Verified Web

சிகிச்சைக்கு வருவோரின் பசி போக்கும் இலவச முஸ்லிம் உணவகம்

2018-04-23 03:21:21 Administrator

சிங்­க­ளத்தில்:  பிரகீத் சம்பத் கரு­ணா­தி­லக
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்

முஸ்லிம் கடை­களில் வாங்கும் ஆடை அணிகள், உண­வுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலு­றைகள் போன்­ற­வற்­றி­லெல்லாம், மல­டாக்கும் மருந்­துகள், உள்­ள­தாக புழுகு மூடை­களைக் கட்­ட­விழ்க்கப் போய் சிங்­கள –முஸ்லிம் உறவைச் சிதைத்து இன மோத­லுக்­குத்தான் வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பின்னணியில் எழுந்த கர்ப்­பத்­தடை மாத்­திரை சமா­சாரம் நாட்­டையே பெரும் கொந்­த­ளிப்பில் ஆழ்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

உணவு உண்­டபின் நான்கு மணித்­தி­யா­லங்­களில் மல­மாகி கழி­வ­றைக்குள் தள்­ளப்­படும் கொத்­து­ரொட்­டியில் கர்ப்பத் தடை மாத்­திரை இருந்­த­தாக சொல்லும் மாய­மந்­தி­ரத்தால் அம்­பா­றையில் மூண்ட தீ கண்­டியில் புகுந்து விளை­யா­டி­யது.

தனிப்­பட்ட பிரச்­சி­னையால் மூண்ட சண்­டையில் மாண்டு போன ஓரு­யிரை முன்­வைத்து சிங்­கள– முஸ்லிம் சமூ­கங்கள் ஒன்­றை­யொன்று வெறுப்­போடும், பகைமை உணர்­வோடும் நோக்கும் நிலைக்குத் தள்­ளி­யுள்­ள­மைதான் கண்ட பலன். 

இப்­ப­டி­யான கலா­சாரம் ஒன்று வளர்க்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லைக்கு மத்­தியில் இன, மத, குல பேதங்­களை யெல்லாம் புறந்­தள்­ளிக்­கொண்டு இயங்கும் இல­வச உண­வ­க­மொன்று எங்கள் கண்­க­ளுக்கும் நல் விருந்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கே­யுள்ள டீ சேரம் வீதியில் விபு­ல­சேன மாவத்தை என்ற ஒழுங்­கை­யொன்று ஊட­றுத்துச் செல்­கி­றது. அந்த ஒழுங்­கைக்குள் திரும்­பி­யதும் இடப்­பக்­க­மாக 150 ஏ இலக்­கத்­தி­லேயே கண்­ணையும் கருத்­தையும் கவர்ந்­தி­ழுக்கும் அந்த மகத்­தான மக்கள் உண­வகம் காட்சி தரு­கி­றது.

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அன்­றாடம் சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளிகள் அவர்­க­ளோடு துணைக்கு வருவோர்… என்­றெல்லாம் அனை­வ­ருக்கும் காலை வேளை பகல் வேளை என்று பசி­யார முற்­றிலும் இல­வ­ச­மாக உண­வுகள் பரி­மா­றப்­ப­டு­கின்­றன.
முஸ்லிம் கோடீஸ்­வர வர்த்­தகர் ஒரு­வரின் தாராளத் தன்­மையின் வெளிப்­பா­டாக மக்­களைப் போஷிக்கும் இந்த அரும்­பெரும் உண­வகம் வழி நடத்­தப்­பட்டு வரு­கி­றது. இங்கு மட்­டு­மல்­லாது களு­போ­வில வைத்­தி­ய­சாலை, மஹ­ர­கம புற்­று­நோ­யாளர் வைத்­தி­ய­சா­லை­போன்ற இடங்­க­ளுக்கு அரு­கா­மை­யிலும் இப்­ப­ரோ­ப­கா­ரியின் இல­வச உண­வ­கங்கள் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. அன்­றாடம் காலை, பகல், இரு­வேளை ஆகா­ரங்கள் இன, மத, குல பேதங்­க­ளுக்­கப்பால் வருவோர் அனை­வ­ருக்கும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையை மைய­மாக வைத்து அதன் அருகே அமையப் பெற்­றுள்ள புண்­ணிய உண­வகம் முஹம்­மது நாஸர் என்ற முஸ்லிம் செல்­வந்த பரோ­ப­கா­ரி­யாலே வழி­ந­டத்­தப்­பட்டு வரு­கி­றது. இந்த உண­வ­கத்தில் சிங்­களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்­க­ளையும் சார்ந்த ஊழி­யர்கள் பணி­பு­ரி­கின்­றனர். சம்­ப­ளத்­திற்கு பணி­யா­ளர்­களை அமர்த்­தி­ய­போ­திலும் முற்­றிலும் இல­வ­ச­மா­கவே உண­வுகள் வழங்­கி­வரும் இந்த செல்­வந்தர் ஆத்ம திருப்தி ஒன்­றையே எதிர்­பார்த்து இக்­கா­ரி­யத்தில் தன்னை அர்ப்­ப­ணித்து வரு­கிறார்.

தேசிய வைத்­தி­ய­சா­லையின் வெளி­நோ­யாளர் பிரி­வுக்கு நாட்டின் தூர இடங்­களில் இருந்தும் கொழும்­புக்கு அயல் பிர­தே­சங்­களில் இருந்தும் பெருந்­தொ­கை­யானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்­கின்­றனர். இவர்­க­ளுக்குப் புறம்­பாக வைத்­தி­ய­சா­லையின் விலங்கு நோய்ப் பிரிவு, சிறு­நீ­ரக பிரிவு போன்ற பிரி­வு­க­ளுக்கும் அநு­ரா­த­புரம், புத்­தளம், பொலன்­ன­றுவை, வவு­னியா, அம்­பாறை, ஹம்­பாந்­தோட்டை, மலை­யகப் பகுதி போன்ற இடங்­களில் இருந்­தெல்லாம் வரு­வோ­ருக்கு இந்த உண­வ­கமே வரப்­பி­ர­சா­த­மாக அமை­கி­றது. மேற்­படி வைத்­தி­ய­சா­லையை அண்­டிய பகு­தி­களில் உள்ள வியா­பார நோக்­கி­லான உண­வ­கங்­களில் கொள்ளை விலை­க­ளிலே உணவு சிற்­றுண்டி வகைகள் விற்­கப்­ப­டு­கின்­றன. அங்கும் சுத்தம், சுகா­தாரம் கூட பேணப்­ப­டு­வது குறைவு. இந்த இலட்­ச­ணத்தில் தூர இடங்­களில் இருந்து வருவோர் பணிஸ் போன்ற எளி­மை­யான சிற்­றுண்­டி­க­ளையோ, தேநீர், தண்­ணீ­ரையோ மாத்­திரம் எடுத்துக் கொண்டு அரை­குறை வயிற்­றோ­டுதான் செல்­கின்­றனர். இந் நிலையில் மேற்­படி அன்­ன­தான உண­வ­கத்தின் புண்­ணிய பணி சொல்­லுந்­த­ர­மன்­றல்­லவா? 

அதி­கா­லை­யிலோ அல்­லது முதல் நாள் இரவோ வந்து வைத்­தி­ய­சாலை வட்­டா­ரத்தில் அங்­கு­மிங்கும் தங்கி, வரி­சையில் இடம்­பி­டித்து மருந்­தெ­டுத்துச் செல்­கையில் எத்­த­னையோ இடர்­பா­டு­க­ளுக்கு முகம் கொடுப்­பது இயல்பு. இப்­படி வரும் நோயா­ளி­களும் அவ­ருக்குத் துணை­யாக வரு­ப­வர்­களும் வசதி படைத்­த­வர்கள் அல்லர். வச­தி­யி­ருப்பின் இவர்கள் தனியார் வைத்­திய நிலை­யங்­க­ளை­யல்­லவா நாடு­வார்கள். 

இத்­த­கை­யோ­ருக்கு ஒரு கவளம் உண­வேனும் புண்­ணி­ய­மாகக் கிடைப்­ப­தென்றால் அது அமிர்­தத்­திலும் மேலா­கவே இவ் ஏழை மக்கள் கரு­து­வதில் தப்­பில்லை.

இங்கு வந்து உணவு உட்­கொண்டு, பசி­யா­றுவோர், இது முஸ்லிம் உண­வகம் என்று புறக்­க­ணிப்புச் செய்­வ­தில்லை. 
இங்கு கர்ப்­பத்­தடை மாத்­திரை கலக்­கப்­ப­டு­வ­தாக சந்­தே­கிப்­ப­தில்லை. 
இஸ்லாம் சம­யத்­துக்கு உள்­ளீர்ப்­ப­தாக பீதி கொள்­வ­தில்லை. இன­வாதக் கண்­ணோட்­டத்­துடன் நோக்­கு­வ­து­மில்லை. இன்று உண்­டு­க­ளித்­தவர் நாளை மீண்டும் சிகிச்­சைக்கு வர­வேண்­டி­யி­ருக்கும். அல்­லது நாளை மறு­நாளோ அல்­லது ஒரு­வாரம், இரு வாரங்கள் ஏன் ஒரு மாதம் கழித்தோ சிகிச்­சைக்கு மீண்டும் வரும் தேவை­யுள்ளோர் இங்கு வந்து மீண்டும் மீண்டும் உண்­பதை வழக்­க­மாக்கிக் கொள்­கின்­றனர். அந்­த­ள­வுக்கு திருப்­தி­யான உணவு, அன்­பான உப­ச­ரிப்பு, சுய சேவையில் தேவைக்­கேற்ப பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய வசதி இப்­படிப் பல நன்­மைகள். ஏழை­களின் பசி போக்க ஐந்து சத­மேனும் ஈயாத பலர், இன­வாதம் குறித்து தீ மூட்டித் திரி­கின்­றனர். இத்­த­கை­யோரின் கண்­க­ளுக்கு முஸ்லிம் ஒருவர் நடத்தும் இப்­புண்­ணிய இடம் தென்­ப­டு­வ­தில்லை. 500 பேரை இலக்கு வைத்தே பகல் உணவு தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் இத்­தொ­கை­யையும் தாண்டி வரு­வோ­ருக்கும் சமா­ளித்து உணவு பரி­மா­றப்­ப­டு­வது வழக்கம்.
இஸ்­லா­மிய சம­யத்தில் இறை­வனை வணங்­கு­வது போன்றே பிற­ருக்கும் இயன்ற வரையில் உதவி, உப­கா­ரங்கள் செய்­வதும் ஒரு வணக்கம் என்றே வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றதாம். வேத நூல் குர்­ஆ­னிலும் வணக்­கத்தை எடுத்துச் சொல்லும் அதே தொடரில் தருமம் செய்­வதன் அவ­சி­யமும் எடுத்­தோ­தப்­பட்­டுள்­ளதாம். இதனால் சிறு வய­தி­லி­ருந்தே இச் செயற்­பாட்­டுக்கு முஸ்­லிம்கள் பழக்­கப்­ப­டு­கி­றார்கள். எனவே இத்­த­கைய உண­வ­கங்கள் முஸ்­லிம்­களால் வழி நடத்­தப்­ப­டு­வது ஒன்றும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

புத்த தர்­மத்­திலும் தர்மம் செய்­வது குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புத்­த­ச­ம­யத்தின் ‘சிங்கா லோவாத’ சூத்­தி­ரத்தில் பொரு­ளீட்டல், சேமிப்பு, செலவு செய்தல், அடுத்­த­வ­ருக்கு உத­வுதல் என்­பன மனித தர்­ம­மாகும் என்று போதிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யி­ருந்தும் அப்­போ­த­னைகள் பின்­பற்­றப்­ப­டு­வதில்லை. இன்று அந்­தந்த மதங்­களைப் பின்­பற்­றுவோர் அந்­தந்த மதங்­களைச் சேர்ந்­தோ­ருக்கு மட்­டுமே தான தர்­மங்­களைச் செய்­கி­றார்கள். இந்த நிலைக்கு சமூ­கத்தில் வேற்­றுமை மனோ நிலை வேரூன்­றி­யுள்­ளது. இத்­த­கைய சமூக அமைப்­புக்­குள்தான் மேற்­படி புண்­ணிய உண­வகம் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. 

காலை வேளை 150  பேருக்கும் பகல் வேளை 450– 500 பேருக்கும் இல­வச உணவு வழங்­கப்­ப­டு­கி­றது. மீன் கறியும் இரண்டு அல்­லது மூன்று மரக்­கறி வகை­க­ளுடன் கூடிய சோறு வழங்­கப்­ப­டு­கி­றது. சில சந்­தர்ப்­பங்­களில் கோழி புரியாணியும் பரிமாறப்படுகிறது. கை, கால், முகம் கழுவுவதற்கும் புறம்பான அறையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மலசலகூட வசதிகளும் உள்ளன. ஆரம்பத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறு இடத்தில் தான் நடத்தப்பட்டு வந்தது. இன்று பரந்த மனம் போல பரந்து பட்ட இடம் ஒன்றில் அழகிய பூச்செடி, கொடிகள் மத்தியில் கண்ணைக் கவரும் விதத்தில் இந்த உணவகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உணவுத் துணிக்கைகளோ, கடதாசித் துண்டுகளோ கீழே சிதறிக் கிடக்காதவாறு உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகின்றது. இங்கு வந்து பயன்பெற்றுச் செல்வோர் உணவக உரிமையாளரான முஹம்மத் நாஸருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டுமென ஆசிர்வதிக்கும் போது எனக்கல்ல, இறைவனுக்கு நன்றி தெரிவியுங்கள் என்றே அவர் கூறுவதையும் அவதானிக்க முடிகிறது.

நன்றி: மவ்பிம

-Vidivelli