Verified Web

நோன்பு: பொறுமை ஒழுக்கம் ஸதகா தக்வா என்பவற்றின் பள்ளிக்கூடம்

2018-05-07 23:29:02 Administrator

-நாவல்நகர் ஆமினா முபாரக்-

 

ரமளான் முபாரக்!

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்துள்ள தெளிவுகளாகவும், (சத்திய அசத்தியத்தை) பிரித்துக்காட்டக்கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்; எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் (ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. மேலும், (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைபடுத்துவதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே இச்சலுகைகளை உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.) (குர்ஆன் 2:185)

நோன்பின் அடிப்படை விதி என்னவென்றால், ஸஹருடைய நேரம் முடிவுபெறுகின்றதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு சுமார் ஒன்றரை மணிக்கு முன்பிலிருந்து சூரியன் மறையும் வரையிலான

காலப்பகுதியில் சாப்பிடுவது, குடிப்பது, கணவன் மனைவி உடலுறவு கொள்வது போன்ற காரியங்கள் தடுக்கப்பட்ட செயல்களாக கருதப்படுகின்றன. ரமளான் பொறுமையின் மாதமாகும். மேலும், ஒருவர் பொறுமையைக் கடைப்பிடிக்க தயாரென்றால், அவர் தனக்கு பசிக்கின்ற போது சாப்பிடக்கூடாது, தாகத்தின் போது தண்ணீர் பருகக்கூடாது, இன்னும் தனது இச்சையின் பக்கம் சரியவும் கூடாது. அத்தகைய ஒருவர்தான் மேலான ஒரு தனிமனிதராவார். இத்தகைய மனிதர் நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும் அல்லாஹ்வுக்காக வேண்டி இவற்றை செய்வானேயனால், படைப்பாளனாகிய அல்லாஹ்விடமிருந்து வெகுமதியான சுவனத்தில் ஒர் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய தகுதியை அடைந்துவிடுகிறான்.

ரமளான் மாதமானது ஒரு மனிதனை (29) அல்லது (30) நாட்களைக் கொண்ட ஒரு மாதம் முழுவதும் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள்கின்றது. இந்தப் பயிற்சிப்பாசறையை பகுப்பாய்வு செய்கின்றபோது, முதலாவதாக இது ஒருவருக்கு உணர்த்துவது, அல்லாஹ்வின் மேலான ஆதிக்கத்தைப் பற்றிய உள்உணர்வை ஆழமாக அவனிடத்தில் பதியவைக்க வேண்டுமென்பதேயாகும். அது எந்த அளவுக்கென்றால், மனிதன் தனது தனிப்பட்ட அதிகாரத்தையும் தான் சுதந்திரமாக செயல்படுகின்ற தன்மையையும் முற்றாக அல்லாஹ்விடத்தில் சரணடையச் செய்கின்றவரை இந்த சரணடைதலும், விசுவாசப் பிரமாணமும், இஸ்லாத்தின் மீதான இருப்பை நிலைநிறுத்துவதற்குரிய கருப்பொருளாக இருப்பதுடன் அதுவே ஒருவரை முஸ்லிமா அல்லது முஸ்லிமல்லாதவரா என்பதை நிர்ணயிக்கும் கருவியாகவும் உள்ளது.

நோன்பின்போது அதன் உண்மையான உணர்வு பேணப்படாவிட்டால் அது வெறுமனே பசித்திருப்பதை குறிக்குமேயன்றி அது அல்லாஹ் எதிர்பார்க்கின்ற நோக்கத்தை நிறைவேற்றியதாக அமையாது. இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியது இதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. "எவரொருவர் பொய் சொல்வதையும், தவறான காரியங்களில் ஈடுபடுவதையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதிலும் தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை."

இத்தடையானது வெறும் பொய்யுரைப்பதற்கு மாத்திரம் எதிரானதல்ல. ஆனால் அல்லாஹ்வுக்கு கீழ்படியாது நடக்கின்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் உள்வாங்கியதாக அமையும். அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனுக்காக மாத்திரமே எமது நற்காரியங்கள் கடமைகள் யாவற்றையும் செய்கின்றோம் என்று நம்புபவர்கள் மாறுசெய்வார்களேயானால், தாம் கொடுத்த வாக்குறுதியை மீறுகின்ற இன்னும் பொய்யாக்குகின்ற செயலாகவே அது அமையும். எமது வயிறுகளை குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு காலியாக வைப்பதற்கு அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையுமில்லை. இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதனையும் கூலியாகப் பெற்றுக்கொள்வதில்லை, ஆனால் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் தவிர, இன்னும் எத்தனையோ மனிதர்கள் இரவில் நின்று வணங்குகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தைப் பறிகொடுத்தார்களேயன்றி வேறொன்றும் பெற்றுக்கொள்ளவில்லை."

நோன்பின் நோக்கம் 'தக்வா' எனும் இறையச்சத்தைக் கொண்டு எமது உள்ளங்களை நிரப்பவேண்டுமென்பதேயாகும். இப்பதம் பயம், முன்னெச்சரிக்கை என்ற பொருளைத் தருகின்றது. இன்னும் இஸ்லாமிய பதப்பிரயோகத்தின்படி அல்லாஹ்வை அஞ்சுவதும் அவனுக்கு கீழ்படியாமையிலிருந்து தவிர்ந்து கொள்வதுமாகும் என்ற கருத்தைத் தருகின்றது. இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் எல்லோரும் ஆசைகளைக் கிளப்பும் பலவிதமான எண்ணிக்கைகளைக் கொண்ட பல உருவங்களையுடைய உணர்ச்சிகளை மேற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த நீண்ட நெடும் பிரயாணத்தில் எமது மன உணர்ச்சிகளை அடக்கி உண்மையும் நன்மையும் தருகின்ற செயல்களின் பக்கம் எமது கவனத்தைத் திருப்பி விடுவதென்பதே 'தக்வா' என்பதைக் குறிக்கின்றது. எனவே இந்த தக்வாவை எம்மிடத்தில் உருவாக்கி உற்பத்தி செய்யவே நோன்பானது எம்மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் நோன்பானது எமக்கு மத்தியில் இணக்கத்தையும் சிநேகிதத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு திறப்பதற்காக ஏனையவர்களையும் நாம் அழைக்க வேண்டும். இதன்போது இஸ்லாமிய வரையறைகளைப் பேணிக் கொள்ள வேண்டும். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாக எமது மத நல்லிணக்க நிகழ்வுகளை ஆக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சமூக ஊடாடத்திற்கும் சகோதரத்துவ மற்றும் ஆன்மீக சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும் இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.

 

நோன்பு மாதமானது ஏனையவர்களின் துன்பதுயரங்களை துடைப்பதற்குரிய அரிய சந்தர்ப்பங்களைத் தருகின்ற ஒரு மாதமாகும். முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என்று பாராது ஒவ்வொருவரும் தமது தகுதிக்கேற்ப அல்லாஹ் அவரவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை வரியவர்களுக்கு வாரிவழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துகின்ற

ஒரு மாதமாகவும் இது அமைந்துள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமலுக்கும் பத்து மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை காரணமாகக் கொண்டு முஸ்லிம்கள் காலாகாலமாக இந்த மாதத்தில் ஸகாத் வழங்குவதையும் வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால் எந்த மாதத்தில் ஸகாத் ஒரு வருடத்தை நிறைவு செய்கின்றதோ அம்மாதத்தில் அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கூட்டமாக சேர்ந்து ஸகாத் கொடுப்பதன் மூலமே அதன் நோக்கத்தை சரியாக நிறைவேற்ற முடியும் என்பதையும் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமென கருதுகிறேன்.

சந்தோஷமானதும், நோக்கத்தை நிறைவு செய்யக்கூடியதுமான நோன்பை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக!

-Vidivelli