Verified Web

மக்களுக்கு நன்மையளிக்காத அமைச்சரவை மாற்றங்கள்

2018-05-02 00:54:46 Administrator

நல்லாட்சி அரசாங்கத்தின் மற்றொரு அமைச்சரவை மாற்றம் நடந்து முடிந்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தினுள் தொடரும்  முரண்பாடுகளின் மற்றொரு வெளிப்பாடே இந்த அமைச்சரவை மாற்றமாகும்.

குறிப்பாக அமைச்சரவையில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்படி வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இதற்கமைய புதியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காது ஏலவே இருந்தவர்களுக்கே மேலதிக பொறுப்புகள் பகிரப்பட்டுள்ளன.

எனினும் ஏலவே நீதி அமைச்சராகவிருந்து, ஐக்கிய தேசியக் கட்சியினரின் பலத்த எதிர்ப்பையடுத்து இராஜினாமாச் செய்துவிட்டுச் சென்ற விஜேதாச ராஜபக்சவுக்கு நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

"இந்த அமைச்சரவையில் இருக்க வெட்கப்படுகிறேன்" எனக் கூறிச் சென்ற விஜேதாச ராஜபக்ச, இன்று வெட்கத்தை மறந்து மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றிருக்கிறார். ஏலவே பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சராகவிருந்த போதே இனவாத சக்திகளுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து வந்த அவர், தற்போது உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் பதவி மூலமாகவும் அதே சக்திகளுக்கு ஆதரவளிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அதேபோன்றுதான் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டு நிதியமைச்சர் பதவியை துறந்த ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

இந்த இடத்தில் தான் இவ்வாறு அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் நடப்பதற்கான அவசியம்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

ஒரு நாட்டின் நிர்­வாக இயந்­தி­ரத்தை சீராக கொண்டு செல்ல வேண்­டு­மெனில் அவ்­வப்­போது அமைச்­ச­ரவை மாற்றம் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது வர­வேற்­கத்­தக்­கதே. ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வரை அமைச்­ச­ரவை மாற்­றங்கள் நடப்­பது அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் சுய­ந­லன்­களை மையப்­ப­டுத்­தியே என்­ப­துதான் கவ­லை­தரும் நிதர்­ச­ன­மாகும்.

இன்று தான் தலைமை வகிக்கும் சுதந்­திரக் கட்சி மேலும் பிள­வு­ப­டு­வதை தடுப்­ப­தற்­காகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தைப் பாதுகாக்கவும் ஜனா­தி­பதியும் பிரதமரும் பல்­வேறு காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்றனர்.

அதில் முக்­கி­ய­மான நகர்வே இந்த அமைச்­ச­ரவை மாற்­ற­மாகும். மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அடுத்து வரும் தேர்­தல்­களில் தனித்து ஆட்­சி­ய­மைப்­பதை இலக்­காக கொண்டு செயற்­பட்டு வரு­கி­றது. அதனால் அமைச்­ச­ரவை மாற்­றத்தின் மூலம் கட்­சியை பலப்­ப­டுத்த பிர­தமர் ரணில் விரும்­பு­கிறார். இரு கட்சிகளிலிருந்தும் எவரும் மஹிந்த அணி பக்கம் செல்வதை தடுப்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.

அதே­போன்­றுதான், அர­சி­யல்­வா­திகள் பலரும் தமது பொக்­கற்­று­களை நிரப்­பு­வ­தற்­கா­கவே அமைச்­ச­ரவை மாற்­றத்தை விரும்­பு­கின்­ற­னரே அன்றி மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றலாம் என்­ப­தற்­காக அல்ல என்ற யதார்த்தத்தையும் நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.

அமைச்சுப் பத­விகள் மூல­மாக தமது தனிப்­பட்ட நலன்­களை அடை­வதே அர­சி­யல்­வா­தி­களின் குறிக்­கோ­ளாகும்.  கிடைக்­கப்­பெறும் சலு­கைகள், வசதி வாய்ப்­புகள் அனைத்­தையும் தமது குடும்­பத்­தி­னதும் நெருங்­கிய அர­சியல் ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும் நலன்­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

மாறாக தமக்கு வாக்­க­ளித்து இந்தப் பத­வி­களைப் பெற்றுத் தரக் கார­ண­மாக அமைந்த மக்­க­ளுக்கு எந்த நலன்களையும் பெற்றுக் கொடுப்பதில்லை. அமைச்சரவைக் கூட்டங்களில் கூட தமது பிரதேசத்தின், சமூகத்தின் தேவைகளைப் பற்றிப்பேசாது தமது தனிப்பட்ட விடயங்களையே அதிகம் பேசுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் அமைச்சரவை மாற்றம் என்பது அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே அன்றி மக்களின் நலனுக்காக அல்ல என்பது நன்கு தெளிவாகிறது.

-Vidivelli