Verified Web

உத்தம வைத்தியர் நஸீர் டொக்டர்

2018-05-09 23:25:24 Administrator

– ஹாபிஸ் இஸ்ஸதீன்

வைத்­தி­யர்­களில் பல­வி­த­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். பணம் சம்­பா­திப்­பதை விட மக்­க­ளுக்குப் பணி செய்­வ­தற்கு முன்­னு­ரிமை கொடுத்து, தம்­மிடம் வரும் நோயா­ளி­களை மனித நேயத்­தோடு அணுகி அவர்­க­ளது உடல், உள நிலை­மை­களை அறிந்து வைத்­தியம் செய்யும் உத்­த­மர்கள் ஒரு புறம். பணம் சம்­பா­திப்­ப­தையே முதல் நோக்­க­மாகக் கொண்டு, நோயா­ளர்­களை ஆத்­மாவோ உணர்­வு­களோ சொந்த பந்­தங்­களோ இல்­லாத வெறும் மனிதப் பிண்­டங்­க­ளாகக் கருதி சந்­தை­யி­லுள்ள விலை கூடிய மருந்­து­க­ளை­யெல்லாம் எழுதிக் கொடுத்து நோய் வளர்க்கும் மேதா­விகள் இன்­னொரு புறம்.

நிலைமை இப்­ப­டி­யி­ருக்க சிறு வயது முதலே எனது மனதில் பதிந்­து­விட்ட உத்­தம வைத்­தியர் ஒரு­வரைப் பற்­றிய சில நினைவுக் குறிப்­புக்­களை இங்கு எழுத நினைத்தேன்.

ஒரு காலத்தில் தர்கா நக­ரிலே பெயர் பெற்று விளங்­கிய அவரை மக்கள் 'நஸீர் டொக்டர்' என்­றுதான் அழைத்­தார்கள். சிங்­கள மக்கள் அவரை 'நஸீர் மஹத்­தயா' என்­பார்கள். அவ­ரது பெயரை உச்­ச­ரித்துக் கொள்ளத் தெரி­யா­த­வர்கள் அவரைக் 'களு தொஸ்­தர மஹத்­தயா' என்று அழைப்­ப­தையும் கேட்­டி­ருக்­கிறேன். அவ­ரது கறுத்த பருத்த உய­ர­மான உடல் அமைப்பும் தீட்­சண்­ய­மான அன்பு பொழியும் கண்­களும், மாறாத புன்­மு­று­வலும் இன்றும் என் கண் முன்னால் வரு­கின்­றன.

அவ­ரது தந்­தை­யாரின் பெயர் அப்துல் அஸீஸ். எனவே A.A.M. Nazeer. (D.I.M.S) என்றே அவ­ரது டிஸ்­பென்­ஸ­ரியின் பெயர்ப்­ப­லகை காட்­டி­யது. இவரைப் போன்று College of  Indigenous Medicine என்ற சுதேச வைத்­தியக் கல்­லூ­ரியில் D.I.M.S.என்ற டிப்­ளோமா பட்டம் பெற்­ற­வர்­கள்தான் அந்தக் காலத்தில் கிராமப்புறங்­களில் வைத்­தி­யர்­க­ளாகப் பணி­பு­ரிந்­தனர். MBBS, MD போன்ற பட்­டங்­களைப் பெற்­ற­வர்­களைக் காண முடி­ய­வில்லை.

டாக்டர் நஸீர் கொழும்பு ஸாஹிறாக் கல்­லூ­ரியில் படித்­தவர். அக்­கல்­லூ­ரியின் இலச்­சினை தாங்­கிய ஒரு தட்டு அவ­ரது அலு­வ­லக வாயி­லுக்கு மேல் தொங்­க­விடப் பட்­டி­ருந்­தது. அவ­ரது மறை­வுக்குப் பின்னர் இப்­போது அவ­ரது மரு­ம­கனார் அதே அறையில் இருந்து கொண்டு அந்த டிஸ்­பென்­ஸ­ரியை நடாத்திச் செல்­கிறார்.

டாக்டர் நஸீ­ரிடம் நான் கண்ட சிறப்­பி­யல்­புகள் சில­வற்றை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்­வ­துதான் எனது நோக்கம். அத்­த­கைய பண்­பு­களை இப்­போ­துள்ள வைத்­தி­யர்கள் பல­ரிடம் காண முடி­யா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யதே.

ஓர் அவ­சர நிலை­மையில் இரவில் எந்த சாமத்தில் போய் அழைப்பு மணியை அடித்­தாலும் எழுந்து வந்து நோயா­ளியைக் கவ­னிக்கும் ஓர் அரிய பண்பு அவ­ரிடம் இருந்­தது. அதற்­காக வீட்டில் பிரத்­தி­யே­க­மாக ஓர் அறையை ஏற்­பாடு செய்து தேவை­யான மருந்­து­க­ளையும் அங்கு வைத்­தி­ருந்தார். அப்­ப­டி­யான நோயா­ளர்­களின் வச­திக்­காக பூட்டுப் போடாத சிறிய கேட் ஒன்­றையும் முன்­புற மதிலில் அமைத்­தி­ருந்தார்.

எமது வீட்டில் பிள்­ளைகள் யாருக்­கேனும் அஜீ­ரணம் ஏற்­பட்டு வாந்­தியும் வயிற்றுப் போக்கும் ஆரம்­பித்தால் உம்­மாவும் உம்­மும்­மாவும் தமக்குத் தெரிந்த கை வைத்­தி­யங்கள் அனைத்­தையும் செய்து பார்ப்­பார்கள். சில வேளை­களில் ஒன்­றுமே பல­ன­ளிக்­காமல் போய்­விடும். அதற்குள் நள்­ளி­ரவும் கடந்­து­விடும். இறு­தியில் நோயா­ளியை டாக்டர் நஸீரின் வீட்­டுக்கு அழைத்­துச்­சென்று அழைப்பு மணியை அடிப்­பார்கள். சிறிது நேர சல­ச­லப்பின் பின்னர் டாக்­டரும் அவ­ருக்குப் பின்னால் அவ­ரது மனை­வியும் எழும்பி வந்து கதவைத் திறப்­பார்கள். நேர­கா­லத்­தோடு அழைத்து வராமல் அந்தச் சாமத்தில் வந்­த­தற்கு கொஞ்சம் ஏச்சுப் பேச்சு கிடைக்கும். அதுவும் மென்­மை­யான பண்­பான முறை­யில்தான். அதன் பின்னர் நோயா­ளியைப் பரி­சீ­லித்து உரிய மருந்­து­களும் அறி­வு­றுத்­தல்­களும் வழங்கி அனுப்­பி­வைப்பார்.

இப்­படி இரண்டு மூன்று தட­வைகள் நடுச்­சா­மத்தில் நோயா­ளி­களை அழைத்­துக்­கொண்டு உம்­மும்­மா­வுக்குத் துணை­யாக நான் போயி­ருக்­கிறேன். சில வேளை­களில் பணம்­கூட வாங்­கிக்­கொள்ள மாட்டார். நெருங்­கிய உற­வி­னர்­க­ளி­டமும் மிக வறி­ய­வர்­க­ளி­டமும் அவர் பணம் வாங்­க­மாட்டார்.

நட­மாட முடி­யாத வயோ­திப நோயா­ளி­க­ளையும், வீட்டில் குழந்தை பிர­ச­வித்த தாய்­மார்­க­ளையும், உயிர் போய்­விட்­டதா இல்­லையா என்ற சந்­தேக நிலையில் இருப்­ப­வர்­க­ளையும் வந்து பார்க்­கு­மாறு அழைக்­கப்­பட்டால் தனது ஸ்டெதெஸ்­கோப்­பையும்  பிரஷர் மீட்­ட­ரையும் சைக்கிள் முன் கூடையில் வைத்­துக்­கொண்டு சைக்கிள் மிதித்து வீடு­க­ளுக்குச் சென்று வருவார். அவ­ரிடம் சொகு­சான பென்ஸ் கார் ஒன்று இருக்­கத்தான் செய்­தது..

ஒரு தடவை என் வாப்­பா­வுக்கு கடு­மை­யான தலை கிறு­கி­றுப்பு ஏற்­பட்டு கீழே விழப்­போனார். டாக்­ட­ரிடம் போய் இரத்த அழுத்­தத்தைப் பரி­சோ­தித்துப் பார்க்­கு­மாறு உம்மா வற்­பு­றுத்­திய பின்னர் அவர் டாக்டர் நஸீ­ரிடம் போனார். சிறிது நேரத்தின் பின்னர் டாக்­டரின் பென்ஸ் காரில் வந்து வாப்பா இறங்­கி­யதைக் கண்­ட­போது எமக்கு வியப்பும் பெரு­மை­யு­மாக இருந்­தது. என்ன நடந்­தி­ருக்­கி­றது என்­பதை உம்­மாதான் சொன்னார். வாப்­பாவின் பிரஷர் 230/110 க்கு ஏறி­யி­ருந்­ததாம். அதற்­கான மருந்­து­களைக் கொடுத்த டாக்டர், வீட்­டுக்கு நடந்து செல்­லக்­கூ­டாது எனக் கூறி வாப்­பாவைத் தனது காரில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்­கி­விட்டு வரு­மாறு தன் சார­தியைப் பணித்­தி­ருக்­கிறார். இந்தக் காலத்தில் இப்­ப­டி­யொன்று கன­வி­லேனும் நடக்­குமோ?

அவ­ரிடம் இன்­னொரு சிறந்த பண்பு இருந்­தது. தன்னால் சிகிச்சை வழங்க முடி­யாது என்று அவர் கரு­து­கிற நோயா­ளி­களை உட­ன­டி­யாகத் தகு­தி­வாய்ந்த வைத்­தி­யர்­க­ளிடம் அனுப்­பி­வைப்பார். டாக்டர் மறைந்து இத்­தனை வரு­டங்கள் கழிந்த பின்­னரும் அவரை மறக்க முடி­யாமல் இருப்­ப­தற்கு அப்­ப­டி­யான ஒரு நிகழ்வு கார­ண­மாக அமைந்­தது.

1985ஆம் ஆண்டு இறு­திப்­ப­கு­தியில்  ஒரு வயது பூர்த்­தி­யா­கி­யி­ருந்த எனது மூன்­றா­வது மக­ளுக்கு சின்­ன­முத்து தொற்­றி­யது. கடுங்­காய்ச்­சலில் கண்­களை மூடி­ய­வாறு அழுது முணங்­கிய பிள்ளை பால் குடிக்­கக்­கூட மறுத்­தது. இரவு விடியும் வரை பிள்­ளை­யோடு விழித்­தி­ருந்தோம். அதன் உடம்பு முழு­வதும் சின்­ன­முத்துப் பருக்கள் பர­வி­யி­ருந்­தன. அதே­வேளை இடது காலில், கணுக்­கா­லுக்குச் சிறிது மேலாகச் சிறிய கொப்­பு­ள­மொன்று சிவந்து காட்­சி­ய­ளித்­தது. அத­னால்தான் பிள்ளை வேத­னைப்­ப­டு­கி­றது என நான் நினைத்தேன்.

விடிந்த பின்­னரும் பிள்­ளையின் காய்ச்சல் குறை­ய­வில்லை. அதன் முண­கலும் அடங்­க­வில்லை. அந்தக் கொப்­பு­ளமும் கறுப்பு நிற­மா­கி­யி­ருந்­தது. எனவே முற்­பகல் பத்து மணி­ய­ளவில் டாக்டர் நஸீ­ரிடம் போய் பிள்­ளையைக் காட்­டினேன். பிள்­ளையின் கொப்­பு­ளத்தைப்  பரி­சீ­லனை செய்து பார்த்த அவர் என்னை நோக்கி 'இன்று வெள்ளிக் கிழமை; ஜும்ஆத் தொழுகை தவ­றிப்போய் விடுமே என்­று­கூட யோசிக்க வேண்டாம். உட­ன­டி­யாகப் பிள்­ளையைக் கொழும்­புக்கு எடுத்துச் சென்று விசேட வைத்­தியர் ஒரு­வ­ரிடம் காட்­டுங்கள். காலம் தாழ்த்த வேண்டாம்!" என்றார்.

 

இதென்­னடா இவர் இந்தச் சிறிய கொப்­பு­ளத்­திற்கும் உட­ன­டி­யாகக் கொழும்­புக்குப் போகச் சொல்­கி­றாரே என்று நான் விச­னப்­பட்டேன். எனினும் அவ­ரது அறி­வு­றுத்­தலைத் தட்­டிக்­க­ழிக்க மன­மின்றி உட­ன­டி­யாகப் பிள்­ளையை தெஹி­வ­ளைக்கு அழைத்துச் சென்றேன். மனை­வியும் உடன் வந்தார். அங்கே தற்­செ­ய­லாகச் சந்­தித்த இன்­னொரு வைத்­தியர் நாம் அவ­ச­ர­மாக வந்­துள்ள கார­ணத்தைக் கேட்­டு­விட்டு 'அந்தக் கொப்­பு­ளத்தைச் சுற்­றி­வர சிவப்புச் சந்­த­னத்தைப் பூசினால் இரண்டு நாளில் சரி­யாகி விடும். இதற்கு இப்­படிப் பயப்­படத் தேவை­யில்­லையே" என்றார். எதற்கும் ஒரு விசேட வைத்­தி­ய­ருக்குக் காட்டி ஆலோ­சனை பெற்­றுக்­கொண்டே போவோம் என நினைத்து அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தோம்.

பிர­பல சிறு­வர்நோய் நிபுணர் ஒரு­வ­ரிடம் பிள்­ளையைக் காட்­டினோம். "இவ்­வ­ளவு நாளும் இதை வைத்துக் கொண்டு என்ன செய்­தீர்கள்?" என்று கோபத்­தோடு கேட்டார் வைத்­தியர். 'இல்லை. நேற்­றுத்தான் தொடங்­கி­யது" என்றேன் ஒன்றும் புரி­யாமல். "இங்கே பாருங்கள்" என்று கூறி­ய­வாறு ஸிரிஞ்ச் ஊசி ஒன்­றினால் கொப்­புளம் இருந்த பகு­தியின் தோலைக் குத்திக் கிண்­டினார் வைத்­தியர். தோல் அப்­ப­டியே கழன்று வந்­த­தோடு பெரு­ம­ளவு சீழ் கொட்டத் தொடங்­கி­யது. அந்த இடத்­தி­லி­ருந்து நீண்ட கால்வாய் போன்ற துளை­யொன்று உள்­நோக்கிச் சென்­றி­ருந்­தது. அதைக் கண்­டதும் எனக்குத் தலை சுற்­றி­யது.

"பிள்­ளையின் உயிரைக் காப்­பாற்ற வேண்­டு­மானால் உட­ன­டி­யாக இந்­ததக் காலை வெட்டி நீக்க வேண்­டி­யி­ருக்கும்" என்றார் வைத்­தியர். அதைக் கேட்­டதும் தலையில் இடி­வி­ழுந்த மாதிரி இருந்­தது. நான் நிலை தடு­மாறிப் போய்­விட்டேன். "சரி. நான் இப்­போதே எக்ஸ்ரே ஒன்று எடுத்துப் பார்க்­கிறேன். கால் எலும்­பு­க­ளுக்கும் தொற்றுத் தாவி­யி­ருந்தால் காலை வெட்­டு­வதைத் தவிர வேறு வழி­யில்லை" என்று கூறிய வைத்­தியர் பிள்­ளையின் காலை எக்ஸ்ரே படம் பிடிக்க ஏற்­பாடு செய்தார்.

சிறிது நேரத்தின் பின்னர் வைத்­தியர் எங்­களை அழைத்து ''உங்கள் அதிர்ஷ்டம் இது­வரை எலும்­புகள் பாதிக்கப் பட­வில்லை. எனவே இப்­போ­தைக்குப் பிள்­ளையின் காலை வெட்டத் தேவை­யில்லை. ஆனால் உட­ன­டி­யாகப் பிள்­ளையை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்க வேண்டும். இப்­போதே தீவிர சிகிச்சை ஆரம்­பிக்­கப்­பட வேண்டும்" என்றார் அவர்.

உடனே பிள்­ளையை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்தோம். சின்­ன­முத்து நோயின் போது உடலின் நோயெ­திர்ப்புச் சக்தி குறைந்து விடு­வ­தனால் கடு­மை­யான பக்­டீ­ரியாத் தாக்­குதல் ஏற்­பட்டு சாதா­ரண கலங்­க­ளையும் இழை­யங்­க­ளையும் அழுகச் செய்­கின்ற செலூ­லைற்றிஸ் என்ற நோய் உரு­வா­கி­யி­ருந்­தது. அவ­ரது வெண்­கு­ருதிக் கலங்­களின் எண்­ணிக்கை பத்து மடங்­குக்கு மேல் அதி­க­ரித்­தி­ருந்­தது. எனவே பக்டீரியாக்களை அழிப்பதற்காக அந்த ஒரு வயதுக் குழந்தைக்குத் தினமும் 12 ஊசி மருந்துகள் வீதம் ஏற்றப்பட்டன. சுமார் 22 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்க நேர்ந்தது. அதற்குப் பின்னரும் அந்தப் புண்ணைக் குணமாக்குவதற்கு மேலும் 35 நாட்கள் தொடர்ந்து தினமும் மருந்து போட வேண்டி ஏற்பட்டது.

டாக்டர் நஸீருக்குப் பெரிய மருத்துவப் பட்டங்கள் இல்லாவிட்டாலும் இறையருள் காரணமாக அவரிடம் உள்ளார்ந்த அறிவுநுட்பம் நிறைய இருந்திருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட இவ்வனுபவமே காரணமாக அமைந்தது.

அவரைப் போன்றவர்கள் வைத்திய உத்தமர்கள் நோய்க்கு சிகிச்சை செய்யாமல் நோயாளிக்கு சிகிச்சை செய்பவர்கள். அவரது மறுமை வாழ்வுக்காக இன்றும்கூட நானும் மகளும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.
-Vidivelli