Verified Web

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இன்புளுவன்சா வைரஸ்

14 days ago Administrator

தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், குறித்த வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

''தெற்கில் பரவும் இன்புளுவென்சா வைரஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. குறித்த வைரஸ் பாதிப்பிற்கு உட்பட்டு இதுவரை காலமும் 14 சிறுவர்கள் உட்பட  16 பேர்   மாத்திரமே இறந்துள்ளனர். ஆனால் பல தரப்பினர் ஏனைய வைரஸ் நோய்களினால் ஏற்பட்ட மரணங்களையும், இன்புளுவென்சா வைரசுடன் ஒன்றிணைத்து போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்'' என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்புளுவென்சா வைரஸ் நோயின் அறிகுறிகள் தற்போது பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. முறையான  ஆரம்பக் கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டால் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இன்புளுவன்சா வைரஸ் காரணமாக பரவும் நோய்த் தொற்று தென் மாகாணம் மற்றும் ஏனைய அருகிலுள்ள பிரதேசங்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் அப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி வைரஸ் காய்ச்சல் இரண்டு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு இலகுவில் பரவக் கூடியது என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை வைரஸினை முற்றாக அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அதனை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக் காய்ச்சல் இலகுவில் பரவக் கூடிய குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்,  பாலூட்டும் தாய்மார்,  65 வயதிற்கு மேற்பட்டோர்,  காச நோயுடையவர்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்துமாறு ஒருசாரார் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். எனினும் தடுப்பூசி பயன்படுத்துவதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வாளர்களிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'' ஒரு வைரஸ் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது அவை பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் இந்த வைரஸ் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களையே அதிகளவில் பாதித்துள்ளது. ஆகவே முறையான பாதுகாப்பு சான்றுகள் இல்லாமல் ஒரு போதும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியாது. வெளிநாடுகளில் இது போன்ற வைரஸ் தாக்கங்களின் போது நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டமையினால் பாரிய  எதிர் விளைவுகளே ஏற்பட்டுள்ளன'' என சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியிலும் தெற்காசியாவிலும் சிறந்த தரமான சுகாதார சேவையை வழங்கும் நாடு என்ற வகையில் இலங்கை சுகாதார அமைச்சு இது விடயத்தில் மிகுந்த விழிப்புடன் செயற்பட்டு வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில் ஏனைய பல நோய்கள், வைரஸ்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போன்று இந்த இன்புளுவன்சா வைரஸ் தொற்றிலிருந்தும் நாட்டு மக்களை காப்பாற்ற அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli