Verified Web

கருணையை கொள்கையாக போதிக்கும் கலப்பற்ற மார்க்கம்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-04-20 02:56:41 T.M.Mufaris Rashadi

பல கிளைகளைக் கொண்ட ஈமானின் உயர்ந்த நிலை அல்­லாஹ்வை முழு­மை­யாக நம்பி அவனை மாத்­திரம் வணங்கி வழி­ப­டு­வ­தனை வாழ்­வியல் நெறி­யாக கொள்­வ­தாகும், அதன் தாழ்ந்த நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்­கூ­டி­ய­வற்றை அகற்­று­வ­தாகும் என்று இஸ்லாம் போதிக்­கின்­றது. 

ஈமானின் உயர்ந்த நிலையில் உறு­தி­யாக உள்ள ஒருவர் அதன் தாழ்ந்த நிலை­யிலும் உறு­தி­யாக இருந்தால் மாத்­தி­ரமே அவ­ரது ஈமான் பூர­ணத்­துவம் பெறு­கின்­றது என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: ஈமான் என்­பது எழு­ப­துக்கும் அதி­க­மான கிளை­களைக் கொண்­ட­தாகும். அவற்றில் உயர்ந்­தது வணக்­கத்­திற்­கு­ரிய இறைவன் அல்­லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறு­வ­தாகும். அவற்றில் தாழ்ந்த நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்­கூ­டி­ய­வற்றை அகற்­று­வ­தாகும். அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி) – நூல் : முஸ்லிம் (51)
இந்த நபி­மொ­ழியில் ஈமானின் தரா­தரம் பற்றி பேசப்­பட்­டி­ருப்­பினும் கூட இங்கு இந்த செய்தி பிற­ம­னி­தர்­க­ளுக்கு நலவு நாடுதல், பிற­ரது துயர்­களை நீக்கி மனி­தநே­யத்தை வலி­யு­றுத்­துதல் போன்ற உள­நி­லையை ஈமா­னிய உள்­ளங்கள் பெற்­றி­ருக்க வேண்டும் என்­ப­த­னையே போதிக்க வரு­கின்­றது என்­பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 
மனி­தர்­க­ளுக்கு இடை­யூறு தரும் பொருட்­களை பாதை­யி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­துதல் ஈமான் சார்ந்த அம்சம் எனில் பிற­ருக்கு நோவினை செய்­வதோ அவர்­க­ளுக்கு தொந்­த­ர­வாக இருப்­பதோ இஸ்­லாத்தின் பார்­வையில் எவ்­வ­ளவு பயங்­க­ர­மான குற்­றச்­செயல் என்­ப­தனை இதி­லி­ருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும். 

(ஒரு நாள்) நாங்கள் முற்­பகல் நேரத்தில் அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­க­ளிடம் இருந்தோம். அப்­போது செருப்­ப­ணி­யாத (அரை) நிர்­வா­ணி­களாய் வட்­டமாய் கிழிந்த கம்­பளி ஆடை அல்­லது நீளங்கி அணிந்த ஒரு கூட்­டத்தார் தம் (கழுத்­து­களில்) வாட்­களைத் தொங்க விட்­ட­வர்­க­ளாக அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­க­ளிடம் வந்­தார்கள். அவர்­களில் பெரும்­பா­லானோர் முழர் கோத்­தி­ரத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தனர்.

அவர்­க­ளு­டைய ஏழ்­மையைக் கண்ட அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­களின் முகம் நிறம் மாறி­விட்­டது. உடனே அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்­டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்­க­ளிடம் உத்­த­ர­விட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறி­விப்புச் செய்து இகா­மத்தும் கூறி­னார்கள்.

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்­க­ளுக்கு உரை நிகழ்த்­தி­னார்கள். அப்­போது, ''மக்­களே! உங்­களை ஒரே ஆன்­மா­விலி­ருந்து படைத்த உங்கள் இறை­வனைப் பயந்து கொள்­ளுங்கள்'' எனும் (4:1) இறை வச­னத்தை முழு­மை­யாக ஓதிக் காட்­டி­னார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்­தி­யா­யத்­தி­லுள்ள ''நம்­பிக்­கை­யா­ளர்­களே! நீங்கள் அல்­லாஹ்­வுக்கு அஞ்­சுங்கள். ஒவ்­வொரு ஆன்­மாவும் நாளைக்­கென்று தாம் எதை முற்­ப­டுத்­தி­யுள்ளோம் என்­பதை பார்த்துக் கொள்­ளட்டும். அல்­லாஹ்­விற்கு அஞ்­சுங்கள்'' எனும் (59:18)வது வச­னத்­தையும் ஓதிக்­காட்டி (முளர் கூட்­டத்­தா­ருக்கு தர்மம் செய்­யு­மாறு கூறி)னார்கள், அப்­போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்­டை­யேனும் (தர்மம் செய்­யு­மாறு அறி­வு­றுத்­தி­னார்கள்) உடனே (நபித்­தோ­ழர்­களில்) ஒவ்­வொ­ரு­வரும் தம்­மி­ட­மி­ருந்த பொற்­கா­சு­க­ளிலி­ருந்தும் வெள்ளிக் காசு­க­ளி­ருந்தும் ஆடை­க­ளி­லிருந்தும் கோது­மை­யி­லிருந்தும் பேரீத்தம் பழத்­தி­லி­­ருந்தும் ஓர­ள­விற்கு தர்மம் செய்­தார்கள், அப்­போது அன்­சா­ரி­களில் ஒருவர் பை (நிறையப் பொருட்­களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடி­யாமல் அவ­ரது கை திணறும் அள­விற்கு தூக்க முடி­யாத தர்மப் பொருட்­க­ளுடன் வந்தார், பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்­களின் தர்மப் பொருட்­க­ளுடன்) வந்து கொண்டு இருந்­தனர். இறு­தியில் உணவுப் பொருட்­க­ளாலும் ஆடை­க­ளாலும் இரு குவி­யல்கள் சேர்ந்து விட்­டதை நான் கண்டேன். அப்­போது அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்­டி­ருப்­ப­தையும் கண்டேன். அறி­விப்­பவர்: ஜரீர் பின் அப்­தில்லாஹ்(ரலி) நூல்: முஸ்லிம் (1691)
ஈமானை முழு­மைப்­ப­டுத்­து­கின்ற நல்ல பண்­பா­டு­களும் இரக்­க­கு­ணமும் எவ­ரிடம் நிறைந்து காணப்­ப­டு­கின்­றதோ அவரே முஃமின்­களில் மிகச்­சி­றந்­த­வ­ராக கரு­தப்­ப­டு­கிறார், அதே போன்று தான் மேலுள்ள செய்­தியில் குறிப்­பி­டப்­ப­டு­வது போல் ஈமா­னிய உள்ளம் கொண்­ட­வர்கள் தங்­க­ளது ஒவ்­வொரு செயற்­பா­டு­க­ளிலும் கரு­ணை­யையும், மனித நேயப்­பார்­வை­யையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பார்கள், அதன் விளை­வா­கவே அவர்­க­ளது செயற்­பா­டுகள் ஒவ்­வொன்றும் அல்­லாஹ்வின் திருப்­தியை மாத்­திரம் இலக்­காகக் கொண்­ட­தாக அமைந்து விடு­கின்­றன. 
நபி (ஸல்) அவர்­க­ளுக்குப் பணி­விடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசா­ரிப்­ப­தற்­காக அவ­னி­டத்தில் வந்து அவ­னு­டைய தலைக்கு அருகில் அமர்ந்­தார்கள். அறி­விப்­பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (1356)

நோயுற்ற சிறுவன் எந்த குலத்தைச் சார்ந்­தவன் எந்த மதத்தைச் சார்ந்­தவன் என்ற இன,மத பேத­மற்ற மனித நேய­மிக்­க­வர்­க­ளா­கவே நபி­களார் (ஸல்) அவர்­களும் தமது தோழர்­களும் செயற்­பட்­டுள்­ளனர். பிற­ருக்கு உண்ண உண­வ­ளிப்­பது, அணிந்­து­கொள்ள ஆடை­களை வழங்­கு­வது நோயேற்­பட்டால் சுகம் விசா­ரிப்­பது போன்ற விவ­கா­ரங்­களில் அனை­வரை விடவும் மிக அழ­கிய முன்­மா­தி­ரி­யா­கவே ஒரு முஸ்லிம் வாழ கட­மைப்­பட்­டுள்ளான். 

நபி (ஸல்) அவர்­களை ஒரு பிரேதம் கடந்து சென்­றது. உடனே நபி­ய­வர்கள் எழுந்து நின்­றார்கள். அப்­போது அவர்­க­ளி­டத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்­கா­கவா நீங்கள் எழுந்து நிற்­கி­றீர்கள்?)'' என்று கேட்­கப்­பட்­டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறி­னார்கள். அறி­விப்­பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரலி) நூல்: புகாரி (1313)
ஒரு யூதப் பெண்­மணி நபி (ஸல்) அவர்­களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்­கப்­பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்­களும் அதை உண்டு விட்­டார்கள். இதை­ய­றிந்த சஹா­பாக்கள் அப்­பெண்­ம­ணியை நபி­ய­வர்­க­ளிடம் அழைத்து வந்து ''இவளை நாங்கள் கொன்று விடட்­டுமா?'' என்று கேட்­டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்­டார்கள். அறி­விப்­பவர்: அனஸ் பின் மாக்(ரலி) நூல்: புகாரி 2617

ஒருவர் எமக்கு அநி­யாயம் செய்தால் கூட அவரை மன்­னிப்­பதில் மிக அழ­கிய முன்­மா­தி­ரி­களை இஸ்லாம் எமக்கு சொல்லித் தந்­துள்­ளது. மனி­தர்­களை மதிப்­ப­திலும் அவர்­களை கௌர­விப்­ப­திலும் ஒரு முஸ்லிம் சிறந்து விளங்க வேண்டும் என்றே நபி­க­ளாரின் போத­னை­களும் நடத்­தை­களும் அமைந்­துள்­ளன. 

யூதர் ஒருவர் (சந்­தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்­டிய போது மிகக் குறைந்த விலை அவ­ருக்குக் கொடுக்­கப்­பட்­டது. அதை அவர் விரும்­ப­வில்லை. உடனே அவர் ''மனி­தர்கள் அனை­வ­ரையும் விட (சிறந்­த­வ­ராக) மூசாவைத் தேர்ந்­தெ­டுத்துக் கொண்­ட­வனின் மீது சத்­தி­ய­மாக! (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்­சா­ரி­களில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்­கி­டையே வாழ்ந்து கொண்­டி­ருக்க மனி­தர்கள் அனை­வ­ரையும் விட மூசாவைத் தேர்ந்­தெ­டுத்துக் கொண்­ட­வனின் மீது சத்­தி­ய­மாக என்றா கூறு­கிறாய்?'' என்று கேட்டார். 

அந்த யூதர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் சென்று, ''அபுல்­காசிம் அவர்­களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாது­காப்­ப­தாக) எனக்கு நீங்கள் பொறுப்­பேற்று ஒப்­பந்தம் செய்து தந்­துள்­ளீர்கள். என் முகத்தில் அறைந்­த­வரின் நிலை என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்­லிமை நோக்கி, ''நீ ஏன் இவ­ரு­டைய முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்­டார்கள். அவர் விட­யத்தை நபி (ஸல்) அவர்­க­ளிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்­களின் முகத்தில் கோபக்­குறி தென்­ப­டு­கின்ற அள­விற்கு அவர்கள் கோப­ம­டைந்­தார்கள். பிறகு ''அல்­லாஹ்வின் நேசர்­க­ளுக்­கி­டையே ஏற்­றத்­தாழ்வு பாராட்­டா­தீர்கள்'' என்று கூறி­னார்கள். அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா (ரலி) நூல்: புகாரி 3414

தவறு செய்­தவன் தன் இனத்தை, குலத்தைச் சார்ந்­தவன் என்­ப­தனால் அவ­னுக்கு மார்க்க விவ­கா­ரங்­களில் விதி­வி­லக்கு உண்டு என்றோ நீதியும் நியா­யமும் மற்­ற­வர்­க­ளுக்கு தான் எமக்கு அது­வெல்லாம் கிடை­யாது என்றோ அல்­லாஹ்வின் தூதர் அவர்கள் செயற்­பட்­டது கிடை­யாது. கரு­ணை­யுள்ளம் கொண்ட நபி­ய­வர்கள் யாவ­ருக்கும் பொது­வான முறை­யிலே நீதி நியாயத்தின் அடிப்­ப­டையில் செயல்­படும் படியே அல்­லாஹ்­வினால் கட்­ட­ளை­யி­டப்­பட்டு அனுப்­பப்­பட்­டுள்­ளார்கள். 

நான் ஒரு­வரை (அவ­ரு­டைய தாயைக் குறிப்­பிட்டு) ஏசி விட்டேன். அவர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் முறை­யிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ''இவ­ரது தாயாரைக் குறிப்­பிட்டு நீர் குறை கூறி­னீரா?'' என்று கேட்­டார்கள். பிறகு, ''உங்கள் அடி­மைகள் உங்கள் சகோ­த­ரர்கள் ஆவார்கள். அவர்­களை அல்லாஹ் உங்கள் ஆதிக்­கத்தின் கீழ் ஒப்­ப­டைத்­துள்ளான். ஆகவே எவ­ரு­டைய ஆதிக்­கத்தின் கீழ் அவ­ரு­டைய சகோ­தரர் இருக்­கி­றாரோ அவர் தன் சகோ­த­ர­ருக்குத் தான் உண்­ப­தி­லிருந்து உண்ணத் தரட்டும். தான் அணி­வ­தி­லி­ருந்தே அணியக் கொடுக்­கட்டும். அவர்­களின் சக்­திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்­தா­தீர்கள். அப்­ப­டியே அவர்­களின் சக்­திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்­தினால் (அதை நிறை­வேற்­றிட) அவர்­க­ளுக்கு உத­வுங்கள்'' என்று கூறி­னார்கள். அறி­விப்­பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 2545

நபி (ஸல்) அவர்கள் கூறி­ய­தா­வது: உங்­களில் ஒரு­வ­ரிடம் அவ­ரு­டைய பணியாள் அவ­ரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்­ப­ணி­யா­ளனைத் தம்­முடன் (உட்­கார வைத்துக் கொள்­ளட்டும். அவ்­வாறு) உட்­கார வைக்க வில்­லை­யென்­றாலும் அவ­ருக்கு ஒரு கவளம் அல்­லது இரு கவ­ளங்கள் அல்­லது ஒரு வாய் அல்­லது இரு வாய்கள் (சாப்­பிடக்) கொடுக்­கட்டும். ஏனெனில் அதைத் தயா­ரிக்க அந்தப் பணியாள் பாடு­பட்­டி­ருப்பார். அறி­விப்­பவர்: அபூ­ஹு­ரைரா
– நூல்: புகாரி 2557

வேறெந்த மதமோ சமூக தலைவரோ பேசாத அளவிற்கு மனித உரிமைகள், மனித நேயம், கருணை, அன்பு, போன்ற உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களை இஸ்லாமும் அதனை போதிக்க வந்த அல்லாஹ்வின் தூதர் அவர்களும் மிகத் துல்லியமாக பேசியுள்ளார்கள், என்பது மட்டுமல்ல அவற்றை தமது செயலிலும் காட்டியுள்ளார்கள், உலகமே வியந்து பார்க்குமளவிற்கு அன்புக்கும் கருணைக்கும் நீதிக்கும் நியாயத்துக்கும் அகராதியாகவே நபிகளாரும் அவர்களது ஸஹாபா தோழர்களும் விளங்கியுள்ளனர். 

ஈமானின் உயர்ந்த பகுதியில் கொள்கையையும் அதன் தாழ்ந்த பகுதியில் மனித நேயத்தையும் கருணை என்ற சுபாவத்தையும் சொல்லித்தந்த இஸ்லாம் அங்கு நம்பிக்கையையும் பண்பாடுகளையும் ஈமான் என்ற ஒரு புள்ளியில் இணைத்து அதற்குரிய வெகுமதியாக சுவனத்தை வாக்களிக்கின்றது.