Verified Web

அச்சுறுத்தல்கள் நீங்க ரமழானில் பிரார்த்திப்போம்

2018-05-11 02:28:01 Administrator

அல்­லாஹ்வின் உத­வியால் இந்த வரு­டமும் புனித ரமழான் மாதத்தை நாம் அடையக் காத்­தி­ருக்­கிறோம். இன்னும் சில தினங்­களில் ரமழான் நம்மை வந்­த­டை­ய­வி­ருக்­கி­றது.  அந்த வகையில் இந்த ரம­ழானை நமது தனிப்­பட்ட வாழ்வின் வெற்­றிக்­கா­கவும் சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்­கா­கவும் பயன்­ப­டுத்த திட­சங்­கற்பம் பூண வேண்டும்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை முஸ்லிம்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்ளது. அந்த வகையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நீங்கவும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்குத் தேவையான இறை அருளைப் பெற்றுக் கொள்வதற்கான மாதமாக இந்த வருட ரமழானை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையிலேயே இந்த வருடம் நாம் ரமழானை எதிர்கொள்கிறோம். முஸ்லிம்கள் இரவு நேரங்களில் விழித்திருந்து பள்ளிவாசல்களுக்குச் சுதந்திரமாகச் சென்று அமல்களில் ஈடுபடுவதற்கான அச்சமானதொரு சூழல் அப் பகுதிகளில் நீடிக்கவே செய்கிறது. அந்த வகையில் இப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு விடயங்களில் கரிசனையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அமல்களை கூட்டாக நிறைவேற்றுகின்ற விடயத்தில் திட்டமிட்ட வகையில் செயற்படுவது பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச தலைமைகளின் கடப்பாடாகும்.

அதேபோன்றுதான் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தின் கண்­ணி­யத்தைப் பேணு­கின்ற வகை­யிலும் நாட்டில் வாழு­கின்ற ஏனைய சமூ­கங்­க­ளுடன் முரண்­பா­டு­களைத் தோற்­று­வித்துக் கொள்­ளாத வகை­யிலும் கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக ரம­ழானில் தோற்றம் பெறும் பிறை சர்ச்சை, தராவீஹ் சர்ச்சை, இஸ்­லா­மிய பிர­சார குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான தேவையற்ற முரண்­பா­டுகள் என்­ப­ன­வற்றை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அதே­போன்று பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் தமது பொறுப்­புக்­களை உணர்ந்து செயற்­பட வேண்டும். ரம­ழானின் பெயரால் பள்­ளி­வாசல் சொத்­துக்­களை வீண் விரயம் செய்­யவோ அல்­லது பள்­ளி­வா­சல்­களை முரண்­பா­டு­களை வளர்க்கும் இட­மா­க மாற்­றி­விடவோ கூடாது என்றும் ஆலோசனை கூற விரும்புகிறோம்.

அதேபோன்றுதான் ரமழான் காலத்தில் சகவாழ்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதெற்கான காலப்பகுதியாகவும் பயன்படுத்த முடியும். குறிப்பாக நாம் ரமழான் காலத்தில் தயாரிக்கின்ற விசேட உணவுப் பண்டங்களை அருகிலுள்ள பிற மத மக்களுக்கு வழங்குவதன் மூலமாகவும் நோன்பை மையப்படுத்திய இப்தார் போன்ற நிகழ்வுகளுக்கு அவர்களை அழைப்பதன் மூலமாகவும் இன நல்லுறவுக்கு வழிவகுக்க முடியும். எனினும் இவற்றில் இஸ்லாம் கூறும் வரையறைகளைப் பேணிக் கொள்வதும் அவசியமாகும்.

அந்த வகையில் நம்மை எதிர்நோக்கியுள்ள புனித ரமழான் மாதம் தனி மனிதர்களுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் உலகெங்கும் அல்லலுறும் முஸ்லிம்களுக்கும் சுபீட்சத்தையும் இறை அருளையும் கொண்டுவரப் பிரார்த்திப்போமாக.
-Vidivelli