Verified Web

பல்லின சமூகத்தில் பள்ளிவாசலின் வகிபாகம்

13 days ago M.I.M.Nufail

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். நுபைல் (நளீமி) Dip in mgt

முஸ்லிம் சமூகத்தினை அடிப்படை விழுமியங்களின் பாலும், உலக வாழ்கையின் இலக்குகளின் பாலும் வழிநடத்துகின்ற உயர் சக்தியாக பள்ளிவாசல்கள் இருப்பதை அவதானிக்கலாம்.அதிலும் முஸ்லிம் சமூகத்தின் உயரிய இலக்குகளை மிகச்சரியாக வகுத்துக்கொடுக்கும் முக்கிய பணியை பள்ளிவாசல்கள் மேற்கொள்கின்றன.மேலும் முஸ்லிம் சமுகத்தை பண்பாட்டு ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கட்டியெழுப்பும் கிளைப்பணியைத்தான் பள்ளிவாசல்கள் மேற்கொள்கின்றன. இந்த உண்மையை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஹிஜ்றத் சென்றதும் பள்ளிவாசல்களை கட்டினார்கள்.இதன் அர்த்தம் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்லாமல் அனைத்து சமூகத்தின் வழிகாட்டியாக பள்ளிவாசல்கள்தான் இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த உண்மையை விளக்குவதற்கு றஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களது மதீனா வாழ்வை உற்று நோக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக அடுத்த மதத்தவர்களுடன் றஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களது பள்ளிவாசல்களுடனான உறவாடல் எப்படி இருந்தது என்பது பற்றிய அறிவு அவசியமானது. நாம் ஏற்கனவே அறிந்த விடயம்தான் , மதீனா சூழலில் றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது காலத்தில் பல மதத்தவர்கள் காணப்பட்டனர்.இதில் யஹூதிகள், நஸாராக்கள் , நெருப்புவணங்கிகள் என்ற சமயத்தவர்களுடன் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தனர். குறிப்பாக றஸூ

லுல்லாஹ் (ஸல்) அவர்கள் அடுத்த மதத்தவர்களுடனான உறவை மஸ்ஜிதுந் நபவியில் வைத்துத்தான் பலப்படுத்தியதை தாம் அவதானிக்கலாம்.

இதற்கான மிகப்பெரிய உதாரணம்தான் மதீனா சாசனம். இச்சாசனத்தை அமைப்பதற்கு றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அடுத்த மதத்தவர்களை மஸ்ஜிதுந் நபவியில் வைத்து அவர்களுடன் உரையாடியதன் பின்தான் அத்தகைய சாசனத்தை அமைத்தார்கள். அதனடிப்படையில் மஸ்ஜிதுந்நபவி பன்மைத்துவ சூழலான மதீனா சமூகத்தில் எத்தகைய பங்களிப்பு செய்திருக்கின்றது என்பதுதான் நவீன கால பள்ளிவாசல்கள் வேண்டி நிற்கின்றன. அதிலும் குறிப்பாக இலங்கை சூழலில் இப்போதிருக்கும் இன முறுகல் நிலைகளுக்கு மத்தியில் 2000க்கு மேற்பட்ட இலங்கை பள்ளிவாசல்கள் எத்தகைய பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதை தான் மஸ்ஜிதுந்நபவி எமக்குக் கற்றுத்தருகின்றது.

இலங்கை திருநாட்டில் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகத்தவர்களைப்போல அனைத்து உரிமைகளையும் சழுகைகளையும் பெற்றுள்ளதன் விளைவாக இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஒருசில பள்ளிவாசல்கள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்கிவருவதையம் அவதானிக்க முடிகின்றது. ஒரு நாட்டின் பொதுவான சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படுகின்ற பள்ளிவாசல்கள் எவ்வாறு தனித்து வெறும் வணக்கஸ்தலமாக (warship place) மாத்திரம் செயற்பட முடியும்.வெறும் வணக்கஸ்தலமாகத்தான் எமது பள்ளிவாசல்கள் இருக்கும் என்றிருந்தால் மேலதிகமாக எந்தவித பள்ளிவாசல்களையும் நிர்மாணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகைக்கு ஏற்றாற்போல் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை காணப்படுகின்றன.

ஒரு பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் சமூகம் சார் அனைத்து விடயங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றது. குறிப்பாக ,ஹிஜ்ரத் சென்ற றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனா சென்றடைய முன்னால் மஸ்ஜித் குபா என்ற பள்ளிவாசலை உருவாக்கினார்கள்.இந்தப் பள்ளிவாசல் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எனவே, வெறும் தொழுகைக்காக அல்லது அல்குர்ஆன் மத்ரஸாக்களுக்காக , பள்ளிவாசலில் தூங்குவதற்காக மாத்திரம் பள்ளிவாசல்களை பயன்படுத்தவது என்பது மிக அவலமான நிலைப்பாடாகும். இலங்கையைப் பொறுத்தவரைக்கும் இங்கு வாழ்கின்ற அனைத்து சமயத்தவர்களும் தமது வழிபாடுகளை , அனுஷ்டானங்களை எவ்வித தங்குதடையுமின்றி நிறைவேற்றுவதற்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்துவது என்பது இலங்கை மண்ணுக்கு முஸ்லிம் சமூகம் செய்யும் மிகப்பெரிய அநியாயமாகும். ஆகவே , இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள் பல்லின சமூகத்திற்கு முன்னால் செய்யவேண்டிய பங்களிப்புக்களை செய்கின்றதா? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்போது இலங்கைச் சூழலில் பள்ளிவாசல்கள் தொடர்பாக பல வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. இந்த அனைத்துக் கேள்விகளும் பல்லின சமூகத்துடன் பள்ளிவாசல்கள் எத்தகைய தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் தொடர்புபடுகின்றது. அத்கைய ஒருசில வினாக்களுக்குப் பதிலளிப்பது காலத்தின் கட்டாயம் என்பதையும் தாண்டி இந்த சமூகத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய உலகளாவிய தூதில் (universal message) ஒன்றாகும்.

1. அடுத்த சமயத்தவர்கள் பள்ளிவாசல்களினுள் நுழைவது தொடர்பாக

இந்தக் கேள்வி நவீன காலத்தில் எழுப்பப்பட்ட ஒன்றல்ல. மாறாக, ஹிஜ்ரி 02ஆம் மற்றும் 03ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் எழுப்பப்பட்டு , அதற்கு அக்காலத்து அறிஞர்களாலும் , இமாம்களாலும் பதிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் நவீன காலத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம் போன்ற சிந்தனை பேசப்படுவதன் விளைவாக இத்தகைய கேள்விகள் மீண்டும் தலை தூக்குகின்றன.

ஒர சில இமாம்கள் சூறதுத்தௌபாவின்  28ஆம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த மதத்தவர்கள் பள்ளிவாசலினுள் நுழைய முடியாது என்ற தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். இருந்தாலும் இந்தத் தீர்ப்பை இப்போதுள்ள இலங்கைச்சூழலில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும்.அதுமாத்திரமின்றி றஸூலுல்லாஹ் (ஸல்)அவர்களது வாழ்வியலில் நாம் பார்க்கும்போது அடுத்த மதத்தவர்கள் நபியவர்களின் காலத்திலேயே மஸ்ஜிதுந்நபவியினுள் நுழைந்தார்கள் என்பதற்கான பல சான்றுகள் காணப்படுவதையும அவதானிக்க முடியும்.

நஜ்ரான் பகுதியைச் சேர்ந்த ஒருசில கிறிஸ்தவ மதககுருமார்கள் நபியவர்களை சந்திக்க மஸ்ஜிதுந்நபவிக்கு அஸருடைய நேரத்தில் வருவார்கள். அந்த வேளையில் அவர்கள் தங்களின் மதக் கிரியைகளை மஸ்ஜிதுந்நபவிக்குள் மேற்கொள்ள முனைந்தபோது ஸஹாபாக்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டனர். அப்போது நபியவர்கள் ஸஹாபாக்களை தடுக்கவேண்டாம் எனப் பணித்தார்கள். இது புஹாரியில் பதிவாகியள்ளது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் வைத்து நோக்கும்போது அடுத்த மதத்தவர்கள் பள்ளிவாசலினுள் நுழைவது என்பது தடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பது புலனாகின்றது. அதிலும் குறிப்பாக பிற மதத்தவர்கள் பள்ளிவாசல்களினுள் நுழைவது தொடர்பாக இமாம்கள் 04 வகையான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

1. இமாம் மர்தாவி , இமாம் கர்ஹாவி போன்றோர்கள் நுழைய முடியாது என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

2. ஷாபிஈ மத்ஹபினர் அடுத்த மதத்தவர்கள் மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிவாசல்களுக்குள் நுழையலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

3. மாலிகி மத்ஹபினர் நிர்ப்பந்தம் என்ற சூழலில் மட்டும் சகோதர இனத்தவர்கள் பள்ளியினுள் நுழைவதற்கு அனுமதியுண்டு என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

4. இமாம் அஹ்மத் (றஹ்) அவர்கள் முஸ்லிம்களின் அனுமதியுடன் சகோதர இனத்தவர்கள் நுழைவதற்கு அனும்தியுண்டு என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இருந்தாலும் பெரும்பாலான அறிஞர்கள் அடுத்த மதத்தவர்கள் பள்ளிவாசலினுள் நுழைவதனால் பல நன்மைகள் சமூகரீதியில் இடம்பெறும் என்பதன் காரண‌மாக பள்ளிவாசலினுள் சகோத‌ர இனத்தவர்கள் நுழைய அனுமதியுண்டு என்பதை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அண்மைக்காலமாக மகாஸிதுஷ் ஷரிஆவை (Objectives of Shariah) பேசுகின்ற பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடு இதுவாகும்.

 

2. சகோதர இனத்தவர்கள் பள்ளிவாசலினுள் இருப்பதற்கு விஷேட ஏற்பாடுகள் செய்ய வேண்டுமா?

           இது தொடர்பாக இலங்கைச் சூழலில் பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் அண்மைக்கால முஸ்லிம்களுக்கெதிரான அசம்பாவிதங்கள் இத்தகைய சிந்தனைகளின் பால முஸ்லிம் சமூகத்தை கொண்டுசெல்கிறது. குறிப்பாக விஷேட ஏற்பாடுகள் செய்துதான் அடுத்த மதத்தவர்களை பள்ளிவாசலினுள் இருக்க வைக்க வேண்டும் என்ற கருத்தில் பலர் உடன்படுகின்றனர். ஆனால் அடிப்படையில் இத்தகைய முடிவை எடுப்பது சரிதானா என்பது பற்றி பல ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டியுள்ளன. காரணம், இந்த பூமியில் நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்துப் பள்ளிவாசல்களும் அல்லாஹ்வின் அடியார்களுக்கே ஆகும். இதில் அல்லாஹ்வின் அடியார்கள் எனும்போது முஸ்லிம்கள் மாத்திரம் உள்ளடங்க மாட்டார்கள். மாற்றமாக அனைத்து மனிதர்களும் உள்ளடங்குவார்கள் என்பதுவே உண்மையாகும்.

குறிப்பாக ற‌ஸூல் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந்நபவியில் தனி அறைகளை அமைத்தோ அல்லது விசேட ஏற்பாடுகளை செய்தோ அடுத்த மதத்தவர்களை வரவேற்றார்கள் என்பதற்கு எந்தவித சான்றுகளும் கிடையாது. மாற்றமாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலினுள் எந்த உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை அடுத்த மதத்தவர்களுக்கும் உள்ளது என்பதை றஸூல் (ஸல்) அவர்களது வாழ்வியல் ஒழுங்கில் நாம் பார்க்கலாம். குறிப்பாக அல்லாஹ் தன்னைப் பற்றி விபரிக்கும்போது ரப்புல் ஆலமீன் (அகிலத்தாரின் இரட்சகன்) என்றும் றஸூல் (ஸல்) அவர்களைப் பற்றி விபரிக்கும் போது ரஹ்மதன் லில் ஆலமீன் (அகிலத்தாருக்கான அருள்) என்றும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். எனவே அகிலத்தார் எனும் போது முஸ்லிம்கள் என்று மாத்திரம் விளங்கிக் கொண்டு அல்லாஹ்வும் றஸூலும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்ற முடிவை எடுப்பதோ அல்லது இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டல்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று தீர்மானிப்பதோ உசிதமானதல்ல.

எனவே, அல்லாஹ்வின் அருள், அவனது கருனண என்பன முஸ்லிம்களுக்கு மட்டுமென்று எந்த அல்குர்ஆன் வசனமும் எங்களுக்கு கற்றுத் தரவில்லை. அப்படி இருக்கையில் பள்ளிவாசலினுள் முஸ்லிம்கள் மட்டும்தான் நுழைய முடியும் என்று ஒட்டுமொத்தமாக அடுத்த மதத்தவ்ர்கள் இஸ்லாத்தை படிப்பதற்கான வாயிலை மூடுவது எந்தளவுக்கு பொருத்தம் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது அல்லாஹ்வின் அடியார்கள் என்ற ரீதியில் பள்ளிவாசலுக்குள் அனைவரும் வருவதற்கும் அமர்வதற்கும் பூரண உரிமை உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது.

3- இஸ்லாத்தைப் பற்றி படிப்பதற்காக அடுத்த மதத்தவர்களை பள்ளிவாசலினுள் வைத்து படிப்பிக்கலாமா?

                 இந்த விடயம் தொடர்பாக றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது வாழ்வியல் ஒழுங்கில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் மதீனா காலத்தில் அடுத்த மதத்தவர்களுடன் றஸூலுல்லாஹ்வின் நடத்தைக் கோலம் பற்றிய தலைப்பின் கீழே இது உள்ளடங்குகின்றது. இதன்போது இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் மற்றும் இமாம் இப்னு இஸ்ஹாக் அவர்களும் அறிவிக்கின்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தான் நஜ்ரான் பிரதேசத்தை சேர்ந்த நஸாரா குழு ஒன்று றஸூலுல்லாஹ்விடம் படிப்பதற்காக வந்த சம்பவம். இந்த சம்பவத்தில் வந்த தூதுக்குழு றஸூலுல்லாஹ்விடம் இஸ்லாம் பற்றிய பல கேள்விகளைக் கேட்டு அதற்குரிய தக்க பதில்களை றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள் என்பதையும் நாம் அவதானிக்கலாம். இதன் அடிப்படையில் பல்லின சமயத்தவர்கள் வாழும் பூமியில் இஸ்லாம் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படும் போது அவைகளுக்கான பள்ளிவாசலினுள் வைத்து விளங்கப்படுத்த முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகின்ற உண்மையாகும். இதே நடைமுறைனை கொழும்பு சம்மாங்கோட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு செய்கின்றனர். இருந்தாலும் இன்னும் அத்தகைய செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதன்போது பள்ளிவாசல்களில் நூலகம் ஒன்றை அமைத்து அதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அதனுடன் தொடர்பான நூல்களை வைத்து அடுத்த மதத்தவர்களுக்கு வாசிப்பதற்கான அவகாசம் கொடுக்கப்படுவது காலத்தின் தேவையாகும். எனவே, சுருக்கமாக சொல்வதாக இருந்தால் பள்ளிவாசல்கள் சமூக  எழுச்சிக்காக, மாற்றத்திற்காக அடுத்த மதத்தவர்களையும் இணைத்து செயற்பட வேண்டி இருக்கின்றது. மேலும் வெறும் வணக்கஸ்தலமாக மாத்திரம்தான் பள்ளிவாசல் இருக்க வேண்டும் என்றால் இலங்கையில் இனி பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டிய எந்த தேவையும் கிடையாது.
-Vidivelli