Verified Web

பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ள மாட்டிறைச்சி எதிர்ப்பு விவகாரம்

2018-06-04 01:31:33 Administrator


பசு­வ­தைக்கு எதி­ரான போராட்டம் ஒன்றில் இலங்­கையின் சிவ­சேனா இயக்­கத்தின் தலை­வ­ரான மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்தம் தெரி­வித்த கருத்து சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணத்தின் சாவ­கச்­சேரி பகு­தியில் தென்­ம­ராட்சி இந்­துக்கள் என்று தம்மைக் கூறிக்­கொள்ளும் ஒரு குழு­வினர் கடந்த வாரம்  பசு­வ­தையை கண்­டித்து போராட்டம் ஒன்றை நடத்­தி­யி­ருந்­தனர். அங்கு உரை­யாற்­றிய போது சச்­சி­தா­னந்தம் வெளி­யிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூ­கங்­களின் மத்­தியில் கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது.

இலங்­கையை ஒரு பௌத்த - இந்து நாடு என்று வர்­ணித்த சச்­சி­தா­னந்தம், "இது வேறு சமூ­கத்­த­வர்­க­ளுக்­கான நாடு அல்ல, இங்­குள்ள பாரம்­ப­ரி­யத்தை ஏற்று நடக்­கா­த­வர்கள், நாட்­டை­விட்டு வெளி­யேறி தமது பாரம்­ப­ரி­யங்­களை பின்­பற்றும் நாடு­க­ளுக்கு போகலாம்" என்று கூறி­யி­ருந்தார்.

சவூதி அரே­பி­யாவில் உள்ள பாதிப்பேர் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்­லாத்­துக்கு பொருந்­தாத பன்றி இறைச்­சியை யாரும் உண்ண முடி­யுமா என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அத்­துடன் பௌத்­தர்­களும் இந்­துக்­களும் வாழும் நாட்டில் மாட்­டி­றைச்சி எதற்கு? இங்கு மாட்­டி­றைச்சிக் கடை­க­ளுக்கு தடை­வி­திக்க வேண்டும் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் இவ­ரது கருத்­துக்கு முஸ்­லிம்கள் தரப்­பி­லி­ருந்து எதிர்ப்­புகள் கிளம்­பி­யி­ருப்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, தமிழ் சமூ­கத்­தி­னுள்­ளி­ருந்தே பலத்த எதிர்ப்பு வெளிப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இது தேவை­யில்­லாத ஒரு சர்ச்சை என்று இதனைக் கண்­டித்­துள்ள ஆய்­வா­ளரும் முன்னாள் கிழக்கு பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரு­மான சித்­ர­லேகா மௌன­குரு, தான் யாழ்ப்­பா­ணத்தில் இருந்த காலத்தில், எவ்­வ­ளவோ காலத்­துக்கு முன்­னரே அங்கு மாடு உண்ணும் பழக்கம் இந்­துக்­களின் மத்­தி­யிலும் வந்­து­விட்­டது எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன்  இந்த விட­யத்தில் இஸ்­லா­மி­யர்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

அதே­போன்று சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் தமிழ் பத்­தி­ரி­கைகள், இணை­ய­த­ளங்­க­ளிலும் மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்­தத்தின் கருத்­துக்கு பலத்த கண்­ட­னங்­களும்  மாற்றுக் கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை தமிழ் சிவில் சமூக அமையம் எனும் அமைப்பும் இந்தக் கருத்தைக் கண்­டித்து விரி­வான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்தம் தெரி­வித்த '' இது இந்­துக்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் மட்­டு­மான பூமி. இங்கு வேறு இனங்கள் மதங்கள் வாழ முடி­யாது'' எனும் கருத்தை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்­ள­துடன் இவ்­வா­றான இந்­துத்­துவ சக்­தி­க­ளுக்கு தமிழ் ஊட­கங்­களோ, தமிழ் மக்­களோ இட­ம­ளிக்கக் கூடாது எனவும் வேண்­டு­கோள்­வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யாவில் சிவ­சேனா இயக்­கத்தின் தூண்­டு­தலில் மாட்­டி­றைச்­சிக்கு எதி­ராக முன்­கொண்டு செல்­லப்­படும் பிர­சா­ரங்­களால் இது­வரை பலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். பல கல­வ­ரங்கள் கூட இதனால் தோற்றம் பெற்­றுள்­ளன. இந் நிலையில் இலங்­கை­யிலும் மாட்­டி­றைச்­சிக்கு எதி­ரான பிரசாரத்தை முன்னெடுத்து, குறிப்பாக இதன் மூலம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தமிழ்-முஸ்லிம் முரண்பாடு ஒன்றைத் தோற்றுவிக்க இந்த இனவாத மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு தமிழர்களோ முஸ்லிம்களோ ஒருபோதும் துணைபோகக் கூடாது. இது தொடர்பில் தமிழ் - முஸ்லிம் சிவில் சமூகம் விழிப்புடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.
-Vidivelli