Verified Web

மலேசியாவின் முன்னுதாரணம்

2018-05-24 00:11:12 Administrator

மலே­சி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அந்­நாட்டின் முன்னாள் பிர­தமர் மஹாதிர் முகம்­மது தலை­மை­யி­லான கூட்­டணி வெற்­றி­பெற்று தற்­போது ஆட்­சி­ய­மைத்­துள்ள நிலையில், அந்­நாட்டின் நிர்­வாக ஒழுங்கில் பாரிய மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்த வெற்­றியைத் தொடர்ந்து தனது 93 வயதில் மீண்டும் மலே­சி­யாவின் பிர­த­ம­ராக மஹாதிர் முகம்­மது பத­வியைப் பொறுப்­பேற்­றி­ருக்­கிறார். இதற்­க­மைய கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் மற்றும் தேடு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நாட்டை கடன் சுமை­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் அவர் ஆரம்­பித்­துள்ளார்.

இதற்­க­மைய மலே­சி­யாவில் அமைச்­சர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை உடன் அமு­லுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைப்­ப­தற்கு அந்­நாட்டு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது.  நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்­கான முதல் முன்­னெ­டுப்­பாக இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக  மஹாதிர் முகம்­மது அறி­வித்­துள்ளார்.

நாட்டின் கடன் சுமை 250 பில்­லியன் டொலர்­க­ளாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் இந்தத் தொகை நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 65 சத­வீதம் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே­வேளை, அர­சாங்க செல­வி­னங்­களைக் குறைப்­ப­தற்­காக அரச ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் மஹதிர்  தெரி­வித்­துள்ளார்.

மஹா­திரின் இந்த முன்­னெ­டுப்­பு­க­ளி­லி­ருந்து இலங்­கையும் பாடம்­ப­டிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இலங்­கையும் தற்­போது பாரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்­கி­றது. 2018 இல் இலங்கை அர­சாங்கம் வெளி­நா­டு­க­ளுக்கு 2845 மில்­லியன் டொலரைத் திருப்பிச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வாறு திருப்பிச் செலுத்த வேண்­டிய தொகையில் 63 வீத­மா­னவை, அதா­வது 1789 மில்­லியன் டொலர் 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் கடந்த அர­சாங்­கத்­தினால் பெறப்­பட்­டவை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்கை இன்று பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டி­ருப்­ப­தற்கு கடந்த அர­சாங்­கத்தின் வீணான செல­வு­களும் அதி­க­ரித்த வெளி­நாட்டுக் கடன்­க­ளுமே காரணம் என தந்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் குற்­றஞ்­சாட்டி வரு­கி­றது. எனினும் இந்த அர­சாங்­கமும் அரச நிர்­வாகச் செல­வு­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை வாக்­கு­று­தி­ய­ளித்­த­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.

மலே­சி­யாவில் மஹாதிர் முகம்­மது எடுத்­துள்ள தீர்­மானம் போன்று அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையைக் குறைத்து அவர்­க­ளுக்­கான செல­வு­க­ளையும் குறைத்­தி­ருக்க முடியும். மாறாக இங்கு அமைச்­சர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கவே செய்­யப்­பட்­டது. அர­சி­யல்­வா­தி­களின் விருப்­பத்­திற்­கேற்ப அரச தொழில்கள் அள்ளி வழங்­கப்­பட்­டன.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று பொரு­ளா­தார சுபீட்­சத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெனில் முதலில் அதற்­கான தியா­கத்தை அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களுமே செய்ய வேண்டும். அதைவிடுத்து அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு மக்களை மாத்திரம் தியாகம் செய்யச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவேதான் மலேசியாவில் தற்போது நடைபெறும் மாற்றங்கள் இலங்கையில் முன்மாதிரியாகக் கொள்ளப்படவேண்டியவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
-Vidivelli