Verified Web

பிறையால் பிளவுகள் வேண்டாம்

2018-06-14 04:36:49 Administrator


புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையை நாளை மாலை பார்க்­கு­மாறும் அது தொடர்பில் தமக்கு அறி­விக்­கு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன அறி­வித்­துள்­ளன. எனினும் இன்றைய தினமும் பிறை தென்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுவதால் இன்று மாலை கூட பிறைக் குழு கூடி தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும்.

அதே­போன்று சர்­வ­தேச பிறை அல்­லது சவூதி அரே­பி­யாவை பின்­பற்றும் சாராரும் தமது கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் நாளை பெரு­நாளை கொண்­டா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

துர­திஷ்­ட­வ­ச­மாக கடந்த ஒரு வார காலமாகவே சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பயான்­க­ளிலும் அது தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் கருத்து மோதல்­களும் தொடங்­கி­விட்­டன.

வழக்கம் போன்றே இந்த வாதங்கள் எந்­த­வித தீர்­மா­ன­மு­மற்று முரண்­பாட்டை மென்­மேலும் கூர்­மைப்­ப­டுத்­தவே வழி­வ­குத்துக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை.

பிறை தொடர்பான இந்த கருத்து முரண்­பாடு தீர்க்­கப்­படக் கூடிய ஒன்­றல்ல என்­பதில் பல அறி­ஞர்­களும் உடன்­ப­டு­கின்­றனர். அதனால் அவர்கள் கூறும் ஆலோ­சனை, நீங்கள் விரும்­பி­ய­வாறு பெரு­நாளைக் கொண்­டா­டுங்கள்; தயவு செய்து பிறை விவ­கா­ரத்தை காரணம் காட்டி சமூக ஒற்­று­மையை குலைத்­து­வி­டா­தீர்கள் என்­ப­துதான்.

இலங்­கையில் பிறை விவ­காரம் கடந்த காலங்­களில் பல கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு வித்­திட்­டதை நாம் அறிவோம். இதனால் வன்­மு­றை­களும் நிகழ்ந்­துள்­ளன. பல குடும்­பங்கள் பிரிந்­துள்­ளன. ஒரே வீட்டில் பெருநாள் கொண்­டாடி மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டிய நாளில் இரண்டு சாரா­ராக பிரிந்து  முகத்தைக் கூட பார்க்­காது கோபித்துக் கொள்­கின்ற போக்­கு­களும் நடந்­துள்­ளன.

பிறை­யினைக் காரணம் காட்டி குடும்­பத்­தி­னதும் சமூ­கத்­தி­னதும் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பதை இஸ்லாம் ஒரு போதும் அனு­ம­திக்­க­வில்லை. என­வேதான் தயவு செய்து பிறையை காரணம் காட்டி பிரச்சினைகளை வளர்க்காது ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் பெருநாளை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இன்று வியா­ழக்­கி­ழமை மாலை பிறை தென்­பட்ட தக­வல்கள் நாட்டின் ஏதா­வ­தொரு பகு­தி­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்றால் அதனை பிறைக்­குழு எவ்­வாறு கையாளப் போகி­றது என்­ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்.

கடந்த 2013 இல் கிண்­ணி­யாவில் இதே­போன்­றுதான் பிறை கண்­டமை அப் பகுதி ஜம்­இய்­யதுல் உலமா கிளை­யினால் உறுதி செய்­யப்­பட்டும் கூட அதனை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவோ பிறைக்­கு­ழுவோ ஏற்றுக் கொள்­ள­வில்லை. இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் குழப்ப நிலை தோன்­றி­யதை நாம் அறிவோம். அவ்­வா­றா­ன­தொரு கசப்­பான அனு­பவம் இம்­முறை ஏற்­பட்­டு­விடக் கூடாது. அதற்கு பிறையைத் தீர்மானிக்கும் சட்ட, சமூக அங்கீகாரம் கொண்ட தலைமைகள் இடமளிக்கவும் கூடாது. இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட மார்க்க தலைமைகள் தமது கடமையை சரிவரச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
-Vidivelli