Verified Web

பலஸ்­தீ­னத்­திற்கு ஆத­ர­வான இரா­ஜ­தந்­திர நகர்­வினை இலங்கை மேற்­கொள்ள வேண்டும்

2018-05-16 01:12:13 Administrator

அமெ­ரிக்­கா­வினால் நாடு­களைப் பிரிப்­பதன் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் ஏகா­தி­பத்­திய செயற்­பா­டுகள் நிறுத்­தப்­பட வேண்டும். இப்­போது அமெ­ரிக்­கா­வினால் பலஸ்­தீ­னத்தில் மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டுகள் எப்­போது  இலங்­கையை நோக்கித் திரும்பும் என கூற­மு­டி­யாது. எனவே பலஸ்­தீ­னத்தில் அமெ­ரிக்­காவின் தலை­யீட்­டுடன் நிகழ்த்­தப்­படும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக இலங்கை முறை­யான அர­சியல், இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­வித்தார்.

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை குழுவும், கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ர­கமும் இணைந்து ஏற்­பாடு செய்த பலஸ்­தீன மக்­களின் வெளி­யேற்­றத்தைக் குறிக்கும் நக்பா தின பிர­தான நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்­பி­லுள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக் ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்­றது. இதில் சிறப்­பு­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,  நாம் வர­லாற்­றிலே இடம்­பெற்ற பல்­வேறு நிகழ்­வு­களை நினை­வு­கூ­ரு­கின்றோம். அவற்றில் சில மகிழ்ச்­சிக்­கு­ரி­யவை. மேலும் சில சம்­ப­வங்கள் பாரிய அழி­வினை குறித்து நிற்­ப­வை­யாக உள்­ளன.

நக்பா தினமும் அவ்­வா­றா­ன­தொரு அழி­வினை நினை­வு­கூ­ரு­வ­தாக அமைந்­துள்­ளது. 1948 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற சம்­ப­வத்தை இன்­று­வரை நினை­வு­கூ­ரு­கின்றோம்.7 இலட்சம் பலஸ்­தீன மக்கள் அன்று நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். தமது சொந்த நாட்­டிலே அக­தி­க­ளாக்­கப்­பட்­டனர். பெரும்­பான்­மை­யான பலஸ்­தீன மக்கள் ஜோர்தான் , சிரியா மற்றும் காஸா­வுக்கு இடம்­பெ­யர நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். இன்னும் சிலர் இஸ்­ரே­லுக்­குள்­ளேயே தடுத்து நிறுத்­தப்­பட்­டனர்.

இன்று உல­க­ளா­விய ரீதி­யிலே மக்கள் நக்பா தினத்தை முன்­னிட்டு பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இஸ்­ரேலில் வாழும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு நக்பா தினத்தை நினை­வு­கூ­ரு­வ­தற்­கான உரிமை கூட மறுக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­மை­யி­லேயே எமது நாட்டில் இன, ­மத, கட்சி பேத­மின்றி பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக நக்பா தினத்­தினை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனை­வரும் ஒன்­று­கூ­டி­யுள்ளோம்.

அமெ­ரிக்­கா­வா­னது இஸ்ரேல்இ- பலஸ்­தீன பிரச்­சி­னையில் தலை­யீடு செய்­வ­தற்கு அங்­கி­ருக்கும் எண்ணெய் வளமே கார­ண­மாகும். அமெ­ரிக்­கா­விற்கு எண்ணெய் வளம் அவ­சி­ய­மாக இருப்­ப­த­னா­லேயே பலஸ்­தீ­னர்கள் இரத்தம் சிந்­து­வதை ஆத­ரிக்­கின்­றது. இன்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கி­டையில் யுத்­தத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வது அமெ­ரிக்­கா­வாகும்.

நேற்று முன்­தினம் அமெ­ரிக்கா, பிரான்ஸ் போன்­றன ஐக்­கிய நாடுகள் சபையின் அனு­ம­தி­யின்றி சிரி­யாவின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளன. அதேபோல் இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரான் மத்­திய நிலை­யங்கள் மீது தாக்­குதல் நடத்­து­கின்­றது. இதன்­மூலம் இஸ்­ரேலை பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குள் யுத்­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­பது தெளி­வாக விளங்­கு­கின்­றது. நாடு­களை பிரிப்­பதன் மூலம் அமெ­ரிக்கா தமது ஏகா­தி­பத்­தி­யத்தை நிலை­நாட்ட எதிர்­பார்க்­கின்­றது.

எண்ணெய் வளத்தைக் கைப்­பற்றும் நோக்­குடன் செயற்­படும் அமெ­ரிக்­காவின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், பலஸ்­தீன மக்­களின் உரி­மைக்­காக ஒன்­றி­ணைந்து குரல் கொடுப்­ப­தற்கும் இலங்­கையர் உட்­பட உல­க­ளா­விய ரீதி­யிலே அனைத்து மக்­க­ளுக்கும் பொறுப்­புண்டு. இன்று பலஸ்­தீ­னத்­திற்கு ஏற்­பட்­டுள்ள நிலைமை இலங்­கைக்கு எப்­போது ஏற்­படும் என்­பதை குறிப்­பிட்டு கூற­மு­டி­யாது.

எனவே இது பலஸ்­தீ­னர்­களின் பிரச்­சினை மாத்­தி­ர­மல்ல. இது முஸ்­லிம்கள் தொடர்­பான பிரச்­சினை அல்­லது இலங்கை முஸ்­லிம்கள் மாத்­திரம் கவனம் செலுத்த வேண்­டிய பிரச்­சினை என நாம் கரு­த­வில்லை. அமெ­ரிக்­காவின் செயற்­பாட்டால் முழு உல­கமும் பாதிப்­ப­டைந்­துள்­ளது.

 

அமெ­ரிக்­காவின் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபையும் போதிய எதிர்ப்­பினை வெளி­யி­ட­வில்லை. அதனால் அமெ­ரிக்கா தனது ஏகா­தி­பத்­திய செயற்­பா­டு­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கி­றது. இந்­நி­லையில் எமது நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்சு இந்­நி­கழ்­வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதை பாராட்­டு­வ­துடன், இதை­விட முன்­னேற்­ற­க­ர­மான அர­சியல் இரா­ஜ­தந்­திர தலை­யீடு அவ­சி­ய­மாகும் என்றார்.

இந் நிகழ்வில்  இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் சுஹைர் ஹம்­தல்லாஹ் ஷைத் உரை­யாற்­று­கையில்,

எமது தாயக மண்ணை பறி­கொ­டுத்து இன்­றுடன் 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. 1948ஆம் ஆண்டு எமது நிலத்தில் இஸ்ரேல் குடி­ய­மர்த்­தப்­பட்­டதில் இருந்து இன்­று­வரை எமது மக்கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இன்று எமது தாயக நகர் ஜெரூச­லத்தை அமெ­ரிக்கா பிரித்­தெ­டுக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

உலகின் பழ­மை­யான மண் எமது மண். எமது உரி­மைகள் குறித்தும், நியாயம் குறித்தும் நடு­நிலை வகிக்க எவரும்  முன்­வர முடி­யா­துள்­ளது. எனினும் எமது உரி­மைக்­கான போராட்­டத்தை நாம் கைவி­ட­வில்லை. ஜெரூ­ச­லமே எமது தலை­நகர். அதில் எந்த மாற்­றமும் இல்லை. ஜெரூசலம் இல்­லாத பலஸ்­தீனம் ஒன்று இல்லை. இந்தக் கொள்­கையில் நிலை­யாக நாம் உள்ளோம். இந்த தீர்­மா­னமே பலஸ்­தீன மக்­களின் உறு­தி­யான தீர்­மா­ன­மா­கவும் உள்­ளது.

ஆகவே, எமது மக்­களின் துய­ரத்தில் ஆரம்பம் முதற்­கொண்டு இலங்கை அர­சாங்கம் மற்றும் அமைப்­புகள் ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­கின்­றன. இதனை நாம் எப்­போதும் மறக்­கப்­போ­வ­தில்லை. நாம் அனை­வரும் பலஸ்தீன விடுதலைக்காக கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக்குழுவின் இணைத் தலைவருமான  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பலஸ்தீனின் நக்பா தினத்தைக் குறிக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியும் கையொப்பம் திரட்டும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.