Verified Web

இலங்கையை சவாலுக்குட்படுத்தும் இயற்கை

2018-05-24 05:24:52 Administrator


எம்.எம்.ஏ.ஸமட்

ஏறக்­கு­றைய மூவா­யிரம் வருட வர­லாற்றைக் கொண்ட இலங்கை காலத்­திற்குக் காலம் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. அச்­ச­வால்கள் அக்­கா­லங்­க­ளி­லேயே வெற்றி கொள்­ளப்­பட்டும், சந்­ததி வழி­யாக விடப்­பட்டும் காணப்­ப­டு­வதை வர­லாற்றுப் பாடங்­க­ளி­னூ­டாக அறிந்து கொள்ள முடி­கி­றது. இதில் இலங்கை எதிர்­கொண்ட மிகப் பெரிய சவால்தான் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து இந்­நாட்டை மீட்­டெ­டுக்க புரிந்த போராட்­டங்­க­ளாகும்.

இப்­போ­ராட்­ட­மிக்க சவாலை வெற்­றி­கொள்ள இந்­நாட்டை பிர­தி­ப­லிக்கும் அனைத்து இன, மதத் தலை­வர்­களும் ஒன்­று­பட்டு செயற்­பட்­டனர். அதனால், 1948ஆம் ஆண்டு இந்­நாடு சுதந்­திரம் பெற்­றுக்­கொண்­ட­துடன் அச்­சவால் வெற்­றி­கொள்­ளப்­பட்­டது. சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் அவ்­வப்­போது தலை­தூக்­கிய சிவில் கொள்கைப் போராட்­டங்கள், இன­வா­தத்­தாக்­கு­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்­க­ளி­னாலும் இந்­நாடு சவால்­க­ளுக்­குட்­பட்­டது. பல இன்­னுமே வெற்­றி­கொள்­ளப்­ப­டாது தொடர்­கி­றது.

தொடரும் சவால்­களில் ஒன்­றாக 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தீர்க்­கப்­ப­டாத இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டு­கி­றது. இனப்­பி­ரச்­சி­னையின் கார­ண­மாக எழுந்த ஆயுதப் பேராட்டம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்டு யுத்த அழி­வு­க­ளி­லி­ருந்து மக்கள் நிம்­மதி பெற்­ற­போ­திலும், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தசாப்­தங்கள் கடந்தும் வெற்­றி­கொள்­ளப்­ப­டாது தொடரும் நிலையில், அடிக்­கடி நிகழும் இயற்கை அனர்த்­தங்கள் இலங்­கையை சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கி­றது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவ்­வாண்டு வரை ஒவ்­வெரு வரு­டத்­தி­னதும் மே மாதத்தில் ஏதா­வ­தொரு இயற்கை அனர்த்­தத்­திற்கு இலங்கை உட்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இலங்­கையும் அனர்த்­தங்­களும்

இலங்­கையில் கடந்த 400 வருட காலத்தில் பல அனர்த்­தங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சரித்­தி­ரங்­க­ளி­னூ­டாக அறிய முடி­கி­றது. இவ்­வ­னர்த்­தங்கள் கால­வ­ரி­சைப்­ப­டியும், இடம்­சார்ந்தும், பருவ கால வேறு­பாட்டின் அடிப்­ப­டை­யிலும் நிகழ்ந்துள்­ளன. இவ்­வ­னர்த்­தங்கள் சூறா­வ­ளி­யி­னாலும், பலத்த காற்­றி­னாலும், நெருப்­பி­னாலும், மண்­ச­ரி­வி­னாலும், இடி­மின்­ன­லி­னாலும், வெள்­ளத்­தி­னாலும், வரட்­சி­யி­னாலும், கடல்­கொந்­த­ளிப்பு, கட­ல­ரிப்­புக்­க­ளி­னாலும் அவற்­றுடன் யானை, சிறுத்தை போன்ற விலங்­கி­னங்­க­ளி­னாலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

ஓவ்­வொரு வரு­டத்­திலும் அனர்த்­தங்கள் நிகழ்ந்­தாலும் 1978இல் ஏற்­பட்ட சூறா­வளி, 2004இல் ஏற்­பட்ட சுனாமி, 2011இல் வடக்கு, கிழக்கில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு, 2014இல் இடம்­பெற்ற மீரி­ய­பெத்தை மண்­ச­ரிவு, 2016இல் அர­நா­யக்க, புலத்­கொ­ஹுபிட்­டிய, கடு­கண்­ணா­வையில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு மற்றும் கொழுபின் புற­நகர் பகுதி, கம்­பஹா மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு, 2017இல் செயற்­கை­யாக ஏற்­பட்ட மீதொட்­ட­முல்லை குப்­பை­மேடு சரிவு ஆகிய இயற்கை மற்றும் செயற்கை அனர்த்­தங்கள் காலத்தால் மறக்­கப்­பட முடி­யா­த­வை­க­ளாக மக்கள் மனங்­களில் சஞ்­ச­ரித்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற நிலையில் ஓரிரு தினங்­க­ளாக மேல் மாகாணம் உட்­பட சில மாகா­ணங்­களில் பெய்த கன மழை­யினால் 15 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­கள இலங்­கைளின் இயற்கை அனர்த்த வர­லாற்றுத் தொடரில் ஒன்­றா­கப்­ப­தி­வா­கி­யுள்­ளன.

மேற்­கூ­றப்­பட்ட அனர்த்­தங்கள் உயி­ரி­ழப்­புக்­க­ளையும், சொத்­த­ழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது மாத்­தி­ர­மின்றி, சமூக, பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்­பையும் சிதைத்­தி­ருக்­கி­றது. மக்­க­ளது மனங்­களில் ஒரு தொடர் இழப்­புத்­து­யரை ஏற்­ப­டுத்தி அவர்­களை நெருக்கடிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. அத்­தோடு, மாண­வர்­களின் கல்வி வாழ்க்­கையை பாதித்­தி­ருக்­கி­றது. பல பெண்­களை வித­வை­ளாக மாற்­றி­யி­ருக்­கி­றது. பல சிறார்­களை அனா­தை­க­ளாக ஆக்­கி­யி­ருக்­கி­றது. இவ்­வாறு இந்­நாட்டில் இடம்­பெற்ற மற்றும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் செயற்கை, இயற்கை அனர்த்­தங்கள் பல்­வேறு வகை­யான இழப்­புக்­களை மாத்­தி­ர­மின்றி கேள்­வி­க­ளையும் எழுப்­பு­வ­துடன் பல சவால்­க­ளுக்கும் இலங்­கையை உட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது

இலங்­கையில் ஏற்­படும் இயற்கை அனர்த்­தங்­களில் பொது­வாக இடம்­பெ­றக்­கூ­டி­ய­தாக வெள்­ளப்­பெ­ருக்கும் மண்­ச­ரிவும் காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில்103 ஆறுகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் 10 ஆறுகள் பெரிய ஆறு­க­ளாகும், இவற்றில் களனி, ஜின், களு, நில்­வ­ளவ மற்றும் மாக­வலி கங்கை என்­ப­வற்­றி­னா­லேய வெள்­ளப்­பெ­ருக்கு அதிகம் ஏற்­ப­டு­கி­றது. அதி­க­ரித்து வரும் சனத்­தொ­கைக்கு ஏற்ப மக்கள் வாழக் கூடிய தகுந்த சூழல்கள் அவ­சி­மா­கி­றது. அச்­சூழல் கிடைக்கப் பெறாத மக்கள் எங்கே­யா­வது ஓரி­டத்தில் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் கங்கைக் கரை­களில் தமக்­கான வாழ்­வி­டங்­க­ளையும், வேலைத்­த­லங்­க­ளையும் அமைத்துக் கொள்­கின்­றனர்.

அதிக மழை­வீழ்ச்­சியின் கார­ண­மாக அம்­மழை நீரை உள்­வாங்­கிக்­கொள்ளும் ஆறுகள் பெருக்­கெ­டுக்­கின்­ற­போது வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­கி­றது. இதற்குக் காரணம் மனித செயற்­பா­டு­க­ளா­கவே அமை­கின்­றன. சூழலில் தாக்­கங்­களைக் கரு­தாது, மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற குடி­யி­ருப்­புகள், கட்­ட­நிர்­மா­ணங்கள் மற்றும் முறை­யான வடிகான் வச­திகள் மேற்­கொள்­ளப்­ப­டாது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நகர அபி­வி­ருத்தித் திட்­டங்கள் என்­பன பருவ கால மழை வீழ்ச்­சி­யினால் மழை நீர் முறை­யாக வழிந்­தோ­டு­வதைத் தடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்­பட வழி­வ­குக்­கி­றது.

இவற்­றினைக் கரு­த்திற்­கொண்டு, கால்­வாய்கள் மற்றும் வடி­கான்­களை அண்­டி­யுள்ள அல்­லது அவற்­றைத்­த­டுக்கும் சட்­ட­வி­ரோத கட்­டி­டங்கள் மற்றும் குடி­யி­ருப்­புக்கள் அனைத்­தையும் உட­ன­டி­யாக அகற்­றக்­கோரி காணி நிரப்பு அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­பனம், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை ஆகி­ய­வற்­றுக்கு அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க பணிப்­புரை வழங்­கி­யுள்ளார்.

இலங்­கையில் காணப்­படும் தென்மேல் மற்றும் வடகீழ் பருவ கால மழை வீழ்ச்­சி­க­ளினால் ஏற்­படும் வெள்­ளத்­தினால் இரத்­தி­ன­புரி, களுத்­துறை, கொழும்பு, கம்­பஹா, காலி அம்­பாறை, திரு­கோ­ண­மலை, பதுளை, பொல­ன­றுவை, மட்­டக்­க­ளப்பு, மாத்­தளை, மொன­றா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளுடன் வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள மாவட்­டங்­களும் வழ­மை­யாகப் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றமை கவ­னத்­திற்­கொள்­ளத்­தக்­கது.

இலங்­கையில் பொது­வாக ஏற்­படும் இயற்கை அனர்த்­தங்­களில் மழை வெள்­ளத்­தோடு மண்­ச­ரி­வு­மொன்­றாகும். மலைத்­தொ­டர்­க­ளி­லும் குன்­று­க­ளிலும் பொழியும் பெரு­மழை கார­ண­மாக மண்­ச­ரிவு ஏற்­ப­டு­கி­றது. மலைப் பிர­தே­சங்­களில் திட்­ட­மி­டப்­ப­டாத குடி­யி­ருப்­புக்கள், கட்­ட­ட­ நிர்­மா­ணங்கள் மற்றும் பயிர்ச்செய­்கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவையும் மண்­ச­ரி­வுக்கு கார­ண­மா­க­வுள்­ள­துடன் பாதிப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

இம்­மண்­ச­ரி­வா­னது மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் தென்மேல் பிராந்­தி­யங்­களில் அதிகம் ஏற்­ப­டு­வதைக் காண­மு­டி­கி­றது. பதுளை, நுவ­ரெ­லி­யா, இரத்­தி­ன­புரி, கண்டி. மாத்­தளை கேகாலை ஆகிய மாவட்­டங்கள் மண்­ச­ரி­வுக்கு அதிகம் ஆளாகும் மாவட்­டங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. தற்­போது மலை­யகப் பிர­தே­சங்­களில் பெய்­து­வ­ரும் கன மழை­யினால் பல மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன. இம்­மா­வட்­டங்­களில் ஏற்­ப­டு­கின்ற இயற்கை அனர்த்­தங்கள் மக்கள் வாழ்வில் நிம்­ம­தியை இழக்கச் செய்­வ­துடன் சவால்­களுக்கு முகம்­கொ­டுக்­கவும் செய்­கி­றது. இவ்­வாறு காலத்­திற்குக் காலம் ஏற்­படும் அனர்த்­தங்­க­ளினால் நாடும் மக்­களும் எதிர்­நோக்கும் சவால்கள் வெற்றி கொள்­ளப்­ப­டு­வதே சம­கா­லத்தின் தேவை­யா­க­வுள்­ளது.

அனர்த்­தங்­களும் சவால்­களும்

வெள்­ளப்­பெக்கும் மண்­ச­ரிவும் அதனால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது என்­பது உண்மை. மண்­ச­ரி­வி­னாலும் மழை வெள்­ளத்­தி­னாலும் ஏற்­பட்­டுள்ள சேதங்கள் தொடர்பில் இக்­கட்­டுரை எழுதும் இந்­நி­மிடம் வரை  அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் விப­ரங்­களின் பிர­காரம் 68,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 8 பேர் உயிர் இழந்தும் 7 பேர் காயப்­பட்­டு­முள்­ளனர்.

அவற்­றுடன் வீடுகள், உட­மை­களின் இழப்­புக்கள், பொரு­ளா­தார, குடும்ப வாழ்கை, கல்வி என பல இழப்­புக்­களின் மத்­தியில் மக்கள் நலன்­பு­லரி நிலை­யங்­க­ளி­லும, உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் நெருக்­க­டி­களைச் சுமந்­து­கொண்டு வாழ வேண்­டிய நிர்க்­கதி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு நிர்க்­க­திக்­குள்­ளா­யி­ருக்கும் மக்­க­ளுக்கு அர­சாங்­கமும் தொண்டு நிறு­வ­னங்­களும் மக்­களும் நிவா­ர­ணங்­களை வழங்­கி­னா­லும் அந்­நி­வா­ர­ணங்கள் சம­கா­லத்­தே­வையை ஓர­ளவு பூர்த்தி செய்­தாலும் அவை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிரந்­தரத் தீர்வாக அமை­யாது.

 பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­களில் 80 வீத­த்­திற்கு மேற்­பட்டோர் மத்­தியதர­ வர்க்­கத்­தி­ன­ராவர். இவர்­களில் அநேகர் அன்­றாடம் தொழில் புரிந்து குடும்­பங்­களை நகத்­து­ப­வர்கள். வெள்­ளத்­தி­னாலும் மண்­ச­ரி­வி­னாலும் இவர்­களின் வரு­மானம் முடக்­கப்­பட்­டுள்­ளது. பொரு­ளா­தார நெருக்­க­டி­கனை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றனர்.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்­தங்­க­ளினால் இழப்­புக்­களைச சுமந்து வாழும் மக்­களின் வாழ்வை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள மிகப்பெரும் சவா­லா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. அம்­பாறை மற்றும் கண்டி மாவட்டப் பிர­தே­சங்­களில் கடந்த மார்ச் மாதத்தில் இன­வாத வன்­மு­றை­யா­ளர்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு முறை­யான நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் இழந்த வாழ்­வா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குப் போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எதிர்­கால வெளிச்­சத்திற்காக கனவு கண்டு கொண்­டி­ருக்­கி­றார்கள் இந்­நி­லையில் இரு மாத இடை­வெ­ளியில் இயற்­கையும் இலங்­கையை பதம்­பாக்­கி­றது. சாவால்­க­ளுக்கு மேல் சவால்­களைச் சந்­திக்கச் செய்­கி­றது. இச்­ச­வால்­களை வெற்­றி­கொண்டு மக்கள் நிம்­மதி­யாக வாழ்­வ­தற்கும் இன­வாதத் தீ வள­ராமல் தடுப்­ப­தற்கும், இயற்கை அனர்த்­தங்கள் நிகழ்­கின்­ற­போது அவற்­றினால் ஏற்­படும் அழி­வு­களைப் குறைப்­ப­தற்­கு­மான முறை­யான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

திட்­டங்­களும் வெற்­றி­களும்.

வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு நிகழ்­வ­தற்குப் பல மனித செயற்­பா­டுகள் கார­ண­மெனக் கூறப்­பட்­டாலும் அக்­கா­ர­ணங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு கார­ண­தா­ரி­க­ளாக இருப்­பவர்கள் குறித்தும் கவனம் செலுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

இப்­பி­ர­தே­சங்­களில் இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் என்­பது தெரிந்­தி­ருந்தும், அவ்­வி­டங்­களில் மக்கள் குடி­யி­ருக்­கவும், கட்­ட­டங்கள் நிறு­வ அனு­ம­திக்­கப்­பட்­டதும் எக்­கா­ர­ணங்­க­ளினால் என்­பதும் கண்­ட­றி­யப்­பட வேண்­டிய தேவை­யாகவுள்ளன. யாரின் தேவைக்­காக இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­படக் கூடிய இடங்­களில் மக்கள் வாழ்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர் என்ற கேள்­வி­யு­முள்­ளது.

காலம் கால­மாக மழை நீர் தேங்கக் கூடிய இடங்­க­ளிலும் மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய இடங்­க­ளிலும் மக்கள் தங்கள் வாழ்­வி­டங்­களை அமைக்க ஏன் அனு­ம­திக்­கப்­ப­டு­கிறார்கள் என்ற கேள்­விக்கு முதலில் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் விடை காண வேண்டும். வெள்ளம் வரும்முன் அணை கட்டும் நட­வ­டிக்கை தான் தேவை­யே­யொ­ழிய வெள்ளம் வந்த பின் அணைகட்­டு­வதில் எந்­த­விதப் பய­னு­மில்லை. அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­பதில் அதி­கா­ரி­களின் வகி­பங்கு அளப்­ப­ரி­யது என்­பதை மீண்­டு­மொ­ரு­முறை இந்த அனர்த்­தங்கள் புடம்­போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில், மக்­களை அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­ப­தற்­காக பல்­வேறு திட்­டங்கள் வகுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இந்­நாட்­களில் அமைச்­சர்­க­ளினால் ஊட­கங்­க­ளுக்கு கூறப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு மேற்­கொள்­ள­வுள்ள இத்­திட்­டங்கள் யதார்த்­த­மாக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மென்­பதே மக்­களின் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது.

30 வருட கால செயற்கை யுத்தம், 2004இல் ஏற்­பட்ட சுனாமி மற்றும் 2014இல் ஏற்­பட்ட மீரி­யபெத்தை மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­க­ளினால் ஏற்­பட்ட சவால்கள், அச்­சவால்­களை வெற்றி கொள்­வ­தற்­காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னும் நலன்புரி நிலையங்களிலும் தற்காலிக குடியிருப்புக்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிரந்தரக் குடியிருப்புக்கள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

மக்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டும் அவற்றை வழங்குவதில் அரசியல் தலையீடுகளும் இனவாதத்தின் பிடிகளும் அவ்வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு உதாரணமாக, அக்கரைப்பற்று நுரைச்சோலைக் கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாது இன்னுமே பற்றைகள் நிறைந்த காடுகளாகக் காட்சியளித்துக் கொண்டிருப்பதைக் கூற முடியும்.

தேர்தல் காலங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளாக இல்லாது, அடிக்கடி இலங்கையை சவாலுக்குட்படுத்தும் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்காக முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியுடன் காணப்படுகிறது. மக்களைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்படும் திட்டங்கள் உரிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் நம்பிக்கைக் கீற்றைப் பிறக்கச் செய்யும். அந்நம்பிக்கைக் கீற்றானது இம்மக்களின் எதிர்கால வாழ்வில் ஒளியையேற்றும் என்பது நிதர்சனமாகும்.
-Vidivelli