Verified Web

ஜனாதிபதியின் பதவி ஆசை

2018-05-08 00:01:28 Administrator

 

மே தின நிகழ்­வுகள் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நேற்றும் நேற்று முன்தினமும் நடை­பெற்­றன. வழக்­கம்­போல தேர்தல் காலங்­க­ளுக்குப் புறம்­பாக வரு­டாந்தம் அர­சியல் கட்­சிகள் தங்கள் மக்கள் செல்­வாக்கை வெளிக்­காட்டும் கள­மா­கவே இந்த வருட மே தின நிகழ்வுகளும் அமைந்­தி­ருந்­தன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தின நிகழ்வு கொழும்­பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மே தின நிகழ்வு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொது ஜன பெரமுனவின் மே தின கூட்டம் காலி நகரிலும் நடைபெற்றன. அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­னணியும் நேற்று கொழும்பில் தனது மே தினப் பேரணியையும் கூட்டத்தையும் வழக்கம் போன்று பிரமாண்டமாக நடாத்தியது.

இலங்­கையைப் பொறுத்­த­வரை மே தினம் என்­பது முற்­று­மு­ழு­தாக அர­சியல் பின்­னணி கொண்­ட­தா­கவே தொடர்ந்தும் அமையப் பெறு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளையும் அவர்­க­ளது பொரு­ளா­தார நலன்­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான தின­மான மே தினத்தை, அவர்­களை சாரி சாரி­யாக பஸ்­களில் ஏற்றி வந்து தத்­த­மது கட்­சி­களின் வர்ண ஆடை­களை அணி­வித்து அர­சியல் பலத்தை வெளிக்­காட்­டு­வ­தற்­காக பயன்­ப­டுத்திக் கொள்­வதை அர­சியல் கட்­சிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு நாட்­டி­லுள்ள அர­சியல் கட்­சிகள் தமது பலத்தை பறை­சாற்­று­வ­தற்­கான கள­மாக மே தினத்தை மாற்­று­வதை விடுத்து தொழி­லா­ளர்­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் உரி­மை­க­ளையும் தொழில்சார் நலன்­க­ளையும் உறு­திப்­ப­டுத்­து­கின்ற தின­மாக இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

தங்கத்தின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் குவைடைந்துள்ளது. எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் மேலும் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளையே எதிர்கொள்கின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடியை தளர்த்தி அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டியதே தொழிலாளர் தினத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய பணியாகும்.

இது இப்படியிருக்க, நேற்றைய மே தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போகிறேன் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். ஒரு முறைதான் பதவி வகிப்பேன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதிக்கு தற்போது பதவி ஆசைவந்துவிட்டது என்பதையே நேற்றைய உரை கூறிநிற்கிறது. சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் தத்தமது பதவிக்காலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என பலமுறை வாக்குறுதியளித்தும் அதனை நிறைவேற்றாமலேயே காலத்தைக் கடத்தினர். அதே வரலாற்றுத் தவறையே தற்போது மைத்திரிபால சிறிசேனவும் இழைக்கப் போகிறார் என்பது கவலை தருவதாகவுள்ளது.

நிறைவேற்ற வேண்டிய நிறையப் பணிகள் இருப்பதாலேயே தான் மீண்டும் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் பதவிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டு காலப் பகுதியில் ஜனாதிபதி குறிப்பிடும்படியாக எவற்றை நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும் அவர் ஒரு முறை மீள்பரிசீலித்துப் பார்ப்பது சிறந்தது என அறிவுரை கூற விரும்புகிறோம்.
-Vidivelli