Verified Web

சேவைகள் ஸ்தம்பிதமடையும் நிலையிலுள்ள காஸா வைத்தியசாலையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை

2018-05-16 23:01:10 M.I.Abdul Nazar


பலஸ்தீனர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலியப் படையினரின் வன்முறையின்போது குறைந்தது அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதனாலும் 2,700 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனாலும்  காஸாவின் பிரதான வைத்தியசாலையான அல்-ஷிபா வைத்தியசாலை அதிகரித்துவரும் நோயாளிகள் மற்றும் கவலைதோய்ந்த குடும்பத்தினரால் நிறைந்துள்ள நிலையில் சேவைகள் ஸ்தம்பிதமடையும் ஆபத்தான நிலையிலும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது.

1948 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆந் திகதி இஸ்ரேல் என்ற தேசம் தாபிக்கப்பட்ட தினத்தில் இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பேரழிவினைக்குறிக்கும் விதத்தில் 70 ஆவது நக்பா தினம் அனுஷ்டிக்கப்பட்டபோது இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

1948 ஆம் ஆண்டு தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அகதிகள் தமது வாழ்விடங்களுக்கு மீளத் திரும்புவதற்கான உரிமையினை வழங்கக்கோரி காஸா பள்ளத்தாக்கில் கடந்த ஏழு வாரகால தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  

மார்ச் மாதம் 30 ஆந் திகதி ஆரம்பித்த போராட்டம் தொடக்கம் குறைந்து 109 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 12,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழும் பலஸ்தீனர்கள் அனைவரும் காஸாவில் கொல்லப்பட்டவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

திங்கட்கிழமை போராட்டம் ஜெரூசலத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமையன்று காஸாவிலுள்ள அல்-ஷிபா வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களும் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்த தமது உறவினர்களில் ஜனாஸாக்களைப் பெறுவதற்காக காத்திருந்தனர். சத்திரசிகிச்சை அறை காயமடைந்த போராட்டக்காரர்களினால் நிறைந்திருக்க காயப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க சத்திரசிகிச்சை நிபுணர்கள் வேகமாக வந்தனர். காயமடைந்த ஏனையோர் வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை சிகிச்சை பெறுவதற்காகக் காத்திருந்த 18 பேர் உயிரிழந்ததாக அல்-ஷிபா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி ஐமன் அல்-ஷஹபானி தெரிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் 500 இற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் கொண்டுவரப்பட்டனர். இது வைத்தியசாலையினால் சிகிச்சையளிக்கும் கொள்ளளவை விட அதிக எண்ணிக்கையாகும் எனவும் அல்-ஷஹபானி தெரிவித்தார்.

மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையிலும் தங்களது இயலுமைக்கும் மேலாக வைத்தியர்கள் காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

காயம் ஏற்படுத்தப்பட்டுள்ள விதத்தினைப்பற்றி விபரித்த அல்-ஷஹபானி பெரும்பாலானோருக்கு உடலின் கீழ்ப்பகுதியிலும் கை, கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

துப்பாக்கி ரவையினால் மற்றும் வெடிபொருட்களினால் காயமடைந்தவர்கள் அவசரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நோயாளிகளாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை எல்லைப் பிரதேசத்தில் அருகே குண்டொன்று வந்து விழுந்து வெடித்ததில் இரு பிள்ளைகளின் தந்தையான டாமெர் பாறூக் அபூ கஹாபனின் கையில் காயம் ஏற்பட்டது.

அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், வைத்தியசாலையின் வசதியீனம் காரணமாக அவருக்கான சத்திரசிகிச்சை பிற்போடப்பட்டுள்ளது.

யாபா பிரதேசத்தைச் சேர்ந்த அவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பலஸ்தீன மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராகவும் போராடவேண்டியது எனது தார்மீக மற்றும் தேசியக் கடமையாகும் எனத் தெரிவித்தார்.

தலையில் காயமடைந்த 26 வயதான யூசுப் அல்-மக்கால் 'இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எனது உரிமைக்காக போராடுவதை எதனாலும் தடுத்துவிட முடியாது' எனத் தெரிவித்தார்.

தலையின் பின்பக்கம் துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான காயம் ஏற்பட்டபோதிலும் அல்-மக்கால் உயிர்பிழைத்துள்ளார். மேலதிக சத்திரசிகிச்சை மேற்கொள்ளாதிருந்திருந்தால் மக்கால் உயிரிழந்திருப்பார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காஸாவெங்கும் தமது குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்படுகளை செய்துகொண்டிருந்தனர்.

காஸாவிலுள்ள பெரிய பள்ளிவாயலில் 25 வயதான அன்வர் கஹந்தூர் மற்றும் 18 வயதான மர்யம் அல் தாபென் ஆகியோர் தமது எட்டு மாத அன்பு மகள் லைலாவை பறி கொடுத்த துக்கத்தில் காணப்பட்டனர்.

திங்கட்கிழமை மாலை வீசப்பட்ட கண்ணீர் புகையின் வாயுவை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்த லைலா அல்-கஹந்தூரின் ஜனாஸாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காஸா நகரில் மறியல் போராட்டத்தில் தனது தாயாரோடு லைலா  அமர்ந்திருந்தாள். தாயும் மகளும் முன்னரங்கு நிலையிலிருந்து தொலைவில் அமைந்திருந்த கூடாரமொன்றில் அமர்ந்திருந்தனர்.

இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தினால் கண்ணீர் புகைக்குண்டு போடப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர் என லைலாவின் தாயான மர்யம் அல் தாபென் தெரிவித்தார். இவர் 2016 ஆம் ஆண்டு தனது மற்றுமொரு பிள்ளையினையும் பறிகொடுத்திருந்தார்.
-Vidivelli