Verified Web

எல்லை மீறும் கருத்து மோதல்கள்

2018-05-04 04:09:48 Administrator


கடந்த ஒரு வார காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தமிழ்-­முஸ்லிம் மக்கள் மத்­தியில் நிரந்­த­ர­மா­ன­தொரு விரி­ச­லுக்கு வித்­திட்­டு­வி­டுமோ எனும் அச்­சத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா எனும் கலா­சார ஆடையை அணிந்­து­வரக் கூடாது என மேற்­கி­ளம்­பிய எதிர்ப்­பு­களின் வெளிப்­பா­டா­கவே இந்த கருத்து மோதல்கள் அமைந்துள்ளன. இரு தரப்பிலும் இவை எல்லைமீறிச் சென்று கொண்டிருப்பது நல்லிணக்கத்தை விரும்புவோர் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

பாட­சாலை மட்­டத்­திலும் கல்வி நிர்­வாக மட்­டத்­திலும் தீர்வு காணப்­பட்­டி­ருக்க வேண்­டிய குறித்த விவ­கா­ர­மா­னது ஆர்ப்­பாட்­ட­மாக வீதிக்கு வந்­ததைத் தொடர்ந்து பகி­ரங்க பேசு­பொ­ரு­ளாக மாறி ஏட்­டிக்குப் போட்­டி­யான ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் சமூக வலைத்­தள சண்­டை­க­ளுக்கும் அறிக்கை அர­சி­ய­லுக்கும் வித்­திட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு எதி­ராக சண்­முகா கல்­லூரி மாண­வி­களின் பெற்­றோரும் அபி­வி­ருத்திச் சங்­கத்­தி­னரும் ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­தி­யி­ருந்­தனர். இதனைத் தொடர்ந்து கிண்­ணி­யா­விலும் சம்­மாந்­து­றை­யிலும் முஸ்லிம் அமைப்­புகள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தின. இந்த ஆர்ப்­பாட்­டங்­களில் ஏந்­தப்­பட்­டி­ருந்த பதா­தை­களில் எழு­தப்­பட்­டி­ருந்த வாச­கங்கள் இரு சமூ­கங்கள் மத்­தி­யிலும் மனக்­க­சப்­பு­களை ஏற்­ப­டுத்­து­ம­ள­வுக்கு பார­தூ­ர­மா­ன­வை­யாக அமைந்­துள்­ளன.

இதனைத் தொடர்ந்து தமிழ், முஸ்லிம் சமூக வலைத்­தள பய­னா­ளர்கள் தமக்­கி­டையே வார்த்தை மோதல்­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். இதில் பலர் எல்லை மீறிச் செல்கின்றனர். குறிப்பாக இரு சாராரும் அடுத்தவரது மத, கலாசார அம்சங்களை கேலிக்குள்ளாக்க முனைந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

மறு­புறம் இது­வி­ட­யத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் தமிழ் அர­சியல் தலை­மை­களும் பகி­ரங்­க­மாக கருத்­துக்­களைப் பரி­மாறி வரு­கின்­றனர். இந்த விவ­கா­ரத்­திற்கு சுமுக தீர்வு காண உத­வு­மாறு அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார். அதற்கு பதி­ல­ளித்­துள்ள சம்­பந்தன் ஐயா, சண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் பாரம்­ப­ரி­ய­மாக கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் மர­புக்­கி­ணங்க முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஆடை அணிந்து வரு­வ­துதான் பொருத்தம் என தனது விரி­வான பதிலில் குறிப்­பிட்­டுள்ளார். சம்­பந்தன் ஐயாவின் இந்த கருத்­து முஸ்­லிம்­க­ள் மத்தியில் பலத்த அதி­ருப்­தியைத் தோற்றுவித்துள்­ளது.

இதே­வேளை இந்த விவ­கா­ரத்­துக்கு சட்ட ரீதி­யாக தீர்வு காணும் முயற்­சி­களும் சில தரப்­பு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது. ஏலவே இவ்­வா­றான சர்ச்­சை­க­ளின்­போது நீதி­மன்­றத்தை நாடித் தீர்வைப் பெற்­றது போன்று இந்த விட­யத்­திலும் நீதி­மன்­றத்தின் நிலைப்­பாட்டைப் பெற்று அதன்­படி  நடப்­பதே சரி­யான தீர்­வாக அமையும்.

ஆக இரு தரப்­பாரும் பகி­ரங்க தளங்­களில் கருத்­து­மோ­தல்­களில் ஈடு­ப­டு­வது வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூ­கங்­களின் நீண்ட கால ஐக்­கி­யத்­துக்கு குந்­தகம் விளை­விப்­ப­தா­கவே அமையும். இந்த விட­யத்தை தொடர்ந்தும் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக மாற்றி பிரச்­சி­னை­களை வளர்க்­காது இரு தரப்பும் தத்­த­மது நியா­யங்­க­ளுடன் நீதி­மன்றை நாடு­வதன் மூலம் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­துடன் எதிர்­கா­லங்­க­ளிலும் இவ்­வா­றான சர்ச்­சைகள் தோற்றம் பெறு­வ­தற்கு முற்றுப் புள்ளி வைக்க முடி­யு­மா­க­வி­ருக்கும்.

இந்த விவ­கா­ரத்தைக் கையாள்­வதில் ஊட­கங்­களும் பொறுப்­பு­ணர்­வுடன் நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­போன்­றுதான் சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்­து­வோரும் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்­டி­யது காலத்தின் தேவையாகும்.

கண்டியில் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பி அதன் மூலம் வன்முறைகள் வெடித்த நிகழ்வுகளின் காயங்கள் ஆறும் முன்னர் மீண்டும் இந்த நாட்டு மக்கள் தமக்கிடையே குரோதங்களை வளர்ப்பது ஆரோக்கியமானதல்ல. எனவேதான் இந்த விடயத்தில் சகலரும் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

-Vidivelli