Verified Web

பா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது

2018-05-17 04:55:14 Administrator

பேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி

தமி­ழக முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் மார்க்க ரீதி­யான பிரச்­சி­னைகள், இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­மைகள், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த பார்வை, பூகோள ரீதி­யாக காணப்­ப­டு­கின்ற நெருக்­க­டிகள் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் இந்­திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலை­வரும் தமி­ழக மாநில தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் கே. எம். காதர் மொகைதீன் 'விடி­வெள்­ளிக்கு' அளித்த விசேட செவ்­வியில் பல்­வேறு கருத்­துக்­களை குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, 

நேர்காணல் : ஆர்.ராம்

அண்­மைக்­கா­ல­மாக தமி­ழ­கத்தில் உள்ள முஸ்லிம் சமூ­கத்­தினர் மார்க்கம் சம்­பந்­த­மாக முகங்­கொடும் பிர­தான பிரச்­சி­னைகள் எவை?

பதில்:- முத­லா­வ­தாக தமி­ழ­கத்தில் உள்ள முஸ்­லிம்­களின் விட­யங்­களை பார்ப்­போ­மானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்­வேறு மொழி பேசு­கின்­ற­வர்கள் உள்­ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்­படும் மார்க்க கொள்கை அடிப்­ப­டையில் அனை­வரும் ஒன்­றா­கவே உள்­ளனர். 

இருப்­பினும், பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட பிறகு அர­சியல் ரீதி­யாக  மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. பாபர் மசூதி இடிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக தமி­ழ­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கென முஸ்லிம் லீக் கட்சி மாத்­தி­ரமே காணப்­பட்­டது. ஆனால் அந்த மசூதி இடிக்­கப்­பட்­டதன் பின்னர் அதனை மையப்­ப­டுத்தி தமி­ழ­கத்தில் மாத்­திரம் 58 முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 

ஜன­நா­யக வெளியில் பல அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­னது தவிர்க்­க­மு­டி­யாது என்­ப­தோடு அவை மார்க்க அக்­க­றை­யுடன் செயற்­பட்டால் சமூத்தின் பாது­காப்­புக்­குத்­தானே வலுச்­சேர்க்கும்?

பதில்:- அந்த அமைப்­புக்கள் மார்க்க ரீதி­யாக ஒரு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றன. ஆனால் தமி­ழ­கத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத், அ­கீதா தொடர்பில் சீர்­தி­ருத்­தங்­களை செய்யும் நோக்கில் புதிய கருத்­துக்­களை புகுத்­து­வ­தற்கு முய­லும்­போது அவை தனித்­த­னி­யான குழுக்­க­ளாகப் பிரி­வ­டை­கின்­றன. இதனால் எவ்­வா­றான நேர்­ம­றை­யான விளை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன என்­ப­தையே கவ­னிக்க வேண்­டி­யுள்­ளது. 

தமி­ழ­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில், சுன்னத் வல் ஜமா­அத்தை பரம்­ப­ரை­யாகக் கொண்ட பள்­ளி­வா­சல்கள் ஏழா­யி­ரத்­திற்கும் அதி­க­மாக உள்­ளன. இந்தப் பள்­ளி­வா­சல்­களில் ஒரு அமைப்பு, நிரு­வாகம் என்­பன காணப்­படும். அந்தப் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கென மையவாடி காணப்­ப­டு­வ­தோடு, பிறப்பு, இறப்பு, திரு­மணப் பதி­வுகள், ரமழான், நபிகள் நாய­கத்தின் பிறந்த நாள் போன்­ற­வற்றை சிறப்­பாகக் கொண்­டா­டு­வார்கள். ஏழை எளி­ய­வர்­க­ளுக்­கென உத­வி­களை வழங்­கு­வார்கள். இவ்­வா­றான முறை­மைகள் தான் பாரம்­ப­ரி­ய­மாக, பரம்­பரை ரீதி­யாக பள்­ளி­வா­சல்­களில் பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன. 

அவ்­வாறு இருக்­கையில், புதி­தாக உரு­வா­கின்ற அமைப்­புக்கள் பாரம்­ப­ரி­ய­மாக செயற்­படும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக போட்டிப் பள்­ளி­வா­சல்­களை உரு­வாக்­கு­கின்­றார்கள். இவ்­வாறு போட்­டி­யாக நூற்­றுக்கும் மேற்­பட்ட போட்டிப் பள்­ளி­வா­சல்கள் தமி­ழகம் முழு­வதும் உள்­ளன. அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­க­ளிலும் நிரு­வாகம், திரு­மண, பிறப்பு இறப்பு பதி­வுகள் என போட்­டி­யாக நடை­பெ­று­கின்­றன. இவ்­வாறு தனி­யாக இயங்கும் போட்­டிப்­பள்­ளி­வா­சல்­களை சேர்ந்­த­வர்கள் இறந்து விட்­டார்கள் என்றால் பரம்­பரை ஜமா­அத்தை கைவிட்டு புது­வி­த­மாகத் தொழு­கை­களை நடத்தி அடக்கம் செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். அதனால் பரம்­ப­ரை­யான ஜமாஅத் அமைப்­புக்­க­ளுக்கும் புதிய ஜமாஅத் அமைப்­புக்­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் எழுந்து மோதல்கள் கூட நடை­பெ­று­கின்­றன. இது எமது சமூ­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக தமி­ழ­கத்தில் உள்­ளது.

இந்த விவகா­ரத்­தினை தங்­க­ளு­டைய அமைப்­பினர் எவ்­வாறு அணு­கு­கின்­றீர்கள்?

பதில்:- பள்­ளி­வா­சல்­களை மைய­மாக வைத்து பாரம்­ப­ரி­ய­மாக இயங்கும் ஜமா­அத்­துதான் உண்­மை­யான முஸ்லிம் சமு­தாய அமைப்­பாக காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் கட்­சி­யினை சேர்ந்­த­வர்கள் ஜமா­அத்தின் பொறுப்பில் இருந்­தாலும் அவ்­வா­றான ஜமாஅத் அமைப்­புக்­க­ளுக்கு எவ்­வி­த­மான அர­சியல் சாயமும் கிடை­யாது. அது மார்க்கம் சம்­பந்­த­மான சமு­தாய அமைப்­பாகும். ஆகவே அத்­த­கைய பாரம்­ப­ரிய ஜமா­அத்­துக்கு கட்­டுப்­பட்­டி­ருப்­பது தான் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்கு சிறந்­தது. 

ஆகவே, போட்டி ஜமா­அத்­தினை வைத்­தி­ருப்­ப­வர்கள் அவற்றைக் கைவிட்டு பாரம்­ப­ரி­ய­மான ஜமா­அத்­துடன் இணை­யு­மாறு தொடர்ச்­சி­யான கோரிக்­கை­களை விடுத்து வரு­கின்றோம். பல இடங்­களில் அவை வெற்­றி­ய­ளித்­துள்­ளன. பல இளை­ஞர்கள் தமது மன­நி­லையில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். ஆகவே தொடரும் காலத்தில் அவை வெற்­றி­ய­ளிக்கும் என நம்­பு­கின்றோம். 

முஸ்­லிம்­க­ளுக்கும் ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்கும் இடை­யி­லான உற­வுகள் பற்றி   குறிப்­பிடுங்கள்?

பதில்:- தமி­ழ­கத்தில் மதத்தால் இஸ்­லா­மி­யர்­க­ளா­கவும், இனத்தால் தமி­ழர்­க­ளா­கவும் சகோ­த­ரர்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றார்கள். எந்­த­வொரு தரு­ணத்­திலும், இன, மொழி, சாதி அடிப்­ப­டை­யி­லான வன்­ம­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தையோ செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தையோ முஸ்­லிம்கள் விரும்­பு­வ­தில்லை. அதற்கு இடம்­கொ­டுத்­ததும் இல்லை. ஒரு­சில தரு­ணங்­களில் சில அமைப்­புக்கள் எல்­லை­மீ­று­கின்­ற­போது அவற்­றையும் கண்­டித்து செயற்­ப­டுத்­து­கின்ற நிலை­மை­கள்தான் காணப்­ப­டு­கின்­றன. தமி­ழகம் இன, மத, மொழி நல்­லி­ண­கத்­திற்கு உதா­ர­ண­மாக இருக்­கின்­ற­தோடு முஸ்­லிம்­களும் அதன் பங்­கா­ளி­க­ளாக இருக்­கின்­றமை பெரு­மை­யா­னது.

மத்­தியில் ஆட்­சி­யி­லுள்ள பார­தீய ஜன­தாக்­கட்­சியின் செயற்­பா­டு­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- பார­தீய ஜன­தாக்­கட்சி ஆட்­சிப்­பொ­றுப்­பினை ஏற்­றதன் பின்னர் இந்­து­த்துவத்­தினை மையப்­ப­டுத்­திய செயற்­பா­டு­க­ளையே நாடா­ளா­விய ரீதியில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. குறிப்­பாக ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்­புக்­களின் துணை­யுடன் இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாகக் கூறு­வ­தானால் இந்­தியா என்­பது இந்­துத்­துவ நாடாகும். ஏனைய இன, மத, சமூ­கங்கள் வேறு தேசங்­களில் இருந்து வந்­தவை. அவ்­வாறு வந்­த­வர்­க­ளுக்கு பாரத மண்ணில் சம உரிமை வழங்­க­மு­டி­யாது. அவர்­களில் இந்­துக்கள் அல்­லாத அனை­வரும் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிர­ஜைகள் தான் என்­பது தான் அவர்­களின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. 

இந்­தியா ஒரு ஜன­நா­யக நாடு. அஹிம்­சைக்கு உதா­ர­ண­மான நாடு. இந்­நாட்டு அர­சியல் சாசன ரீதி­யாக அனை­வ­ருக்­கு­மான உரி­மைகள் சமத்­துவம் என்­பன உறு­தி­யாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு பல பூக்­களைக் கொண்ட அழ­கிய நந்­த­வ­ன­மா­க­வி­ருக்கும் இந்­திய துணைக்­கண்­டத்தில் முல்­லைப்­பூதான் முதன்­மை­யா­னது என்­பது போன்றே பா.ஜ.கவின் செயற்­பா­டுகள் உள்­ளன. கடந்த பொதுத்­தேர்­தலில் 32சத­வீ­த­மான வாக்­கு­களை பெற்­றுள்ள அக்­கட்சி, 68சத­வீ­த­மா­ன­வர்கள் அவர்­களின் கொள்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளார்கள் என்­பதை மறந்து செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. 

இதனால் பா.ஜ.கவுக்கு ஆத­ர­வாக செயற்­பட்ட கட்­சி­களும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளன. இந்­தி­யா­வுக்கு வேண்­டி­யது இந்­துத்­துவம் கிடை­யாது. இந்­தி­யா­வுக்கு இந்­தி­யத்­துவம் தான் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆகவே தான் நல்­லி­ணக்­கத்­தி­னையும் சமுக நீதி­யையும் விரும்பும் அனைத்து சக்­தி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன. பா.ஜ.கவின் ஒரே இன, மத, மொழி கொள்கை இந்­தி­யாவில் ஒரு­போதும் அமு­லாக்­கப்­பட மாட்­டாது. பா.ஜ.கவின் கொள்­கை­யா­னது முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே எதி­ரா­னது அல்ல பாரத நாட்டின் பாரம்­ப­ரி­யத்­திற்கே எதி­ரா­னது. 

இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் தொடர்­பான உங்­களின் பார்வை என்ன?

பதில்:- இலங்­கையில் உள்ள தமி­ழர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் மொழியால் எவ்­வி­த­மான வேறு­பாடும் கிடை­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு சோன­கத்­த­மிழர் என்ற பெயரே இலங்­கை­யில்தான் வழங்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் இஸ்­லா­மிய வர­லாறு எழுத முடியும் என்றால் இலங்­கை­யி­லி­ருந்து ஆரம்­பித்தால் தான் எழு­த­மு­டியும். அவ்­வாறு இருக்­கின்­ற­போதும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தோற்­றத்தின் பின்­ன­ரான சூழலில் காத்­தான்­குடி உள்­ளிட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளினால் இரு சமூ­கங்­க­ளுக்கும் இடையில் உள்­ளூர எதிர்ப்­பான மனோ­நிலை உரு­வா­கி­விட்­டது. 

அதே­நேரம் அங்­குள்ள முஸ்­லிம்கள் தனி­நாட்­டுக்­கோ­ரிக்­கையை ஆத­ரித்­ததும் கிடை­யாது. ஆத­ரிக்­கப்­போ­வதும் இல்லை. அவ்­வா­றான நிலையில் அஷ்ரப் முதல் தற்­போ­துள்ள ரவூப் ஹக்கீம் வரையில் உள்ள பல முஸ்லிம் தலை­வர்­களை அறிவேன். அவர்­க­ளுடன் நட்­பு­களும் உண்டு. அதே­போன்று மதத்­த­லை­வர்­க­ளையும் அறிவேன். அவர்­களின் நிலைப்­பாட்டின் பிர­காரம் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சகோ­த­ரத்­து­வ­மாக வாழ­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் பாடு­ப­டு­கின்­றார்கள். அது வெற்­றி­பெற வேண்­டு­மென்­ப­துதான் எமது எதிர்­பார்ப்­பா­கவும் உள்­ளது. 

இவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் உள்ள சிங்­கள, பௌத்த பேரி­ன­வாத அமைப்­பான பொது­ப­ல­சேனா என்ற அமைப்பு கடும்­போக்­காக செயற்­பட்டு வரு­கின்­றது. இந்­தி­யாவில் இந்­துத்­துவ வாதத்­தினால் எழுந்­துள்ள போக்­கா­னது இலங்­கை­யிலும் பரவி அதன் தாக்கம் கார­ண­மாக சிங்­கள பௌத்த பேரி­ன­வா­த­மாக பொது­ப­ல­சேனா அமைப்பின் ஊடாக வெளிப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மை­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய பொறுப்பு சிங்­கள தரப்பில் உள்ள தலை­வர்கள், அறி­ஞர்கள் இடத்தில் உள்­ளது.

எவ்­வா­றா­யினும் இலங்கை வாழ்­முஸ்­லிம்கள் அமை­தி­யையே விரும்­பு­கின்­றார்கள். அவர்கள் எவ்­வி­த­மான வன்­மு­றை­யையோ மோதல்­க­ளையோ விரும்­பு­வ­தில்லை. அவ்­வா­றான நிலையில் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்­களை ஏற்­ப­டுத்த தூண்டும் முயற்­சி­களை அடிப்­ப­டை­யி­லேயே கிள்ளி எறிந்­து­விட வேண்டும். மதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி மோதல்கள் உரு­வாக இட­ம­ளிக்கக் கூடாது. 
முதல் மனி­த­ரான ஆதம் பிறந்த அந்த மண்ணில் மனித நேயம் மேலோங்க வேண்டும். அதற்­கான பொறுப்பு அனை­வ­ருக்கும் உண்டு. நல்­லி­ணக்­கமே இலங்­கையின் அழகு. பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் அதுவே அடிப்­ப­டை­யாக அமையும். இலங்கை அர­சாங்கம் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்­திற்கு அதி­கூ­டிய கவனம் செலுத்­து­வ­தோடு அனைத்து இனங்­க­ளுக்­கு­மான உரி­மை­களும் சமத்­து­வமும் வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய வேண்டும். 


தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை மீண்டும் ஒன்­றாக இணைப்­பது தொடர்பில் தாங்கள் கூறும் ஆலோ­சனை என்ன?

பதில்:- பெரு­நி­லப்­ப­ரப்­பாக இருந்த தமிழ்­நாட்­டினை கேரளா, கர்­நா­டகா, ஆந்­திர என்று பிரித்­து­விட்­டார்கள். அவ்­வாறு பிரித்­த­வற்றை மீண்டும் ஒன்று சேர்க்­கு­மாறு கோரினால் அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். ஒரு உரிமை கொடுக்­கப்­பட்டால் அதனை மீண்டும் விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரில்­லாத நிலைமை தான் மனித வளத்தின் பல­வீனம். சாதா­ர­ண­மாக ரயில் பய­ணத்தின் போது ஒரு­வ­ருக்­கான ஆசனம் ஒதுக்­கப்­பட்டு விட்டால் அவர் அதனை மற்­ற­வ­ருக்கு விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருக்­க­மாட்டார். நான்கு ஐந்து மணி நேரப் பய­ணத்­தி­லேயே அவ்­வாறு இருப்­பது தான் மனி­தர்­களின் யதார்த்­த­மா­கின்­றது. 

அப்­படிப் பார்க்­கின்­ற­போது வடக்கு, கிழக்கு என தனித்­த­னி­யாக்கி விட்­டதன் பின்னர் அதனை இணைக்க முற்­ப­டும்­போது, உரு­வா­னதை ஏன் ஒன்­றாக இணைத்து கெடுக்­கின்­றீர்கள் என்று தான் பதி­ல­ளிப்­பார்கள். தந்த உரி­மை­களை மீண்டும் பறிப்­ப­தாக சிந்­திக்க விளை­வார்கள். இந்­த­வி­ட­யத்­தினை அர­சியல் ரீதி­யாகப் பார்க்­கின்­ற­போது கூட ஜன­நா­யக அர­சியல் பண்­பிலும் விவா­தத்­துக்­கான விட­ய­மா­கவே உள்­ளது. 

ஆகவே பிரித்­த­வற்றை மீண்டும் இணைப்­பதா இல்­லையா என்று வாக்­கு­வாதம் நடத்­திக்­கொண்­டி­ருக்­காது இரண்டு நிரு­வா­கங்­களை சிறப்­பாகத் தொடர்­கின்ற அதே­நேரம் இரு சமூ­கங்­களும் சகோ­த­ரத்­துவ பண்­புடன் உறவைத் தொட­ர­வேண்டும். எந்த மாற்­றங்­களும் அர­சி­ய­ல­மைப்பு சார்ந்­தாக அமை­வ­தோடு வன்­மு­றையை தோற்­று­விப்­ப­தா­கவோ இரா­ணுவ ரீதி­யா­கவோ அமைந்­து­விடக் கூடாது. 

அமெ­ரிக்க இரட்டைக் கோபுர தாக்­கு­த­லுக்கு பின்னர் தற்­போது வரையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பூகோள ரீதி­யாகக் காணப்­ப­டு­கின்ற நிலை­மை­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- “த வேல்ட் கம்ஸ் அண்டர் இஸ்லாம்” என்ற நூலொன்றை ஒரி­சாவைச் சேர்ந்த நந்தா என்­பவர் எழு­தி­யுள்ளார். தற்­போது பா.ஜ.க. கட்­சி­யினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள், அவர்கள் வாழும் பகு­தியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் கட்­டாயச் சட்­டங்­களின் பின்­ன­ணியை ஆராய்ந்து அந்த நூலை எழு­தி­யுள்ளார். 

அந்த நூலில் “இஸ்லா­மிய மதத்தின் அடிப்­படைக் கருத்­துக்­களின் பால் ஈர்க்­கப்­பட்டு அந்த மதம் அதி­வே­க­மாக பரவ ஆரம்­பித்­துள்­ளது. இயல்­பா­கவே மனி­தர்கள் இந்த மதத்தின் பால் ஈர்க்­கப்­ப­டு­கின்­றனர். ஐரோப்பா உட்­பட, அமெ­ரிக்­கா­விலும் இந்தக் கொள்­கைகள் ஏற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­தா­கி­விட்­டன. ஆகவே, இஸ்லாம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளமையால் அதனை நிறுத்துவதற்கு யாராலும் முடியாது. இதனால் எமது கலாசாரத்தினையும் மதத்தினையும் பாதுகாப்பதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

 ஆகவே, இஸ்லாத்தின் பரவலை தடுப்பதென்றால் புதியதொரு சிவில் யுத்தத்தினை ஆரம்பிக்க வேண்டும். அது நாடு அல்லது பிரதேச ரீதியாக அமையாது அயலவர்களுக்குள்ளே ஏற்பட்டு சமுதாயத்திற்குள் காட்டுத்தீயாக பரவவேண்டும். அதற்காகவே முஸ்லிம்களின் உணவு உடை உட்பட அனைத்து விடயங்களிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆக, மொத்தத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரும்பான்மையினர் மத்தியில் அவர்களின் கலாசாரம், மதம் ஆகியவற்றை இஸ்லாம் கடந்து முன்னேறி காணாமலாக்கி விடும் என்ற அச்சுறுத்தல் இயல்பாகவே எழக்கூடியவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான அச்சத்தின் வெளிப்பாடுகளாகவே சிரியாவில் நடைபெறும் தாக்குதல் முதல், இந்தியா, இலங்கை, மியன்மார்  போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகக் கடும்போக்கு செயற்பாடுகளுக்கு காரணமாக அமைகின்றன. இஸ்லாம் ஒரு மதம். அது சமுதாயத்தினை நல்வழிப்படுத்துகின்ற ஒரு மார்க்கம் என்ற சிந்தனையும் மனோநிலையும் சர்வதேச ரீதியாக அனைத்து சமூக மக்கள் மத்தியில் ஏற்பட்டு தெளிவு வருகின்றவரையில் இத்தகைய நெருக்கடியான நிலைமைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். முஸ்லிம் சமூகத்தின் மீதும், இஸ்லாம் மீதும் உள்ள புரிந்துணர்வற்ற தன்மையை மாற்றியமைப்பதற்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள துறைசார்ந்த தரப்புக்கள் உள்ளிட்ட சக்திகள் தயாராக வேண்டும்.  
-Vidivelli