Verified Web

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல் தொடர் 3

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

2018-05-17 00:42:57 Rauf Zain


(சென்றவாரத் தொடர்ச்சி)

குடும்ப அமைப்­புக்கு வெளியே குறிப்­பிட்ட எல்­லையில் ஆண்கள் சிலர்­மீது பெண்கள் சிலர் பகு­தி­ய­ள­வி­லான தலை­மைத்­துவம் வகிப்­பது ஆகாது எனக் காட்டும் எந்தத் தடையும் குர்­ஆ­னிலோ, ஸூன்­னா­விலோ வர­வில்லை. ஆணின் மீதான பெண்ணின் ஒட்டு மொத்தத் தலை­மையே ஷரீ­ஆவின் அங்­கீ­கா­ரத்­திற்கு உட்­பட்­ட­தல்ல என்­பதே இஸ்­லா­மிய சட்ட அறி­ஞர்­களின் நிலைப்­பா­டாகும்.

பெண்­களை நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கலாம் எனும் கருத்தை ஆத­ரிப்போர்.

1.இமாம் அபூ ஹனீபா (ரஹ்)

இமாம் அபூ ஹனீபா ஹி. 80 (கி.பி. 699) ஆம் ஆண்டில் பிறந்­தவர். இமாமுல் அஃழம் என அழைக்­கப்­ப­டு­பவர்.  நாற்­பெரும் சட்ட மர­பு­களில் ஒன்­றான ஹனபி மத்­ஹபின் ஸ்தாபகர் இமாம் அபூ ஹனீபா பெண்­களை நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கலாம் எனும் கருத்தைக் கொண்­டுள்ளார். சிவில் மற்றும் நிதித்­துறை விவ­கா­ரங்­களைக் கையாளும் நீதி­மன்­றங்­களில் பெண்கள் நீதி­ப­தி­களாகப் பணி­யாற்­றலாம். ஆனால், குற்­ற­வியல் நீதி­மன்­றங்­களில் பணி­யாற்ற முடி­யாது என்­பது அவ­ரது கருத்­தாகும். இமாம் அபூ ஹனீ­பா­விற்குப் பின்னர் வந்த இமாம் முஹம்மத் பின் ஹஸன் அஷ்­ஷெய்­பானி, இமாம் அபூ யூஸுப் ஆகி­யோரும் இக்­க­ருத்தை ஆத­ரிக்­கின்­றனர்.

2. இமாம் ஜரீர் அத்­த­பரி (ரஹ்)

இமாம் ஜரீர் அத்­த­பரி (ரஹ்) அவர்கள் கி.பி. 839 இல் பிறந்தார். அவ­ரது முழுப்­பெயர் அபூ ஜஃபர் அம்ர் இப்னு ஜரீர் அத்­த­பரி என்­ப­தாகும். இவ­ரது அல்­குர்ஆன் விளக்­க­வுரை தப்­ஸீருத் தபரி என்ற பெயரில் வெளி­வந்­துள்­ளது. இஸ்­லா­மிய சட்­ட­வி­ய­லிலும் உஸுல்­க­ளிலும் இமாம் தபரி ஆழ்ந்த புலமை கொண்­டவர்.

இமாம் ஜரீர் அத்­த­பரி (ரஹ்) அவர்கள் தனது  அல்­குர்ஆன் விளக்­க­வு­ரையில் தகு­தி­வாய்ந்த பெண்கள் நீதி­மன்­றங்­களில் நிய­மிக்­கப்­ப­டலாம். இதைத் தடை­செய்யும் எந்த சட்ட வச­னங்­களும் மூலா­தா­ரங்­களில் இடம்­பெ­ற­வில்லை என்­கிறார். கற்ற, மார்க்க அறி­வுள்ள, சட்­டத்­துறை நுணுக்­க­முள்ள பெண்கள் சிவில் மற்றும் நிதித்­துறை விவ­கா­ரங்­க­ளையும் கையாளும் நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம்.

3. இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்)

இமாம் இப்னு ஹஸ்ம் அவர்­களின் முழுப்­பெயர் அபூ முஹம்மத் அலீ இப்னு ஸஈத் இப்னு ஹஸ்ம். ஸ்பெய்னின் அந்­த­லூஸில் ஹி. 384 ரமழான் (கி.பி. 994) இல் பிறந்­தவர். இமாம் அபூ­தாவுத் அழ்­ழா­ஹிரி அவர்­களால் ஸ்தாபிக்­கப்­பட்ட ழாஹிரி சட்டப் பாரம்­ப­ரி­யத்தின் பிற்­பட்­ட­கால முக்­கிய இமாம்­களுள் ஒரு­வரே இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள். அல்­குர்ஆன், அல் ஹதீஸ் வச­னங்­க­ளுக்கு மறை­பொ­ருளை விடுத்து நேரடிப் பொருள் காண வேண்டும் என்­ப­த­னால்தான் இச்­சட்ட மர­பிற்கு ழாஹிரி எனப் பெயர் வந்­தது.

இமாம் இப்னு ஹஸ்ம் தனது முஹல்லா எனும் பிர­ப­ல­மான நூலில் அல்­குர்­ஆனில் இடம்­பெறும் நீதித்­துறை தொடர்­பான வச­னங்­களை ஆழ­மாகப் பகுப்­பாய்வு செய்து அவ்­வ­ச­னங்­களின் ஒளியில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வதன் சட்டத் தன்­மையை ஆராய்­கின்றார். நிச்­ச­ய­மாக அல்லாஹ் அமா­னி­தங்­களை அதற்கே உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­வி­டு­மாறு உங்­க­ளுக்குக் கட்­ட­ளை­யி­டு­கிறான். நீங்கள் மக்கள் மத்­தியில் தீர்ப்­ப­ளித்தால் நீதி­யாகத் தீர்ப்­ப­ளி­யுங்கள். (ஸூறதுந் நிஸா : 38)

நபியே நீர் கூறு­வீ­ராக, எனது இரட்­சகன் நீதி­யாக நடந்து கொள்­ளு­மாறும் ஒவ்­வொரு தொழு­கையின் போதும் அவ­னையே முன்­னோக்கித் தொழுங்கள் எனவும் நீங்கள் முற்­றிலும் அவ­னுக்கே வழிப்­பட்டு, கலப்­பற்ற மன­தோடு அவ­னிடம் நீங்கள் பிரார்த்­தனை செய்­யுங்கள் என்றும் கட்­ட­ளை­யிட்டான். (ஸூறதுல் அஃராப் : 29)

நாம் எமது தூதர்­களைத் தெளி­வான அத்­தாட்­சி­க­ளோடு அனுப்­பினோம். அவர்­க­ளுடன் வேதங்­க­ளையும் அள­வு­கோல்­க­ளையும் அனுப்­பினோம். மக்­க­ளுக்கு மத்­தியில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­காக. (ஸூறதுல் ஹதீத் : 25)

நம்­பிக்­கை­யா­ளர்­களே! நீங்கள் நீதி செலுத்தும் படி­யா­கவும் நன்மை செய்யும் படி­யா­கவும் உற­வி­னர்­க­ளுக்குக் கொடுத்து உதவி செய்யும்படி­யா­கவும் நிச்­ச­ய­மாக அல்லாஹ் உங்­களை ஏவு­கின்றான். (ஸூறதுந் நஹ்ல் : 90)

முஃமி­னான ஆண்­களும் முஃமி­னான பெண்­களும் பரஸ்­பரம் பொறுப்­பா­ளி­யா­கவும் உற்ற துணை­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். (ஸூறதுத் தௌபா : 91)

இவ்­வ­ச­னங்­களை மேற்கோள் காட்டும் இப்னு ஹஸ்ம், நீதி செலுத்தல் என்­பது ஆண், பெண் இரு சாரா­ரி­னதும் கட­மை­யாகும். தகு­தி­யான ஆண்கள் நீதி­பதிப் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வது போல, தகு­தி­யான பெண்­களும் அவ்­வாறு நீதித்­து­றைக்கு நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம் என விளக்­கு­கின்றார்.

பெண்கள் நீதி­ப­தி­க­ளாக இருப்­பதைத் தெளி­வாகத் தடுக்கும் எந்­த­வொரு சட்ட வச­னமும் குர்­ஆ­னிலோ ஸுன்­னா­விலோ இடம்­பெ­ற­வில்லை என்­பதே இமாம் இப்னு ஹஸ்மின் வாத­மாகும். அவ்­வாறு இடம்­பெ­றாத பட்­சத்தில், அடிப்­ப­டையில் அனைத்தும் ஆகு­மா­னது (பராஆ அல் அஸ்­லியா) என்ற கருத்தை அவர் இங்கு பிர­யோ­கிக்­கின்றார். இப்னு ஹஸ்ம் அவர்­களின் மூன்­றா­வது வாதம், நன்­மையை ஏவித் தீமையைத் தடுத்தல் குறித்துக் குர்­ஆனில் இடம்­பெறும் வச­னங்கள் அனைத்தும் ஆண், பெண் இரு­சா­ரா­ரையும் விழித்தே பேசு­கின்­றது. எனவே, அநீ­தியை இல்­லா­தொ­ழிப்­பதும் நீதியை நிலை­நாட்­டு­வதும் ஆண், பெண் இரு­சா­ரா­ரி­னதும் மார்க்கக் கட­மை­யாகும். அந்த வகையில் பெண்­களும் நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம் என அவர் கரு­து­கின்றார்.

இமாம் இப்னு ஹஸ்ம் முன்­வைக்கும் நான்­கா­வது வாதம் ஸூறதுல் அஹ்­ஸாபில் இடம்­பெறும் 33 – 35 வரை­யான வச­னங்­க­ளாகும். அதில் குர்ஆன், ஆணையும் பெண்­ணையும் சமத்­து­வ­மா­ன­தா­கவும் நீதி­யா­ன­த­கவும் நோக்­கு­கின்­றது. இரண்டு தரப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் பாகு­பாட்டை அல்­லது அநீ­தியைக் குர்ஆன் காட்­ட­வில்லை. அவ்­வ­சனம் பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. “நிச்­ச­ய­மாக ஆண்­களும் பெண்­களும் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளா­கிய ஆண்­களும் பெண்­களும், இறை­வ­னுக்கு வழிப்­படும் ஆண்­களும் பெண்­களும், உண்­மையை உரைக்கும் ஆண்­களும் பெண்­களும், பொறு­மை­யுள்ள ஆண்­களும் பெண்­களும், அல்­லாஹ்­வுக்குப் பயந்து நடக்கும் ஆண்­களும் பெண்­களும், நோன்பு நோற்கும் ஆண்­களும் பெண்­களும், அல்­லாஹ்வை நினைவு கூரும் ஆண்­களும் பெண்­களும் ஆகிய இரு­சா­ரா­ருக்கும் அல்லாஹ் மன்­னிப்­பையும் மகத்­தான கூலி­யையும் தயார்­செய்து வைத்­தி­ருக்­கின்றான்.”

இவ்­வ­ச­னத்தை விளக்கும் இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆண்­களைப் போன்று நீதி­பதிப் பத­வி­களை வகிப்­ப­தற்கு ஷரீ­ஆவில் எவ்­விதத் தடை­யு­மில்லை எனக் கூறு­கின்றார்.

4.இமாம் மாவர்தி (ரஹ்)

அவர்­களின் நிலைப்­பாடு

இமாம் மாவர்­தியின் முழுப்­பெயர் அபுல் ஹஸன் அலி இப்னு ஹபீப் அல்­ப­ஸரி அல்­மா­வர்தி. இவர் ஷாபிஈ மத்­ஹபைச் சேர்ந்­தவர். கி.பி. 972 இல் பிறந்­தவர். அஹ்­காமுஸ் ஸுல்­தா­னிய்யா என்­பது இவர் எழு­திய நூல்­களுள் மிகவும் பிர­பல்­ய­மா­னது. இந்­நூலில் இமாம் இப்னு ஜரீர் அத்­த­ப­ரியை மேற்கோள் காட்­டி­ய­வாறு தனது கருத்­துக்­களை விளக்கிச் செல்­கின்றார். இமாம் மாவர்­தியின் அபிப்­பி­ரா­யத்தில் முஸ்லிம் பெண்கள் நீதி­ப­தி­களாய்க் கட­மை­யாற்­றலாம். நன்­மையை ஏவித் தீமையைத் தடுத்தல் எனும் பொதுப்­ப­ணியில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு­சா­ராரும் சம­மான பொறுப்­புக்­க­ளையே சுமந்­துள்­ளனர். நீதியை நிலை­நாட்­டலும் அப்­பொ­றுப்­புக்­களில் ஒன்­றாகும் என மாவர்தி கூறு­கின்றார். ஸூறதுந் நிஸாவின் 34 ஆவது வச­னத்­திற்கு இமாம் தபரி வழங்கும் விளக்­கத்தை இமாம் மாவர்தி மிகப்­பெரும் ஆதா­ர­மாகக் கொள்­கிறார்.

 

5.அஷ்ரப் அலீ தானவி

ஸஹீஸுல் புகா­ரியில் அபூ பக்கார் (ரழி) அறி­விக்கும் ஹதீஸ் ஒன்று பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. “பெண்­க­ளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைக்கும் சமூகம் வெற்றி பெறாது.” இந்த ஹதீஸை விளக்கும் சட்ட அறிஞர் அஷ்ரப் அலீ தானவி, இது பெண்­களை நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும் பகு­தி­ய­ள­வி­லான தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தற்கும் எதி­ரான அல்­லது அதைத் தடை செய்­கின்ற கருத்தை உள்­ள­டக்­க­வில்லை. நீதி­பதிப் பத­விக்கும் இந்த ஹதீ­ஸுக்­கு­மி­டையில் எவ்­வித சம்பந்­த­மு­மில்லை. ஒரு முஸ்லிம் பெண் உல­க­ளா­விய, ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் தலைமை வழங்­கு­வ­தையே இந்த ஹதீஸ் தடுக்­கின்­றது என்­கிறார். சிவில், நிதி விவ­கார நீதி­மன்­றங்­க­ளுக்குப் பெண்­களை நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கலாம் என்­பது அஷ்ரப் அலீ தானவி அவர்­க­ளது கருத்­தாகும். குற்­ற­வியல் நீதி­மன்­றங்­களில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக இருக்க முடி­யா­தென்ற இமாம் அபூ ஹனீ­பாவின் கருத்தை இவர் ஆதரிக்­கின்றார். 

இந்­தியத் துணைக்­கண்­டத்தில் அஷ்ரப் அலீ தானவி குறிப்­பி­டத்­தக்க சட்ட அறி­ஞ­ராக மதிக்­கப்­ப­டு­கின்றார்.

6.நவீன சட்ட அறி­ஞர்­களின் நிலைப்­பாடு

20 ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் சட்ட மேதை எனப் போற்­றப்­படும் இமாமுல் முஜ்­தஹித் முஸ்­தபா அஹ்மத் ஸர்கா, பெண்கள் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம் எனும் கருத்தைத் தெளி­வாக முன்­வைத்­துள்ளார். இமாம் அஹ்­மது ஸர்கா புகழ்­பெற்ற நான்கு சட்ட மத்­ஹ­பு­க­ளிலும் உள்ள கருத்­தொ­ரு­மைப்­பா­டான விட­யங்­களை தனி நூலாகத் தொகுத்து வந்த நிலையில் வபாத்­தானார். நவீன பிக்ஹ் வர­லாற்றில் இது­போன்ற ஒப்­பீட்டு சட்ட நூலொன்றைத் தொகுக்க முயன்றோர் வேறெ­வரும் இல்லை.

அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் தலைவர், பிர­பல சட்ட மேதை அலீ தன்­தாவி சம­கால எகிப்தின் சட்ட அறி­ஞர்­க­ளுள் ஒரு­வ­ரான கலா­நிதி. அலி ஜும்ஆ, சர்­வ­தேச இஸ்­லா­மிய அறிஞர் ஒன்­றி­யத்தின் தலைவர் அல்­லாமா முஜ்­த­ஹிதுல் முத்லக், கலா­நிதி யூஸுப் அல் கர்­ளாவி, லெப­னானின் முன்னாள் முப்­தியும் மாபெரும் சட்ட மேதை­யு­மான ஷேக் பைஸல் மௌலவி, தூனீ­சி­யாவின் புகழ்­பெற்ற இஸ்­லா­மிய அறிஞர் கலா­நிதி. ராஷித் அல் கன்­னூஷி, மொரோக்­கோவின் புகழ்­பெற்ற சட்ட மேதை கலா­நிதி முஸ்­தபா பின் ஹம்ஸா ஆகியோர் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு ஷரீ­ஆவில் எந்தத் தடையும் இல்லை எனும் கருத்தைக் கொண்­டுள்­ளனர்.

சம­கால இஸ்­லா­மிய உலகில் நீதி­ப­தி­க­ளாகப் பெண்கள் 

சம­கால இஸ்­லா­மிய உலகில் முஸ்லிம் பெரும்­பான்மை நாடு­களில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். மலே­ஷி­யாவில் 2010 ஆம் ஆண்டில் இரு பெண்கள் நீதி­பதி நிய­மனம் பெற்­ற­தோடு அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் அவர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. உல­கத்தின் மிகப்­பெரும் முஸ்லிம் நாடு எனக் கரு­தப்­படும் இந்­தோ­னே­ஷி­யாவில் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் பெண்கள் நீதி­பதிப் பத­வி­களை வகித்து வருகின்றனர். பலஸ்தீனின் கிழக்குக் கரையில் ஒரு பெண் நீதிபதிப் பதவியை ஏற்றார்.

2015 இல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முஸ்லிம் பெண்ணொருவர் சிவில் நீதிமன்றத்தில் நீதிபதிப் பதவியை ஏற்றார். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் அமெரிக்காவின் வேறு சில மாநிலங்களிலும் முஸ்லிம் பெண்கள் நீதிபதிப் பதவிகளை வகித்து விருகின்றனர். நியூயோர்க் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்ற இப்பெண் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அல் குர்ஆனையே முன்னிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், தூனீசியா, அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் ஆரம்ப நீதிமன்றங்களில் பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

வட ஆபிரிக்காவிலுள்ள மொரோக்கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட குடும்பவியல் சட்ட சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பெண்களின் நீதிபதி நியமனமும் விளங்குகின்றது. அங்கு அல்ஜீரியா  போன்று பெண்களுக்கு தாராள உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பும் சட்ட ரீதியில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கெதிராக மொரோக்கோவில் கடும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீதித் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு சமூக வாழ்வில் சம அந்தஸ்துடன் பெண்கள் வாழ்வதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுதல் குறித்து இதுவரை நாம் நோக்கிய கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும் போது பெண்களின் நீதிபதிப் பதவியைத் தடுக்கும் குர்ஆன் வசனமோ ஹதீஸோ இல்லை என்பது தெளிவானது. இதுவே இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் தெளிவான நிலைப்பாடு. பகுதித் தலைமைத்துவத்தை ஏற்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது போல் தகுதியான பெண்கள் நீதிபதிப் பணிகளிலும் அமரலாம். இதுவே ஆரம்பகால, இடைக்கால, நவீனகால சட்ட அறிஞர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இமாம் அபூ ஹனீபா, இமாம் மாவர்தி, இமாம் ஜரீர் அத்தபரி, இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) போன்ற சட்ட அறிஞர்கள் உள்ளிட்ட நவீனகால அறிஞர்களான இமாம் தன்தாவி, ஷேக் அலி ஜும்ஆ, ஷேக் கர்ளாவி போன்றவர்கள் இக்கருத்தையே ஆதரிக்கின்றனர். கால, இட, சூழ்நிலைப் பரிமாணங்களைக் கருத்திற்கொண்டு ஷரீஆவின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் பெண்கள் நீதிபதிப் பதவிகளில் அமர்த்தப்படலாம். ஆண்கள் போன்று எல்லாப் பெண்களும் இவ்வாறு நியமிக்கப்படுவதில்லை. நவீன சட்டத்திலும் இஸ்லாமிய சட்டத் துறையிலும் ஆழ்ந்த பரிச்சயமும் குறிப்பாக தனியார் சட்ட விவகாரங்களில் போதுமான அறிவுப் பின்னணி மற்றும் சட்டத்துறை ஆற்றல் கொண்ட பெண்கள் நீதிபதிப் பதவிகளில் அமர்வதற்கு ஷரீஆவில் தடையில்லை. இதுவே சட்ட அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.

(முற்றும்)
-Vidivelli