Verified Web

ரமழானின் இறுதிப் பத்து தினங்கள்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-06-08 03:29:13 T.M.Mufaris Rashadi


பல்­வேறு நன்­மைகள் செய்ய வாய்ப்­பாக ஷைத்­தான்கள் விலங்­கி­டப்­பட்ட நிலையில் எம்­மிடம் வந்த ரமழான் மாதம் வெகு சீக்­கி­ர­மா­கவே எம்மை கடந்து போவது எல்­லோரும் அறிந்­ததே.

வர­வேற்கும் போது இருந்த ஆர்­வமும் ஆர­வா­ரமும் படிப்­ப­டி­யாகக் குறைந்து வழ­மை­யான நாட்­களைப் போல ரம­ழா­னெனும் குர்­ஆனை சுமந்­து­வந்த மாதமும் பெறு­மதி குறைந்து எம்­முடன் பய­ணித்து விடை­பெறத் தொடங்­கி­யி­ருக்கும். அன்­றைய ஸஹா­பாக்கள், தாபி­ஈன்­களைப் போல ரமழான் கழி­கி­றதே என அழு­ம­ள­விற்கோ,வருந்­து­ம­ள­விற்கோ எமது மனங்கள் மாறி­யி­ருக்­காமல், பெரு­நா­ளையும் அதைத் தொடர்ந்த நாட்­க­ளையும் சூழ்ந்த குதூ­க­லங்­களின் தற்­கா­லிக இன்­பங்­களை தேடு­ப­வர்­க­ளாக இருப்­பதால் ஷைத்­தானின் விலங்­குகள் அவிழப் போவ­தையோ, நன்­மை­களின் எடை கனக்கச் செய்யும் அருள் வில­கப்­போ­வ­தையோ மறந்தும் விடு­கிறோம்.

அது­போல முதல் இரு­பது நாட்கள் கடந்து கடைசிப் பத்து நாட்கள் எம்மை வந்­த­டை­யும்­போது முதலில் இருந்த உற்­சாகம், பரபரப்பு, சுறு­சு­றுப்பு எது­வு­மின்றி நாட்கள் வழ­மைக்குத் திரும்­பி­யி­ருக்கும். பலரும் குர்­ஆனை ஓதத் தொடங்கி முடியும் தறு­வாய்க்கு வந்­தி­ருப்­பார்கள்.சிலர் ஓதியும் முடித்­தி­ருப்­பார்கள். ஆனால் அந்தக் குர்­ஆனும் குர்ஆன் இறங்­கிய உன்­னத மாதமும் எம்முள் ஏற்­ப­டுத்­திய ஆன்­மீக மாற்றம் என்ன என்ற வினாக்கள் விடை­யின்றி விலகிப் போகின்­றன.

இனி­யென்ன, பெரு­நாளை வர­வேற்கத் தயா­ராக வேண்­டாமா? என்ற கேள்­விக்குப் பதில் தேடு­மு­க­மாக பெருநாள் பல­கா­ரங்­க­ளென்றும் புது­ரக ஆடை­க­ளென்றும் பெரு­நா­ளைக்­கான முஸ்­தீ­புகள் தொடங்­கி­வி­டு­கின்­றன.

இதற்­குமுன் செய்து பழ­கிப்­போன பல­கா­ரங்கள்,புதி­தாக செய்­முறை கற்றுக் கொண்ட பல­கா­ரங்­க­ளென்ற சமை­ய­லறை அமளி தும­ளியில் பெண்­க­ளி­னதும் அதற்கு ஒத்­தா­சை­யாக செயற்­படும் ஆண்­க­ளி­னதும் தொழு­கைகள், ஓதல்கள், இஸ்­திஃபார், தஸ்பீஹ், தக்­பீர்­களும் பொலி­வி­ழந்து விடு­கின்­றன.

இது­வரை குர்­ஆனை ஏந்­திய கைகளில் தேங்காய் துரு­வி­களும்,முறுக்கு உரல்­களும், புது­ரக புத்­தா­டை­களும் உற­வாடிக் கொண்­டி­ருப்­பதால் சில­போது ஆயிரம் மாதங்கள் நன்மை செய்த பலன் கிடைக்­காமல் போய்­வி­டு­கி­றது.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் மகத்­து­வ­மிக்க இரவில் இதை நாம் அரு­ளினோம். மகத்­து­வ­மிக்க இரவு என்றால் என்­ன­வென உமக்கு எப்­படித் தெரியும்? மகத்­து­வ­மிக்க இரவு ஆயிரம் மாதங்­களை விடச் சிறந்­தது. வான­வர்­களும், ரூஹும் அதில் தமது இறை­வனின் கட்­ட­ளைப்­படி ஒவ்­வொரு காரி­யத்­து­டனும் இறங்­கு­கின்­றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

(அல்­குர்ஆன் 97:1-5)

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: எவர் நம்­பிக்­கை­யு­டனும் நன்­மையை எதிர்­பாத்­த­வ­ரா­கவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்­கு­கி­றாரோ அவ­ரது முந்­திய பாவங்கள் மன்­னிக்­கப்­படும்.

அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி),

நூல்: புகாரி (35)

இப்­படி சிறப்­பிக்­கப்­பட்ட இரவை தன்­ன­கத்தே கொண்­டுள்ள ரம­ழானின் இறுதிப் பத்து தினங்­களில் பெரு­நா­ளுக்குத் தயா­ரா­கவும் வேண்டும் பல­கா­ரமும் வேண்டும். ஆனால் குர்ஆன் இறங்­கிய அந்த நாளும் பயன்­ப­டுத்­தப்­படல் வேண்டும்.

பெரு­நா­ளைக்கு வரும் விருந்­தா­ளியை திருப்­திப்­ப­டுத்­து­வதை முக்­கி­ய­மாக நினைப்­பதால் நம்மில் பலரும் வரு­ட­மொரு முறை அல்­லாஹ்வின் பிர­தி­நி­தி­யாக மண்­ணகம் வரும் இந்த விருந்­தா­ளியை கண்­ணி­யப்­ப­டுத்­தவும் தவறி விடு­கிறோம்.

பெரு­நா­ளைக்­கான அடுத்த களே­பரம் புத்­தா­டைகள். தெரு முனை துணிக் கடை முதல், இலங்­கையின் முதல்­தர ஆடை சாம்­ராஜ்யம் வரை எங்கும் நோன்­பா­ளி­கள்தான். இரு­பது நாளும் வீடு­களில் அலுத்­துப்போய் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்கள் எல்­லோரும் ஊக்க மருந்து குடித்­த­வர்கள் போல துறு துறு­வென இயங்கிக் கொண்­டி­ருப்­பார்கள்.

ஒரு முறை வாங்­கு­வதும் மறு முறை மாற்­று­வ­துமாய் இனி கடை­க­ளுடன் உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பார்கள். ரம­ழானில் விலங்­கி­டப்­பட்ட ஷைத்­தானை அதன் இருப்­பி­ட­மான கடைத்­தெ­ரு­விற்கே சென்று சுகம் விசா­ரிப்­பது கடைசிப் பத்து நாளில் சர்வ சாதா­ர­ண­மாக மாறிப் போவது மிகவும் வருத்­தத்­திற்­கு­ரி­யது.

கடை­க­ளிலும்  New fashion stock எல்லாம் show case க்கு வந்­தி­ருக்கும். அதை வாங்க நம்­ம­வர்­களும் போட்டி போட்டுக் கொண்­டி­ருப்­பார்கள். ஏதோ அல்லாஹ் ரம­ழா­னுக்­கு­ரிய அருட்­கொ­டை­களை வீதி­களில் தூவி­விட்­டது போல தேடிக் கொண்­டி­ருப்­பார்கள்.

இவ்­வ­ளவு நாளும் சுத்தம், சுகா­தாரம், கௌரவம், வெட்கம் என வாழ்ந்­த­வர்கள், எல்லாம் மறந்து துறந்து வீதி­யோரக் கடை­களை இப்­தா­ருக்­கு­ரிய ரெஸ்­டோ­ரன்ட்க­ளாக ஆக்கிக் கொள்­வார்கள். தர­மான, பிடித்­த­மான உண­வில்லை, இருந்து குடிக்க இட­மு­மில்லை. ஆனாலும் பொருந்திப் போகி­றார்கள். எவ்­வ­ளவு சோத­னை­களைத் தான் தாங்­கு­கி­றார்கள் நவ நாக­ரிக ஆடை­களைத் தேடி? உடுப்பு வாங்க போட்டி போடும் காலமா இது? பகல் முழுதும் வீதியில் இருந்தால் இரவில் எங்கு இபாதத் புரி­வது?

பகலில் செய்யும் வணக்­கமும் இல்லை, இரவில் செய்ய வேண்­டிய எண்­ணமும் இல்லை.

 இன்னும்  சிலரோ இரவு பத்து மணி தாண்­டியும் கடைத் தெருக்­களில்..

ரம­ழானில் கடைசிப் பத்தில் தானே அந்த இரவு இருக்­கி­ற­தே­யன்றி கடைத் தெருக்­க­ளிலோ சமை­ய­ல­றை­க­ளிலோ அல்லாஹ் அதை ஒளித்து வைக்­க­வில்லை என்­பது புரிந்து கொள்­ளப்­ப­டாத வரையில் இந்த அவ­லங்கள் தொடர் கதை­யா­கவே இருந்து கொண்­டி­ருக்கும். பெரு­நா­ளைக்­கு­ரிய ஆடை­களை நோன்பு வர முதலே வாங்கி வைத்துக் கொண்டால் ரம­ழானில் நேரத்தை வீணாக்­காமல் நன்­மை­களை அறு­வடை செய்­ய­லாமே.

அதே போல முஸ்லிம் கடை உரி­மை­யா­ளர்­களும் புது நாக­ரிக ஆடை­களை நோன்பு வர முன்­ப­தா­கவே இறக்­கு­மதி செய்து கடை­களில் தயா­ராக வைத்­தி­ருக்­கலாம். கடைசிப் பத்தில் இஷா­வுடன் கடைகள் சாத்­தப்­படும் என்ற நடை­மு­றை­களை மக்­க­ளுக்குப் பழக்­கப்­ப­டுத்­து­வதில் சிரத்­தை­யெ­டுப்­பது தனது, தன் ஊழி­யர்­க­ளது,வாடிக்­கை­யா­ளர்­க­ளது பொன்­னான நேரங்­களை வணக்­கங்­களில் நெறிப்­ப­டுத்­திய நன்­மையில் பங்­கா­ள­ராக்கும்.

தையல் கடை­களும் இனி இரு­பத்தி நான்கு மணி நேரம் இயங்கத் தொடங்­கி­விடும். கியாமுல் லைலுக்கும் இஸ்­திஃ­பா­ருக்கும் விழிக்க மறத்த விழிகள் தைப்­ப­தற்கும், தைப்­பதைக் காத்­தி­ருந்து வாங்­கு­வ­தற்கும் விழித்­தி­ருக்கத் தொடங்­கி­விடும்.

தையல்­கா­ரனின் வணக்­கத்­திற்­கான நேரத்தை வீணாக்­கி­ய­தற்­கான பொறுப்பு ,கடைசி நேரம் வரை காத்­தி­ருந்து துணி­யெ­டுத்து தைக்கக் கொடுப்­ப­வர்­க­ளையே சாரும் என்­பதை அவர்கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

எக்­கா­ரணம் கொண்டும் கடைசிப் பத்தில் தையல் ஓடர்கள் பெறப்­பட மாட்­டா­தென அறி­வித்து முத­லி­லேயே வாடிக்­கை­யா­ளரை  வர­வ­ழைப்­பதை தையல்­கா­ரரும் பழக்­கப்­ப­டுத்திக் கொள்­வது சிறப்­பா­னது.

ரம­ழானின் கடைசிப் பத்து நாட்­களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இரு­பத்தி ஒன்­றா­வது இரவில், இரு­பத்தி மூன்­றா­வது இரவில், இரு­பத்தி ஐந்­தா­வது இரவில் தேடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

அறி­விப்­பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 2021

ரம­ழானில் கடைசிப் பத்து நாட்­களில் உள்ள ஒற்­றைப்­படை இர­வுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

அறி­விப்­பவர்: ஆயிஷா (ரலி),

நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

ஒவ்­வொரு நாளையும் வீண­டித்து விட்டு 27ஆம் நாள் மட்டும் விடிய விடிய விழித்­தி­ருந்தால் லைலத்துல் கத்ர் கிடைத்து விடுமா?

21.23.25.29  ஆகிய ஒற்றை நாட்­களில் அந்த இரவு வரும் என்­பதே நபி­மொழி.லைலதுல் கத்ர் இதுதான் என நபி­களார்,ஸல­பு­க­ளுக்கே மறைக்­கப்­பட்­டி­ருக்க ,குறிப்­பிட்ட ஒரு நாளை இதுதான் லைலதுல் கத்ர் என பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களோ,வேறு யாரோ  நிர்­ண­யிப்­பது தவ­றா­ன­தாகும்.

இது­பற்றி ஒவ்­வொரு ஊர் ஜம்­இய்­யத்துல் உலமா கிளை­களும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் இன்னும் கொஞ்சம் கவனம் எடுக்­கலாம். ஏனெனில் இலங்­கையின் பெரும்­பா­லான ஊர்­களில் ஒன்­றுக்கு மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. சகல பள்­ளி­வா­சலும் லைலதுல் கத்ர் என்று 27ஆம் நாளில் மட்டும் நிகழ்­வு­களை திட்­ட­மி­டாமல் 20--30  வரை­யான ஒவ்­வொரு ஒற்றை நாளிலும் ஒவ்­வொரு பள்­ளி­யிலும் (21,23,25,27,29.)நிகழ்­வு­களை ஒழுங்கு செய்தால் ஏதோ ஒரு நாளில் பொது­மக்கள் லைலதுல் கத்ர் எனும் உன்­னத இரவை அடைந்­து­கொள்ள ஏதுவாய் அமையும்.ஆயிரம் மாதம் நின்று வணங்­கிய நன்­மையை தேடும் உண்­மை­யான தேவை­யு­டை­யவர் எத்­த­கைய கஷ்­டத்­து­டனும் ஒவ்­வொரு பள்­ளி­யையும் தேடி வருவார்.

பல இடங்­களில் கடைசிப் பத்தில் ஆண்கள் இஃதிகாப் இருப்­பதை கண்­டி­ருக்­கிறேன். வருடா வருடம் இஃதிகாப் இருப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரிப்­பது சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றது. நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் இஃதிகாப் இருந்ததாகப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.அப்படியெனில் பெண்களுக்கும் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்படுகள் செய்யப்படுவது காலத்திற்கு ஏற்புடையது. இஃதிகாபின் தேவையுடைய பெண்கள் கலந்து கொள்வார்கள்.

(சிறு பிள்ளைகள் இல்லாத நடுத்தர வயது பெண்கள் மற்றும் யுவதிகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் தானே) நரகில் அதிகமாய் பெண்களைக் கண்டேன் என்ற நபிமொழியை கூறிக் கூறிப் பெண்களை நரகத்திற்குரியவர்களாக ஒதுக்கி விடாமல் நன்மை செய்வதில், இரவு வணக்கத்தில் அவர்களை ஊக்கப்படுத்துவது பற்றியும் கரிசனை கொள்ளல் வேண்டும்.

எம்மிடம் வந்த அருள்கள் நிறைந்த விருந்தாளியை பல்வேறுபட்ட நன்மைகள் மூலம் அலங்கரித்து வழியனுப்பி ரமழானில் உச்ச பட்ச நன்மைகளை யாவரும் பெற்றுக் கொள்ள முயற்சிப்போமாக..
-Vidivelli