Verified Web

சகவாழ்வை சீர்குலைக்கும் பொதுச் சட்டக் கோரிக்கை

ALM Anwar

சிரேஷ்ட சட்டத்தரணி 

குருணாகல் 

2018-04-23 05:12:04 ALM Anwar

 


தீய உள்­நோக்­க­முள்ள சில தீவி­ர­வா­திகள், எல்லா அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரே பொதுச் சட்­டமே எமது நாட்­டுக்கு அவ­சியம் என காலத்­துக்குக் காலம் குரல் எழுப்பி வரு­கின்­றனர். நீரில் அமிழ்த்­திய ரப்பர் பந்து மீண்டும் மீண்டும் மேலெ­ழுந்து வரு­வதைப்  போல் இந்த வாதம் அடிக்­கடி மேலெ­ழுந்து வரு­வதை நாம் காணலாம். 
 
மேலோட்­ட­மாகப் பாத்தால் இது இலங்­கையில் உள்ள எல்லா இனத்­த­வர்­க­ளு­டைய தனியார் சட்­டங்கள் குறித்தும் சொல்­லப்­ப­டு­வ­தாக இருந்­தாலும், இதன் உண்­மை­யான குறி முஸ்லிம் தனியார் சட்­டங்கள் என்­பது நன்கு விளங்கும். "சமூகப் பழக்க வழக்­கங்­களின் பொது­வான நீரோட்­டத்­தி­லி­ருந்து வேறு­பட்டு, மாறு­பட்டு செயற்­ப­டு­வது சமூ­கத்தின் ஒற்­று­மைக்கு பங்கம் விளை­விக்கும்" என்­பதே இந்த வாதத்தை முன்­னெ­டுப்­போரின் வாத­மாகும். 
 
இலங்கை வர­லாற்றின் சரித்­தி­ரத்தில் பல கறைபடிந்த காலங்­களை நாம் கண்­டி­ருக்­கிறோம். தற்­போ­தைய காலமும் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அப்­ப­டிப்­பட்ட ஒரு கால­மாகும். எப்­போதும் இல்­லா­த­வாறு பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் முஸ்­லிம்கள் பற்­றிய தப்­ப­பிப்பி­ராயங்கள், காழ்ப்­பு­ணர்ச்சி, குரோதம் என்­பன தற்­பொ­ழுது ஏற்­பட்­டுள்­ளன.
எரி­கிற நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வது போல், முஸ்­லிம்கள் சில­ரு­டைய தான்­தோன்­றித்­த­ன­மான, பொடு­போக்­கான உட­வ­டிக்­கைகள் அமை­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு சிலர் தமது திரு­மண வைப­வங்­களை பெரும் படாடோப­மான முறையில் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் போட்டி போட்டுக் கொண்டு பல இலட்சம் ரூபா செல­வ­ழித்து நடாத்­து­கின்­றனர். வீண்டாம்பீகத்துக்காக அந்­நிய மதத்­த­வர்­க­ளையும் இந்த வைப­வங்­க­ளுக்கு அழைக்­கி­ன்றன. இந்த ஆடம்­ப­ரங்­களைக் காணும் அவர்கள், முஸ்­லிம்கள் எல்­லோரும் குபே­ரர்கள் எனும் மன­நி­லைக்கு உள்­ளா­கின்­றனர். 
 
அந்­நி­ய­ருக்கு இதனால் ஒரு தவ­றான எண்­ணத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இஸ்லாம் கண்­டித்து ஒதுக்­கிய 'இஸ்ராப்" எனும் வீண் விர­யத்தை இவர்கள் செய்­வது மட்­டு­மல்­லாமல் எமது முழுச் சமு­தா­யத்­துக்கும் ஊறு விளை­விக்­கின்­றனர். இதுபோல் எமது முஸ்லிம் சமு­தா­யத்­துக்கு கேடு விளை­விக்கும் வேறு பல காரி­யங்­க­ளிலும் முஸ்­லிம்கள் ஈடு­ப­டு­வ­துடன், எந்த வித­மான தேசா­பி­மா­னமும் இல்­லாமல் முழு நாட்­டுக்கும் ஒட்டுமொத்த சமு­தா­யத்­துக்கும் பாதகம் விளை­விக்கும் காரி­யங்­களில் ஈடு­ப­டு­வ­தனை நாம் நாள் தோறும் கண்டும் கேட்டும் வருகிறோம்.
 
படா­டோ­பத்­தையும், ஆடம்­ப­ரத்­தையும் விரும்பும் சில­ரினால் முஸ்­லிம்­களைப் பற்­றிய தப்­பான அபிப்­பி­ரா­யத்தை அந்­நியர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­னாலும், இலங்கை முஸ்­லிம்­களின் உண்மை நிலை அதற்கு முற்­றிலும் நேர்­மா­றா­ன­தாகும். இலங்­கையில் பல நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் குக்­கி­ரா­மங்­களில் எந்த அடிப்­படை வச­தியும் இல்­லாமல் அன்­றாட வாழ்க்­கையை நடாத்­து­வது எப்­படி என்று கவ­லைப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் எம்­மத்­தியில் இருப்­பதை அந்­நியர் அறிய மாட்­டார்கள். 
 
முஸ்­லிம்கள் எல்­லோரும் வர்த்­த­க­கர்கள், வச­தி­ப­டைத்­த­வர்கள் என்ற மாயை அந்­நியர் மத்­தியில் இப்­போதும் இருந்து வரு­கி­றது. ஒரு காலத்தில் அப்­படி இருந்­தி­ருக்­கலாம். ஆனால் தற்­பொ­ழுது அந் நிலை இல்லை. இப்­போது முஸ்லிம் வர்த்­த­கர்கள் மத்­திய தரமும் அதற்கு கீழ்­ப்பட்ட தரத்­தையும் சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். 
 
இலங்­கையில் தற்­போது இருக்கும் பெரும் கூட்­டி­ணைந்த பன்­முக கம்­ப­னி­களில் (Conglomerates, groups)  முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய கம்­ப­னி­களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதேபோல் கிட்­டத்­தட்ட 300 எண்­ணிக்­கையைக் கொண்ட பங்குச் சந்­தையில் நிர­லிட்ட கம்­ப­னி­களில் (Stock Exchange listed Companies) இருப்­பதோ வெறும் 20 க்கும் குறைந்த கம்­ப­னி­க­ளாகும். இது எத்­தனை சத­வி­கிதம் என்­பதை நாமே கணக்­கிட்டுக் கொள்­ளலாம். 
 
அது மட்­டு­மல்­லாமல் மற்ற இனத்­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது முஸ்­லிம்கள் பல தசாப்­தங்கள் பின்­தங்­கிய நிலை­யி­லேயே இருக்­கின்­றனர் என்­பது விளங்கும். 
1. கல்­வியில் பின் தங்­கிய நிலை. 
2. பல்­கலைக்கழ­கங்­க­ளுக்கு எமது விகி­தா­சா­ரத்­துக்கும் குறைந்த எண்­ணிக்கை மாணவர் தெரி­வாதல். 
3. அர­சாங்க வேலை வாய்ப்­பு­களில் பெரும் பின்­ன­டைவு. 
4. வேலை வாய்ப்பு இருந்­தாலும் அதற்­கு­ரிய கல்வித் தகைமை இல்­லாமை. 
5. தகைமை இல்­லா­த­தனால் சிறு சிறு தொழில்­களில் ஈடு­படல். 
6. குறைந்த வேத­னத்­துக்கு வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்­க­ளாக செல்லல். 
7. வாழ்­வா­தா­ர­மாக நம்­பிக்­கொண்­டி­ருந்த வியா­பா­ரங்­களில் வீழ்ச்சி. 
 
இப்­ப­டிப்­பட்ட பாரிய குறை­பா­டுகள் எமது சமூ­கத்தில் நிலவி வரு­வதை பெரும்­பா­லானோர் தெரிந்தும் தெரி­யா­மலும் இருக்­கின்­றனர். புத்­தி­ஜீ­விகள் மற்றும் ஆய்­வா­ளர்கள் மேற் குறிப்­பிட்ட விட­யங்­களை ஆராய்ந்து புள்ளி விப­ரங்­களைத் திரட்டி முஸ்­லிம்­களின் இன்­றைய உண்­மை­யான நிலையை உல­குக்கு தெரி­யப்­ப­டுத்த வேண்­டி­யது காலத்தின் மிக மிக அவ­சி­ய­மான தேவை­யாகும். 
 
எல்­லோ­ருக்கும் பொது­வான ஒரு சட்டம் எனும் போது இலங்­கையில் குற்­ற­வியல் (Criminal) சம்­பந்­த­மான விட­யங்கள் தவிர்ந்த தனிப்­பட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு பல சட்­டங்கள் வேறு­பட்ட இனத்­த­வர்­க­ளுக்கு நிலவி வரு­கி­றது என்­பது புல­னாகும். அவை­யா­வன: 
1. கண்­டியர் சட்டம்,
2. தேச வழமை,
3. முஸ்லிம் சட்டம்,
4. முக்­குவர் சட்டம்,
5. வன்­னியர் சட்டம். 
மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட சட்­டங்­களில் முக்­குவச் சட்­டமும், வன்­னியர் சட்­டமும் இலங்கைத் தமி­ழர்­களைக் கட்டுப் படுத்தும் சட்­ட­மாக இருப்­ப­துடன், தேச­வ­ழமைச் சட்­டத்­துடன் கலந்து அநே­க­மாக வழக்­கொ­ழிந்து போனது போல் தென்­ப­டு­வ­தனால் மற்ற சட்­டங்­களைப் பற்றி சுருக்­க­மாக ஆராய்­வது இந்த சந்­தர்ப்­பத்தில் பொருத்­த­மாகும். கண்­டியர் சட்டம், தேச வழமை மற்றும் முஸ்லிம் சட்­டங்கள் பொதுப்­ப­டை­யாக ஒன்­றுக்­கொன்று பொருந்­தா­த­துடன் முஸ்லிம் சட்டம் ஆள்­வ­ழிச்­சட்­ட­மாக (Personal) வும் மற்ற இரண்டு சட்­டங்­களும் ஆட்­பு­லச்­சட்­ட­மாக (Territorial) இருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது. 
 
கண்­டியர் சட்டம் 
இலங்கை சிங்­கள அர­சனின் சிறைக்­கை­தி­யாக இருந்த ரொபர்ட் நொக்ஸ் (Robert Knox) தனது இலங்­கையின் சரித்­திரத் தொடர்பு என்ற நூலில் 'சட்டம் என்­பது இங்கு இல்லை. இருப்­பதோ அர­சனின் ஆணை மட்டும் தான். அவ்­வப்­போது அர­சனின் வாயி­லி­ருந்து வரு­வ­துதான் மாற்ற முடி­யாத சட்­ட­மாகும். என்­றாலும் அவர்­க­ளி­டையே சட்ட அந்­தஸ்­துள்ள சில சம்­பி­ர­தா­யங்­களும் மர­பு­களும் இருந்­தன" என்று கூறு­கிறார். எழுத்­தி­லான சில சட்­டங்­களும் சில அர­சர்கள் காலத்தில் இருந்­துள்­ளன. 2500 வரு­டங்­க­ளுக்கு முன் பௌத்த சமயம் இலங்­கைக்கு வந்த காலத்தில் இங்கு வந்த ஆரி­யர்­களின் வழிமுறைகள், பழக்க வழக்­கங்­களே இன்று கண்­டியச் சட்­ட­மாக விளங்கும் சட்­டத்­துக்கு மூல­ாதா­ர­மாக அமைந்­தன என்று சொல்­லப்­ப­டு­கி­றது. 
 
ஆரம்­ப­கா­லத்தில் அர­சனின் ஆணைகள், தொழில் வழிச்­சாதிப் பிரி­வினை, சொத்­து­ரிமை ஆகி­ய­வற்றை மைய­மாகக் கொண்­டி­ருந்­தன. சாதிப்­பா­கு­பாடு இலங்­கையில் வலுப்­பெற்­றி­ருந்­தது. தத்­த­மது இனத்­துக்குள் அல்­லது குலத்­துக்குள் மணம் முடிக்கும் மரபு இருந்­தது. சாதிக்கு சாதி விவாக முறைகள், மர­பு­ரிமை வழக்­கங்கள் மாறு­பட்டு வழக்கில் இருந்­தன. 
 
கண்­டியர் மற்­ற­வர்­களை விட மாறு­பட்ட உயர்­சா­தி­யினர் என்ற எண்ணம் இன்றும் உள்­ளதை நாம் அவ­தா­னிக்­கலாம். இதன் அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கைக்கு சுதந்­திரம் வழங்கும் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பித்த ஆரம்ப கால கட்­டத்தில் கண்­டியர் தமக்கு தனிப்­பி­ர­தேசம் வேண்டும் என்று முன்­மொ­ழிந்­தி­ருக்­கலாம் என்று எண்ணத் தோன்­று­கின்­றது.  
 
ஆங்­கி­லே­யர்­க­ளினால் இலங்­கையின் கண்டி இராச்­சியம் கைப்­பற்­றப்­பட்­டதன் பின் 1815 ஆம் ஆண்டில் கண்­டிய பிர­தா­னி­க­ளுக்கும் ஆங்­கி­லே­ய­ருக்­கு­மி­டையில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யின்­படி அப்­போது கண்­டியில் நில­வி­வந்த சட்­டங்கள் மற்றும் மர­புகள் அவ்­வி­தமே இருந்து வரும் என்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. 
ஆங்­கி­லேயர் காலத்­திலும் அதற்குப் பின்பும் கண்­டியர் சம்­பந்­த­மாக பல சட்­டங்கள் இயற்­றப்­பட்­டன. கண்­டியர் என்­பவர் யாவர் என்­பது சம்­பந்­த­மாக பல சட்­டத்­தீர்ப்­புக்கள் எங்கள் உயர் நீதி­மன்­றத்­தினால் காலத்­துக்குக் காலம் ஏரா­ள­மாக வழங்­கப்­பட்­டுள்­ளன. இந்தத் தீர்ப்­புக்­க­ளின்­படி எல்­லைக்குள் நிர்­ண­யிக்­கப்­பட்டு அந்த எல்­லைக்குள் வந்­த­வர்கள் 'கண்­டியர்' என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 
 
தற்­பொ­ழுது அமுலில் இருக்கும் கண்­டியர் சட்­டங்கள் கீழ்­வரும் விட­யங்கள் சம்­பந்­த­மாக அவர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன. 
1. திரு­மணம், திரு­மண முறிவு.
2. காணி பாரா­தீ­னப்­ப­டுத்தல். 
3. மக­வேற்பு (adoption) 
4. அசையும் அசையா ஆத­னங்­களில் பின்­னு­ரிமை (Inheritance) 
5. கணவன், மனை­வி­ய­ரு­டைய உரித்­துக்கள். 
6. முறை­யில்லா மணப்­பி­றப்பு (Illegitimate) பிள்­ளை­களின் உரித்­துக்கள். 
மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­களில் இலங்கை நீதி­மன்­றங்கள் கண்­டியர் சட்­டங்­களை அனு­ச­ரித்து கண்­டியர் சம்­பந்­த­மாக தீர்ப்­புக்கள் வழங்கி வரு­கின்­றன. இந்த வழக்­கு­க­ளின்­படி கண்­டியர் தமது தனியார் சட்­டங்­களை எந்­த­ளவு தீவி­ர­மாக பேணிப்­பா­து­காத்து வரு­கின்­றனர் என்று விளங்கும். 
 
தேச­வ­ழமை 
இலங்கை தமி­ழர்­களின் மர­பு­வழிச் (Customary) சட்­டங்­களுள், யாழ்ப்­பாணத் தமி­ழர்­களின் தேச­வ­ழமைச் சட்டம் மிகவும் விரி­வா­னதும் முக்­கி­ய­மா­ன­து­மான சட்­ட­மாகும். 
 
தேச­வ­ழமை வட­மா­கா­ணத்தில் வதியும் மலபார் தமி­ழர்­க­ளு­டைய மர­பு­வழி தனியார் சட்­ட­மாகும் என்றும் அவர்­க­ளு­டைய அசையும் அசையா சொத்­து­ரி­மைக்கு செல்­லு­ப­டி­யாகும் என்றும் இலங்கை உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. 
 
"Conquest of Ceylon" என்ற நூலில் 'டிகு­வேரஸ்" தேச­வ­ழமை சம்­பந்­த­மாகக் கூறிய சில குறிப்­புக்கள் தவிர போர்த்­துக்­கேயர் மர­பு­வழிச் சட்­டங்­களை கோவைப்­ப­டுத்த  முயற்­சிக்­க­வில்லை. டச்­சுக்­காரர் காலத்தில் 1707 ஆம் ஆண்டில் இது கோவைப்­ப­டுத்­தப்­பட்டு தமிழில் மொழி பெயர்க்­கப்­பட்­டது. 
 
ஆங்­கி­லே­யரின் 1799 ஆம் ஆண்டின் பிர­க­ட­னத்­தின்­படி டச்­சுக்­கா­ரர்­க­ளு­டைய ஆட்­சியில் நில­விய சட்­டங்கள் அனைத்தும் அதே வித­மாக அமுல் நடத்­தப்­படும் என்று கூறப்­பட்­டது, 
தேச­வ­ழமைச் சட்டம் முக்­கி­ய­மாக கீழ்­வரும் விட­யங்­களில் அதன் ஆட்­சிக்­குட்­பட்­டவர்கள் விட­யத்தில் அமுலில் இருக்­கி­றது. 
1) காணி 
2) பின்­னு­ரிமை ( Succession)
3) திரு­மணம் 
4) மகப்­பேற்பு
5) அய­லவர் காணியின் மேல் இருக்கும் உரிமை. (Servitude) 
6) விவ­சாயக் காணிகள் சம்­பந்­த­மான ஒப்­பந்­தங்கள். 
 
யாழ்ப்­பாணத் தமிழர் தமது மர­பு­ரிமை சார்ந்த மேற்­கு­றித்த சட்­டங்­களை எந்­த­ளவு கண்ணும் கருத்­து­மாகப் பேணிப் பாது­காத்து வரு­கின்­றனர் என்­பதை இலங்கை நீதிமன்­றங்­க­ளினால் வழங்­கப்­பெற்ற எண்­ணி­ல­டங்கா வழக்குத் தீர்ப்­புக்­க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளலாம்.  
முஸ்லிம் சட்டம் 
 
முஸ்லிம் சட்டம் என்­பது இறை­வனால் அருளப்பெற்ற திருக்­குர்­ஆனின் தெய்வீக சட்­டமும், பெரு­மானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்­டிய அங்­கீ­காரம் பெற்ற ஹதீ­ஸ்கள் ஒருங்­கி­ணைந்து ஷரீஆ சட்­ட­மாக இருப்­ப­துடன் பின் வந்த மார்க்க சட்­ட­வல்­லு­நர்கள் வழங்­கிய சட்ட விளக்­கங்கள், பத்­வாக்கள், தீர்ப்­புக்­களும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கி­றது. 
6666 வச­னங்­களைக் கொண்ட திருக்­குர்­ஆனில் ஏறக்­கு­றைய பத்தில் ஒரு பகுதி மார்க்க சட்­டங்­களைப் பற்றிக் கூறு­வ­தாக இருப்­பதைக் காணலாம். 
 
இஸ்­லாத்தின் ஆரம்ப காலத்தில் அரசும் மதமும் ஒன்­றுடன் ஒன்று இணைந்­தி­ருந்­ததைக் காணலாம். எனினும் காலப்­போக்கில் ஷரீஆ  சட்­டங்­களால் முற்று முழு­தாக ஆளப்­படும் அர­சுகள் இல்­லா­தொ­ழிந்து விட்­ட­துக்குப் பலவித­மான வெளித்­தாக்­கங்­களே காரணம். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடு­க­ளுக்கே இந்த நிலை என்றால் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் நாடு­களில் அவர்­க­ளு­டைய நிலை மிகவும் கீழ் நிலையில் உள்­ளதை இன்­றைய உலக நாடு­களை அவ­தா­னித்தால் நன்கு விளங்கும். 
 
பண்­டைய காலம் தொட்டே இலங்­கை­யுடன் அரா­பி­யர்­க­ளு­டைய தொடர்பு இருந்து வந்­துள்­ள­துடன் கி.பி. 10ஆம் நூற்­றாண்­ட­ளவில் இருந்து, இலங்­கையில் மேற்குக் கரை­யோரப் பகு­தி­களில் முஸ்­லிம்கள் வர்த்­தக நோக்­கத்­திற்­காக செறிந்து வாழ்ந்­த­தாக வர­லாறு கூறு­கி­றது. முஸ்­லிம்­க­ளு­டைய வர்த்­தகப் போட்­டி­யா­ள­ரான போர்த்­துக்­கே­ய­ரு­டைய வரு­கை­யுடன் முஸ்­லிம்கள் சிங்­கள அர­சர்­களின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையின் உள் நாட்­டுக்கு இடம் பெயர்ந்து செல்­லவும், வாழ்­வா­தா­ர­மாக வர்த்­த­கத்­துடன் வேறும் சில தொழில்­க­ளிலும் ஈடு­பட வேண்­டிய நிர்ப்பந்­தமும் ஏற்­பட்­டது.  
 
டச்சுக்காரர் காலத்தில் முஸ்­லிம்­களின் சட்­டங்­களும், மர­பு­களும், பழக்க வழக்­கங்­களும் ஆரா­யப்­பட்டு சட்டக் கோவை­யாக உரு­வாக்­கப்­பட்­டது. மர­பு­ரிமை, விவாகம், விவா­க­ரத்து மற்றும் தனிப்­பட்ட விவ­கா­ரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய சொந்த சட்­டங்­களே பிர­யோ­கி­க்­கப்­பட்­டன.  
 
போர்­த்துக்­கீசர் காலத்­திலும் முஸ்­லிம்கள் தமது சொந்த சட்­டங்­க­ளாலும் மர­பு­க­ளாலும் தொடர்ந்து கரு­ம­மாற்ற அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டனர். இதன் பின் ஆங்­கி­லேயர் காலத்­திலும் இலங்கை சுதந்­திரமடைந்­ததன் பின்பும், காலத்­துக்குக் காலம் சட்­டங்­களும் அவற்­றுக்குத் திருத்­தங்­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு தற்­போது இலங்கை முஸ்­லிம்கள் தமது தனிப்­பட்ட மதம் சார்ந்த தனியார் சட்­டங்­க­ளாக கீழ் வரும் விட­யங்­களில் கரு­ம­மாற்றி வரு­கின்­றனர். அவை­யா­வன: 
1. விவாகம் மற்றும் விவா­க­ரத்தும் அத­னோடு தொடர்­பு­டைய எல்லா விட­யங்­களும். 
2. வாரி­சு­ரிமை (inheritance) மற்றும் நன்­கொடை (Gift)சம்­பந்­த­மான விட­யங்கள். 
3. பள்­ளி­வா­சல்கள், நம்­பிக்­கைப்­பொ­றுப்பு, வக்ப் செய்­யப்­பட்ட சொத்­துக்கள் பற்­றிய விவ­கா­ரங்கள். 
 
இலங்கை முஸ்­லிம்கள் பெரும்­பாலும் ஷாபி மத்­ஹபைச் சேர்ந்­த­வர்கள். முஸ்லிம் சட்டம் ஆள் வழிச் சட்­ட­மாக (Personal) இருப்­ப­தனால் அவர்கள் இலங்­கையின் எப்­ப­கு­தி­யி­லிருந்­தாலும் அவர்கள் ஷாபி மத்­ஹபின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­ட­வர்கள் ஆவர் என்று இலங்கை நீதி­மன்­றங்கள் இடை­ய­றாது தீர்ப்­ப­ளித்­துள்­ளன. 
 
இலங்கை முஸ்­லிம்கள் தமக்கு அளிக்­கப்­பட்­டுள்ள தனியார் சட்­டங்கள் துணை கொண்டு தமது உரி­மை­களை நிலை நாட்டிக் கொள்­வ­தற்கு தமது விகி­தா­சா­ரத்­திற்கு அதி­க­மா­கவே நீதி­மன்­றங்­களில் வழக்­கா­டு­கின்­றனர் என்று சட்ட நூல்­களை ஆராய்­வதால் விளங்கிக் கொள்ள முடியும். 
 
மேற் கூறப்­பட்ட கண்­டியர் சட்டம், தேச­வ­ழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் ஆகி­யன உரி­மை­யி­யலை (CIvil) ச் சார்ந்த சட்­டங்­க­ளாகும். குற்­ற­வியல் (Criminal) சம்­பந்­த­மான விட­யங்கள் அனைத்­திலும் இந்த சட்­டத்­துக்கு உட்­பட்­ட­வர்கள் அனை­வரும் எல்­லோ­ருக்கும் பொது­வான Penal Code, - Criminal Procedure, - Evidence Ordinanceஆகிய சட்­டங்­க­ளுக்கு உட்­பட்­ட­வர்­க­ளாவர். ஏனெனில், பொது நல­னுக்கும், பாது­காப்­புக்கும் தனி­ம­னி­தனின் பாது­காப்­புக்கும் அர­சாங்­கமே பொறுப்பு. இது சம்­பந்­த­மாக எவ­ரேனும் செய்யும் குற்றம் அர­சாங்­கத்­திற்கு விரோ­த­மாகச் செய்யும் குற்­ற­மாக கணிக்­கப்­படும். அத­னா­லேயே இப்­படிப்பட்ட சந்­தர்ப்­பங்­களில் வழக்குத் தொடரும் வாதி அர­சாங்­க­மாகும்.  
 
மக்­களின் மன நீரோட்­டத்தை அனு­ச­ரித்து ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்­சி­யாளர், இந்­தி­யாவை ஆட்சி செய்யும் போது தங்கள் கொள்­கை­யாக அப்­போ­தைக்கு நில­விய முஸ்லிம் மற்றும் ஹிந்து சட்­டங்­களை அனு­ச­ரித்து கரு­ம­மாற்­றினர். 
'பெரிய பிரித்­தா­னி­யாவின் ஆட்­சிக்­குப்­பட்ட இந்­தி­யாவில் இருக்கும் ஹிந்­துக்­க­ளுக்கும், முஸ்­லிம்­களுக்கும் அவர்­க­ளு­டைய தனிப்­பட்ட விவ­கா­ரங்­களில், அவ­ர்கள் இது­கால வரை கடைப்­பிடித்து வந்த, தாம் புனி­த­மா­னது என்று கரு­து­வதும், இல்­லாமல் ஒழிக்­கப்­பட்டால் பெரும் அடக்­கு­முறை என்றும் கரு­து­வ­து­மான சட்­டங்கள், சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு நாம் சட்ட அங்­கீ­காரம் வழங்­கு­வது நீதி­யாகும்." 1858 ஆம் ஆண்டு W.H. Morley  தனது Administration of Justice in British India என்ற நூலில் இப்­ப­டிக்­ கூ­றி­கிறார். பிரிட்டிஷ் இந்­தி­யாவில் 'வாரன் ஹேஸ்டிங்ஸ்" காலத்தில் முதன் முதலில் மாற்­றங்கள் ஏற்­பட்­டன. 1937 ம் ஆண்டு இயற்­றப்­பட்ட முஸ்லிம் ஷரீ­ஆ ­சட்­டத்தின் மூலம் (Muslim Shariat Application  ACT 1937)அதில் கூறப்­பட்­டுள்ள பத்து விட­யங்­க­ளுக்கு முஸ்­லிம்­க­ளுக்கு அந்த சட்ட அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­பட்­டது. 
 
மதம் எப்­படி மக்­க­ளுக்கு புனி­த­மா­னதும், உணர்ச்­சி­பூர்­வ­மா­னதும், மாற்­றி­ய­மைக்க முடி­யா­ததும், பத­ிலீடு செய்ய முடி­யா­ததோ (Invioliable) அதே போலவே அவர்­க­ளு­டைய தனிப்­பட்ட தனியார் சட்­டங்­க­ளு­மாகும். இவை தெய்வீக வெளிப்­பா­டு­க­ளா­கவோ, வாழை­யடி வாழை­யாக வந்த வழி முறை­க­ளா­கவோ, நூற்­றுக்­க­ணக்­கான வரு­டங்கள் நிலவி வந்த சம்­பி­ர­தாங்­க­ளா­கவே ஒன்­றோ­டொன்று பின்னிப் பிணைந்து இருப்­பதே இதற்­குக் காரணம். 
இத­னா­லேய 'மொர்லி" அவர்கள் 160 வரு­டங்­க­ளுக்கு முன்னால் மிக துல்­லி­ய­மாக எடுத்துக் காட்­டி­யுள்­ளது இப்­போ­தைக்கும் மிக மிகப் பொருத்த­மா­ன­தாக இருக்­கி­றது. 
 
இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் இந்­திய குடி­மக்கள் எல்­லோ­ருக்கும் ஒன்று போல் மத­சு­தந்­தி­ரத்­துக்கு உரிமை அளிக்­கி­றது. மதச்­சார்­பின்மை (Secularism) என்ற சொற்­றொடர் அர­சி­ய­ல­மைப்புச் சட்டப் பிரிவின் முகப்­பி­லேயே சேர்க்­கப்­பட்­டுள்­ளது. சமயச் சார்­பின்மை அர­ச­ியலமைப்புச் சட்­டத்தின் அடிப்­படை அம்சம் ஒன்று உயர் நீதி­மன்றம் தீர்த்­துள்­ள­துடன், அரசை பொறுத்­த­மட்டில் குடி­மக்­க­ளி­டேயே நல்­லி­ணக்­கத்தை உண்டுபண்ணி நல்ல ஒற்­று­மை­யோடு நாட்டு மக்கள் வாழ வகை செய்­யப்­பட வேண்டும் எனவும் கூறப்­பட்­டது, 
 
எமது நாட்­டிலும் பல மொழி பேசு­ப­வர்­களும், பல மதத்­த­வர்­களும், இனத்­த­வர்களும் வாழ்ந்து வரு­வதால் அவர்­க­ளு­டைய ஒற்­று­மைக்கும், ஒரு­மைப்­பாட்­டிற்­கா­கவும், அதே வேளையில் அவ­ரவர் தனித்­தன்மை, கலா­சாரம், மதக்­கோட்­பாடு, பழக்க வழக்­கங்கள் சுதந்­தி­ர­மாகப் பேணிப்­பா­து­காக்­கப்­பட வேண்டும். வேற்­று­மையில் ஒற்­றுமை (Unity in Diversity) கண்டு நாட்டின் ஒருமைப்பாட்­டுக்கும், மக்­க­ளி­டையே ஒற்­று­மைக்கும் வசதி செய்தல் வேண்டும். இத­னையே திருக்­குர்ஆன் மிக அழ­காக கீழ்வரும் வித­மாக விவ­ரித்­துள்­ளது. 
 
'நபியே ! நீர் கூறு­வீ­ராக, நிரா­க­ரிப்­பா­ளர்­களே! நீங்கள் வணங்­கு­ப­வற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்­கு­ப­வனை நீங்கள் வணங்­கு­ப­வ­ரு­மல்லர். நீங்கள் வணங்­கு­ப­வற்றை நான் வணங்­கு­ப­வ­னு­மல்லன், நான் வணங்­கு­ப­வனை நீங்கள் வணங்­கப்­போ­வ­து­மில்லை. உங்­க­ளுக்கு உங்கள் மார்க்கம். எங்களுக்கு எங்கள் மார்க்கம்" (109,1-6) 
மத சுதந்­திரம் என்­பது எமது அர­சி­யல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே எல்லா இன மக்­க­ளுக்கும் பொது­வான ஒரே சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற வாதம் என்­பது இலங்கை சமு­தாய கட்­ட­மைப்­பையே சீர­ழித்து ஆட்டம் காணச் செய்து நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதகம் விளைவிக்கும். இதனால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தனியார் சட்டங்களினால் ஆளப்பட்டு அவற்றைப் பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வரும் மற்ற இனத்தவர்களும் பாதிக்கப்படுவர். அவர்களும் இந்த முன்னெடுப்புக்களை வன்மையாக எதிர்ப்பர் என்பது திண்ணம். 
 
மனிதர்கள் பல பிரிவினராக இருப்பது இறைவனது நியதி. இதனையே திருக்குர்ஆன் கீழ் வருமாறு கூறுகிறது. 
'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரே ஆண் பெண்ணிலிருந்து படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (49.13) 
இந்த நியதிப்படியே ஒவ்வொரு படைப்பும் தத்தமது கருமங்களை எல்லை மீறாமல் செய்து வந்தால் உலகில் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்து விடலாம். இதனையே இறைவன் திருக்குர்ஆனில் அழகான முறையில் கீழ் வருமாறு கூறியுள்ளான். 
 
'அவனே இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான். அவற்றுக்கிடையில் ஒரு தடுப்பும் இருக்கிறது. அவை அதனை மீறுவதில்லை.(55:19-20) 
 
இனங்களுக்கிடையில் அவ நம்பிக்கையும், விரிசல்களும் ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் மக்களை மேலும் பிளவுபடுத்தும் எண்ணங்களை சிலர் தமது சொந்த இலாபத்திற்கு விதைக்க முயற்சிப்பது பெரும் விசனத்துக்குரியதாகும். இது எமது நாட்டு மக்களிடையே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எமது நாட்டு நலனுக்கே குந்தகம் விளைவிக்கும். 
 
எந்த விதமான இயற்கை வளங்களும் இல்லாமலும் பல மொழிகள் பேசும் பல்லின மக்கள் வாழும் நாடான சிங்கப்பூர் குறுகிய காலத்தில் உலகில் செல்வந்த நாடுகளில் ஒன்றாக மாறியது எமக்கு பெரும் உதாரணமாகும். 
அங்குள்ள மக்களிடையே புரிந்துணர்வும், நல்லிணக்கமும், சட்டத்தை மதித்து அதற்கு கட்டுப்படும் தன்மையும் உண்மையான தேசாபிமானமும், தூர நோக்குள்ள மாசற்ற தலைவர்களும் அமைந்ததே இந்த மாற்றத்துக்கு காரணம் என்பது வெளிப்படை. 
 
அப்படிப்பட்ட ஒரு நிலை எமது தாய்த்திருநாட்டுக்கும் கிட்டுவதாக என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.  
-Vidivelli