Verified Web

நோன்பு: மாற்றத்தின் திறவுகோல்

2018-05-21 03:08:02 Ash Sheikh Ikram (Naleemi)

ரமழான் மாதத்தின் பிர­தான கட­மை­யாக நோன்பு காணப்­ப­டு­கி­றது. அதன் ஏனைய அனைத்து இபா­தத்­களும் இதனை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அமைந்­துள்­ளன. இதனை அல்­குர்ஆன் எமக்குத் தெளி­வாக விளக்­கு­கின்­றது. ரம­ழா­னுடன் தொடர்­பு­பட்டு வந்­துள்ள பல­மான ஹதீஸ்கள் அனைத்தும் நோன்­பையும் அதன் இலக்­கு­க­ளையும் வலி­யு­றுத்­து­வதை அவ­தா­னிக்­கலாம். ஸகாதுல் பித்ர் என்ற கடமை கூட நோன்பின் விளை­வாக ஏற்­ப­டு­கின்ற கட­மை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

“ஈமானை பெற்­ற­வர்­களே! உங்­க­ளுக்கு முன்­பி­ருந்தோர் மேல் கட­மை­யாக்­கப்­பட்­டது போன்றே உங்­க­ளுக்கும் நோன்பு கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணு­த­லுள்­ள­வர்­க­ளா­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.” –அல்-­ப­கரா:184-

“ ரமழான் மாதம் அல்-­குர்ஆன் இறங்­கிய மாத­மாகும்.  அது மனி­தர்­க­ளுக்கு நேர்­வ­ழி­காட்டக் கூடி­ய­தா­கவும் நேர்­வ­ழி­யையும் நல­வையும் கெடு­தி­யையும் விளக்­கு­வ­தா­கவும் உள்­ளது. யார் அந்த மாதத்தை அடைந்து கொள்­கின்­றாரோ அவர் அதில் நோன்­பி­ருக்­கட்டும்…” –அல்-­ப­கரா:185-

நோன்பு என்­பது உலகப் பொது­வ­ழக்கு என பக­ராவின் 184 வது வசனம் குறிப்­பி­டு­கி­றது. இது அனைத்து சமூ­கங்­க­ளிலும் காணப்­பட்ட ஒரு முறைமை என்­ப­தனை நோன்பு அல்­லது விர­தத்தின் வர­லாறு குறித்து தேடிப்­பார்க்கும் போது கண்டு கொள்­ள­மு­டி­யு­மாக இருக்­கின்­றது. அமெ­ரிக்க இயற்கை மருத்­து­வ­ரான (naturopath) Arnold Devries (1921-1996) ‘Therapeutic Fasting’  என்ற தனது நூலில் இது குறித்து விரி­வாகப் பேசி­யுள்ளார். மேற்கு எல்லா துறை­க­ளிற்கும் மூலச் சிந்­த­னை­யா­ளர்­க­ளாகக் கரு­தக்­கூ­டிய கிரேக்க சிந்­த­னை­யா­ளர்­க­ளான சோக்­ரடீஸ், பிளேட்டோ போன்றோர் தொடர்ச்­சி­யாக 10 நாட்கள் நோன்­பி­ருக்கும் முறை மனி­த­னது மனம் மற்றும் உடல் திறனை மேம்­ப­டுத்தும் (attain mental and physical efficiency.) என விளக்­கி­யுள்­ளார்கள். கணி­தத்­துறை அறி­ஞ­ரான பைத­கரஸ் தனது பரீட்­சை­க­ளுக்கு முன்னர் 40 நாட்கள் நோன்­பி­ருந்­தி­ருக்­கிறார். தனது மாண­வர்­க­ளையும் பாடங்­க­ளுக்கு வரு­முன்னர் நோன்­பி­ருக்­கு­மாறு பணித்­தி­ருக்­கிறார். பிளேட்டோ வாதி­யாக அறி­யப்­ப­டு­கின்ற சுய­ச­ரி­தை­யாளர்  Lucius Plutarchus(45-127) இலத்­தீன கிறிஸ்­த­வத்தின் தந்­தை­யா­கவும் மேற்கின் இறை­யி­யலின் நிறு­வ­ன­ரா­கவும் அறி­யப்­ப­டு­கின்ற Tertullian(155-240) ஆகியோர் “மருந்துப் பாவ­னைக்குப் பதி­லாக ஒரு நாள் நோன்­பி­ருப்­பது சிறந்­தது (Instead of using medicine better fast a day.)” என குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள். இது இறுதித் தூதரின் வரு­கைக்கு முற்­பட்ட கால­மாகும். அதற்குப் பின்­னரும் பொது­வாக இது குறித்து நிறை­யவே பேசப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக எட்டாம் நூற்­றாண்டில் வாழ்ந்த இமாம் அலி இப்னு ஸீனா மூன்று முதல் ஐந்து வாரங்­க­ளுக்குத் தொடர்ச்­சி­யாக நோன்­பி­ருப்­பதை மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக பரிந்­து­ரைத்­தி­ருக்­கிறார்.

16ஆம் நூற்­றாண்டில் வாழ்ந்த சுவிஸ் மருத்­துவர் Paracelsus “நோன்பு ஒரு மகத்­தான தீர்­வாகும்(Fasting is the greatest remedy.)" என குறிப்­பி­டு­கிறார். 17ஆம் நூற்­றாண்டில் வாழ்ந்த Dr. Hoffman நோன்பு குறித்து “Description of the Magnificent Results Obtained Through Fasting in All Diseases”- அனைத்து நோய்­க­ளுக்கும் நோன்பின் மூலம் பெறப்­பட்ட மகத்­தான முடி­வு­களின் விளக்கம்- என்ற நூலை எழு­தினார். 19ஆம் நூற்­றாண்டில் வாழ்ந்த ரஷ்ய அறி­ஞ­ரான Dr. Von Seeland “எனது ஆய்வின் முடி­வாக நோன்பு என்­பது உயர்ந்த அளவில் சாத்­தி­யப்­பா­டுள்ள ஒரு சிகிச்சை முறை மாத்­தி­ர­மல்ல அது கல்வி ரீதி­யாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒரு விட­ய­மு­மாகும் என முடிவு செய்தேன். (As a result of experiments I have come to the conclusion that fasting is not only a therapeutic of the highest degree possible but also deserves consideration educationally.)" எனக் குறிப்­பி­டு­கிறார்.

இவை Arnold Devries தனது நூலில் நோன்பின் வர­லாறு குறித்து குறிப்­பிட்­டுள்ள முக்­கி­ய­மான விட­யங்­களுள் மிகச் சில­தாகும். இவை நோன்பு என்­பது மானிட சமூ­கத்தின் பொது வழக்கு என்­ப­தனை நிரூ­பணம் செய்­கின்­றன. இஸ்­லாத்தின் தொடர்பில் பார்க்­கின்ற போது ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் வரை நோன்பு ஒரு கட­மை­யாக இருந்­துள்­ள­மையைக் காணலாம். நபி தாவூத் (அலை) ஒரு நாள் விட்டு மறு நாள் நோன்­பி­ருக்கும் வழக்­கத்தைக் கொண்­டி­ருந்­த­தாக இறைத் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்­பிட்­டி­ருப்­பதும் இங்கு கவ­னத்தில் கொள்­ளத்­தக்­கது.

“அல்­லாஹ்­வுக்கு விருப்­ப­மான நோன்பு தாவூத் (அலை) அவர்­களின் நோன்­பாகும்… அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்­பி­ருப்பார்.” -புகாரி,முஸ்லிம்- அவர் தாலுத் என்ற கொடுங்­கோ­லனை மிகைத்து ஆட்­சி­ய­மைத்த (அல்-­ப­கரா:251), மிகப்­பெரும் பல­சா­லி­யாக இருந்தார். உலகில் பெரும் சாம்­ராஜ்யம் ஒன்றைக் கொண்டு நடாத்­திய வாரி­சாக ஸுலைமான் (அலை) அவர்­களை உரு­வாக்கிச் சென்­றவர்.

இவை எமக்கு நோன்பு என்­பது மனித சமூ­கத்தின் பொது வழக்கு என்­ப­தற்­கப்பால் அது மனித வாழ்வின் அனைத்து வகை­யான ஆரோக்­கி­யத்­திற்கும், வள­ரச்­சிக்கும், விருத்­திக்கும் அவ­சி­ய­மான ஒரு விடயம் என்­ப­த­னையும் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. மனி­தனின் இயக்கம் குறித்துப் பேசும் போது உயி­ரியல் ரீதி­யாக சொல்­லப்­ப­டு­கின்ற விளக்­கங்கள் இதனை இன்னும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

கலங்­க­லா­லான மனித உடல் அவ­னது அனைத்து வகை­யான இயக்­கத்­திலும் அதன் செயற்­பாட்­டி­லேயே தங்­கி­யுள்­ளது. கலங்­களின் சீரான இயக்­கத்­திற்கு சத்­துள்ள ஆரோக்­கி­ய­மான உண­வுகள் அவ­சி­யப்­ப­டு­வது போன்றே மனிதன் உணவு உட்­கொள்­ளாமல் தவி­ர்ந்து நோன்­பி­ருக்கும் ஒரு காலப்­ப­கு­தியும் அவ­சி­யப்­ப­டு­கி­றது. எனவே, மருத்­துவ ரீதி­யாக ஆரோக்­கி­ய­மான வாழ்­வுக்கு தினமும் 12 மணித்­தி­யா­லங்கள் ஆகா­ர­மின்றி இருத்தல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆகா­ர­மின்றி இருத்தல், வாரத்தில் இரு நாட்கள் ஆகா­ர­மின்றி இருத்தல், மாதத்தில் சில நாட்கள் ஆகா­ர­மின்றி இருத்தல், தொடர்ச்­சி­யாகப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்ற நாட்கள் ஆகா­ர­மின்றி இருத்தல் என பல்­வேறு வகை­யான விர­தங்கள் அல்­லது நோன்­புகள் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வதைக் காண்­கிறோம்.

இவை மனி­த­னது உடல் ஆரோக்­கி­யத்­துடன் மாத்­திரம் தொடர்­பா­ன­தல்ல. அவ­னது உள ரீதி­யான , உணர்வு ரீதி­யான மற்றும் ஒழுக்க நடத்தை ரீதி­யான பகு­தி­க­ளிலும் நோன்பின் தாக்கம் காணப்­ப­டு­கி­றது. இதனை Epigenetics (அதி­ச­ன­ன­வியல்) எனும் 20ஆம் நூற்­றாண்டில் உயி­ரியல் துரையில் மாத்­தி­ர­மல்­லாது வாழ்­வி­ய­லி­லேயே புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தாகக் கரு­தப்­படும் (The Epigenetics Revolution) கலங்­களில் மர­ப­ணுக்­களின் தொழிற்­பாடு குறித்த கண்­டு­பி­டிப்பும் அது­சார்ந்த துறையின் வள­ர்ச்­சியும் இன்னும் ஆழ­மா­கவே விளக்­கு­கி­றது. உயி­ரி­னங்­களின் அனைத்து செயற்­பா­டு­களும் அவ­னது உணவு, வாழ்வு முறை என்­ப­வற்­றால்தான் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன. அவ­னது உணவும், வாழ்வு முறையும் அவ­னது கலங்­களில் உள்ள மர­ப­ணுவில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அவன் பரம்­ப­ரையின் கைதி­யல்ல மாற்­ற­மாக அவன்தான் தனது வாழ்வு முறையை தனது வாழ்­வ­மைப்பால் வடி­வ­மைக்­கிறான் என சுருக்­க­மாக இந்தத் துறை எமது வாழ்­வி­ய­லுக்கு கொடுத்த இயக்க சக்­தி­ய­ளிக்கும் விளக்­கத்தைக் குறிப்­பி­டலாம்.

இந்தப் பின்­ன­ணியில் இருந்­து­கொண்டு அல்­குர்ஆன் உட்­பட அனைத்து வேதங்­களும் இறங்­கிய கால­மாக குறிக்­கப்­ப­டு­கின்ற ரமழான் ஏன் நோன்பு என்ற கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான காலப் பகு­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது என நாம் சிந்­திக்­கின்­ற­போது அல்­லாஹ்வின் அற்­பு­த­மான ஓர் ஏற்­பாடு அங்­கி­ருப்­பதை அவ­தா­னிக்­கலாம்.

உலகில் மனித சமூ­கத்தின் மாற்­றத்­திற்­காக, வள­ரச்­சிக்­காக, அபி­வி­ருத்­திக்­காக வழி­காட்­டு­வ­தற்கு அரு­ளப்­பட்ட வேதங்கள் இறங்­கிய காலப்­ப­குதி எப்­போ­துமே மானிட சமூ­கத்தில் மாற்­றத்­திற்­கான காலப்­ப­கு­தி­யாக இருக்க வேண்டும் என்ற ஏற்­பாட்டை அல்லாஹ் அங்கு வைத்­துள்ளான் என்­ப­தனை விளங்கிக் கொள்­கிறோம். என­வேதான் இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் ரம­ழானை அபி­வி­ருத்­திக்­கான மாதம் என்று முதல் நிலையில் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். அதற்­க­டுத்­த­தாக மனித வாழ்வில் அபி­வி­ருத்­தி­யையும் வளர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்தும் வகையில் ரம­ழானில் நிகழும் மாற்­றங்­களைக் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள்.

“உங்­களை நோக்கி அபி­வி­ருத்தி நிறைந்த மாதம் ஒன்று வரு­கின்­றது. அதில் நோன்­பி­ருப்­பது கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. அதில் சைத்­தான்கள் விலங்­கி­டப்­ப­டு­கி­றார்கள், சுவ­னத்தின் வாயில்கள் திறக்­கப்­ப­டு­கின்­றன. அதில் ஆயிரம் மாதங்­களை விட சிறந்த ஓர் இரவு உள்­ளது. யாருக்கு அத­னது பிர­யோ­சனம் கிடைக்­காது போகின்­றதோ அவர் அனைத்து நன்­மை­க­ளையும் இழந்­த­வ­ரா­கிறார்.”

“யார் பொய் பேசு­வ­தையும் பொடு­போக்­குத்­த­னத்­தையும் அவற்­றின்­படி செயற்­ப­டு­வ­தையும் விட்டு விட­வில்­லையோ அவர் தான் உண்­ப­தையும் குடிப்­ப­தையும் விட்­டு­வி­டு­வதில் அல்­லாஹ்­வுக்கு எத்­த­கைய தேவையும் கிடை­யாது”.

இங்கு நோன்பு நோற்­கின்ற போது எமது உள, உடல், நடத்தை மாற்றம் ஏற்­பட வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தக்வா என்­பது எந்த நிலை­யிலும் நன்­மையை விரும்­பு­கின்ற, செய்­கின்ற, தீமையை வெறுக்­கின்ற, செய்­யா­தி­ருக்­கின்ற நிலை­யாகும். இது நோன்பின் முலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற மொத்த மாற்­றத்தைக் குறிப்­பி­டு­கின்­றது. “நோன்பு எனக்­கு­ரி­யது நானே அதற்கு கூலி கொடுப்பேன்” என்ற ஹதீஸ் இதனை இன்னும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

நோன்பு நோற்றல் என்­பது அடிப்­ப­டையில் ஒரு­வ­ரது மன­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். மனக்­கட்­டுப்­பாட்டை மேற்­கொள்ள முடி­யா­த­வர்­களால் நோன்­பி­ருப்­பது சிர­ம­மா­ன­தாகும். சுய மனக்­கட்­டுப்­பாடு உள்­ள­வர்­களே நோன்பை சரி­யாக நோற்க முடியும். அப்­ப­டி­யான பயிற்­சியை பெறு­கின்­றவர் எந்த நிலை­யிலும் ஆரோக்­கி­ய­மான, சிறந்த செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­ப­டுவார். சட்டம் இருக்­கலாம் இல்­லா­தி­ருக்­கலாம் தன்னை யாரும் அவ­தா­னிக்­கலாம் அவ­தா­னிக்­கா­தி­ருக்­கலாம் அவர் ஒரு நேர்­மை­யா­ன­வ­ராக இதன் மூலம் மாற்­றப்­ப­டு­கிறார். இங்கு அல்­லாஹ்வை நோக்­கிய ஆன்­மீக நெருக்கம் இயல்பாய் ஏற்­ப­டு­கி­றது.

அடுத்து நோன்­பா­ளியின் உடலில் ஏற்­ப­டு­கின்ற உயி­ரியல் ரீதி­யான மாற்­றங்­களும் அவ­ரது உள, உணர்வு மற்றும் ஒழுக்க நடத்­தை­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன. தொடர்ச்­சி­யாக நோன்­பி­ருப்­பதால் அவ­ரது கலங்கள் புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றில் ஏற்­பட்­டி­ருந்த கோளா­றுகள் சீர் செய்­யப்­ப­டு­கின்­றன. உடலில் சேமிக்­கப்­பட்­டி­ருந்த தேவை­யற்ற மற்றும் நச்சுச் சேமிப்­புக்கள் அகற்­றப்­ப­டு­கின்­றன. அவ­ரது நோயெ­திர்ப்பு முறைமை(Immune System) புதுப்­பிக்­கப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஹோர்­மோன்கள் புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த மாற்­றங்கள் அனைத்தும் நோன்­பா­ளி­யினை மான­சீ­க­மாக மாற்­று­கி­றது. அவ­ரது உணர்­வு­களை புதுப்­பிக்­கின்­றன. அவ­ரது ஒழுக்க நடத்­தைகள் மாறு­வ­தற்கு இவை கார­ண­மாக அமை­கின்­றன.

இந்த எதிர்­பா­ர்க்­கப்­ப­டு­கின்ற மாற்­றங்கள் நிகழ வேண்­டு­மாயின் நோன்பு மிகச் சரி­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும். நோன்பை மிகச் சரி­யாக அமைத்துக் கொள்­வதில் எமது உணவு ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவும் உரிய அள­விலும் எடுக்­கப்­பட வேண்டும்.

“மனிதன் நிரப்­பு­கின்ற பாத்­தி­ரங்­களுள் அவ­னுக்கு அதிகம் தீங்கு விளை­விக்கக் கூடி­யது அவ­னது வயி­றாகும். மனி­த­னுக்கு தனது முள்­ளந்­தண்டை நிமிர்த்­து­ம­ளவு பலத்தை அளிக்கக்­கூ­டிய சில கவள உணவு போது­மா­ன­தகும். அவ­சி­யப்­படின் அவ­னது வயிற்றில் 1/3ஐ உண­வுக்கும் 1/3ஐ நீருக்கும் 1/3ஐ காற்­றுக்கும் ஒதுக்கிக் கொள்­வது போது­மா­ன­தாகும்”

இந்த வகையில் நோன்பை அமைத்துக் கொண்டால் நோன்பின் பிர­யோ­ச­னத்தை அதி­கப்­ப­டுத்தும் ரம­ழானின் ஏனைய வணக்­கங்­களை நிறை­வேற்­று­வது எமக்கு எளி­தான காரி­ய­மாக அமையும். அப்­போது எமது தொழுகை சிறந்த பயனைத் தரும். எமக்கு தியான நிலை­யி­லி­ருந்து அல்-­குர்­ஆனை கற்­ப­தற்­கான ஆரோக்­கியம் கிடைக்கும். எம்மை சீர் செய்­வ­தற்­கான கவ­னத்தை எடுத்துக் கொள்­கின்ற மனோ­நிலை உரு­வாகும். எமது உணர்­வுகள் சீர்­பெற்று பொய் என்­கின்ற தீமை­களின் தலை­யாய நிலை முதல் அத்­தனை தீமை­களில் இருந்தும் தவிர்ந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்பு ஏற்­படும்.

ரம­ழானில் பாவ­மன்­னிப்புப் பெறல், ரம­ழானை குற்­றப்­ப­ரி­கா­ர­மாக அமைத்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை இந்தப் பின்னணியில் இருந்து விளங்கும் போது அவை எமது வாழ்விற்கான ஒட்டுமொத்த மாற்றத்தை பரிந்துரைப்பதை அவதானிக்கலாம். அந்த மாற்றம் நோன்பை ஆரோக்கியமாக அமைப்பதிலேயே தங்கியிருக்கிறது என்பது எமக்கு விளங்குகின்றது.

உணவுக்கு முன்னால், பெண்ணிற்கு முன்னால் தனது மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனிடமிருந்து அடுத்த விடயங்களில் நேர்மையை, நலவை எதிர்பார்ப்பது சிரமம். இந்தப் பயிற்சியை நோன்பு எமக்கு சிறப்பாக வழங்குகின்றது. இந்தப் பயிற்சியை பெறும் நாம் குறைந்த அளவில் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யாதவனாக மாற வேண்டும்.“முஸ்லிம் என்பவர் தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யாதவனாவான்.”

உயர்ந்த அளவில் எமக்கு விரும்புவதையே அடுத்த மனிதனுக்கும் விரும்புகிற, அடுத்தவர்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற மனவெழுச்சி நுண்மதி/ஆன்மீக நுண்மதி (Emotional intelligence/ Spiritual intelligence) வளரப் பெற்றவர்களாக மாற வேண்டும். இதன் வெளிப்பாடாகவே ரமழான் கால ஸதகாக்களும் ஸகாதுல் பித்ரும் அமையப் பெறும்.

“ நீங்கள் உங்களுக்கு விரும்புவதை உங்களது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவர்களாகமாட்டீர்கள்”.

இந்த ரமழானை இந்தப் பின்னணியில் பயன்படுத்திக் கொள்வோம். சுவனத்துக்குச் செல்ல வாய்ப்பளிக்கும், அதில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத்தரும் நோன்பாளியாக வாழ்வில் தொடர்ச்சியாக வாழ்வதற்குரியவர்களாக எம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.


-Vidivelli