Verified Web

பாகிஸ்தானின் குத்துச் சண்டை வீராங்கனைகள்

2018-06-11 01:50:25 Administrator

பாகிஸ்­தானின் வர்த்­தக தலை­ந­க­ரான கராச்­சியில் மிகவும் நெரி­ச­லான குடி­யி­ருப்பு பகு­தி­களில் ஒன்று லியாரி. பல்­வேறு இனக்­கு­ழுக்­களைச் சேர்ந்­த­வர்­களும் ஒன்­றாக வாழும் இந்தப் பகு­தியில் வாழும் அனைத்துக் குடும்­பங்­க­ளுக்கும் பொது­வான அம்சம் வறு­மைதான்.

தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளாலும் சட்­ட­வி­ரோதக் குழுக்­க­ளுக்கு இடையே உண்­டாகும் மோதல்­க­ளாலும் சில காலத்­துக்கு முன்பு வரை பாது­காப்பு படை­களை சேர்ந்­த­வர்­கள்­கூட அங்கு செல்­வது இது­வரை எளி­தா­ன­தாக இருக்­க­வில்லை.

அவை அனைத்தும் தற்­போது ஒழிக்­கப்­பட்­டுள்­ளதால் இப்­போ­துதான் வெளி­யு­லகைச் சேர்ந்­த­வர்கள் அப்­ப­கு­திக்குள் நுழையும் நிலை உண்­டா­கி­யுள்­ளது.

நான் அங்கு பயணம் மேற்­கொண்­ட­போது நான் முதலில் சென்ற இடம் அங்­குள்ள ஒரு குத்­துச்­சண்டை பயிற்சி மையம்.

தினமும் பள்ளி நேரம் முடிந்­ததும் இரு­பத்தி ஐந்­துக்கும் மேலான பள்ளி மாண­விகள் நேராக பாக் ஷாகீன் குத்­துச்­சண்டை மன்­றத்­துக்­குத்தான் வரு­கி­றார்கள். குத்­துச்­சண்டை மீது அவர்கள் கொண்­டுள்ள கனவு அவர்­களை உட­ல­ள­விலும் மன­த­ள­விலும் வலிமை மிக்­க­வர்கள் ஆக்கும் என்று நம்­பு­கி­றார்கள்.

லியா­ரியில் வாழும் இந்த இளம் பெண்­க­ளுக்கு குத்­துச்­சண்­டைதான் முதல் காதல்.

அழுக்­க­டைந்து மோச­மான நிலையில் இருந்­தாலும் அந்தப் பயிற்சி மையத்தில் ஒரு குத்­துச்­சண்டை வளையம் உள்­ளது.

குத்­துச்­சண்டை வீரர் முக­மது அலியின் படம் அங்­குள்ள ஒரு சுவரில் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தது. குத்­துச்­சண்­டைக்­கான கையு­ரைகள் இன்­னொரு சுவரில் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தன.

அங்கு பயிற்சி எடுக்கும் 13 வயது மாண­வி­யான அலியா சோமரோ இது­வரை தோல்­வியைச் சந்­தித்­ததே இல்லை. முக­மது அலிதான் அலி­யா­வுக்கு உந்­துதல்.

"முக­மது அலியின் போட்­டி­களைப் பார்த்­துள்ளேன். குத்­துச்­சண்­டையில் அவர் தனது வலது கையைப் பயன்­ப­டுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மூன்று முறை பட்டம் வென்றார். நான் ஐந்து முறை வெல்வேன்," என்று சிவந்த முகத்­துடன் குத்­துச்­சண்டை மேடை­மீது நின்­று­கொண்டு என்­னிடம் சொல்­கிறார்.

"பல பெண்­களை குத்­துச்­சண்­டையில் பங்­கேற்க அவர்கள் குடும்பம் அனு­ம­திப்­ப­தில்லை. எனினும் எனக்கு அப்­படி இல்லை. என் தந்தை ஒரு கால்ப்­பந்து வீரர். அதனால், அவர் என்னை ஊக்­கு­விக்­கிறார்," என்­கிறார் அலியா.

குடும்­பத்தின் ஆத­ரவு இருப்­பதால் மட்­டுமே அலி­யா­வுக்கு எல்லாம் எளி­தா­ன­தாக இல்லை.

"நான் முதல் முறை­யாக குத்­துச்­சண்டை மேடை ஏறி­ய­போது என்னை மிகவும் இழி­வாகப் பேசி­னார்கள். வீட்­டி­லேயே இருந்­து­கொண்டு படிக்­கு­மாறும் கூறி­னார்கள். என்னைக் குத்­துச்­சண்டை விளை­யாட அனு­ம­தித்த என் தந்­தை­யையும் கேள்வி எழுப்­பி­னார்கள்," என்று தன் அனு­வ­ப­வங்­களை விவ­ரிக்­கிறார் அந்த இளம் வீராங்­கனை.

என்­றா­வது ஒருநாள் ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கேற்கும் தனது நம்­பிக்­கை­யையும் அவர் வெளிப்­ப­டுத்­தினார்.

பாக் ஷாகீன் குத்­துச்­சண்டை மன்­றத்தின் பயிற்­சி­யாளர் பெண்­க­ளுக்கும் பயிற்சி அளிக்­கலாம் என்று 2013இல் முடி­வெ­டுத்­த­போது லியா­ரியில் அதை எதிர்க்கும் மற்றும் ஆத­ரிக்கும் குழுக்­க­ளி­டையே உண்­டான மோதலால் தெருக்கள் வன்­முறைக் கோலம் பூண்­டன. அந்த வன்­மு­றை­களின் எளிய இலக்கு பெண்­கள்தான்.

"அது மிகவும் மோச­மான கால­கட்­ட­மாக இருந்­தது. எங்கள் பயிற்சி மையத்தின் வளா­கத்தில் துப்­பாக்கி புல்­லட்­டு­க­ளை­கூட நான் கண்­டெ­டுத்­துள்ளேன்," என்­கிறார் பயிற்­சி­யாளர் யூனிஸ் குவாம்­ப­ரானி.

"வறுமை மற்றும் வன்­மு­றையில் தள்­ளப்­பட்ட இந்த மக்­க­ளுக்கு விளை­யாட்டு நம்­பிக்­கையைக் கொடுக்கும் என்று நான் நம்­பினேன். ஆனால், நான் பெண்­க­ளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்­கி­ய­போது இங்­கி­ருந்­த­வர்கள் அதை விரும்­ப­வில்லை. நானும் அவர்­களைக் கண்­டு­கொள்­ள­வில்லை," என்­கிறார் யூனிஸ்.

இங்கு பயிற்சி பெரும் மாண­விகள் பல்­வேறு வய­தினர். இவர்­க­ளுக்கு முறை­யான உப­கா­ர­ணங்­களோ கால­ணி­களோ இல்லை.

யூனிஸ் பல பெண்­க­ளுக்கு இது­வரை பயிற்சி வழங்­கி­யுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் கடை­சி­வரை இருப்­ப­தில்லை. சில போட்­டி­களில் வென்­ற­பின்பு இங்கு வரு­வதை நிறுத்­திக்­கொள்­கின்­றனர்.

"குத்­துச்­சண்டை என்­பது ஒரு மிகவும் உத­வி­க­ர­மான திறன். அதைத் தேவைப்­ப­டும்­போது மட்­டுமே பயன்­ப­டுத்­த­வேண்டும்," என்று கூறும் மாணவி அனம் குவாம்­ப­ரானி, முன்னர் பொதுப் போக்­கு­வ­ரத்தைப் பயன்­ப­டுத்­தவே மிகவும் தயக்கம் கொண்­டி­ருந்த தான் தற்­போது தன்­னம்­பிக்­கை­யுடன் இருப்­ப­தாகக் கூறு­கிறார்.

இப்­போது அந்தப் பயிற்சி மையம் போதிய நிதி இல்­லாமல் தத்­த­ளிக்­கி­றது. அதன் எதிர்­கா­லமும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

"எங்கள் மாண­விகள் உடை மாற்­றக்­கூட தனி அறை இல்லை. ஒரு போட்­டியை நடத்த 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் தேவைப்­ப­டு­கி­றது. நிதி கிடைத்தால் இன்னும் சிறப்­பாக எங்­களால் செயல்­பட முடியும். இன்னும் அதி­க­மான பெண்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்க முடியும்," என்கிறார் யூனிஸ்.

இந்த அனைத்து தடைகளையும் மீறி சர்வதேச அளவில் சாதனை படைக்க விரும்புகிறார்கள் இந்தச் சிறுமிகள்.

பயிற்சியின்போது அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் பைகளை ஆவேசத்துடன் குத்துகிறார்கள். அவர்கள் கண்களிலும் உடல் மொழியிலும் நம்பிக்கை தெரிகிறது.

அந்தப் பயிற்சி மையத்தின் சுவரில் 'ஒளரத் - ஹிம்மத் - தாக்கத்' என்று எழுதியிருந்தது. அதன் பொருள் 'பெண்கள் - வலிமை - அதிகாரம்.'
-Vidivelli