Verified Web

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைத் தீர்­மா­னங்­களின் தெளிவு

2018-06-13 04:12:52 Administrator

2006.09.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­ம­ய­கத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சார்­பிலும், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் சார்­பிலும் ஒன்று கூடிய ஆலிம்கள் பிறை பார்த்தல் தொடர்­பாக ஏக­ம­ன­தாக மேற்­கொண்ட தீர்­மா­னங்கள் தொடர்பில் எழு­தப்­பட்­டதே இக்­கட்­டு­ரை­யாகும்.

நம் நாட்டில் ரமழான் தலைப்­பி­றை­யையும், இரு பெருநாட் பிறை­க­ளையும் தீர்­மா­னிக்கும் பொறுப்­பு­வாய்ந்த சன்­மார்க்கக் கட­மையை கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஆலிம்­களின் துணை­யுடன் பல தசாப்­தங்­க­ளாக  மேற்­கொண்­டு­வந்­துள்­ளதை முழு முஸ்லிம் சமூ­கமும் நன்கு அறியும். காலப்­போக்கில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இப்­ப­ணியில் இணைந்து கொண்­டது. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக் குழுவும் சேர்ந்து பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. இதில் முஸ்லிம் பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­களும் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர். முஸ்லிம் சமூகம் எல்லாக் காலங்­க­ளிலும் இவ்­வ­மைப்பை பிறை தொடர்­பான அதி­கா­ர­பூர்வ அமைப்­பாக கருதி அதன் தீர்­மா­னங்­களை ஏற்று அதற்குக் கட்­டுப்­பட்டு செயல்­பட்டு வந்­துள்­ளது.

பிறை பார்த்தல் தொடர்­பாக குறித்த அமைப்­புடன் உடன்­ப­டாத சில முஸ்லிம் சகோ­த­ரர்கள் இந்­நாட்டில் தொடர்ந்து இருந்து வந்­துள்ள போதும் அவர்­களின் நிலைப்­பாடு நாட­ளா­விய ரீதியில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வில்லை. ஆனால், அண்மைக் கால­மாக பிறை பார்த்தல் தொடர்­பாக எதிரும் புதி­ரு­மான நிலைப்­பா­டுகள் தோன்றி அவை வலுப்­பெறும் நிலை அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றன. பொது­மக்­களும் இச்­சர்ச்­சைகள் கார­ண­மாக பெரு­ம­ளவில் குழப்­ப­ம­டையும் நிலையும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சிறிய நாட்டில் சிறிய சமூ­கத்தில் கடந்த ஆண்டு ஈதுல் பித்ர் பெருநாள் மூன்று நாட்கள் கொண்­டா­டப்­பட்­டமை யாவரும் அறிந்­ததே.

இப்­பின்­ன­ணி­யி­லேயே பிறை தொடர்­பான இச்­சர்ச்­சைக்கு இம்­முறை எப்­ப­டியும் தீர்­வு­களைப் பெற­வேண்டும். நிலைப்­பா­டு­களை மிகச் சரி­யாக தீர்­மா­னித்து நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வாக அறி­வித்­து­விடல் வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தீர்­மா­னித்­தது. இது தொடர்­பாக ஷரீஆ கண்­ணோட்­டத்தில் ஆழ­மா­னதோர் ஆய்வு மேற்­கொள்­வ­தற்­காக ஒரு விசேட நிபு­ணத்­துவக் குழுவும் நிய­மிக்­கப்­பட்­டது. குறித்த குழு பல மாதங்கள் பிறை தொடர்­பான சட்டப் பிரச்­சி­னை­களை ஆய்வு செய்து ஒரு விரி­வான அறிக்­கையை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மை­பீ­டத்­திற்கு சமர்ப்­பித்­தது. இதனை அடுத்து கடந்த 2006.09.06 இல் பிறை தொடர்­பான இறுதித் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்­கான விசேட அமர்வு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மைப்­ப­ணி­ம­னையில் இடம் பெற்­றது. இவ்­வ­ம­வர்வில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சார்­பிலும், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் சார்­பிலும் முக்­கி­ய­மான ஆலிம்கள் கலந்து கொண்­டனர். அவ்­வ­மர்வின் போது பிறை தொடர்­பான எமது நிலைப்­பா­டு­களை எவ்­வாறு அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்­பது பற்றி ஷரீஆ கண்­ணோட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. அதனைத் தொடர்ந்தே ஊட­கங்கள் மூலம் வெளி­யி­டப்­பட்ட குறித்த தீர்­மா­னங்கள் பெறப்­பட்­டன.

பிறை பார்த்தல் தொடர்­பான மார்க்கப் பிரச்­சி­னை­களில் 'இக்­தி­லாஃபுல் மதாலிஃ' எனும் பிறை பிறக்கும் பிராந்­திய வேறு­பாடு தொடர்­பான பிரச்­சினை முதன்மை பெறு­கின்­றது. பிறை பிறத்­தலில் பிராந்­திய வேறு­பாடு உண்டு என்­பதே எமது நிலைப்­பா­டாகும். காலா­கா­ல­மாக இலங்கை முஸ்லிம் சமூகம் இந்­நி­லைப்­பாட்டில் நின்றே பிறை தொடர்­பான முடி­வு­களைப் பெற்று வந்­துள்­ளது. இந்­நி­லைப்­பாட்­டுக்கு பின்­வரும் குரைப் (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்­களின் ஹதீஸ் பிர­தான ஆதா­ர­மாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது.

முஆ­வியா (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்கள் சிரி­யாவில் இருந்த வேளை உம்முல் ஃபழ்ல் (ரழி­யல்­லாஹு அன்ஹா) அவர்கள் என்னை சிரி­யா­வுக்கு அனுப்பி வைத்­தார்கள். சிரி­யா­வுக்குப் போய் அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்றிக் கொண்டேன். நான் சிரி­யாவில் இருந்த வேளையில் ரமழான் பிறை எனக்குத் தென்­பட்­டது. வெள்ளிக் கிழமை இரவு நான் தலைப்­பி­றையைக் கண்டேன். அம்­மா­தத்தின் இறு­தியில் நான் மீண்டும் மதீனா வந்தேன். என்­னிடம் அப்­துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி­யல்­லாஹு அன்­ஹுமா) அவர்கள் பிறை விட­யத்தைப் பற்றி ஞாபகப் படுத்தி விட்டு, நீங்கள் எப்­போது பிறை கண்­டீர்கள்? என்று கேட்­டார்கள். வெள்ளிக் கிழமை இரவு என்று சொன்னேன். அப்­போது நீங்கள் பிறையைக் கண்­டீர்­களா? என்று கேட்­டார்கள். அதற்கு, ஆம் நானும் கண்டேன், மக்­களும் கண்­டனர், மக்­களும் நோன்­பி­ருந்­தனர், முஆ­வியா (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்­களும் நோன்­பி­ருந்­தார்கள் என்றேன். அதற்கு அப்­துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி­யல்­லாஹு அன்­ஹுமா) அவர்கள் நாங்கள் சனிக் கிழமை இரவே பிறையைக் கண்டோம். மாதத்தை முப்­பது நாட்­க­ளாக்கும் வரை அல்­லது தலைப்­பி­றையைக் காணும் வரை தொடர்ந்து நோன்­பி­ருப்போம்' என்­றார்கள். அதற்கு நான், முஆ­வியா (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்கள் பிறையைக் கண்­டதும், நோன்­பி­ருந்­ததும் உங்­க­ளுக்குப் போது­மா­ன­தா­காதா? என்று கேட்டேன். இல்லை, இவ்­வா­றுதான் நாங்கள் ஏவப்­பட்­டுள்ளோம் என்று கூறி­னார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : பாடம் : ஒவ்­வொரு பிர­தேச மக்­களும் பிறை காண்­பதன் விளக்கம்)

ஷாபிஈ மத்­ஹபின் பொது­வான நிலைப்­பாடு இது­வாகும். ஹனபி மத்­ஹபைச் சார்ந்­தோரும் இந்­நி­லைப்­பாட்டை ஆத­ரிக்­கின்­றனர். நவீன கால அறி­ஞர்­க­ளிலும் பலர் இக்­க­ருத்­துக்கு சார்­பா­க­வுள்­ளனர். சர்­வ­தேச பிறையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தலைப்­பி­றையை தீர்­மா­னிப்­பது வானியல், புவி­யியல் நோக்­கிலும் பொருத்­த­மான நிலைப்­பா­டல்ல என்­பதை இப்­போது வானியல் அறி­ஞர்கள் நிரூ­பித்­துள்­ளனர். இது தொடர்­பான ஒரு விளக்கக் கட்­டு­ரையை சகோ­தரர் எம்.எம்.இப்லால் B.A (Hons) அவர்கள் கடந்த 2006.09.15 தின­க­ரனில் சந்­திர மாத கணிப்­பீடு பற்­றிய ஒரு புவி­யியல் நோக்கு எனும் தலைப்பில் எழு­தி­யி­ருந்தார் என்­பதை இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

இப்­பின்­ன­ணி­யி­லேயே எமது முத­லா­வது தீர்­மானம் பின்­வ­ரு­மாறு அமைந்­தது:

உள்­நாட்டில் வெற்­றுக்­கண்­க­ளுக்கு பிறை தென்­ப­டு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இஸ்­லா­மிய மாதம் தொடர்­பான அனைத்து முடி­வு­களும் பெறப்­படும்.

தலைப் பிறையை தீர்­மா­னிப்­ப­துடன் தொடர்­பான மற்­று­மொரு முக்­கிய பிரச்­சினை பார்க்கும் முறை பற்­றி­ய­தாகும்.

தலைப் பிறையை பூமி­யி­லி­ருந்து வெற்­றுக்­கண்­களால் பார்க்க வேண்டும் என்­பது ஒரு நிலைப்­பா­டாகும். பிறையைக் கண்டு நோன்பு நோற்­கவும். பிறையைக் கண்டு நோன்பு வைப்­பதை நிறுத்­தவும் என்ற பிர­பல்­ய­மான, நம்­ப­க­மான ஹதீஸ் இக்­க­ருத்­துக்கு முக்­கிய சான்­றா­தா­ர­மாக விளங்­கு­கின்­றது.

முழு ரம­ழா­னிலும் நோன்பு நோற்றல் வேண்டும் ரம­ழானின் ஒரு நாளேனும் விடு­ப­ட­லா­காது. ரம­ழானின் ஒரு நோன்பு, ஷஃபா­னிலோ அல்­லது ஷவ்­வா­லிலோ நோக்­கப்­ப­டவும் கூடாது. இது உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே நபி (சல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

தலைப்­பிறை பார்ப்­பது தொடர்­பி­லான இன்­னு­மொரு முக்­கிய தீர்­மானம் பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது:

     ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்­ணுக்குப் புலப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­றது என நம்­ப­க­மான முஸ்­லி­மான வானியல் அறி­ஞர்கள் உறுதி செய்­யு­மி­டத்து வானியல் அவ­தா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான அந்­நி­லைப்­பாடு ஏற்­றக்­கொள்­ளப்­ப­டு­வ­தோடு அவ்­வ­டிப்­ப­டையில் அன்­றைய தினம் பிறை காண­மு­டி­யாத நாளாகக் கொள்­ளப்­படும்.

 நபி­களார் காலத்தில் வெற்றுக் கண்­களால் பிறை பார்த்து, மாதங்­களைத் தீர்­மா­னிக்கும் முறையே வழக்கில் இருந்­த­தாக ஹதீஸ்கள் மூலம் அறியக் கிடைக்­கின்­றது. மாதக் கணிப்­பீடு செய்யும் முறை அக்­கா­லத்தில் இருக்­க­வில்லை என்­பது பின்­வரும் ஹதீஸ் மூலம் நிரூ­ப­ன­மா­கி­றது.

நிச்­ச­ய­மாக நாம் எழுத்­த­றி­வற்ற ஒரு சமூ­க­மாவோம். நாம் எழு­து­வதும் இல்லை, மேலும் கணக்குப் பார்ப்­பதும் இல்லை. மாதம் என்­பது இவ்­வாறு, இவ்­வாறு, இவ்­வாறு என இரு தட­வைகள் இரு கைக­ளி­னதும் விரல்­களை விரித்தும், மூன்­றா­வது தட­வையில் பெரு­விரல் தவிர்ந்த ஏனைய விரல்­களை விரித்தும் காட்­டி­னார்கள். பின்னர் மாதம் என்­பது இவ்­வாறு, இவ்­வாறு, இவ்­வாறு என இரு கைகளின் அனைத்து விரல்­க­ளையும் விரித்து மூன்று தட­வைகள் நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்­டி­னார்கள். அதா­வது: முப்­பது நாட்கள் பூர­ண­ம­டை­த­லாகும் என்று அப்­துல்லாஹ் இப்னு உமர் (ரழி­யல்­லாஹு அன்­ஹுமா) அவர்கள் அறி­வித்­துள்­ளார்கள்.

(ஸஹீஹு முஸ்லிம் : பாடம் : தலைப்­பிறை கண்டு ரமழான் நோன்பு கட­மை­யாதல்)

தலைப்­பி­றையைக் காண­மு­டி­யா­த­வாறு முகிழ் மூட்டம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்­பது தொடர்­பாக நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வழி­காட்­டலைத் தந்­துள்­ளார்கள். அதா­வது, 'ஷஃபானை முப்­பது நாட்­க­ளாக பூர­ணப்­ப­டுத்­துங்கள்' என்­ப­தாகும்.

ஒரு குறிப்­பிட்ட நாளில் பிறை வெற்றுக் கண்­க­ளுக்குப் புலப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­றது என வானியல் கணிப்­பீ­டுகள் உறுதி செய்­யு­மி­டத்து கண்­களால் பார்த்­த­வர்­களின் சாட்­சியம்  நிரா­க­ரிக்­கப்­படும் என்­பது இமாம் தகிய்­யுத்தீன் அஸ்­ஸுப்கி (ரஹி­ம­ஹுல்லாஹ்) அவர்­களின் தீர்ப்­பாகும். வானியல் கணிப்­பீடு என்­பது உறு­தி­யா­னது (கண்­களால் பார்த்­த­தாகக் கூறும்) சாட்­சியம் உறு­தி­யற்­றது உறு­தி­யான ஒரு நிலைப்­பாட்­டுடன் உறு­தி­யற்ற ஒரு நிலைப்­பாடு முரண்­பட முடி­யாது. என்­கிறார் இமாம் ஸுப்கி (ரஹி­ம­ஹுல்லாஹ்).

குறைந்த பட்சம் பிறை கண்­ட­தாக வரும் செய்­தியை சரி காண்­ப­தற்கு வானி­யலின் துணை நாடப்­ப­டலாம். இதன் பய­னாக தப்­பான நாளில் புதிய மாதம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட முடியும் என சில அறி­ஞர்கள் கரு­து­கின்­றனர். தற்­கா­லத்தில் இக்­க­ருத்தை பல ஆலிம்கள் ஆத­ரிக்­கின்­றனர். மிகவும் பொருத்­த­மா­னதும், நடு­நி­லை­யா­ன­து­மான கருத்­தாக இது கொள்­ளப்­ப­டு­கின்­றது. புகழ்­பூத்த இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞ­ரான இப்னு ஹஜர் அல்­ஹை­தமீ (ரஹி­ம­ஹுல்லாஹ்) அவர்­களின் கருத்தும் இது­வாகும்.

அதா­வது, தலைப்­பி­றையைத் தான் கண்­ட­தான ஒரு முஸ்­லி­மு­டைய அறி­வித்தல் விஞ்­ஞா­னத்தின் எதிர்வு கூற­லுக்கு முரண்­பா­டாக அமைந்தால் அவ்­வ­றி­வித்தல் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. ஆயினும் விஞ்­ஞா­னத்தின் எதிர்வு கூறல் இருந்த போதும் எவ­ராலும் தலைப்­பிறை வெற்­றுக்­கண்­களால் காணப்­ப­ட­வில்­லை­யாயின் அவ்­வாறு அது கரு­தப்­பட்டு நடப்பு மாதம் 30 நாட்­க­ளாக பூர­ணப்­ப­டுத்­தப்­படும்.

வானியல் கணிப்­பீ­டு­களை நம்­ப­க­மான முஸ்லிம் வானியல் அறி­ஞர்கள் உறுதி செய்தல் வேண்டும் என்­பது எமது தீர்­மா­னத்தில் இடம் பெற்­றுள்ள ஒரு விட­ய­மாகும். பொது­வாக வானியல் அறி­ஞர்கள் எவரும் கணிப்­பீ­டு­களை வெளி­யி­டலாம். அவை நம்­ப­க­மான, முஸ்லிம் வானியல் அறி­ஞர்­களால் உறுதி செய்­யப்­படல் வேண்டும் என்­ப­தையே தீர்­மானம் கூறு­கின்­றது. வானியல் கணிப்­பீ­டுகள் இஸ்­லா­மிய மாதங்­களைத் தீர்­மா­னிப்­ப­தற்கும், இபா­தத்­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­மான காலங்­களை தீர்­மா­னிப்­ப­தற்கும் உத­வி­யாகக் கொள்­ளப்­ப­டு­வதால் பிறை­பார்த்தல் தொடர்­பான சாட்­சியம் சொல்வோர் முஸ்­லிம்­க­ளா­கவும், நம்­ப­க­மா­ன­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது போலவே வானியல் கணிப்­பீ­டு­களை உறுதி செய்யும் வானியல் அறி­ஞர்­களும் முஸ்­லிம்­க­ளா­கவும், நம்­ப­க­மா­ன­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும்.

இன்று சர்­வ­தேச மட்­டத்­திலும், உள்­நாட்டு மட்­டத்­திலும் நம்­ப­க­மான முஸ்லிம் வானியல் அறி­ஞர்கள் இருக்­கின்­றார்கள் என்­ப­த­னையும் நாம் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்.

எமது ஐந்தாம் தீர்­மானம் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளது:

     பிறை வெற்றுக் கண்­க­ளுக்குத் தென்­ப­டு­வது அசாத்­தி­ய­மா­னது என முடிவு செய்­யப்­பட்ட நாளில் ஒரு­வரோ அல்­லது பலரோ பிறை கண்­ட­தாகக் கரு­தினால் அவரோ அல்­லது அவர்­களோ தலை­மைத்­து­வத்­திற்குக் கட்­டுப்­படல் என்ற வகை­யிலும், முஸ்லிம் சமூ­கத்­துடன் இணைந்து செல்லல் என்ற வகை­யிலும் குறித்த நாளில் நோன்பு நோற்­ப­தற்கோ பெருநாள் கொண்­டா­டு­வ­தற்கோ பிறரைத் தூண்­டவோ, பிர­க­ட­னப்­ப­டுத்­தவோ கூடாது. தனிப்­பட்ட முறையில் அவரோ அல்­லது அவர்­களோ தான் அல்­லது தாம் கண்­ட­தாகக் கருதும் பிறையின் அடிப்­ப­டையில் செயற்­படும் அனு­ம­தியைப் பெறுவர்.

 இந்த முடிவும் எமது சுய ஆய்வின் அடிப்­ப­டையில் பிறந்த ஒன்­றல்ல. இது எமது ஆரம்பகால அறி­ஞர்கள், இமாம்கள் குர்ஆன், ஸுன்­னாவின் ஒளியில் வெளி­யிட்­டுள்ள கருத்­தாகும்.

தலைப்­பிறை கண்ட அறி­வித்­தலின் அடிப்­ப­டையில் புதிய மாதம் ஆரம்­பித்­த­தாகப் பிர­க­டனம் செய்யும் அதி­காரம் தலை­மைத்­து­வத்­திற்கு மட்­டுமே உண்டு. தலை­மைத்­துவம் எனும் போது அது அடிப்­ப­டையில் கிலாஃ­பத்தைக் குறிக்கும். கலீஃ­பாவோ அவர் சார்பில் இதற்­காக நிய­மனம் பெற்ற அதி­கா­ரியோ பிறை பற்­றிய பிர­க­ட­னத்தைச் செய்ய வேண்டும். இன்று கிலாஃபத் இல்­லா­த­தனால் இப்­பொ­றுப்பு அவ்­வந்த அர­சு­களைச் சாரும். இலங்கை போன்ற முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் அந்த நாடு­களின் முஸ்­லிம்­களின் அங்­கீ­காரம் பெற்ற ஒரு சபை­யிடம் இப்­பொ­றுப்பு வழங்­கப்­படல் வேண்டும் என்­பது இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் கருத்­தாகும். இந்த வகையில் இலங்­கையில் பிறை தொடர்பான தீர்மானம் எடுக்கும் அதிகாரமுடைய சபையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாயல், முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்த அமைப்பு காணப்படுகின்றது. எனவே, இவ்வமைப்பு பிறையை உறுதிப்படுத்தாத நிலையில் தனிப்பட்ட முறையில் ஒருவரோ அல்லது சிலரோ தாம் பிறை கண்டதாக நம்பினால் அவரது அல்லது அவர்களது நிலைப்பாடு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியே ஐந்தாம் தீர்மானம் பேசுகின்றது.

இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் ரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம்.

இதுவரை குறிப்பிடப்பட்ட இச்சுருக்கமான விடயங்களுக்கூடாக பிறை பார்த்தல் தொடர்பான தீர்மானங்களின் உண்மைத்தன்மையையும், பின்புலத்தையும் புரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

ஏலவே, நீண்ட காலமாக குறித்த நிலைப்பாடுகளில் நின்றே பிறை தொடர்பான முடிவுகள் பெரும்பாலும் பெறப்பட்டு வந்துள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இந்நிலைப்பாடுகளை மீளாய்வு செய்து தெளிவாக, முடிவாக, எழுத்தில் தீர்மானங்களாக, அனைவருக்கும் அறியும் விதத்தில் தரும் முயற்சியாகவே கடந்த 2006.09.06 ஆம் திகதி தீர்மானங்கள் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். =அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

நன்றி : http://www.sheikhagar.org/

-Vidivelli