளர்கள் சில­ரிடம் காணப்­படும் கொள்கைப் பற்றை  ஒரு வகை­யான கொள்கை நோயாகக் கருத வேண்­டி­யுள்­ளது. இக்­கொள்கை நோயா­னது ஒற்­று­மை­யற்ற சமூகம் என்ற இழி­நி­லை­யையும் சுமத்­தி­யி­ருக்­கி­றது. ஆன்­மீக விட­யங்­களில் ஒற்­று­மைக்கும், சமூக நலன்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கு­வதை விடவும் கொள்­கை­க­ளுக்கு சிலர் முன்­னு­ரிமை வழங்கிச் செயற்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கொள்­கைக்­காக இரத்தம் சிந்தச் செய்யும் அள­விற்கு கொள்­கை­வா­திகள் சிலர் தங்­க­ளது கொள்­கை­களில் ஊறிப்­போ­யி­ருக்­கி­றார்கள் என்­பதை கடந்த மாதம் வாழைச்­சே­னையில் ஓர் ஆன்­மீக இயக்க நிலை­யத்தின் மீது மற்றும் சில ஆன்­மீக இயக்கக் கொள்­கை­வா­திகள் தாக்­கு­தல்கள் நடாத்­திய சம்­பவம் சான்று பகர்­கி­றது.

இதில் கவ­லைக்­கு­ரிய விட­ய­மென்­ன­வென்றால் இஸ்லாம் பற்றி வாய்­கி­ழிய இந்­நோன்பு காலங்­களில் மக்கள் மத்­தியில் பேசிய மார்க்க அறி­ஞர்கள் பலரும் இத்­தாக்­குதல் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். பிர­தேச மொழியில் கூறு­வது போன்று இத்­த­க­யை­வர்கள் தாங்கள் கொண்­டுள்ள கொள்கை நோயினால் யானைக்கு மதம் பிடிப்­பது போன்று மதம் பிடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லையில் பல்­லின சமூ­கங்­களைக் கொண்ட மக்கள் வாழும் இந்­நாட்டில், முஸ்லிம் சமூ­கத்தைத் தவிர்ந்த ஏனைய எந்­த­வொரு சமூ­கமும் தங்­க­ளது திரு­நாட்­களைக் கொண்­டா­டு­வதில் முரண்­பட்­ட­தான வர­லாற்றைக் காண முடி­யா­துள்­ளது. ஆனால், பெருநாள் கொண்­டா­டு­வ­திலும் அதற்­கான தினத்தை தீர்­மா­னிப்­ப­திலும் தங்­க­ளுக்குள் முரண்­பட்­டுக்­கொள்ளும் ஒரு சமூகம் என்றால் அது முஸ்­லிம்­க­ளா­கத்தான் இருக்­கி­றார்கள் என்ற வரா­லாற்றுப் பதிவு முஸ்­லிம்கள் தொடர்பில் பதி­யப்­பட்­டி­ருக்­கி­றது.

கொள்­கைப்­பற்றும் மறை சிந்­த­னையும்

நோன்பை நோற்­ப­திலும் பெரு­நாட்­களைக் கொண்­டா­டு­வ­திலும் கடந்த காலங்­களில் ஒன்­று­பட்ட நிலை காணப்­ப­ட­வில்லை. சமூக ஒற்­று­மைக்கு அப்பால் கொள்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி அதற்­கான ஆதா­ரங்­களை தங்கள் வசம் வைத்­துக்­கொண்டு, கொள்­கை­களை விட்­டுக்­கொ­டுக்­காது நேர்­மறைச் சிந்­த­னை­களை தங்­க­ளுக்குள் வளர்த்­துக்­கொள்­ளாது எதிர்­மறை சிந்­த­னை­யுடன் செயற்­பட்டு ஒட்­டு­மொத்த சமூ­கத்­தி­னதும் ஒற்­று­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்­திய கசப்­பான நினை­வு­களை இங்கு ஞாப­க­மூட்­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

இச்­செ­யற்­பா­டுகள் முஸ்­லிம்­களின் மத்­தியில் ஒற்­று­மை­யின்­மையை உரு­வாக்கி பல்­வேறு தளங்­க­ளிலும் விமர்­சிக்­கப்­ப­டு­வ­தற்கும் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கும் கார­ணங்­க­ளாக அமைந்­தன. முஸ்­லிம்­களின் பல­வீ­னத்தை தங்­க­ளுக்கு சாத­க­மாக, தங்­களின் பக்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக இஸ்­லாத்தின் எதி­ரிகள், முஸ்­லிம்­களின் துரோ­கிகள் திட்­ட­மிட்டுச் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அது சில கொள்­கை­வா­தி­க­ளுக்கு ஒரு பொருட்­டாகத் தென்­ப­டு­வ­தில்லை.

முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள காட்­டிக்­கொ­டுப்­பா­ளர்­க­ளினால் ஒவ்­வொரு விட­யங்­களும் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்கோர் உதா­ர­ணமே கடந்த வாரம் உயர் கல்வி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தென்­கி­ழக்கு பல்­க­லைக்­கழகம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை என்­ப­தையும் இங்கு பதி­வாக்க வேண்­டி­யுள்­ளது. மற்­ற­வர்­களைக் காட்­டிக்­கொ­டுத்து  சுக­போ­கங்­களை அனு­ப­விக்கும் சமூகப் புல்­லு­ரு­விகள் இச்­ச­மூ­கத்­திற்குள் இருக்கும் வரை இச்­ச­மூகம் மீட்­சி­பெ­றாது என்­பதை இத்­த­கைய உரைகள் புடம்­போ­டு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

அர­சியல் ரீதி­யா­கவும், கோட்­பாடு ரீதி­யா­கவும், கொள்கை ரீதி­யா­கவும், இயக்­கங்கள் ரீதி­யா­கவும் இன்னும் பல்­வேறு கோணங்­களில் ஒற்­றுமை இழந்து கொள்கை நோயினால் பீடிக்­கப்­பட்ட சிலர் கொள்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி  செயற்­ப­டு­வது சமூக ஆரோக்­கி­யத்­துக்கு எப்­போதும் பாத­க­மா­கவே அமையும் என்­பது ஞாப­கத்தில் இருக்க வேண்­டி­ய­தாகும். சமூ­கத்தின் கட்­டுக்­கோப்பை உடைத்து, அதைக் கேவ­லப்­ப­டுத்தி ஏனைய சமூ­கங்­களின் பார்­வையில் ஒரு  மலி­ன­மான எண்­ணங்­களைத் தோற்­று­வித்து தொடர்ந்தும்  சமூ­கத்தின் நிலை இதுதான் என்­பது போன்­ற­தொரு கருத்­தி­யலை சகோ­தர இன மக்கள் மத்­தியில் தோற்றச் செய்­தி­ருக்­கி­றார்கள். சமூகம்  இழி­வு­ப­டுத்­தப்­பட்­டாலும், சமூ­கத்தின் நிலையைப் பார்த்து சந்தி சிரித்­தாலும், கொள்கை வெற்­றி­பெற வேண்டும் என்­பதில்  இவர்கள் உறு­தி­யாக இருந்­தி­ருக்­கி­றார்கள். தொடர்ந்தும் இருந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை பல சம்­ப­வங்கள் இன்னும் புடம்­போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இதற்கு முக்­கிய காரணம், இத்­த­கை­ய­வர்கள் கொள்கை  நோயினால் பிடிக்­கப்­பட்டு கொள்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இவர்கள் மனங்­களில் ஏற்­றுக்­கொள்ளும், விட்­டுக்­கொ­டுக்கும், புரிந்­து­கொள்ளும் மனப்­பாங்கு உரு­வாக வேண்டும். அந்த நேர்­மறை மனப்­பாங்கை உரு­வாக்க முயற்­சிக்க வேண்டும். சக­வாழ்வு மற்றும் சமூக ஒற்­று­மைக்­காக முழு நோன்பு நாட்­க­ளிலும் இப்தார் வைபவம் நடத்­தியும் தங்­க­ளுக்குள் ஒற்­று­மைப்­ப­டாது வாழும் நிலை முஸ்­லிம்கள் மத்­தியில் உள்­ளது. பெய­ருக்கும், புக­ழுக்கும், அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவும் இலட்­சக்­க­ணக்­கான பணத்தைச் செல­வ­ழித்து  இப்­தார்­களை நடத்­தி­னாலும் சக­வாழ்வோ, நல்­லி­ணக்­கமோ ஏற்ப­டா­தென்­பதைக் கடந்த காலங்­களில் நடாத்­தப்பட்ட இப்­தார்­களின் பின்­னூட்­டல்­களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்

 

ஆரோக்­கி­ய­மான தீர்­மானம்

நாம் விரும்­பியோ விரும்­பா­மலோ ஏற்­றுக்­கொண்­டுள்ள சகல இயக்­கங்­களையும் ஒன்­றி­ணைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள பிறைக்­கு­ழுவின் பெருநாள் தொடர்­பான முடி­வுக்கு மாறாக பிள­வு­பட்டு கடந்த காலங்­களில் இரு தினங்கள் பெருநாள் கொண்­டா­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

நோன்பும் ஹஜ்ஜும் தவிர்ந்த ஏனைய மாதங்­க­ளுக்கு  பிறைக்­குழு பிறை தொடர்பில் எடுக்கும் முடிவை ஏற்­றுக்­கொள்ள முடி­யு­மென்றால், அது தொடர்பில் அலட்­டிக்­கொள்­ளாது இருக்க முடி­யு­மென்றால்  இரு­பெ­ரு­நாட்கள் தொடர்­பிலும்  பிறைக்­குழு எடுக்கும் முடிவில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வது நியா­யமா? மக்­களைக் குழப்­பு­வது நீதியா? என்ற கேள்­விகள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னது உள்­ளத்­தி­லி­ருந்தும் எழுப்­பப்­பட வேண்டும்.

இவ்­வி­ட­யத்தில் பிறைக்­கு­ழு­வாக அல்­லது பிறையைத் தீர்­மா­னிப்­பதில் அங்­கத்­துவம் வகின்­ற­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் உணர்­வு­க­ளோடு விளை­யா­டா­ம­லும் நடந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். கடந்த காலங்­களில் பிறை பார்ப்­ப­திலும் பெருநாள் கொண்­டா­டு­வ­திலும் முஸ்லிம் சமூகம் குறித்து சந்தி சிரித்­தது. இந்­நிலை இவ்­வாண்­டிலும் பெருநாள் தினத்தை அறி­விப்­பதில் ஏற்­பட்­டு­வி­டாது ஆரோக்­கி­ய­மான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதே சமூக ஒற்­று­மையை விரும்பும் மக்­களின் பிரார்த்­த­னை­யா­க­வுள்­ளது.

ஓர் ஊரின் ஒற்­று­மையை அல்­லது ஒரு சமூ­கத்தின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பது கொலை செய்­வ­தற்குச் சமம் என்ற அண்ணல் நபியின் திரு­வாக்கு சமூக ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் வகையில் அறிக்­கை­யிடும் ஒரு சிலரின் அறி­வுக்கு எட்­ட­வில்­லையா? ஒரு­சில உல­மாக்கள் கற்று வெளி­யே­றிய மத்­ர­ஸாக்­களில் போதிக்­கப்­ப­ட­வில்­லையா என்ற கேள்­விகள் கடந்த காலங்­களில் எழுப்­பப்­பட்­டன.

கொடுக்கல் வாங்­கல்­களில் இஸ்­லாத்தை சரி­வரப் பேணு­வ­தில்லை,  குடும்ப வாழ்க்­கையில் பூரண இஸ்லாம் இல்லை. அவ்­வா­றான நிலையில், ஒரு பெரு­நாளைக் கொண்­டா­டு­வதில் இஸ்­லாத்தை முழு­மை­யாகக் கடைப்­பி­டிப்­ப­வர்­க­ளாகக் காட்­டிக்­கொண்டு சமூ­கத்தைச் சந்­தி­சி­ரிக்கச் செய்­வது நியா­ய­மா­காது. இவை முஸ்லிம் சமூ­கத்­தி­டையே பிளவைத் தோற்­று­வித்து, இஸ்­லாத்தைக் கேவ­லப்­ப­டுத்தும் இஸ்­லாத்தின் எதி­ரி­க­ளுக்கு தீனி போடு­வ­தாக அமையும் என்­பது ஞாப­கத்­தி­லி­ருக்க வேண்­டி­ய­தொன்­றாகும்.

அத்­தோடு, பிரி­வி­னைகள், ஏற்­றுக்­கொள்­ளாத, விட்­டு­கொ­டுக்­காத மனப்­பாங்­குகள் நம்மை மட்டும் மாத்­தி­ர­மின்றி நமது எதிர்­கால சந்­த­தி­க­ளையும் பாதிக்கும் என்­பதை மனதில் நிறுத்திச் செயற்­ப­டு­வது காலத்தின் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. நாம், நமது மனப்­பாங்­கு­களை மாற்­றிக்­கொள்­வதன் மூலம் நமது வாழ்க்­கையின் ஒவ்­வொரு நிலை­யையும் மாற்­றிக்­கொள்ள முடியும். ஒவ்­வொரு தனி­ந­பரும் ஒரு குழுவின், ஒரு சமூ­கத்தின் அங்­கத்­த­வ­ரா­கிறார். அந்­த­வ­கையில், ஒவ்­வொரு தனி மனி­தனும் தமது மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி மாறு­கின்­ற­போது அவர் அங்கம் வகிக்கும் குழு­விலும், இயக்­கத்­திலும் அவன் சமூ­கத்­திலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். கொள்கை நோயி­லி­ருந்து விடு­பட முடியும்.

“ஒரு சமூகம் தங்­களை மாற்­றிக்­கொள்­ளாத வரையில் இறைவன் அச்­ச­மூ­கத்தை மாற்­ற­மாட்டான்” என அல்­குர்ஆன் வலி­யு­றுத்திக் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது. இரு­பதாம் நூற்­றாண்டில் வாழ்ந்த உள­வியல் தத்­துவ அறிஞர் லியோ டால்ஸ்டாய் கூறு­வது போன்று, “ஒவ்­வொரு மனி­தனும் உல­கத்தை மாற்ற வேண்டும் என நினைக்­கிறான். ஆனால் ஒருவர் கூட தன்னை மாற்­றிக்­கொள்ள வேண்­டு­மென நினைப்­ப­தில்லை.” இவைதான் இன்­றைய முஸ்­லிம்­களின் நிலை­யா­கவும் உள்­ளது.

முஸ்லிம், இச்­ச­மூ­கத்தின் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து சின்­னா­பின்­ன­மாக்கும் ஒரு சிலரின் நிலையும் இவ்­வா­றுதான் காணப்­ப­டு­கி­றது. இந்­நிலை மாற வேண்டும். ஒரு பெருநாள் கொண்­டா­டு­வதில் பிள­வு­பட்டு ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் கேவ­லப்­ப­டுத்தும் நிலை இவ்­வாண்­டிலும் ஏற்­பட்­டு­விடக் கூடாது. பிறை­பார்ப்­ப­திலும் பெருநாள் கொண்­டா­டு­வ­திலும் சமூக ஒற்­று­மைக்கும் சமூக நலன்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்கிச் செயற்­ப­டு­வது ஒவ்­வொரு முஸ்லிம் மீதும்  தார்­மீகப் பொறுப்­பா­க­வுள்­ளது.

பொறுப்­பற்ற செயற்­பா­டு­களை பொறுப்­புள்ள செயற்­பா­டு­க­ளாக மாற்றி சமூக ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­து­வது காலத்தின் முக்­கிய தேவை­யா­க­வுள்­ளது. மாறாக, பெருநாள் தினத்தைக் கொண்­டா­டு­வ­திலும் அதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­திலும் சமூகம் விமர்­சிக்­கப்­படும் நிலைக்கு இட்டுச் செல்­லப்­படக் கூடாது. தனித்­து­வ­மிக்க கலா­சார விழு­மி­யங்­களைக் கொண்ட ஓர் இனம் என்ற அடிப்­ப­டையில், சமூ­கத்தின் தெரி­வுகள் அமைய வேண்டும். குறிப்­பாக பெரு­நா­ளுக்­கான ஆடைத் தெரிவில்  வரை­ய­றை­களை மீறாது இருப்­பது தனித்­து­வத்தைப் பாது­காப்­ப­தாக அமையும்

 

கலா­சார மாற்றம்

நவீ­னத்­து­வத்தின் வழி­காட்­டல்­க­ளுக்குள் வழுக்கி விழுந்த சில­ரினால் இஸ்­லா­மிய ஆடைக் கலா­சாரம் சீர­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இஸ்­லா­மிய ஆடை அணிதல் என்­ப­தி­லி­ருந்து அவர்­களை நவீ­னத்­துவம் மாற்­றி­யி­ருக்­கி­றது அல்­லது இஸ்­லா­மிய ஆடை­ய­ணிதல் என்ற வரை­ய­றையை மீறச் செய்­தி­ருக்­கி­றது நவீ­னத்­து­வத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன், பெருநாள் தினத்­திற்­கான ஆடைத் தெரி­வுகள் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை விட அதிக முக்­கி­­யத்­துவம் மிக்­க­தாக அமையப் பெற்­றி­ருக்­கி­றது. புனித மாதத்தின் கடைசிப் பத்து இர­வு­களும் பகல்­களும்  வணக்க வழி­பா­டு­களில் கழிக்க வேண்­டு­மென அறிந்தும், பல­ரினால் அந்­நே­ரங்கள் மொத்த மற்றும் சில்லறை விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஜவுளிக் கடை­க­ளிலும் பாழ்­ப­டுத்­த­ப்­பட்­டுள்­ளன.

ஆபா­சத்தை ஆடையின் வடிவில் சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­களும், விற்­ப­னை­யா­ளர்­களும் மேற்­கொண்ட விளம்­ப­ரங்­களின் பின்­னூட்­டல்­களை பெருநாள் தினத்தில் அணி­யப்­படும் ஆடை­களைக் கொண்டு அறிந்­து­கொள்ள முடியும். எவ்­வா­றான ஆடையை அணிய வேண்டும், எத்­த­கைய ஆடை அணி­வதைத் தவிர்க்க வேண்­டு­மென அல்­குர்­ஆனும் நபி மொழியும் நம்மை எச்­ச­ரித்­தி­ருக்­கி­றது. அந்த எச்­ச­ரிக்­கை­களைப் புறந்­தள்ளி நம்­ம­வர்­களில் எத்­த­னைபேர் இறுக்­க­மான ஆடை­ய­ணிந்து இத்­தி­னத்தை அசிங்­கப்­ப­டுத்­த­வுள்­ளனர் என்­ப­தையும் பெருநாள் தினத்தில் கண்­டு­கொள்­ளலாம்.

ஆடைத்­தெ­ரிவு குறித்து இத்­தனை நாட்­களும் உல­மாக்­க­ளினால் வானொலி, தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் பள்­ளி­வா­சல்­க­ளிலும் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இருப்­பினும், நாக­ரிக மோகத்தின் எல்­லை­தாண்­டி­ய­வர்­க­ளினால்  நாக­ரி­கத்­துக்­கான முன்­னு­ரி­மை­யுடன் மேற்­கொள்ளும் செற்­பா­டுகள், வாழ்க்கைத் தெரி­வுகள் அத்­தெ­ரி­வு­களை தெரிவு செய்­ப­வர்­களை மாத்­திரம் பாதிப்­ப­தில்லை என்று உண­ரப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இவை மொத்த சமூ­கத்­தையும் பாதிக்­கி­றது. தனித்­து­வத்­தையும் இஸ்­லா­மிய கலா­சார விழு­மி­யங்­க­ளையும் கேள்­விக்குள் தள்­ளு­கி­றது. ஏள­னத்­திற்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்­பது உண­ரப்­பட வேண்டும்.                                   

பெருநாள் தினமும்

சமூ­க ­ந­லனும்

முஸ்­லிம்கள் பல சோத­னை­க­ளையும் வேத­னை­க­ளையும் சுமந்து வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். வல்ல இறைவன்  சோதிப்­ப­தற்­கா­கவே   சிலரை எல்லா வளமும் கொண்­ட­வர்­க­ளா­கவும் இன்னும் சிலரை வள­மற்­ற­வர்­க­ளா­கவும் படைத்­துள்ளான்.

இறை­வனால் அனுப்­பப்­பட்ட இறை­தூ­தர்­களும் சோதிக்­கப்பட்­டி­ருக்­கி­றார்கள். அச்­சோ­த­னையில் அவர்கள் வெற்­றியும் பெற்­றி­ருக்­கி­றார்கள். நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு சோத­னை­க­ளையும் சுமை­க­ளையும் சுமந்­த­வர்­க­ளாக இப்­பெ­ரு­நாளை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றார்கள். அவர்­களின்  இதயப் பரப்­பெங்கும் வேதனை அப்­பிக்­கி­டக்­கி­றது.

இயற்கை மற்றும் செயற்கை பாதிப்­புக்­களால், குடி­யி­ருக்க வீடு­வாசல் இல்­லாமல் வாடகை வீட்­டிலும் மாற்றார் தய­விலும்  வாழ்க்கைச் சக்­க­ரத்தை சுழற்­று­ப­வர்­க­ளா­கவும், உடல் உபா­தை­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சாலைக் கட்­டில்­களின் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவும், வாழ்க்­கையின் நெருக்­கு­வா­ரங்­களால் உள்ளம் உருக்­கு­லைந்து தன்­னிலை மறந்த உள நோயா­ளர்­க­ளா­கவும்,  வரு­மானம் வற்றிக் குடும்பச் சுமையின் அவஸ்­தையால் அல்­ல­லு­று­ப­வர்­க­ளா­கவும் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றைக்­கா­கவும் பெருமை வாழ்க்­கைக்­கா­கவும்  கை நீட்டி வாங்­கிய கடனைத் திருப்­பி­ய­ளிக்க இய­லாது அதன் வலியால் சுய கௌர­வத்தை காற்றில் வீசி­ய­வர்­க­ளா­கவும் இன்­னும பற்­பல இன்­னல்­க­ளோடு நம்மைச் சுற்றிப் பலர் வாழ்­கி­றார்கள்.

இவர்­களின் இத­யங்­களை சந்­தோ­ஷத்தால் நனைப்­ப­வர்கள் யார்? இவர்­களும் பெரு­நாளின் இன்பப் பொழுதை இரம்­மி­ய­மாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்­வி­க­ளுக்கு நம்மில் பல­ரிடம் விடை இருக்­கி­றது. ஆனால் அக்­கேள்­வி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கிச் செயற்­படும் மனப்­பாங்கு பல­ரிடம் மல­ர­வில்லை.

“அயல் வீட்டார் அன்­னி­ய­வ­ராக இருந்­தாலும் அவர் அயல்­வீட்டார் என்­ப­தற்­காக அவ­ரிலும் நமக்கு பொறுப்பு உள்­ளது” என்ற  நபி­க­ளாரின் திரு­வ­சனம் நம்மில் பல­ரது உள்­ளங்­க­ளி­லி­ருந்து எடு­பட்­டு­விட்­டது. இத­னால்தான்,  அண்டை வீட்டு நம் சகோ­தரன் குடிசை வீட்டில் பாயில் படுத்­து­றங்க நம்மில் பலர் மாட மாளி­கை­களில் பஞ்சு மெத்­தையில் உறங்கி எழும்­பு­கின்­றனர்.

ஒரு­வேளை  சோற்­றுக்­காக நம் சகோ­தர சகோ­த­ரிகள் ஏங்கிக் கிடக்க நம்மில் பலர் புரி­யாணி சாப்­பிட்டு மிஞ்­சி­யதை குப்­பையில் வீசி­விட்டு ஏப்­ப­மி­டு­கின்­றனர். கல்­யாண வாழ்க்­கைக்­காக காத்­தி­ருந்து காத்­தி­ருந்து காலம் கடந்த பின்  மண­வாழ்க்கை காணாது கண்­ணீரால் காவியம் வடிக்கும் நமது சமு­தாயக் கன்­னி­யரைப் பற்றிக் கொஞ்­சமும் கவலை கொள்­ளாது, நம்மில் பல கொடை­வள்­ளல்கள் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் பணத்தை வீண்­வி­ரயம் செய்து தங்கள் பெண்­ம­ணி­க­ளுக்கு திரு­மணம் நடத்தி அழகு பார்க்கின்றனர்.

அல்லாஹ்வையும் அண்ணல் நபியையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வாய் கிழியப் பேசுபவர்கள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்காது போலி கௌரவத்தை மதித்து 'ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல' என்ற நிலையில் வாழ்கின்றனர். சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாட்டுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸூலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர்.

இதனால், சமுதாயத்தின் மானமும் மரியாதையும் காற்றில் பறக்க அவமானத்தோடும் கவலையோடும் சமுதாயத்திலுள்ள சீதேவிகள்  கண்ணீர் சிந்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம், நம்மில் வளம் இருந்தும் அவற்றை சமுதாயத்தின் தேவைக்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்தாமல் காணப்படுகின்றமையாகும். இதனால், சமுதாயம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவை இன்னும் நம்மால் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

அடையாளம் காண்பதற்கு நமக்குள் ஒற்றுமையில்லை. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் நாம் பிரிந்து செயற்படுகின்றோம். எதைச் செய்தாலும் பிரபல்யத்திற்காக செய்யும் மன நிலையே நமது பிரபல்யங்கள் பலரிடத்தில் காணப்படுகின்றன. இதனால்தான் சமூகம் இன்றும் பொருளாதார, கல்வி, அரசியல் என சகல துறைகளிம் பின்னடைவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலை தொடரப்படுமாயின் எதிர்கால சந்ததியினரும் கேவலப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எத்தகைய விடயங்கள் சமூகத்தை அவமானப்படுத்தி சந்தி சிரிக்கச் செய்கிறதோ அத்தகைய விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கள் அவசியமாகவுள்ளன. இதன் மூலம் சமூகத்தின் கௌரவமும் தன்மானமும் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். சமூக கௌரவமும், விட்டுக்கொடுப்பு, ஒற்றுமை என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, இப்பெருநாளுக்கான ஷவ்வால் தலைப்பிறை அறிவிப்பும் பெருநாள் தின செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதே சமூக நலன் விரும்பிகளின் அவாவாகும்.
-Vidivelli