Verified Web

எமது ஆட்சி நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்

2018-05-30 03:11:45 MBM.Fairooz

 


அக்­கு­றணை பிர­தேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன மற்றும் சுயேட்­சைக்­கு­ழு­வாக போட்­டி­யிட்ட நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பு (பி.எம்.ஜே.டி.) ஆகியன இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளன. இதற்­க­மைய அக்­கு­றணை பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக பி.எம்.ஜே.டி. உறுப்­பினர் இஸ்­திஹார் இமா­துதீன் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

42 வய­தே­யான இவர், சிறு வய­தி­லேயே தொழில்­மு­யற்­சியில் ஈடு­பட்டு இன்று உள்ளூர் மற்றும் சர்­வ­தேச ரீதி­யாக வர்த்­த­கங்­களை முன்­னெ­டுக்கும் 'மூன் லங்கா' நிறுவ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பா­ள­ரா­கவும் விளங்­கு­கிறார்.

இந் நிலையில் அக்­கு­றணை பிரதேச சபையின் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டமை தொடர்பிலும் மேற்­படி மூன்று தரப்­பு­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தமை குறித்தும் அவர் 'விடி­வெள்­ளி'க்கு வழங்­கிய செவ்­வியை இங்கு  தரு­கிறோம்.


வெற்­றி­க­ர­மான வர்த்­தக நிறு­வனம் ஒன்றை நடத்தி வரும் நீங்கள் அர­சி­யலில் பிர­வே­சித்­த­மைக்­கான காரணம் என்ன?

அது ஒரு தற்­செயல் நிகழ்­வுதான். 2011 ஆரம்­பத்தில் என்று நினைக்­கிறேன். வெளி­நாட்டுப் பயணம் ஒன்று சென்று விட்டு விமான நிலை­யத்­தி­லி­ருந்து அக்­கு­ற­ணைக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்த அந்த 3 மணித்­தி­யா­லத்­திற்­குள்தான் அர­சி­யலில் பிர­வே­சிப்­பது பற்­றிய தீர்­மா­னத்தை எடுத்தேன். விமான நிலை­யத்­தி­லி­ருந்து என்னை அழைத்­து­வந்த நெருங்­கிய நண்பர் ஒரு­வர்தான் என்னை இந்த தீர்­மா­னத்தை எடுக்க வைத்தார். அது­வ­ரைக்கும் நான் அர­சி­யலில் பிர­வே­சிக்க வேண்டும் என்ற எந்த எண்­ணத்­தையும் கொண்­டி­ருக்­க­வில்லை.

பாட­சா­லையில் படிக்கும் காலத்­தி­லி­ருந்து சமூகப் பணி­களில் ஈடு­பட்டு வந்­தாலும் கூட அர­சியல் என்றால் எனக்கு அரு­வ­ருப்­பா­கவே இருக்கும். பின்னர் வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு அத­னூ­டாக சமூக நலப் பணி­களை முன்­னெ­டுத்த அனு­ப­வத்தில் எந்­த­வொரு சமூக வேலைத்­திட்­டத்­தையும் எம்மால் ஒரு எல்லை வரைக்­குமே செய்ய முடியும் என்­ப­தையும் அதற்­கப்பால் செல்­வ­தாயின் அர­சியல் பலம் அவ­சியம் என்­ப­தையும் உணர்ந்­தி­ருந்தேன். இந்த அனு­ப­வமும் எனக்கு அர­சி­யலில் பிர­வே­சிப்­ப­தற்­கான உந்­து­தலைத் தந்­தது எனலாம்.

உங்கள் அர­சியல் பய­ணத்­திற்கு நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான மக்கள் அமைப்பை (பி.எம்.ஜே.டி.) தேர்ந்­தெ­டுத்­தது ஏன்?

என்னை அர­சி­யலில் பிர­வே­சிக்கத் தூண்­டிய எனது நண்பர் ஏற்­க­னவே பி.எம்.ஜே.டி. எனும் அமைப்பை தோற்­று­விப்­ப­தற்­கான கள வேலை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருந்தார். அதில் அங்­கத்­த­வ­ராக இணை­வ­தற்­கான அழைப்­பையே என்­னிடம் விடுத்தார். அவ­ரது வேண்­டு­கோ­ளின்­பேரில் மறுநாள் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில் நானும் பங்­கேற்றேன். அதில்தான் பி.எம்.ஜே.டி. யை ஆரம்­பிப்­பது பற்றி ஆராய்ந்தோம்.

இந்தக் காலப்­ப­கு­தி­யில்தான் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான அறி­விப்பும் வெளி­வந்­தது. இதன்­போது நாம் தேர்­தலில் போட்­டி­யிட வரு­மாறு எமது பிர­தே­சத்தின் முக்­கி­யஸ்தர் ஒரு­வரை அழைப்­ப­தற்­காகச் சென்­றி­ருந்தோம். ஆனால் அவரோ என்னைப் போட்­டி­யி­டு­மாறு பிரே­ரித்தார். ஏனை­யோரும் என்னைப் போட்­டி­யி­டு­மாறு வலி­யு­றுத்­தினர். அதற்­கி­ணங்க போட்­டி­யிட்டு நானும் உறுப்­பி­ன­ராகத் தெரி­வானேன். அதி­லி­ருந்­துதான்  நேரடி அர­சி­யலில் பிர­வே­சிக்க வேண்டி வந்­தது.

பி.எம்.ஜே.டி யின் வளர்ச்சி எந்­த­ள­வி­லுள்­ளது? மக்கள் இதன் அர­சியல் பிர­வே­சத்தை விரும்­பு­கி­றார்­களா?

பி.எம்.ஜே.டி.யின் தலை­வ­ராக அது ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் இன்று வரை சட்­டத்­த­ரணி மஸி­ஹுதீன் பதவி வகிக்­கிறார். 2011 இல் தொடங்­கிய எமது பயணம் வேறு ஒரு பெரிய கட்­சி­யுடன் கூட்­டி­ணைந்­த­தாக அமைந்­தி­ருந்தால் இந்த அமைப்பு என்றோ காணாமல் போயி­ருக்கும். மாறாக நாம் தனித்து சுய­மாக இயங்கி வந்­ததன் மூலமே மக்கள் நம்­பிக்­கையைப் பெற முடிந்­துள்­ளது. எமது அமைப்பில் உள்ள யாருமே தமது தனிப்­பட்ட நலன்­களை அடைந்து கொள்­வ­தற்­காக அமைப்பைப் பயன்­ப­டுத்­தி­யதை இது­வரை நான் காண­வில்லை. எல்­லோ­ருமே அக்­கு­ற­ணையின் நலனை முதன்­மைப்­ப­டுத்­தியே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதுவே பி.எம்.ஜே.டி.யின் மிகப் பெரும் பல­மாகும்.

கிழக்கு மாகா­ணத்­துக்கு வெளியே அதிக முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தேசம் என்ற வகையில் அக்­கு­ற­ணையின் அர­சியல் கலா­சா­ரமும் சமூ­கத்­தி­லி­ருந்து ஒதுக்­கப்­பட்ட, சண்­டித்­த­னமும் மோச­மான பழக்க வழக்­கங்­களும் கொண்­ட­வர்­க­ளால்தான் அர­சியல் செய்ய முடியும் என்­றி­ருந்­தது. இந்த மாயையை நாம் 2011 இல் தகர்த்து படித்த, ஒழுக்­க­முள்ள, பண்­பா­டான, நல்ல மனி­தர்­க­ளாலும் அக்­கு­ற­ணையில் அர­சியல் செய்து காட்ட முடியும் என நிரூ­பித்­துள்ளோம். அன்று நாம் 2 பேர் வெற்றி பெற்றோம். இன்று 4 பேர் வெற்றி பெற்­றி­ருக்­கிறோம்.  ஊழல் மோச­டி­யற்ற வாக்­கு­று­திக்கு மாறு­செய்­யாத அர­சியல் கலா­சா­ரத்தை நாம் இந்தப் பிர­தே­சத்தில் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ளோம்.  இதனை மக்­களும் வர­வேற்­கின்­றனர். எம்­மீது நம்­பிக்கை வைத்­துள்னர்.

அக்­கு­ற­ணையில் தேசிய அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் பலர் இருக்­கின்ற நிலையில் பி.எம்.ஜே.டி. எனும் தனித்­துவ அர­சியல் அமைப்பு ஏன் அவ­சி­யப்­ப­டு­கி­றது?

அக்­கு­ற­ணையைப் பொறுத்­த­வ­ரைக்கும் இந்த நாட்­டுக்கு தேசிய ரீதி­யான தலை­மைத்­துவம் ஒன்றை வழங்­கி­ய­வர்தான் மர்ஹூம் ஏ.சி.எஸ்.ஹமீத்.  அவ­ரது மறை­வுக்குப் பிறகு அந்த வெற்­றிடம் சரி­யாக நிரப்­பப்­ப­ட­வில்லை. ஆனால் காலத்­துக்குக் காலம் இறக்­கு­ம­தி­க­ளாக வெளி­யூர்­க­ளி­லி­ருந்து வந்து எமது ஊர் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­று­விட்டுச் செல்­கின்ற நிலைதான் இன்று வரை நீடிக்­கி­றது. அவர்கள் தேர்­தலில் வென்­று­விட்டுச் சென்றால் மீண்டும் அடுத்த தேர்­த­லுக்­குத்தான் எமது ஊருக்கு வரு­வார்கள். குடும்ப ஆதிக்கம் கொண்ட அர­சி­யலும் எமது ஊரில் நில­வு­கி­றது. இந்த இரண்டு கூறு­களும் எமது ஊரின் முன்­னேற்­றத்­திற்கு பெரும் தடை­யாக, பாத­க­மாக இருப்­ப­தாக நாம் கரு­தினோம். இந்த தலை­மைத்­துவ வெற்­றி­டத்தை நிரப்­பு­வதே பி.எம்.ஜே.டி.யின் பிர­தான நோக்­க­மாக இருந்­தது.

அத்­துடன் எமது பிர­தே­சத்­தையோ அல்­லது முஸ்­லிம்­க­ளையோ மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக எம்மை அடை­யா­ளப்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்லை. கண்டி மாவட்டம் சகல இன மக்­களும் இரண்­டறக் கலந்து வாழ்­கின்ற பிர­தேசம் என்ற வகையில் இங்கு வாழு­கின்ற சகல மக்­க­ளுக்கும் இன மத வேறு­பா­டு­களைத் தாண்டி அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தலை­மைத்­து­வத்தை வழங்­கவும் அதற்குப் பொருத்­த­மான தலை­வர்­களை இனங்­கண்டு உரு­வாக்­கவும் நாம் விரும்­பு­கிறோம். ஏனைய கட்­சி­களைப் போன்று இனத்­துவ அர­சியல் செய்து ஓர் இனத்­துக்கு மாத்­தி­ர­மான அர­சியல் பிர­தி­நி­தி­களை மீண்டும் உரு­வாக்­கு­வது எமது நோக்கம் அல்ல. அது இந்தப் பிர­தே­சத்­திற்கு ஒரு­போதும் நலன்­களைக் கொண்டு வரப்­போ­வ­தில்லை.

2011 இல் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து போட்­டி­யிட்ட போது எமது கூட்­ட­ணிக்கு 6300 வாக்­குகள் கிடைத்­தன. இம்­முறை நாம் தனித்துக் கேட்­பதே சிறந்­தது என எமது அமைப்­பி­லுள்ள பலரும் வலி­யு­றுத்­தி­ய­தற்­கி­ணங்க தனித்து நின்று 4954 வாக்­கு­களைப் பெற்றோம். அந்த வகையில் இம்­முறை எமக்­கே­யு­ரித்­தான சுமார் 5000 வாக்­குகள் இந்த அக்­கு­றணைப் பிர­தே­சத்தில் உள்­ளன என்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். இந்த வாக்கு வங்கி தேசிய அர­சியல் கட்­சி­களை திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் கோட்டை எனக் கரு­தப்­ப­டு­கின்ற இப் பகு­தியில் ஒரு சுயேட்­சைக்­குழு இவ்­வ­ளவு வாக்கு வங்­கியைக் கொண்­டி­ருப்­பதை அக் கட்­சிகள் பெரி­ய­தொரு விட­ய­மா­கவே பார்க்­கின்­றன.

இம்­முறை நீங்கள் ஆட்­சி­ய­மைத்­தது எப்­படி? பிர­தேச சபையின் தவி­சாளர் பதவி பி.எம்.ஜே.டிக்கு கிடைத்­தது எந்த வகையில்? இதற்­காக என்ன வகை­யான காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்­டீர்கள்?

உட­வெ­லி­கெட்­டிய வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்ட நான் சுமார் 48 வாக்­கு­களால் ஐ.தே.கட்சி வேட்­பா­ள­ரிடம் தோல்­வி­யுற்றேன். இந்த முடிவை ஊரில் யாருமே எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. எமது ஆத­ர­வா­ளர்­களால் நான் தோல்­வி­யுற்­றதை ஜீர­ணிக்க முடி­ய­வு­மில்லை. நான் வாக்­கெண்ணும் நிலை­யத்­தி­லி­ருந்து வீட்­டுக்கு வந்த போது வீட்டு முற்­றத்தில் கூடி நின்ற மக்கள் கதறி அழுத காட்சி இன்றும் என் கண்­முன்னே நிழ­லா­டு­கின்­றது. அது எனது மனதில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனாலும் எமக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் 4 ஆச­னங்கள் கிடைக்கப் பெற்­றமை சற்று ஆறு­த­லாக இருந்­தது. தேர்தல் முடி­வுகள் வந்­ததைத் தொடர்ந்து  12 ஆச­னங்­களைப் பெற்றுக் கொண்ட கட்­சி­யினர் வெற்றிக் கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருக்க நாம் அந்தக் கணத்­தி­லி­ருந்தே சபையில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான காய்­ந­கர்த்­தல்­களில் ஈடு­படத் தொடங்­கினோம். இதற்கு எமது பிர­தே­சத்தின் மூத்த அர­சி­யல்­வா­திகள் பலரும் உறு­து­ணை­யா­க­வி­ருந்­தனர்.

அக்­கு­றணைப் பிர­தே­சத்தில் மூவின மக்­களும் வாழ்ந்­தாலும் பிர­தேச சபையின் தலை­வ­ராக முஸ்லிம் ஒரு­வரே பதவி வகிக்க வேண்டும் என்­பது வழக்­க­மாக இருந்து வரு­கி­றது. அந்த வகையில் இம்­மு­றையும் முஸ்லிம் ஒரு­வரே தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொண்­டனர்.

இத­ன­டிப்­ப­டையில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன மற்றும் சுதந்­திரக் கட்சி என்­ப­வற்­றுடன் நாம் பேச்சு நடத்­தினோம். சுதந்­திரக் கட்­சியின் சார்பில் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் அவ­ரா­கவே எங்­களைத் தேடி வந்து இந்த ஆட்­சியை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்­க­மைய எந்­த­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி எமக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு இவ்­விரு கட்­சி­களும் முன்­வந்­தன. எமது அமைப்பின் கொள்­கைகள் எமது உறுப்­பி­னர்­களின் தகு­திகள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பி.எம்.ஜே.டி.யின் உறுப்­பினர் ஒரு­வரை தவி­சா­ள­ராகத் தெரிவு செய்­வ­தற்கு இவ்­விரு கட்­சி­களும் சம்­ம­தித்­தன.

கடந்த சபையின் நிரு­வாக காலத்தில் நானும் எனது சக உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிராஜும் சபையில் அங்கம் வகித்த சிங்­கள உறுப்­பி­னர்­க­ளுடன் மிகுந்த நல்­லு­றவைப் பேணினோம். அந்த வகையில் அவர்­க­ளுக்கு எங்கள் மீது நல்ல நம்­பிக்­கையும் புரிந்­து­ணர்வும் இருந்­தது. இத­னால்தான் அவர்கள் எங்­களை ஆட்­சி­ய­மைக்க அழைப்­பு­வி­டுத்து ஒத்­து­ழைத்­தார்கள். இதற்­க­மைய பொது ஜன பெர­முன உறுப்­பினர் சரத் அம­ர­கோ­னுக்கு பிரதி தவி­சாளர் பதவி வழங்­கப்­பட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்சி பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்த நிலையில் அவர்­களை விடக் குறைந்த வாக்­கு­களைப் பெற்ற நீங்கள் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தது சரி­யா­குமா?

அக்­கு­ற­ணையில் மக்­களின் தீர்ப்­புக்கு எதி­ரான ஒரு ஆட்­சி­ய­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒரு விமர்­சனம் பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­வதை நாம் அறிவோம். இந்த விமர்­ச­னத்தில் எந்த நியா­யமும் இருப்­ப­தாக எனக்குத் தெரி­ய­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்ட வாக்­கு­களை விடவும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன , சுதந்­திரக் கட்சி மற்றும் பி.எம்.ஜே.டி. இணைந்த கூட்­டணி பெற்றுக் கொண்ட வாக்­குகள் அதி­க­மாகும். அதா­வது ஐ.தே.க. 15 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருக்க எமது மூன்று கட்­சி­களும் சேர்ந்து 18 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றுள்­ளன.  புதிய உள்­ளூ­ராட்சி முறைமை இதற்கு சாத­க­மா­கவே அமைந்­துள்­ளது.

அடுத்­தது இந்த ஆட்­சியை அமைப்­பதில் பணக் கொடுக்­கல்­வாங்­கல்கள் நடந்­துள்­ள­தா­கவும் ஒரு கதையைக் கட்­டி­விட்­டுள்­ளார்கள். இது அவர்­க­ளது யூகமும் கட்­டுக்­க­தை­யுமே அன்றி உண்மை அல்ல. 

இருந்­தாலும் சபையைத் தெரிவு செய்யும் தினத்தில் இரு தரப்­பிலும் 15:15 என உறுப்­பி­னர்கள் இருந்­ததால் இறு­தியில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டே நான் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டேன். அல்­லாஹ்வின் விருப்­பமும் அவ்­வாறே இருந்­துள்­ளது என நான் நினைக்­கிறேன்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன தொடர்பில் முஸ்­லிம்­க­ளிடம் மாற்றுக் கருத்­துக்கள் இருக்­கின்ற நிலையில், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களால் தெரி­வான நீங்கள் அக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தது சரியா?

இந்த நாட்டில்  உள்ள 3 முக்­கிய தலை­வர்­க­ளும்தான் மாறி மாறி ஆட்­சிக்கு வந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவர்கள் எல்­லோ­ரி­னதும் பதவிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் நடந்தே வரு­கின்­றன. இந் நிலையில் இவர் நல்­லவர், இவர் கெட்­டவர் என்று தீர்ப்புச் சொல்ல முடி­யாத நிலைதான் நில­வு­கி­றது.

இந்த நிலையில் சிறு­பான்மை சமூ­க­மா­கிய நாங்கள் ஒரு கட்­சியை மாத்­திரம் சார்ந்­தி­ருப்­பது எமக்கு பாத­கங்­க­ளையே கொண்டு வரும். எதிர்­கால நிலை­மை­களை வைத்து நோக்­கும்­போது இந்த நாட்டு முஸ்­லிம்கள் சகல பெரும்­பான்மைக் கட்­சி­க­ளு­டனும் இணைந்து செல்­வ­துதான் புத்­தி­சா­லித்­தனம் என்­பது எனது அபிப்­பி­ரா­ய­மாகும்.

நாம் அக்­கு­றணைப் பிர­தேச சபையை நிர்­வ­கிக்கும் நோக்கில் பொது ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளோமே தவிர அக் கட்­சியில் சங்­க­ம­மா­க­வில்லை. பி.எம்.ஜே.டி. தனது தனித்­து­வ­மான கொள்­கை­க­ளுடன் இன்றும் சுயா­தீ­ன­மா­கவே இயங்­கு­கி­றது.

பொது ஜன பெர­மு­னதான் பிரச்­சி­னை­க­ளுக்கு காரணம் என்று சொன்னால் அவர்­க­ளுடன் பேச்சு நடத்­தாது எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாது. அந்த வகையில் அக் கட்­சி­யுடன் புரிந்­து­ணர்வை வளர்ப்­ப­தா­னது கண்டி மாவட்­டத்தில் இன மத நல்­லு­றவைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சிறந்த அடித்­த­ள­மாக அமையும் என்றும் நாம் நம்­பு­கிறோம்.

இன்று இந்த நாட்டில் வாழு­கின்ற சமூ­கங்கள் தூர­மா­கி­யுள்­ள­மைக்கு காரணம் அர­சி­யல்தான். அதே அர­சியல் மூல­மாக இந்த சமூ­கங்­களை ஒன்­றி­ணைக்க முடி­யு­மாயின் அதுவே மிகப் பெரும் வெற்­றி­யாகும். அதனை நோக்­கித்தான் நாம் செயற்­ப­டு­கிறோம். அந்த வகையில் அக்­கு­ற­ணையில் அமைக்­கப்­பட்­டுள்ள ஆட்­சியும் இந்த நாட்­டுக்கு நல்ல முன்­னு­தா­ர­ண­மாகும்.

தவி­சா­ள­ராக பத­வி­யேற்ற இந்தக் குறு­கிய காலப் பகு­தியில் நீங்கள் பெற்றுக் கொண்ட அனு­பவம் என்ன?

அக்­கு­றணை பிர­தேச சபைக்­குட்­பட்ட எல்­லையில் வாழும் மக்கள் நிறைய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை தவி­சாளர் என்ற வகையில் நான் பத­வி­யேற்ற பின்னர் உணர்ந்து கொண்டேன்.  இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வதில் கடந்த காலத்தில் ஆட்சி செய்­த­வர்­களும் சில அதி­கா­ரி­களும் தவ­றான அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டித்­துள்­ளார்கள் என்­ப­தையும் கண்­ட­றிந்­துள்ளேன். சில முறை­கே­டுகள் தொடர்­பான முறைப்­பா­டு­களும் ஆதா­ரங்­களும் கிடைத்த வண்­ண­முள்­ளன.

பி.எம்.ஜே.டி. சார்ந்த ஒருவர் தவி­சா­ள­ராக நிய­மனம் பெற்­றுள்­ள­மை­யா­னது மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையைத் தோற்­று­வித்­துள்­ளது. இவர்கள் களவு செய்­ய­மாட்­டார்கள், மோசடி செய்­ய­மாட்­டார்கள் என மக்கள் எம்­மீது நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் மக்கள் என்னைத் தேடி வந்து அவர்­க­ளது பிரச்­சி­னைகள் பற்றிக் கூறு­கி­றார்கள்.

பிர­தேச சபையைப் பொறுத்­த­வரை மக்­க­ளுக்­கான சேவை­களை வழங்­கு­வது அதன் பணியில் 75 வீத­மாகும். பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வது என்­பது 25 வீதம்தான். இத­ன­டிப்­ப­டையில் மக்­க­ளுக்கு அன்­றாடம் வழங்கக் கூடிய சேவை­களை துரி­த­மாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை நான் முதற்­கட்­ட­மாக முன்­னெ­டுத்து வரு­கிறேன்.

இது தொடர்பில் மத்­திய மாகாண உள்­ளூ­ராட்சி திணைக்­கள பணிப்­பாளர் நாய­கத்தை சந்­தித்து சில தினங்­க­ளுக்கு முன்னர் கலந்­து­ரை­யா­டினேன். நான் முன்­வைத்த சில யோச­னை­களை அவர் வர­வேற்றார். ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் நிதி­யு­த­வியை இதற்­காகப் பெற்றுத் தரு­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

நான் வியா­பா­ரத்­து­றையில் ஈடு­ப­டு­பவன், ஒரு கம்­ப­னியை தலை­மை­தாங்கி நடாத்­து­பவன் என்ற அடிப்­ப­டையில் பிர­தேச சபையை நிர்­வ­கிப்­பது எனக்கு அவ்­வ­ளவு கஷ்­மான காரி­ய­மல்ல.

பிர­தேச சபையில் பணி­பு­ரியும் அதி­கா­ரிகள், ஊழி­யர்­க­ளுடன் சினே­க­பூர்வ கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிந்­துள்ளேன். அவற்­றுக்குத் தீர்­வு­களை கொடுப்­பதன் மூல­மாக அவர்கள் மகிழ்ச்­சி­க­ர­மான முறையில் பணி­யாற்றக் கூடிய சூழலைத் தோற்­று­விக்க முடியும். அவர்கள் மகிழ்ச்­சி­யாகப் பணி­யாற்­றினால் நிச்­ச­ய­மாக அவர்­க­ளி­ட­மி­ருந்து மக்­களும் மகிழ்ச்­சி­யான முறையில் சேவை­களைப் பெற்றுக் கொள்­வார்கள் என்­பது நிச்­சயம்.

அக்­கு­றணையின் முதல் குடி­மகன் என்ற வகையில்  பிர­தேச சபைக்கு சேவையை நாடி வரு­கின்ற அனை­வ­ரையும் எனது உற­வு­க­ளாக மதித்து அவர்­க­ளது பிரச்­சி­னை­களை கௌர­வ­மான முறையில் கேட்­ட­றிந்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும் என நான் சபையின் அதி­கா­ரிகள் ஊழி­யர்கள் அனை­வ­ருக்கும் வலி­யு­றுத்­தி­யுள்ளேன்.  கடந்த சில வாரங்­க­ளாக நல்ல பல மாற்­றங்­களை காண முடி­கி­றது.

நான் ஒரு வெற்­றி­க­ர­மான வியா­பார நிறு­வ­னத்தை நடத்தி வரு­பவன் என்ற அடிப்­ப­டையில் அதன் மூலம் கிடைத்த நிரு­வாக ரீதி­யான அனு­ப­வங்கள் எனக்கு இந்த பிர­தேச சபையை நிர்வகிப்பதற்கு பெரிதும் கைகொடுக்கிறது. பிரதேச சபை மூலம் கிடைக்கப் பெறக் கூடிய சகல வருமானங்கள் தொடர்பான மதிப்பீடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அவற்றை முழுமையாகத் திரட்டி அதன் மூலமாக பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

நகர அபிவிருத்தி அமைச்சராகவும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பதவி வகிக்கிறார். இந் நிலையில் அவருடன் இணைந்துதான் அக்குரணை பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் மு.கா.-பி.எம்.ஜே.டி.க்கிடையில் சில கசப்புணர்வுகள் உள்ளன. இவற்றைக் கடந்து எவ்வாறு செயற்படப் போகிறீர்கள்?

அரசியலைப் பொறுத்தவரையில் நிரந்தர நண்பனுமில்லை. நிரந்தர எதிரியுமில்லை என்பார்கள். அரசியல் கட்சி பேதமெல்லாம் தேர்தலுடன் முடிந்துவிட்டன. அந்த வகையில் காலத்திற்கேற்றவாறு நாம் வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டியுள்ளது. 

இன்று இந்த ஊரை நிர்வகிப்பதற்கான பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி நலன்கள், கடந்த கால துரோகங்களை முன்னிறுத்திச் செயற்பட முடியாது. மாறாக மக்களினதும் பிரதேசத்தினதும் நலன்களையே முன்னுரிமைப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நாம் மு.கா.வுடன் புரிந்துணர்வுடன் செயற்பட விரும்புகிறோம். குறிப்பாக அக்குறணை புதிய சந்தைக் கட்டிட நிர்மாண விடயத்தில் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இது தொடர்பான கூட்டமும் அண்மையில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

தற்போது கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சராக மு.கா.வைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் நல்லதொரு வாய்ப்பாகும். நாம் அவருடனும் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும் என நம்புகிறோம்.
-Vidivelli