Verified Web

இயக்க கொள்கை வெறி வேண்டாம்

2018-06-08 04:44:37 Administrator


வாழைச்சேனை பிரதேசத்தில் இஸ்லாமிய நிலையம் ஒன்றுடன் கூடிய பள்ளிவாசல் மீதும் அதில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடந்த திங்கட் கிழமை நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பல்வேறு தரப்பினர்கள் மத்தியிலும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

இச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் 23 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இச் சம்பவமானது இலங்கை முஸ்லிம்களுக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது.

நாட்டில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­லங்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­திகள் அவ்வப்போது தாக்­குதல் நடத்தி வரு­வதால் ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்­களும் அச்­சத்தில் உள்­ளனர். அவ்­வா­றான சம­யத்தில் நாமே நமது தொழுகைத் தலங்­களில் இரத்­தத்தை ஓட்­டு­வது எந்­த­வ­கையில் நியாயம் எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள், வன்­மு­றை­யா­ளர்கள், மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது என்­றெல்லாம் பௌத்த பேரி­ன­வா­திகள் கதை பரப்­பிக்­கொண்­டி­ருக்­கையில் அவற்றை உண்­மைப்­ப­டுத்­து­வ­தா­கவே இவ்­வா­றான சம்­ப­வங்கள் அமைந்­துள்­ளன. அதுவும் பள்ளிவாசல்களின் இமாம்களும் உலமா சபை கிளை உறுப்பினர்களும் மார்க்க பிரசாரகர்களும் இவ்வாறு வன்முறைகளில் இறங்குவதும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக விளங்குவதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லைந்­த­மைக்கு அர­சியல் கட்­சி­களும் மார்க்க குழுக்­க­ளுமே காரணம் என்றால் மிகை­யா­காது. தேர்தல் காலம் வந்­து­விட்டால் எவ்­வாறு அர­சியல் கட்­சிகள் மக்­களை பிள­வு­ப­டுத்­து­கின்­ற­னவோ அதேபோல் மார்க்க கொள்கை வேறு­பாடு கொண்ட குழுக்­களும் ரமழான் போன்ற பருவ காலங்­களில் முரண்­பா­டு­க­ளையும் குழப்­பங்­க­ளையும் தூண்­டு­கின்­றன. இது முஸ்லிம் சமூ­கத்தைப் பீடித்­துள்ள மிகப் பெரும் சாபக்­கே­டாகும்.

இந்த முரண்­பா­டு­களை களைந்து வேற்­று­மை­யிலும் ஒற்­றுமை காண்­ப­தற்­கான முயற்­சி­களை சிலர் ஆங்­காங்கே முன்­னெ­டுத்­தாலும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் இவ்­வா­றான மார்க்க கருத்து வேறு­பா­டுகள் கொண்ட குழுக்­களை ஒற்­று­மைப்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­பட்ட ஒத்­து­ழைப்­புக்கும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­மான கவுன்­ஸி­லினால் கூட இந்த சவாலை வெற்றி கொள்ள முடியவில்லை.  உலமா சபையின் மேற்படி கவுன்சிலால் வெளியிடப்பட்ட ஒற்றுமைப் பிரகடனத்தை அதே அமைப்பின் உறுப்பினர்கள் கூட பின்பற்றவில்லை எனில் அதனை பொது மக்கள் எவ்வாறு பின்பற்றுவார்கள்?

எனவேதான் தொடர்ந்தும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுகின்ற குழுக்களை , அவர்கள் எந்த கொள்கையை பின்பற்றுபவர்களாக இருப்பினும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக உலமா சபை இவ்வாறானவர்களை இனங்கண்டு தமது உறுப்புரிமையிலிருந்து நீக்குவதுடன் மார்க்க கடமைகளை தலைமை தாங்கி நடாத்துவதிலிருந்தும் தடை செய்ய வேண்டும். அதுவே இயக்க, கொள்கை வெறி கொண்டு அலைபவர்களுக்கு சிறந்த பாடமாக அமையும்.
-Vidivelli