Verified Web

பெண்களை நீதிபதிகளாய் நியமித்தல்

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

2018-05-07 23:08:16 Rauf Zain

முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் மற்றும் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் முஸ்லிம் பெண்­களை நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­க­ளாக நிய­மித்தல் தொடர்­பாக ஒரு விவாதம் நீண்­ட­கா­லமாய் நிலவி வந்­தது. கட்­டி­றுக்­க­மான அறபு நாடு­களைத் தவிர்த்து பெரும்­பா­லான அறபு முஸ்லிம் நாடு­களில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாகப் பணி­யாற்றும் சூழல் உரு­வாகி வரு­கின்­றது. ஆனால், சிறு­பான்மை முஸ்லிம் நாடு­களில் குறிப்­பாக, பெரும் அர­சியல் அதி­காரமற்ற சிறு­பான்மை முஸ்லிம் மக்கள் மத்­தியில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாகப் பணி­யாற்­ற­லாமா என்ற விவாதம் தொட­ரவே செய்­கின்­றது.

பணி­யாற்ற முடி­யாது என்று ஒரு தரப்பும், பணி­யாற்ற முடியும் என்று இன்­னொரு தரப்பும் வாதித்து வரு­கின்­றது. இந்த விவா­தங்­க­ளுக்­கப்பால் ஐக்­கிய அமெ­ரிக்கா, கனடா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் முஸ்லிம் பெண்கள் நீதி­பதிப் பத­வி­களை வகித்து வரு­வது கவ­னிப்­புக்­கு­ரி­யது. அறபு இஸ்­லா­மிய நாடு­களில் இன்று ஷரீஆ நீதி­மன்­றங்கள், சிவில் நீதி­மன்­றங்கள் என இரு­வகை நீதி­மன்­றங்கள் இயங்­கு­கின்­றன. ஷரீஆ நீதி­மன்­றங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் உரி­ய­தா­கவும் பெரும்­பாலும் அவை குடும்­ப­வியல் சட்­டங்­க­ளுக்கு (தனியார் சட்டம்) மட்டுப்படுத்­தப்­பட்­ட­வை­யா­க­வும் உள்­ளன. மலே­சியா, இந்­தோ­னே­ஷியா, மொரோக்கோ, தூனீ­ஷியா, எகிப்து போன்ற நாடு­களில் முஸ்லிம் பெண்கள் நீதி­ப­தி­களாகப் பணி­யாற்றி வரு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், பெண்கள் நீதி­ப­தியாகப் பதவி வகிப்­பது குறித்து ஒரு மங்­க­லான தெளி­வற்ற கருத்தே முஸ்லிம் சமூ­கத்தில் நீடிக்­கின்­றது. இலங்­கையில் கடந்த கால் நூற்­றாண்டு கால­மாக விவா­திக்­கப்­பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்­தத்தில் பெண்­களைக் காழி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்க வேண்டும் என்ற குரலும் ஒலிப்­பதைக் கேட்­கலாம்.

நாட்­டி­லுள்ள 65 காழி நீதி­ப­தி­களும் ஆண்­க­ளா­கவே உள்­ளனர். பெண்கள் தமக்கு ஏற்­படும் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் ஆண் காழி­க­ளிடம் வெளிப்­ப­டை­யாகப் பேசு­வதில் பல்­வேறு சங்­க­டங்­களை எதிர்­கொண்டு வரு­வ­தாகக் கடந்த காலங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அதே­போன்று பெண்கள் தமது தரப்பு நியா­யங்­களை எடுத்துச் சொல்­வ­தற்குத் தயக்கம் காட்­டு­வ­தனால் அவர்­க­ளுக்­கு­ரிய நீதி மறுக்­கப்­படும் ஆபத்தும் உள்­ளது. இன்­னொரு புறம் காழி நீதி­மன்­றங்கள் பெண்­க­ளுக்கு அநீதி இழைப்­ப­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. 

இத்­த­கைய நியா­யங்­களை முன்­வைத்துப் பெண்­க­ளிலும் சிலர் தகு­தி­யா­ன­வர்கள், ஆர்­வ­முள்­ள­வர்கள் இப்­ப­த­விக்கு அமர்த்­தப்­ப­ட­லாமா? அதன் மூலம் இழக்­கப்­படும் அனு­கூ­லங்­களைப் பெற வாய்ப்­புள்­ளதா? இது குறித்த பிக்ஹ் நிலைப்­பாடு என்ன? போன்ற கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. சிவில் மற்றும் ஷரீஆ நீதி­மன்­றங்­களில் பெண்­களை நீதி­ப­தி­க­ளாக நிய­மித்தல் எமது நாட்டில் விவா­தத்­திற்­கு­ரிய பேசு­பொ­ரு­ளாக இருந்து வந்­தாலும் காலம், இடம், சூழ்­நிலை, சமூக நலன் என்­ப­வற்­றிற்­கேற்ப பிக்ஹ் கண்­ணோட்­டங்கள் மாறு­ப­டலாம் என்ற உண்­மையை நாம் நினை­வூட்ட வேண்­டி­யுள்­ளது.

சம­கால அறபு முஸ்லிம் நாடு­களின் சனத்­தொகைக் கட்­ட­மைப்பை எடுத்து நோக்­கினால் பெண்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது ஒரு முக்­கிய மாற்­ற­மாகும். கல்­வித்­த­கைமை கொண்ட தொழில்சார் பத­வி­களை வகிக்கும் பெண்­களின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது. உயர்­கல்­வியில் பெண்­களின் பங்­கு­பற்றல் குறிப்­பி­டத்­தக்­க­ள­வுக்கு உயர்ந்­துள்­ளதை சமீ­பத்­தியப் புள்­ளி­வி­ப­ரங்கள் காட்­டு­கின்­றன. இலங்­கை­யிலும் பல்­க­லைக்­க­ழகம் செல்­வோரில் 60 வீத­மா­ன­வர்கள் முஸ்லிம் பெண்கள். சட்­டத்­து­றையில் பயிலும் பெண்­களின் எண்­ணிக்கை சர்­வ­தேச அளவில் அதி­க­ரித்து வரு­கின்­றது.

இன்­னொரு புறம் பெண்கள் குறித்து இது­காறும் இறுக்­க­மான போக்கைக் கடைப்­பி­டித்த நாடுகள் இன்று தமது கொள்­கையில் நெகிழ்ச்­சி­யான போக்கைக் கைக்­கொள்ள ஆரம்­பித்­துள்­ளன. அர­சியல், நிர்­வாக, சட்டத் துறை­களில் பெண்­க­ளையும் உள்­ளீர்க்கும் நிலைக்கு அவை வந்துள்­ளன. கடந்த மாதம்  சவூதி ஆட்­சி­யா­ளர்கள் தமாரின் எனும் பெண்ணைத் தொழிற்­றுறைப் பிரதி அமைச்­ச­ராக நிய­மித்­துள்­ளனர். நீதிக்­கட்­ட­மைப்பில் பெண்­களின் பங்­கு­பற்­றுதல் அவ­சியம் என்ற கருத்தும் பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் முற்­றாகக் களை­யப்­பட வேண்டும் என்ற கருத்தும் வலுப்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்­பா­கவே ஐ.நா. பொதுச்­ச­பையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பெண்­க­ளுக்­கெ­தி­ரான அனைத்­து­வகைப் பாகு­பா­டு­களையும் நீக்­குதல் தொடர்­பான சம­வாயம் CEDAW – Convention on Elimination of all kind of Discriminations Against Women) பேசு­கின்­றது. பாது­காப்புச் சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட UNCHR 1325 தீர்­மா­னமும் இது குறித்தே பேசு­கின்­றது.

இத்­த­கைய சர்­வ­தேச சம­வா­யங்­களில் கைச்­சாத்­திட்­டுள்ள அறபு முஸ்லிம் நாடுகள் பல தமது உள்ளூர்ப் பாரா­ளு­மன்­றங்­களில் பெண்­க­ளுக்­கெ­தி­ரான பாகு­பா­டுகள் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்துக் கடு­மை­யான சட்­டங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளன. இத்­த­கைய ஒரு சூழ்­நி­லையில் சமூக, கலா­சார, சர்­வ­தேச, தேசிய சூழ­மை­வு­களைக் கருத்­திற்­கொண்டு பெண்­களைத் தேவைப்­படும் பட்­சத்தில் நீதிக்­கட்­ட­மைப்பில் உள்­வாங்­க­லாமா என்ற கேள்­வியைப் பலர் எழுப்­பு­கின்­றனர். இது குறித்து இஸ்­லா­மிய மூலா­த­ாரங்கள் மற்றும் சட்ட மர­பு­களின் பின்­ன­ணியில் ஆராய்­வ­தற்கு இக்­கட்­டுரைத் தொடர் முயல்­கின்­றது.

நீதி­பதி (காழி) வரை­வி­லக்­க­ணமும் தகு­தியும்

நீதி­ப­தியைக் குறிப்­ப­தற்கு அறபு மொழியில் காழி எனும் சொல் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. கழா என்ற வினைச் சொல்லில் இருந்தே இச்சொல் தோன்­றி­யுள்­ளது. தீர்ப்­ப­ளித்தான் என்­பது இதன் அர்த்தம். இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் மார்க்­கத்தின் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அநீ­தி­யான செயல்கள் மற்றும் அத்­து­மீ­றல்­களைத் தடுக்கும் சட்டத் தீர்ப்பே கழா என்­கி­றார்.

புகழ்­பெற்ற சமூ­க­வி­ய­லா­ளரும் வர­லாற்று மேதை­யு­மான இமாம் இப்னு கல்தூன் (ரஹ்) தனது முகத்­தி­மாவில் முரண்­பா­டு­க­ளுக்கு முடிவு கட்­டுதல் என இச்­சொல்லை விளக்­கு­கிறார். ஏனெனில், கழா என்­ப­தற்கு தீர்த்துக் கட்­டுதல் எனவும் அர்த்தம் உள்­ளது. பர்ஹும் எனும் சிந்­த­னை­யாளர் ஷரீ­ஆவின் ஏவல்­களை நிறை­வேற்றல் என இச்­சொல்­லுக்கு விளக்­க­ம­ளிக்­கிறார். பாகிஸ்­தா­னிய அறிஞர் ஹபீஸ், நீதி­மன்­றத்தின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் தீர்ப்பு என்­கிறார்.

றஸுல் (ஸல்) அவர்­களின் காலத்­தி­லி­ருந்து கடந்த 1439 ஆண்­டு­க­ளாக நீதி­ப­தியைக் குறிப்­ப­தற்கு இச்­சொல்லே இஸ்­லா­மிய நாடு­களில் பரி­பா­சையில் உள்­ளது. புக­ஹாக்கள் (சட்ட அறி­ஞர்கள்), முப்­திகள் (தீர்ப்புச் சொல்­ப­வர்கள்), முஜ்­த­ஹித்கள் (கிளை­யம்­சங்­களில் சட்டம் வகுப்­ப­வர்கள்) போன்­றோரின் பங்­க­ளிப்பு இஸ்­லா­மிய சட்­டத்­து­றையில் முதன்­மை­யா­னதாய் இருக்­கின்ற அதே­வேளை, நீதித் துறையில் காழி­களின் பங்­க­ளிப்பே முக்­கி­ய­மா­ன­தாகும்.

இஸ்­லா­மிய வர­லாற்றின் ஆரம்பகால கட்­டத்தில் இஸ்­லா­மிய சமூ­கத்­திற்குத் தலைமை வகித்த தலை­வர்­களே நீதி­ப­தி­யா­கவும் செயற்­பட்­டுள்­ளனர். றஸுல் (ஸல்) அவர்­களின் காலத்தில் அவர்­களே நீதி­ப­தி­யாக இருந்­தார்கள். குல­பாஉர் ராஷி­தூன்கள் காலத்­திலும் உமைய்யா, அப்­பா­ஸிய ஆட்­சியின் போதும் பின்னர் தோன்­றிய உஸ்­மா­னியர் ஆட்­சியின் போதும் இஸ்­லா­மிய சாம்­ராஜ்யம் விரி­வ­டைந்­ததால் சமூகத் தலை­மை­க­ளி­ட­மி­ருந்து காழி பத­விகள் பிரிக்­கப்­பட்டு பரந்­து­பட்ட ஆட்சிப் பிர­தே­சங்­களின் கீழி­ருந்த ஒவ்­வொரு பிராந்­தி­யத்­திற்கும் காழிகள் நிய­மிக்­கப்­பட்­டனர்.

நீதி­ப­திக்­கான தகு­தி­களும் பெண்கள் நீதி­ப­தி­களாய் இருத்­தலும்

பெண்கள் நீதி­மன்­றங்­களில் நீதி­ப­தி­களாய் நிய­மிக்­கப்­ப­டு­வதை ஆட்­சே­பிக்கும் சில இஸ்­லா­மிய அறி­ஞர்கள் உள்­ளனர். அவர்கள் தமது கருத்­துக்கு ஆத­ர­வான சில சான்­று­களை வர­லாற்­றி­லி­ருந்தும் மூலா­தார வச­னங்­க­ளுக்கு பொருள்­கோடல் செய்­வ­தி­லி­ருந்தும் முன்­வைக்­கின்­றனர். ஷாபிஈ மத்­ஹபைச் சேர்ந்த இமாம் நவவி (ரஹ்) தனது மின்­ஹாஜுத் தாலிபீன் எனும் நூலில் நீதி­ப­தி­களின் தகு­தி­களை வரை­ய­றுக்கும் போது சுதந்­தி­ர­மான ஆண், முஸ்லிம், வயது வந்­தவர், நற்­பண்பு கொண்­டவர், பார்வை, கேள்விப் புலன்கள் தெளி­வாக உள்­ளவர், சட்­டத்தை ஆழ­மாக விளங்­கி­யவர் எனக் குறிப்­பி­டு­கின்றார். இதில் அவர் ஆணா­கவும் இருக்க வேண்­டு­மென்று வரை­யறை செய்­துள்­ளதைக் காணலாம்.

இப்னு பர்ஹுன் எனும் மாலிக்­ மத்­ஹபைச் சேர்ந்த அறிஞர் ஆண்கள் மாத்­தி­ரமே நீதி­ப­தி­களாய் செயற்­பட முடியும் என்ற கருத்தை வெளி­யிட்­டுள்ளார். இமாம் இப்னு குதாமா (ரஹ்) தனது அல் முக்னி எனும் நூலில் பெண்­களின் வகி­பா­கத்தை விளக்கும் போது வீட்டில் தங்­கி­யி­ருந்து பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தோடு மார்க்கக் கட­மை­களில் ஈடு­ப­டு­வதே அவ­ளது அடிப்­படைப் பொறுப்பு எனக் குறிப்­பிட்­டுள்ளார். பெண்­களின் இயல்பு நீதி­பதிப் பத­விக்கு உகந்­த­தல்ல என்­பதே இமாம் இப்னு குதா­மாவின் நிலைப்­பா­டாகும்.
(தொடரும்)
-Vidivelli