Verified Web

ட்ரம்பின் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்க இல்லையேல் வாயை மூடிக்கொள்ள வேண்டும்

2018-05-02 01:27:56 M.I.Abdul Nazar

பலஸ்­தீன தலை­மைத்­துவம் சமா­தா­னத்­திற்­காக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் நிர்­வா­கத்தால் முன்­வைக்­கப்­படும் நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மென அமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்ட யூதக் குழுக்­களின் தலை­வர்­க­ளிடம் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் தெரி­வித்­த­தாக இஸ்ரேல் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்த மாதம் அமெ­ரிக்­காவில் குறித்த அமைப்­புக்­களின் தலை­வர்­க­ளுடன் மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் இடம்­பெற்ற சந்­திப்பில் பலஸ்­தீன தலைவர் மஹ்மூத் அப்­பாஸை பின் ஸல்மான் கடு­மை­யாக விமர்­சித்­த­தாக இஸ்­ரே­லிய இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சனல் 10 செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

'கடந்த பல தசாப்­தங்­களில் பலஸ்­தீன தலை­மைத்­துவம் சமா­தா­னத்­திற்­காக வழங்­கப்­பட்ட வாய்ப்­புக்­களை ஒன்றன் பின் ஒன்­றாக நிரா­க­ரித்தே வந்­துள்­ளது' என பின் சல்மான் தெரி­வித்­த­தாக சனல் 10 சிரேஷ்ட இரா­ஜ­தந்­திர ஊட­க­வி­ய­லா­ள­ரான பாராக் ராவிட்­டினால் அக்­ஸியெஸ் இணை­யத்­த­ளத்தில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னர்கள் முன்­மொ­ழி­வு­களை ஏற்­றுக்­கொண்டு பேச்­சு­வார்த்தை மேசைக்கு வரு­வ­தற்கு இதுவே பொருத்­த­மான தரு­ண­மாகும். இல்­லா­விட்டால் முறைப்­பாடு செய்­யாமல் வாயை மூடிக்­கொண்­டி­ருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை ட்ரம்ப் அங்­கீ­க­ரித்­தமை சர்­வ­தே­ச­ரீ­தியில் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

1967 ஆம் ஆண்டு இரா­ணுவ ரீதி­யாக இஸ்­ரே­லினால் கைப்­பற்­றப்­பட்ட கிழக்கு ஜெரூ­சலம் அப்­போது தொடக்கம் இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் காணப்­ப­டு­கின்­றது. அந்த நக­ரையே தமது எதிர்­கால பலஸ்­தீ­னத்தின் தலை­ந­க­ராக பலஸ்­தீனத் தலை­வர்கள் பார்க்­கின்­றனர்.

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை ட்ரம்ப் அங்­கீ­க­ரித்­ததைத் தொடர்ந்து அமெ­ரிக்­காவின் சமா­தானத் திட்­டத்தை அங்­கீ­க­ரிக்­கு­மாறு பின் சல்மான் அப்­பா­ஸுக்கு அழுத்தம் கொடுப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும், ட்ரம்பின் டிசம்பர் மாத  அறி­விப்பின் பின்னர் பலஸ்­தீன தலை­மைத்­துவம் வெள்ளை மாளி­கையைப் புறக்­க­ணித்து வரு­கின்­றது. 'அமெ­ரிக்கா சமா­தானப் பேச்­சுக்­க­ளுக்­கான நாண­ய­மான ஏற்­பாட்­டாளர் அல்ல' என அப்பாஸ் தெரி­வித்­துள்ளார்.

மொஹமட் பின் சல்­மானும் ட்ரம்பின் மரு­மகன் ஜாரெட் குஷ்­னரும் நெருக்­க­மான நட்பைக் கொண்­ட­வர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பலஸ்­தீ­னுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யே­யான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­பார்வை செய்யும் நிர்­வா­கிகள் குழுவில் ட்ரம்­பினால் குஷ்னர் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து பிராந்­தியம் தொடர்­பான வழி­காட்­டலை பின் சல்­மா­னிடம் இருந்தே அவர் பெற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பின் சல்மான் பலஸ்­தீன தலை­மைத்­து­வத்தை விமர்­சிக்கும் அதேவேளை, சவூதி அரேபியாவும் ஏனைய வளைகுடா நாடுகளும் இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னதாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையேயான சமாதானப் பேச்சுகள் முன்னோக்கி நகர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் சவூதி அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

-Vidivelli