Verified Web

ஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது

2018-05-04 03:58:23 Administrator

முஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச் செயற்­பா­டுகள், மத்­திய அர­சாங்­கங்­களின் கவ­னத்தில் கொள்­ளாத நிலை­மைகள், சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் குறிப்­பாக தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய நல்­லு­ற­வுகள், தொடர்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விடி­வெள்­ளிக்கு வழங்­கிய விசேட செவ்வி வரு­மாறு :

 

Q மத்­தியில் உள்ள பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் மீது பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில் உங்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது?

பதில்: குஜ­ராத்தில் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது அந்த மாநிலம் பாரிய வளர்ச்­சியைக் கண்­டுள்­ளது. ஆகவே இந்­தி­யாவும் அவ்­வா­றான வளர்ச்­சியை காணு­வ­தென்றால் எம்மை ஆத­ரி­யுங்கள் என்ற பரப்­பு­ரை­யுடன் தான் 2014ஆம் ஆண்டு நரேந்­திர மோடி ஆட்­சிக்கு வந்­தி­ருந்தார். இந்தப் பரப்­புரை பொது­மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட்­டதும் குஜ­ராத்தில் தேனாறும் பாலாறும் ஓடு­கின்­றன என்ற மாயைக்குள் அவர்கள் சென்று வாக்­க­ளித்­தார்கள்.

ஆனால், ஒட்­டு­மொத்­த­மாக பார்க்­கின்­ற­போது பா.ஜ.க.வுக்கு 31சத­வீத வாக்­கு­கள்தான் கிடைத்­துள்­ளன. ஆகவே 69 சத­வீத வாக்­குகள் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.கவுக்கு எதி­ரா­கவே அளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவின் தேர்தல் முறை அவரை ஆட்சி அமைப்­ப­தற்கு வழி­ச­மைத்­தது. அத­னை­ய­டுத்தும் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கினார். எனினும் அவை எவையும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக இல்லை.

தற்­போ­தைய சூழலில் விவ­சா­யிகள், மீன­வர்கள், வணி­கர்கள் என அனை­வ­ருமே பாதிக்­கப்­பட்டு தற்­போது நாட­ளா­விய ரீதியில் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளனர். இவை­யெல்லாம் பொரு­ளா­தார ரீதி­யாக மோடி அர­சாங்­கத்தின் குறை­பா­டு­க­ளாக இருக்­கின்­றன. குறிப்­பாக வர்த்­த­கத்தில் அதிகம் ஈடு­படும் முஸ்­லிம்கள் மோடியின் ஒரே இரவில் கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபா நாண­யத்­தாள்­களை வைப்­பி­லிடச் செய்­த­மை­யினால் பெரும் பின்­ன­டை­வு­களைச் சந்­தித்­தார்கள். உலகில் பல்­வேறு நாடு­களில் சரக்கு மற்றும் சேவை வரி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால், இந்­தி­யாவில் மாத்­திரம் நான்கு மட்­டங்­களில் வெவ்­வேறு விகி­தங்­களில் இந்­த­வரி விதிக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­வி­டுத்து இன­ரீ­தி­யாகப் பார்க்­கின்றபோது அங்கும் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

மோடி தலை­மை­யி­லான அர­சாங்கம் இன, மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான கொள்­கை­களை கொண்­டது என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மே­யில்லை. இந்­தி­யாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்­த­வர்கள், தலித்­துக்கள் ஆகியோர் மீது வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­கின்­றன. மோடியின் அர­சாங்­கத்தில் மனி­தர்­க­ளுக்கு இல்­லாத பாது­காப்பு பசுக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றது. இறந்­த­வர்­களை கொண்டு செல்­வ­தற்­கான காவு வண்­டி­களே இல்­லா­துள்ள நிலையில் உத்­த­ர­பி­ர­தேசம் போன்ற பகு­தி­களில் பசுக்­களை கொண்டு செல்­வ­தற்­கான காவு வண்­டி­களை செயற்­ப­டுத்­து­கின்ற மன­நி­லையில் தான் பா.ஜ.க. அர­சாங்கம் இருக்­கின்­றது.

இத­னை­வி­டவும் பசுவின் இறைச்­சியை வைத்­தி­ருந்­தார்கள், பசுத்­தோலை உரித்­தார்கள் என்று கூறி உண்­மை­களை அறி­யாது முஸ்­லிம்­களை இலக்கு வைத்து பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு திட்­ட­மிட்ட தாக்­கு­தல்­களை குஜராத் போன்ற மாநி­லங்­களில் முன்­னெ­டுத்­துள்­ளார்கள். இதனை விடவும் மோடி அர­சாங்கம் தமி­ழர்கள் விட­யத்தில் பெரும் வஞ்­ச­னையைச் செய்­கின்­றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­பதை கருத்தில் கொள்­ள­வில்லை, காவிரி படுக்­கைப்­ப­கு­தியை வேளாண்மை மண்­ட­ல­மாக அறி­விப்­ப­தற்குப் பதி­லாக பெற்­றோ­லிய மண்­ட­லப்­ப­கு­தி­யாக அறி­வித்­துள்­ளது. கூடங்­குளம் அணு உலையில் மக்­களை பாது­காக்கக் கூடிய அள­விற்கு தொழில்­நுட்ப வச­திகள் இல்லை என்று பிர­மாண வாக்­கு­மூ­லத்­தினை உச்­ச­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­துள்­ளது. நீட் தேர்வு, நியூற்­றினோன் திட்டம் போன்­ற­வற்றில் அநீதி இழைக்­கின்­றது. இவ்­வாறு தமி­ழர்­களை வஞ்­சிக்­கின்­றது.

இவ்­வா­றான செயற்­பா­டு­களால் தான் கடந்த 12 ஆம் திகதி தமி­ழகம் வந்­த­போது முழு­மை­யான எதிர்ப்­பினை தமி­ழர்கள் வெளி­யிட்டு எந்­த­வொரு இந்­தியப் பிர­த­மரும்  சந்­திக்­காத மிகப்­பெரும் இகழ்ச்­சியை சந்­திக்க நேர்ந்­துள்­ளது. தனது சொந்த நாட்டில் சுதந்­தி­ர­மாக பய­ணிக்க முடி­யாத சூழ­லொன்று பிர­த­ம­ருக்கு ஏற்­பட்­டுள்­ளமை அவர் மீதான அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தியுள்­ளது.

 

Q தற்­போ­தைய ஆட்­சியில் சிறுவர், பெண்­களின் பாது­காப்பு பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- கஷ்­மீரில் கத்­துவா என்ற மாவட்­டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்­கொ­டு­மைக்கு இலக்­காகி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இந்த அநா­க­ரி­க­மான சம்­பவம் ஒரு கோவில் கரு­வ­றையில் வைத்து நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த அப்­பாவிப் பெண்­ணுக்­காக போரா­டு­வதை விடுத்து அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்­காக பா.ஜ.கவின் இரு அமைச்­சர்­களே வீதியில் இறங்கி போரா­டு­வ­தையும், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்­புக்கள் அந்த கோரச்­சம்­ப­வத்­துக்கு ஆத­ர­வ­ளித்து பேரணி செல்­கின்ற அவ­லமும் காணப்­ப­டு­கின்­றன. அதனை விடவும் பா.ஜ.க. தரப்­பி­னரில் சிலர் ஆசிபா வளர்ந்தால் மிகப்­பெ­ரிய மனித வெடி­குண்­டாக மாறி­வி­டுவார் அதனால் தான் அவரை அழித்தோம் என்று கூறு­ம­ள­விற்கு அவர்­களின் பாசிச மனப்­போக்கு காணப்­ப­டு­கின்­றது.

இதே­போன்று உத்­தர பிர­தே­சத்தில் 17வயது சிறுமி வேலை­வாய்ப்­புக்­கோரிச் செல்­கின்ற போது பா.ஜ.க. சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான குல்தீப் சிங் மற்றும் அவ­ரு­டைய சகோ­த­ரரால் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு இலக்­காக்­கப்­ப­டு­கின்ற கொடு­மையும் நிகழ்ந்­துள்­ளது. இவ்­வாறு, பெண்கள் பாலியல் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பல சம்­ப­வங்கள் இந்த ஆட்­சிக்­கா­லத்தில் பதி­வா­கிக்­கொண்டே இருக்­கின்­றன. இதனால் பெண்­களின் பாது­காப்பு என்­பது தற்­போது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்­பாக சிறு­பான்­மை­யின சமூ­கங்­களைச் சேர்ந்த பெண்­களின் எதிர்­காலம் அச்­சத்­துக்குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

 

Q தமி­ழ­கத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் உற­வினை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு இலங்கை சிறு­பான்மை தேசிய இனங்­க­ளுக்கு நீங்கள் கூற­வி­ழை­வது என்ன?

பதில்:- 2009 ஆம் ஆண்டு மிகப்­பெரும் துய­ரத்­தினைத் தந்­தி­ருந்த சம்­ப­வங்கள் நிகழ்ந்த பின்னர் நான் லண்­ட­னுக்குச் சென்­றி­ருந்தேன். அங்­குள்ள ஈழத்­த­மி­ழர்­களை சந்­தித்துப் பேச்­சுக்­களை நடத்­தினேன். அவர்­களின் நிலைப்­பா­டு­களை கேட்டு அறிந்து கொண்டேன். அதே­போன்று தமி­ழ­கத்தில் உள்ள ஈழத்­த­மி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் கேட்­ட­றிந்து கொண்­டி­ருந்தேன். இலங்­கையில் உள்ள தமி­ழர்­களின் நிலை­மை­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொண்டேன்.

அதன் பின்னர் இலங்­கையில் உள்ள முஸ்லிம் சமூகத்­து­டனும் தொடர்ச்­சி­யாக தொடர்­பு­களை பேணி வந்தேன். இவ்­வா­றான நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக நான் அங்கு வருகை தந்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாட் பதி­யுதீன், கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்த ஹாபீஸ் நஸீர் மற்றும் தமிழ்த் தேசிய தலை­வர்கள் உள்­ளிட்­ட­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தேன். அவை ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவே இருந்­தன.

இலங்­கையில் காணப்­பட்ட அசா­தா­ரண காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மையப்­ப­டுத்தி யார் அதில் தவ­றி­ழைத்­தார்கள். அதற்­கான கார­ணங்கள் என்ன போன்ற பகுப்­பாய்­வு­க­ளுக்கு முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும்  செல்­லாது எதிர்­கா­லத்தில் எவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வது என்­பது பற்றி சிந்­திக்க வேண்­டிய தருணம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் சிங்­கள பேரி­ன­வா­தமும், பௌத்த மத­வா­தமும் உச்­ச­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன.

குறிப்­பாக கண்­டி­யிலும், அம்­பா­றை­யிலும் அண்­மித்த தினங்­களில் நிகழ்ந்த சம்­ப­வங்­களை கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களை தாக்­கு­கின்ற சம்­ப­வங்­க­ளா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. விசே­ட­மாக அம்­பாறை சம்­ப­வத்­தினை எடுத்­துக்­கொண்டால் இலங்­கையில் முஸ்­லிம்கள் பெரும்­பா­லான உண­வ­கங்­களை நடத்­து­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உண­வுச்­சு­வையால் அங்கு மக்கள் அதி­க­மாக கூடு­வதை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்கள் முஸ்­லிம் உண­வ­கங்­களில் உள்ள உண­வு­களில் ஆண்மைக் குறை­பாட்டு மாத்­தி­ரை­களை உண­வு­களில் கலக்­கின்­றார்கள் என்ற திட்­ட­மிட்ட பொய்ப் பிர­சா­ரத்­தினை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

அதே­நேரம், கண்­டியில் நடை­பெற்ற சம்­ப­வத்தை கவ­னத்தில் கொள்ளும் போது உயி­ரி­ழப்­புக்கள் இன்றி சொத்­துக்­களை அழிக்கும் ஒரு வியூ­கத்­து­டனே அந்த சம்­ப­வங்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. அதில் பெண்கள் கூட சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள் என்றால் அவர்கள் எவ்­வ­ளவு தூரம் பயிற்சி பெற்­றுள்­ளார்கள் என்­பதை உணர்ந்துகொள்ள வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான ஒரு தரு­ணத்தில் அதனை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைக்குள் சிறு­பான்­மை­யின சமூ­கங்­க­ளான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆகவே இந்த விட­யத்தல் இரு சமூகத்­தி­ன­ருமே இணைந்து ஒரு­மித்த நிலைப்­பாட்­டினை எடுப்­பது காலத்தின் கட்­டா­ய­மா­க­வுள்­ளது.

மேலும் சிறு­பான்மை இனத்­த­வர்­களை எவ்­வாறு தாக்­க­மு­டியும் என்­ப­தற்­கான வியூ­கத்­தினை இந்­தி­யாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், இலங்­கையில் இயங்கும் பொது­ப­ல­சேனா, மியன்­மாரில் உள்ள 969 இயக்கம் ஆகி­யவை கூட்­டாக இணைந்து அமைக்­கின்­றன.

அவர்கள் தீட்­டிய சதித்திட்­டத்தின் வெளிப்­பா­டா­கவே மேற்­படி வன்­மு­றை­களைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்டால் மத்­திய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்­பா­னது இன, மத, மொழி­வா­ரி­யான சிறு­பான்மை இனத்­த­வர்­களை தாக்­கு­வ­தற்கு எத்­த­கைய வழி­மு­றை­களை கையாள்­கின்­றார்­களோ அதே­போன்று தான் இலங்­கையில் பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­களும் செயற்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் நடை­பெற்ற ஈழப்­போ­ரா­னது சாதி, மதத்­தினைக் கடந்து ஒரு இன விடு­த­லைக்­காக நடை­பெற்­றது. அந்­தப்போர் நிறை­வுக்கு வந்த பின்­ன­ரான சூழலில் தற்­போது மிகப்­பெ­ரிய இன­வெ­றிக்­கு­ழுக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே பொது­ப­ல­சேனா போன்ற அமைப்­புக்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தமிழர், முஸ்லிம் தரப்­புக்­க­ளிலும் இன­வாதக் குழுக்­களை உரு­வாக்­கு­வதை திட்­ட­மாக கொண்டு முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. இது அபா­ய­க­ர­மா­னது. இது இனங்­க­ளுக்கு இடையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குத்து விடும். ஆகவே இந்த அபா­யத்­தி­லி­ருந்து மீண்­டு­வ­ருவது காலத்தின் கட்­டா­ய­மா­கின்­றது.

கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. அதே­போன்று வட­மா­காண தமி­ழர்­க­ளுக்கு கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் இருக்­கின்­றன. ஆகவே கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்கள் சம்­பந்­த­மாக இரண்டு தரப்­பி­னரும் ஒரு வட்­ட­மே­சையில் அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்டும். அவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடத்தி இறுதி முடி­வுக்கு வர­வேண்டும்.

தற்­போ­தைய சூழலில் இரு சிறு­பான்மை சமூ­கத்­தி­னதும் வாழ்­வி­யலே கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது. ஆகவே வாழ்க்­கையை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டால் தான் உரி­மைகள் தொடர்பில் பேச முடியும். எனவே அதற்­கு­ரிய திட்­ட­மி­டலை கூட்­டாக மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

 

Q ஆர்.எஸ்.எஸ், பொது­ப­ல­சேனா, 969 ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் குணாம்ச ரீதி­யான தொடர்­பு­களை தாண்டி உற­வுகள் உள்­ளன என்­கின்­றீர்­களா?

பதில்:- ஆர்.எஸ்.எஸ்,  பொது­ப­ல­சேனா மற்றும் 969 அமைப்பு ஆகியவற்­றுக்கு இடையில் சிந்­தனை ரீதி­யான தொடர்­புகள் மட்­டு­ம் காணப்­ப­ட­வில்லை. ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த பிர­மு­கர்கள் இலங்­கைக்கு சென்று பொது­ப­ல­சேனா போன்ற கடும்­போக்கு அமைப்­புக்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­துள்­ளார்கள். எவ்­வா­றான வியூ­கத்­தினை அமைத்து செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பி­லான அனைத்து வித­மான பயிற்­சி­க­ளையும் அளித்­துள்­ளார்கள். இது மட்­டு­மல்ல, தமி­ழர்­க­ளுக்கு மத்­தி­யிலும் தமது வியூ­கத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக சில குழுக்­களை அமைத்­துள்­ளார்கள் என்­பது யதார்த்­த­மாகும். 

 

Q இலங்­கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உற­வினை பலப்­ப­டுத்­து­வதில் உங்­க­ளது வகி­பாகம் என்­ன­வாக இருக்கும்?

பதில்:-  இலங்­கையில் உள்ள முஸ்லிம் தலை­வர்கள் அனை­வ­ரையும் தமி­ழ­கத்­திற்கு அழைப்­ப­தற்கு திட்­ட­மிட்டு வரு­கின்றோம். கடந்த கால கசப்­பு­ணர்­வு­களை மறந்து தமி­ழர்­க­ளுடன் இணைந்து எதிர்­கா­லத்தில் பய­ணிக்கும் முக­மாக தமி­ழ­கத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்­புக்கள், கட்­சிகள் , முஸ்லிம் கட்­சிகள் என அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய ஒரு பெரும் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். இது சாத்­தி­ய­மா­கின்­ற­போது பல்­வேறு மாற்­றங்­களை இலங்­கையில் காண­மு­டியும் என்­பது எமது எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது. 

 

Q இந்­தியா உட்­பட உல­க­ளா­விய ரீதியில் வேக­மாகப் பர­வி­வரும் முஸ்­லிம்கள் அனை­வரும் தீவி­ர­வா­திகள் என்ற பொதுப்­படை சிந்­த­னையை கட்­டுப்­ப­டுத்­து­வதில் முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும்?

பதில்:- முகத்தில் தாடி­வைத்து, தொப்பி அணிந்­த­வர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ிரிக்­கின்ற நிலைமை தான் தற்­போது உல­க­ளா­விய ரீதியில் உள்­ளது. அதிலும் இந்­தி­யாவில் அந்த தன்மை அதி­க­மா­கவே உள்­ளது. ஆகவே ஆசிய முஸ்­லிம்­க­ளுக்கு என்னால் வழங்கக் கூடிய செய்­தி­யாக இதனைக் கொள்­ள­மு­டியும். அதா­வது, நாங்கள் பன்­மு­கத்­தன்மை கொண்ட சமூ­கத்தில் தான் வாழு­கின்றோம் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அத்­துடன் முஸ்­லிம்கள் என்றால் பயங்­க­ர­வா­திகள் என்ற ஏனைய தரப்­புக்­களின் மன­நி­லையை மாற்றும் வகையில் முற்­போக்­குடன் செயற்­பட வேண்டும். அதா­வது, ஏனைய சமூ­கத்­துடன் வேறு­ப­டக்­கூ­டிய விட­யங்கள் குறை­வா­கவும் ஒன்­று­ப­டக்­கூ­டிய விட­யங்கள் அதி­கமாகவும் இருக்­கின்ற நிலையில் அதனை புரிந்து அந்­தந்த சமூ­கங்­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்தக் கற்­றுக்­கொள்ள வேண்டும். அந்த அடிப்­ப­டையில் நாம் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

இந்த விட­யத்தில் ஒரு உதா­ர­ணத்­தினைக் கூறு­கின்றேன். 1995 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு முஸ்லிம் முன்­னேற்­றக்­க­ழகம் என்ற அமைப்­பினை உரு­வாக்­கினோம். 2009 இல் தான் மனித நேய மக்கள் கட்சி என்று அர­சியல் கட்­சி­யாக மாற்­ற­ம­டைந்தோம். இடைப்­பட்ட காலத்தில் இரத்­த­தான சேவை, அம்­புலன்ஸ் சேவை போன்ற பல மனி­த­நேய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தோம். இவ்­வா­றான நிலையில் அண்­மையில் தமி­ழ­கத்தில் வெள்ள அனர்த்தம் வந்­த­போது எமது அமைப்பு உட்­பட முஸ்லிம் தரப்­புக்கள் களத்தில் செயற்­பட்­டன.

 

இந்த செயற்­பா­டுகள் எவ்­வா­றான தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­ய­தென்றால், பாட­சா­லையில் தீவி­ர­வாதி ஒரு­வரின் புகைப்­ப­டத்­தினை வரை­யுங்கள் என்றால் குழந்­தைகள் தொப்­பி­யுடன் தாடி­யுடன் கூடிய ஒரு முஸ்­லி­மையே வரைந்­தார்கள். ஆனால் மேற்­படி அனர்த்­தத்தின் பின்னர் அந்த அனர்த்தம் என்ற தலைப்பில் ஓவியம் வரை­யுங்கள் என்றால் உத­விப்­பை­க­ளுடன் வெள்­ளத்தின் மத்­தியில் உள்ள வீட்­டுக்குள் செல்லும் முஸ்லிம் நபர் ஒரு­வ­ரையே வரை­கின்­றார்கள்.

அந்­த­ள­வுக்கு மன­நிலை மாற்­றத்­தினை இளம் சமூ­கத்­தினர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நல்­லி­ணக்கப் பணி­களே தற்­போது அவ­சி­ய­மா­க­வுள்­ளன. பயங்­க­ர­வா­தமும், தீவி­ர­வா­தமும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வினை அளிக்­கப்­போ­வ­தில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு இந்த விட­யத்தில் உள்ள பொறுப்­பினை உணர்ந்து அவர்கள் செயற்­பட வேண்டும்.

 

Q இந்­தி­யாவில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பான எதிர்­கா­லத்­தினை உறு­திப்­ப­டுத்த எத்­த­கைய நட­வ­டிக்­கைகள் அவ­சியம் எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- இந்­தியா மத­சார்­பற்ற சோஷ­லிசக் குடி­ய­ர­சாக எதிர்­கா­லத்­திலும் நீடிக்­குமா என்­பதே மிகப்­பெரும் கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது. ஆட்­சியில் உள்ள பா.ஜ.கவும், அதற்குத் துணை­யா­க­வுள்ள ஆர்.எஸ்.எஸ். ஆகி­யன 1949ஆம் ஆண்டு இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச்­சட்டம் உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லேயே உல­கத்­தி­லேயே மிகச்­சி­றந்த சட்­டத்­தினை வழங்­கி­யது மனு­தர்மம். மனு­தர்­மத்தின் அடிப்­ப­டையில் அமை­யாத இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தினை ஏற்­க­மாட்டோம் என்று அறி­வித்­தனர். இதே­நேரம் அண்­மையில் மத்­திய அமைச்சர் ஆனந்த்­குமார் அதே கருத்­தினை மீண்டும் கூறி­யுள்ளார்.

இந்­தி­யாவில் மதச்­சார்­பின்மை என்­பது மேற்­கத்­தேய மதச்­சார்­பின்­மை­யி­லி­ருந்து முற்­றாக வேறு­பட்­டது. இந்­தி­யாவில் மதச்­சார்­பின்மை என்­பது அனைத்து மதங்­க­ளையும் அர­வ­ணைப்­ப­தாகும். மீண்டும் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. மத்­தியில் ஆட்­சிக்கு வரு­வார்­க­ளானால் அவர்கள் முதல்­வே­லை­யாக இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தினை திருத்­து­வ­தாக இருக்கும். ஆகவே இந்த ஆட்­சி­யா­ளர்­களால் அனைத்து தரப்­பி­ன­ருமே பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் பரஸ்­பரம் கருத்து மோதல்கள் இருந்­தாலும் இந்­தி­யாவின் ஜன­நா­ய­கத்­தினை பாது­காத்து சோஷ­லி­சத்தை காப்­ப­தற்­காக அனைத்து வேறு­பா­டு­க­ளையும் மறந்து ஒற்றை அணியில் நிற்க வேண்டும்.

உத்­தரப் பிர­தே­சத்தில் எதிரும் புதி­ரு­மாக விருந்த மாயா­வ­தியும் அகி­லே­ஷனும் இணைந்து யோகி ஆதித்­த­னாரின் தொடர்­வெற்­றிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து சமா­ஜ­வாதக் கட்சி கூட்­டினை வெற்­றி­பெறச் செய்­துள்­ளனர். அதனை உதா­ர­ண­மாக கொண்டு அர­சியல் கட்­சிகள் செயற்­ப­டு­வ­துதான் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் செய்யும் அர்ப்­ப­ணிப்­பாக இருக்கும்.

 

Q  தமி­ழக ஆட்­சி­யாளர் மீது கடு­மை­ யான விமர்­சனம் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில் உங்­க­ளது கட்சி அடுத்­த­கட்டச் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­ய­வுள்­ளன?

பதில்:- தமி­ழ­கத்தில் ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்குப் பின்னர் உள்ள எடப்­பாடி தலை­மை­யி­லான அர­சாங்­க­மா­னது பொம்மை அர­சா­கவே உள்ளது. ஜெயலலிதாவுடன் எமக்கு அரசியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மாநிலக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மாநிலக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக துணிச்சலாகப் போராடினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்தக் கொள்கைகளையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தான் செயற்படுகின்றது.

காவிரி விடயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டுமாறு மாநில அரசாங்கத்தினை கோரியபோதும் அவர்கள் அதனை செவிசாய்க்காத நிலையில் தி.மு.க. தோழமைக் கட்சிகளுடன் கூட்டத்தினை நடத்தியது. இவ்வாறு எடப்பாடி அரசாங்கம் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை அடுக்கலாம். தமிழக மக்களின் உரிமைகளை பா.ஜ.கவிடம் அடகு வைத்த அரசாகவே எடப்பாடி அரசு உள்ளது. இந்த அரசாங்கத்தினை அகற்ற வேண்டும் என்பதில் நாம் உட்பட பொதுமக்களும் உறுதியாக இருக்கின்றார்கள். எமது கூட்டணி தி.மு.கவுடன் தொடர்ச்சியாக பயணித்துக் கொளளும்.

 

Q முஸ்லிம்களுக்கு எதிராக தெற்காசிய நாடுகளில் இனரீதியான நெருக்கடிகளும் மத்திய நாடுகளில் ஆயுத ரீதியான வன்முறைகளும் காணப்படுகின்ற நிலையில் அந்த சூழமைவுகளை மாற்றியமைப்பதற்கு ஏதுவான வழிகள் உள்ளனவா?

பதில்:- அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் இதுபற்றி சிந்தித்து ஒருங்கிணைந்தால் மகிழ்ச்சிக்குரியதொரு விடயமாகும். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று என்னால் கூறமுடியாதுள்ளது. அதேநேரம் எம்மைப்போன்ற அமைப்புக்கள் இத்தகைய செயற்பாடுகளை எவ்வளவு தூரம் முன்னெடுக்க முடியும் என்பதிலும் கேள்விகள் உள்ளன.

பொதுப்படையாக பார்க்கையில் முஸ்லிம்களுக்கு அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களை எடுக்க கூடிய துணிச்சல் இல்லை என்பதே யதார்த்தமாகவுள்ளது. உதாரணமாக கூறுவதாயின் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பானது தற்போது இலங்கையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாக இருக்கலாம், சிறுமி ஆசிபா விவகாரமாக இருக்கலாம் அவற்றுக்காக குரல் கொடுத்திருக்கவில்லை. அத்தகைய அமைப்பொன்று மக்களை பாதுகாப்பதற்கான வலிமையான திட்டங்களை கொண்டிருக்கவில்லை. ஆகவே மக்களை மையப்படுத்திய திட்டங்களை கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அதனை அனைத்து தரப்புக்களும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

-Vidivelli