Verified Web

தக்வா எனும் எரிபொருளை ரமழானில் நிரப்பிக் கொள்வோம்

2018-05-17 04:28:31 Administrator


முஹிடீன் இஸ்லாஹி
கஹட்டோவிட்ட

உலகில் சகல விவ­கா­ரங்­க­ளுக்கும் இஸ்லாம் வழி­காட்­டு­கின்­றது. எப்­ப­டியும் வாழலாம் என்று கூறு­ப­வனை இஸ்லாம் ஏற்றுக் கொள்­வ­தில்லை. இப்­ப­டித்தான் வாழ­வேண்டும் என இஸ்லாம் வலி­யு­றுத்­து­கின்­றது. மனி­த­னையும், மனி­த­னுக்கு உத­வி­யாக இப்­பி­ர­பஞ்­சத்­தையும் படைத்த அல்லாஹ் இப்­பி­ர­பஞ்­சத்­தி­லுள்ள பொருட்­களைப் பயன்­ப­டுத்தி எப்­படி வாழ வேண்டும் என்ற பாதையை மனி­த­னுக்கு கற்றுக் கொடுத்தான். இந்தப் பாதையே இஸ்லாம் என கூறப்­ப­டு­கின்­றது.

இந்த வாழ்க்கைப் பாதையில் சிறந்த பய­ணத்தை மேற்­கொள்ள, மனித வாக­னத்­துக்கு தூய எரி­பொருள் தேவைப்­ப­டு­கின்­றது. மனித உள்­ளத்தை நிரப்பும் அந்த எரி­பொருள் “தக்வா” வாகும். அந்த எரி­பொ­ருளை நிரப்பிக் கொள்­வ­தற்­கான ஒரு மாதமே எம்மை நோக்கி வந்­துள்­ளது.

அல்லாஹ் இந்த ரமழான் மாதத்­தில்தான் கண்­ணியம் மிக்க அல்­குர்­ஆனை இறக்­கினான். இந்த அல்­குர்ஆன் இறக்­கப்­பட்ட மாதத்தில் ஒரு மாத கால நோன்பை அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான். சக்­தியும் தகை­மையும் உள்ள ஒவ்­வொரு முஸ்­லிமும்  இந்த நோன்பைப் பிடிப்­பது கட்­டாயக் கட­மை­யாகும்.

அல்­குர்ஆன் மனித வாழ்க்­கைக்­கான வழி­காட்­டி­யா­கவே அல்­லாஹ்­வினால் அரு­ளப்­பட்­டுள்­ளது. இந்த அல்­குர்­ஆ­னுக்கு வாழ்க்கை வடிவம் கொடுத்த நபி­ய­வர்­களின் ஸுன்­னாவும் எம்­முடன் உள்­ளது. இந்த அல்­குர்­ஆனின் வழி­காட்டல் கிடைக்கப்பெற வேண்­டு­மானால், அல்லாஹ் ஒரு நிபந்­த­னையை விதித்­துள்ளான்.

அல்­குர்­ஆனின் 2ஆவது அத்­தி­யா­ய­மான அல்­ப­க­ராவின் இரண்­டா­வது வசனம் இந்த நிபந்­த­னையை தெளி­வாக முன்­வைக்­கின்­றது.

“இது, (அல்­லாஹ்வின்) திரு­வே­த­மாகும்; இதில் எத்­த­கைய சந்­தே­கமும் இல்லை; பய­பக்­தி­யு­டை­யோ­ருக்கு (தக்­வா­வு­டை­ய­வர்­க­ளுக்கு)  இது  நேர்­வ­ழி­காட்­டி­யாகும்” (அல்­ப­கரா- 2)

தக்வா உள்­ள­வர்­களே அல்­குர்­ஆனின் நேர்­வ­ழியைப் பெற­மு­டியும் என்ற தெளி­வான வழி­காட்­டலை வழங்கும் அல்­லாஹ்வே, எம்­மை­ய­டைந்­துள்ள புனித நோன்பின் நோக்கம் தக்­வாவை அடைந்து கொள்­வது என சுட்­டிக்­காட்­டி­யுள்ளான்.

“ஈமான் கொண்­டோர்­களே! உங்­க­ளுக்கு முன் இருந்­த­வர்கள் மீது நோன்பு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்­கப்­பட்­டுள்­ளது; (அதன் மூலம்) நீங்கள் இறை­யச்­ச­மு­டையோர் ஆகலாம்” என்­ப­தற்­காக (அல்­ப­கரா- 183)

அல்லாஹ் முஸ்­லிம்­க­ளுக்கு கட­மை­யாக்­கி­யுள்ள இபா­தத்­துக்கள் ஒவ்­வொன்­றி­னதும் நோக்கம் தக்­வாவைப் பெற்றுக் கொள்­வ­தா­கவே உள்­ளது. இருப்­பினும், நீண்ட தொடர் பயிற்­சியை வழங்­கு­வதன் ஊடாக தக்­வாவை வழங்கும் ஒரே இபாதத் இந்த நோன்பு மாத்­தி­ரமே என்­பது முக்­கிய அம்­ச­மா­க­வுள்­ளது.

தக்­வா எனும் எரி­பொ­ருளை உள்­ளத்தில் முறை­யாக நிரப்பிக் கொண்ட மனித வாக­னத்­துக்கே இந்த அல்­குர்­ஆனின் பாதையில் சீரான பய­ணத்தை மேற்­கொள்ள முடி­கின்­றது.

ரமழான் எனும் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தில் மனித வாக­னத்தின் உள்­ளத்தை நிறுத்தி ஒரு மாத காலத்­துக்கு எரி­பொ­ருளை நிரப்பிக் கொண்ட மனி­தனால் தான் ஏனைய 11 மாதங்­களில் அல்­குர்­ஆனின் வழி­காட்­டலில் பய­ணிக்க முடியும். இதுவே அல்­குர்­ஆனின் போத­னை­யாகும்.

எமது சமூ­கத்திலுள்ள மனித உள்­ளங்கள் வழமை போன்று, ரமழான் எனும் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தில் தமது உள்­ளங்­களை நிறுத்தி எரி­பொ­ருட்­களை நிரப்­பு­கின்­றார்கள். நிலை­யத்­தி­லி­ருந்து எரி­பொருள் செல்­வது போன்று மீற்றரும் சுழல்­கின்­றது. மனித வாக­னமும் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. ரம­ழானின் இறுதி நாளன்று வாகனம் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­தி­லி­ருந்து செல்லும்போது எரி­பொருள் நிரம்­பிய நிலையில் செல்­கின்­றதா? என்­பது தான் இங்கு புது­மை­யான கேள்­வி­யாகும்.

எரி­பொருள் நிரப்­பு­வ­தற்­கான அனைத்து செயற்­பா­டு­களும் நடை­பெ­று­கின்­றன என்­பது பார்­வை­யா­ளர்­களின் கண்­க­ளுக்கு புலப்­படும் தெளி­வான உண்­மை­யாகும். எரி­பொருள் நிரப்பும் நிலை­யத்தின் மீற்றரின் சுழற்சி அதனை உண்­மைப்­ப­டுத்­தி­யது. ஆனால், அந்த மீற்றரின் குழா­யினால் வெளி­யே­றி­யது வெறும் காற்று மாத்­தி­ரமே என்­பது இறு­தியில் வாகனம் பய­ணிக்கும் போதுதான் தெரிய வரு­கின்­றது.

இது­போன்­றுதான் எம்மை வந்­த­டையும் ரமழான் மாதமும் ஆகும். நாம் இப்­பு­னித ரம­ழானில் நன்­மை­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­காக அதி­மான நன்­மை­களில் ஈடு­ப­டு­கின்றோம். நோன்பு வைக்­கின்றோம். பர்­ளான, ஸுன்­னத்­தான தொழு­கை­களில் அதிகம் ஈடு­ப­டு­கின்றோம். ஏனைய ஸுன்­னத்­தான அமல்­க­ளையும் தேடித் தேடி செய்ய முயற்­சிக்­கின்றோம். இதற்­கான ஆன்­மீக சூழலும் ரம­ழானில் காணப்­ப­டு­கின்­றது.

ஆனால், எமது செயற்­பா­டுகள் எமது உள்­ளத்தை தக்­வா­வினால் நிரப்­பு­கின்­றதா? என்­ப­துதான் விடை­காண வேண்­டிய கேள்­வி­யாகும். வாகனம் எரி­பொ­ருளை நிரப்­பு­வது போன்­றுதான் இருக்கும்.

ஆனால், எரி­பொருள் டாங்­கியில் எரி­பொருள் ஏறு­கின்­றதா? இல்­லை­யா என்­பதை நாம் சுய­வி­சா­ரணை செய்தே அறிந்­து­கொள்ள வேண்டும். இத­னையே நபி­ய­வர்கள் பின்­வ­ரு­மாறு கூறி­னார்கள்.

“எத்­த­னையோ நோன்­பா­ளிகள் அவர்­க­ளது நோன்பின் மூல­மாக அவர்கள் பெற்­றுக்­கொண்­டது பசி­யையும், தாகத்­தையும் தவிர வேறெ­து­வு­மில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (அஹ்மத், இப்­னு­மாஜா)

நோன்பின் ஓழுங்­கு­களை கடைப்­பி­டித்து நோன்பு வைப்­பதன் ஊடாக அல்லாஹ் ஏவி­யதை செய்யும் பயிற்­சியை உள்­ளத்­துக்கு தரு­கின்றான். அதே­போன்று, வழ­மை­யாக ஒரு சாதா­ரண முஸ்­லி­முக்கு அனு­ம­தித்­துள்ள சில விட­யங்­களை தவிர்ந்து கொள்­ளு­மாறு வரை­ய­றுத்­துள்­ளதன் மூலம் மனதைக் கட்­டுப்­ப­டுத்திக் கொள்ளும் பக்­கு­வத்­தையும் நோன்பின் தொடர்­ப­யிற்­சி­யாக வழங்­கு­கின்றான்.

இவ்­வாறு ஏவி­யதை செய்­வ­தற்கும், தடுத்­த­வற்றை தவிர்ந்து கொள்வதற்கும் தூண்டல் காரணியாக சுவர்க்க இன்பமும், நரக வேதனையும் அமைந்துள்ளன.

நோன்பு வழங்குகின்ற இந்தப் பயிற்சியே உள்ளத்துக்கான தக்வா என்கின்றோம். இந்த ரமழானின் பாசறையில் ஒரு மாத காலம் புடம்போடப்படும் உள்ளம் ஏனைய காலங்களில் ஏவல், விலக்கல்களைப் பேணி வாழும் பக்குவத்துக்கு உட்படுத்தப்படுகின்றான்.

எனவே, எம்மை வந்தடைந்துள்ள ரமழானில் எமது உள்ளம் தக்வா எனும் எரிபொருளை சரியாகவே நிரப்பிக் கொள்கின்றதா? என்பதை சரிபார்த்தவனாக ஒவ்வொரு பொழுதையும் கழிக்க இறைவன் அருள்புரிவானாக !
-Vidivelli