Verified Web

ஆரம்பகால தேர்தல் முறையே நாட்டுக்கு உகந்தது

2018-05-23 03:48:08 A.L.M. Satthar

மாகாண சபைத் தேர்தலை 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் உருவாக்கப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடத்தும்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிறு கட்சிகளும் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுமே இக்கோரிக்கையை வலிந்து கட்டிக்கொண்டு முன்வைத்து வருகின்றன.

விகிதாசார தேர்தல் முறையின் மூலமே சில்லறைக் கட்சிகளால் குறிப்பிடத்தக்களவு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. இதனாலயே அக்கட்சிகள் விகிதாசார அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துகின்றன.

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகள், வகுக்கப்பட்டும் அவற்றுக்கான பிரதிநிதிகள் 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 வீதம் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ள நிலையிலே முன்னர் இருந்த முறையில் நடத்தும் படியான கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் வட்டாரத்தை வென்றெடுப்பதன்மூலம் 60 வீதமான பிரதிநிதித்துவமும் 40 வீதம் முன்னர் இருந்த விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தெரிவு முறையால் பெரும்பாலான மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலைகள் உருவாகின. சபையில் அதிக பிரதிநிதித்துவங்களைப் பெற்ற கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாதுபோன அவலம் பல மன்றங்களின் பதவிகளுக்கான தெரிவின்போது அம்பலமாகின. ஒரு சில பிரதிநிதித்துவங்களைப் பெற்ற பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் கூட்டுச் சேர்ந்து பல மன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. ஆனால், அவற்றின் ஆயுள் நீடிக்குமா என்பதிலும் சந்தேகமே நிலவுகிறது. இப்போதே மஹியங்கனை பிரதேச சபையில் ஆளுந்தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் விகிதாசாரத்தில் உள்வாங்கப்பட்ட அவலத்தையும் கண்டுகொண்டோம்.

இதனால் வட்டாரவாரியாகவும், விகிதாசார ரீதியாகவும் கலப்பு தேர்தல் முறையின் விபரீதம் எடுத்த எடுப்பிலே உணரப்பட்டுள்ளது. போதிய பிரதிநிதித்துவம் பெற முடியாது அங்கலாய்ப்பிலுள்ள சிறுகட்சிகள் இப்பிரச்சினையை தாம் வாதத்திற்கு நியாயப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையால் வேட்பாளரும் கட்சிகளும் எதிர்கொண்ட தொல்லைகள், சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல, அத்துடன் ஒரே கட்சிக்குள் விருப்பு வாக்குப் பெற்றுக்கொள்வதில் குத்து வெட்டுகளின் விபரீதங்களை கடந்த நான்கு தசாப்தங்களாக முழு நாடுமே அனுபவித்தது. விருப்பு வாக்கு வேட்டையில் தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களால் உயிர்ப்பலி, மரண தண்டனை போன்ற பாதக விளைவுகளையும் நாடு கண்டு கொண்டது. இதனாலேயே இம்முறைமையை மாற்றி பிறிதொரு முறைமை நாடப்பட்டது. அதற்கமையவே கடந்த ஆட்சியின்போது குழுவொன்று அமர்த்தப்பட்டது. அதன் சிபாரிசுக்கமையவே புதிய கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பரிச்சார்த்தமாகவே அண்மையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே இம்முறைமையும் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.

இப்போது, பழைய குருடி கதவைத்திறடி என்ற நிலைக்கு முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசார முறைதான் வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்படுகிறது.

ஆனால், இவை இரண்டையும்விட இலங்கை சுதந்திரத்தை தொடர்ந்து ஆரம்ப கட்டத்தில் இருந்த முறைதான் நாட்டுக்கு மிகவும் உகந்ததென்பது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எனும்போது, தொகுதிவாரியாகவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவு எனும்போது வட்டார ரீதியாகவும் தெரிவு செய்யப்படும் முறைதான் ஆரம்பகாலத்தில் இருந்துவந்த முறையாகும். சிறுபான்மையினங்களின் கட்சிகள் இதனைக் கசப்பானதொன்றாகக் கருதினாலும் இம்முறைமூலம் சிறுபான்மைக் கட்சிகள் தமக்குரிய அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லாமலில்லை. சிறுபான்மை உறுப்பினர்கள் போதியளவு தெரிவாகாத நிலையில் தம் விகிதாசாரத்திற்கேற்ப நியமன பிரதிநிதித்துவ முறைமையில் அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு, திருத்தங்களைச்செய்து கொள்ளலாம். பாராளுமன்றத்திலும் 1972 க்கு முன்னர் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்துக்காக நியமனமுறை இருந்தது. எனவே பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்த புதிய யாப்பில் இதனை அங்கீகரித்துக்கொள்ளலாம்.

மேலும் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்துக்காக சிறுபான்மையினர் கணிசமாகவுள்ள தொகுதி, வட்டாரங்களில் பல அங்கத்தவர், தெரிவு முறையை அமுலுக்குக் கொண்டு வரலாம். இப்போதும் உள்ளூராட்சி வட்டாரங்களில் இரட்டை அங்கத்தவர் தெரிவுமுறை உள்ளது. இதன்மூலமும் சிறுபான்மையினர் உள்வாங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. விகிதாசாரம் மற்றும் இரண்டும் கலந்த முறைகளால் நாட்டில் இனவாதமே மேலோங்கியுள்ளமையும் மறுப்பதற்கில்லை.

ஆரம்பத்தில் இருந்த தேர்தல் முறையே நாட்டின் இன ஐக்கியம், நல்லிணக்கத்துக்கு உகந்தது என்பதை இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான ஜனநாயகத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.

சுமார் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட பொரளை தேர்தல் தொகுதியில், முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் பெரும்பான்மை வாக்குளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று சிங்களப் பெரும்பான்மை மக்கள் உள்ள பலாங்கொடை தேர்தல் தொகுதியில் எம்.எல்.எம். அபூ ஸாலிஹ் வெற்றிபெற்றுள்ளார். அதுவும் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் நெருங்கிய உறவினரான மல்லிகா ரத்வத்த என்ற பெண்மணியைத் தோற்கடித்தே இவர் வெற்றிவாகை சூடியுள்ளார். இவ்வாறே அக்குரணை தேர்தல் தொகுதி, பேருவளை தேர்தல் தொகுதிகளில் சிங்கள வாக்காளர் பெரும்பான்மையாகவிருந்தும் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் அக்குரணையிலும் எம்.ஏ.பாக்கிர் மாக்கார், ஐ.ஏ.காதர் ஆகியோர் பேருவளைத் தொகுதியில் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளனர். மேலும் மன்னார், புத்தளம் தொகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய சிறப்பான வரலாறுண்டு. மற்றொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் விகிதாசார முறைமையில் விருப்பு வாக்குப் போட்டியால் புத்தளம், பேருவளைத் தொகுதிகளை இப்போது முஸ்லிம்கள் இழந்து கையாலாகாத நிலையில் இருப்பது குறித்தும் சிந்திக்கவேண்டும். அன்றிருந்த தொகுதிவாரி முறைமையில் வாக்காளர் பெருமக்கள் இனவாதம் பாராது வாக்களித்துள்ளார்கள். அன்று மதவாதம் மூச்சுக்காட்டவில்லை என்பதும் நன்கு புலனாகிறது. ஜனாநயகம் சிறப்பாக மேலோங்கியிருந்ததை அன்றைய தேர்தல் பெறுபேறுகள் பளிச்சிட்டுக் காட்டுகின்றன.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் புதிய யாப்பொன்று கொண்டுவரப்பட்டு இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி சிறப்பு முறைமையில் சற்று தளர்வு காண ஆரம்பித்தது. சிறுபான்மை நியமன பிரதிநிதித்துவம்

இல்லாமலாக்கப்பட்டது. அதன் விளைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசில் அதுவரை நியமன எம்.பி.யாக இடம்பெற்று கல்வியமைச்சராக பிரகாசித்துவந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தேர்தல் தொகுதியொன்றில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 1977 இல் அவர் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவும் நிலையும் ஏற்பட்டது.

பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆரின் யாப்பு மாற்றத்தோடு புதிய விகிதாசார தேர்தல் முறையில் தொகுதிவாரித் தேர்தலுக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல இதன் கசப்புத் தன்மையும் உணரப்பட்டது. அது ஆய்வு, பல கலந்துரையாடல்களின் பின்னர் புதிய கலப்பு முறை தேர்தல் ஒன்றுக்கு வித்திட்டது. அது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிறந்த குழந்தைப் பருவத்திலேயே கசக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன் இப்புதிய கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய அரசு அதனூடாக மற்றொரு வரலாற்றுத் தவறொன்றையும் புகுத்தியுள்ளது. அது நாட்டின் பொருளாதாரத்தில் விழும் பாரியதொரு அடியாகவுமுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமையே அத்தவறாகும்.

பாராளுமன்றம், மாகாண சபைகளிலும் இந்த அதிகரிப்புச் செய்யப்படுவதற்கு முன்னர் இதனால் நாடு எதிர்கொள்ளப்போகும் பொருளாதார நெருக்கடியை இங்கு அலசுவது பொருத்தமாகும்.

புதிய தேர்தல் முறையில் நாட்டிலுள்ள மாநகரசபை, நகரசபை, பிரதேச சபைகளுக்கு மொத்தமாக 8346 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொகை முன்னர் இருந்த உறுப்பினர் எண்ணிக்கையில் இரு மடங்காகும். இப்போது ஒன்பது மாகாண சபைகளிலும் 600 உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இத்தொகைகளும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. இருந்தபோதிலும் இப்போது இலங்கையில் நாட்டுப் பரிபாலனத்தில் மொத்தமாக (8346+600+225) 9171 பிரதிநிதிகள் உள்ளனர்.

தற்போது நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடியே பத்து இலட்சமாகும். இந்நிலையில் 2400 பேருக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் தற்போது பிரதிநிதித்துவமுள்ளது.

எமக்கு அயலிலுள்ள இந்தியா எமது நாட்டைவிட கிட்டத்தட்ட 50–60 மடங்கு விசாலமானதாகும். அங்கு1324 பில்லியன் மக்கள் வகிக்கிறார்கள். அவ்வளவு பரந்த பரப்பளவும் பாரிய சனத்தொகையும் கொண்ட நாட்டில் மொத்தமாக 545 ஆட்சிமன்ற உறுப்பினர்களே (எம்.எல்.ஏ) உள்ளனர். அதேபோன்று 37 மாநிலங்களிலும் 1125 அங்கத்தவர்கள்தான் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இலங்கையில் முன்னர் கிராமசபை, பட்டின சபைகள் இருந்தது போல இந்தியாவில் பஞ்சாயத்து மன்றங்கள் இருந்து வருகின்றன. அவற்றின் உறுப்பினர்கள்கூட எத்தகைய ஆதாயங்களும் பெறாது தொண்டர் சேவை அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையிலோ அண்மையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் 8346 உறுப்பினர்களின் கொடுப்பனவாக156 கோடி செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க சம்பளம் என்ற வகையில் எமது நாட்டு ஜனாதிபதியொருவர் 75,000/= ரூபா மாதாந்தம் பெறுகிறார். இதேபோன்று பிரதமர் 71500 ரூபா, சபாநாயகர் 68,500 ரூபா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் 65,000 ரூபா, எதிர்க்கட்சித் தலைவர் 65,000 ரூபா, பிரதியமைச்சர் 63,500 ரூபா, பிரதி சபாநாயகர் 63,500 ரூபா, குழுக்களின் பிரதித் தலைவர் 63,500 ரூபா, பாராளுமன்ற உறுப்பினர் 54285 ரூபா அத்துடன் ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கு 20 வருடங்கள் பதவியில் இருக்க வேண்டும். மேலும் அரச ஊழியருக்கு கல்வித் தகைமையும் அவசியப்படுகிறது. ஆனால், பாடசாலைப்பக்கம் செல்லாதவர்கள்கூட பாராளுமன்றம் செல்லலாம். இப்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சம்பளம் மட்டுமன்றி இன்றும் எத்தனையோ சலுகைகள், கொடுப்பனவுகளைப் பெற்றும் அனுபவித்தும் வருகிறார்கள். இந்த வகையில் பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் வரை இருந்து பின்னர் தோல்வியைத் தழுவியவர்களும் இப்போது ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவ்வாறு 700 பேருக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்து ஓய்வூதியும், பெறுபவர் இறந்தபின்னர் அவரது மனைவி, பிள்ளைகள் அந்த ஓய்வூதியத்துக்கு உரித்துடைமையாக்கும் வகையில் 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டதிருத்தத்தின் மூலம் இதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்கள். இந்த ஓய்வூதிய வகையில் மாதாந்த ரூபா 50 இலட்சத்திற்கும் அதிகமான நிதி செலவிடப்படுவதாக அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது. இதன்படி வருடாந்தம் 180 கோடி ரூபா பணம் இதற்காக ஒதுக்க வேண்டிய நிலையுள்ளது.

ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை ஓய்வூதியமாகப் பெறுகிறார். 5–15 வருடங்கள் வரை இருந்த ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரு மடங்கை ஓய்வூதியமாகப் பெறுகிறார்.

இவற்றுக்குப் புறம்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உபசரணைக் கொடுப்பனவாக மாதாந்தம்1000 ரூபாவும் வாகனக் கொடுப்பனவாக மாதம்10000 ரூபாவும் பெறுவதோடு பாராளுமன்ற அமர்வொன்றின் போது, 2500 ரூபாவும் பெறுகிறார். குறைந்த பட்சம் மாதாந்தம் 8 தினங்கள் பாராளுமன்றம் கூடுகிறது. இந்த வகையிலும் மாதாந்தம் 20000 ரூபா வாரிச் சுருட்டிக் கொள்ளப்படுகிறது.

இவற்றுக்குப் புறம்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் சலுகையும் உள்ளது.

மேலும் அமைச்சு அலுவலகம், வாசஸ்தலம், பிரத்தியேகச் செயலாளர், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், என்றெல்லாம் செலவும் அவர்களுக்கான வாகனம் இதர கொடுப்பனவுகள் என்று நிதி ஒதுக்கீடுகள் ஏறவே செய்கின்றன. தொலைபேசி, பெக்ஸ், அலுவலக உபகரணங்கள், அமைச்சின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், எரிபொருள், மின்சாரம், நீர் கட்டணங்கள் என்று பலகோடி ரூபா விழுங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் செலவு இவ்வாறிருக்க மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மாதாந்தம் 93000 ரூபா ஒதுக்க வேண்டியுள்ளது. அலுவலக கொடுப்பனவாக 50,000 ரூபா வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 140,000 ரூபா ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்பது மாகாணங்களிலும்முள்ள 600 உறுப்பினர்களின் மாதாந்தச் செலவாக 8 கோடி ரூபாவை அரசு ஒதுக்க வேண்டியுள்ளது.

இதற்குப் புறம்பாக மேல் மாகாண சபை அமைச்சர் ஒருவரின் பெற்றோல் வாகனத்திற்கு மாதாந்தக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும் டீசல் வாகனத்திற்கு 20,000 ரூபாவும் வழங்கப்படுகிறது. மாகாண பிரதியமைச்சரின் பெற்றோல் வாகனம் ஒன்றுக்கு 40,000 ரூபாவும் டீசல் வாகனத்திற்கு 20,000 ரூபாவும் ஒதுக்கப்படுகிறது. மேல் மாகாணத்திற்கு வெளியேயுள்ள அமைச்சர் ஒருவரின் பெற்றோல் வாகனத்திற்கு 75,000 ரூபாவும் டீசல் வாகனத்திற்கு 30,000 ரூபாவும் வழங்கப்படுகிறது. மாகாண அமைச்சர், பிரதியமைச்சர்களுக்கு 2 வாகனங்கள் வீதம் வழங்கப்படுகின்றன.

இந்த வகையில் செலவினங்களைப் பற்றிக் கூட்டிக் கழித்துக் கணிக்கையில் மூச்சு நின்று விடும் போல்தான் தெரிகிறது.

இந்த சமாசாரம் இவ்வாறிருக்க, புதிதாக இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் கொடுப்பனவாக 156 கோடி ரூபாவை மாதாந்தம் ஒதுக்க வேண்டியுள்ளதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் அண்மையில் வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இச்சபைகளில் முன்னர் 4480 உறுப்பினர்களே இருந்தனர். இப்போது அது இரு மடங்கான நிலையில் முன்னரைவிட 84 கோடி ரூபா மாதாந்தம் மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளது.

இன்று  நாடு கடன் சுமையால் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் மேலதிகச் செலவுகள் மேலும் நாட்டுக்கு சுமக்கமுடியாத சுமையொன்றாகவே அமைகிறது. அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தங்களது சுயநலனுக்காகவும்  இருப்புகளை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டு நலனைக் கருத்திற்கொள்ளாது மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நாடு விழுந்துள்ள குழியிலிருந்து மீளவே முடியாத நிலைக்குத்தான் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கும் நீளமான அமைச்சரவையாலும் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அடி விழவே செய்கிறது.

இப்போதுள்ள நிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 64.9 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது இலங்கை நாணயத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாவாகும்.

இத்தகைய இக்கட்டான நிலையில் நாட்டை மீண்டும் குட்டிச் சுவராக்கிவிடாது அமைச்சரவை, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் பாராளுமன்றம் ஆகிய ஆட்சிபீடங்களின் உறுப்பினர் தொகைகள் வரையறுக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதேச சனத்தொகை பரப்பளவைக் கருத்திற்கொண்டு இயன்றவரை உறுப்பினர்களை மட்டுப்படுத்துவது நாட்டு நலனுக்கு நல்லது.

இப்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டு மூன்று மன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு பிரதேச சபை என்றிருக்கும் பரந்த முறைமையையும் மாற்றி முன்னர் இருந்த பட்டினசபை, நகரசபை நிலைக்கு தனித்தனியாக இயங்கும் சபைகளாக மாற்றுவதும் நிருவாகத்தை இலகுவாக்குவதுடன் பல்வேறு சிரமங்கள் சிக்கல்களையும் தீர்க்கவும் வழிவகுத்துவிடும்.

இன, மத,கட்சி பிரதேச பேதங்களுக்கப்பால் நின்று நாட்டு நலனில் அக்கறைகொண்டு செயலாற்றுவதே மனிதாபிமானமாகும்.

எனவே விகிதாசார கலப்பு முறைமையை விட்டுத் தள்ளிவிட்டு, ஆரம்பத்தில் இருந்த தொகுதி, வட்டாரங்களில் போட்டியிடும் முறைமையைகொண்டு வருவதற்கு அனைவரும் ஏகோபித்து முன்மொழிய வேண்டும். தம் கட்சி, தம் இனம் என்ற சுயநலத்தையும் ஒதுக்கித் தள்ளியே இம்முறைமைக்கு எல்லோரும் பச்சைக் கொடி காட்டினால், நாட்டில் பசுமைப் புரட்சியொன்றைக் காணமுடியும். சிறுபான்மையினங்கள் ஆளும் தரப்பில் நியமனப்பிரதி நிதித்துவத்தைப் பெறுவதன் மூலம் தமக்குரிய பிரதிநிதித்துவ விகிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதிநிதித்துவம் பெறுவதன்மூலம் போட்டியிடும் சிரமங்கள், பொறுப்புகளையும் தவிர்த்து கொள்ளலாம்.
-Vidivelli