Verified Web

பொருளாதாரத்தை இலக்கு வைத்த துவேச நெருப்பு

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2018-04-16 23:34:21 Ash Sheikh SHM Faleel

முஸ்­லிம்கள் பற்­றிய வெறுப்­பு­ணர்வு பெரும்­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் எப்­ப­டி­யெல்லாம் ஊட்­டப்­பட்­டி­ருக்­கி­றது, அது என்ன வடி­வங்­களில் வெளிப்­ப­டுகி­றது என்­ப­தற்­கான சில ஆதா­ரங்­களை இங்கு பார்க்க முடியும். ஓர் ஆலி­மி­ட­மி­ருந்தும் ஒரு­ வி­யா­ப­ரி­யி­ட­மி­ருந்தும் ஒரு சமூக சேவ­க­ரி­ட­மி­ருந்தும் பெறப்­பட்ட சில தக­வல்­களும் பத்­தி­ரிகைச் செய்­தி­களும் இவற்றில் உள்­ளன.   

பாட­சாலை மாண­வர்­க­ளது உள்­ளங்­களில் துவேஷ விஷம் – கலந்­தது யார்? விளைவு என்ன?

1.கண்டி மாவட்­டத்தின்  ஒரு பிரபல சிங்­களப் பாட­சா­லையில் முதலாம் வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாண வனை சூழ்ந்துகொண்ட சக வகுப்பு சிங்­கள மாண­வர்கள், ‘ஊ மரக்­க­ளயெக் ஊட்ட கஹண்­டோ­னே’­என அவனைத் தாக்க முயற்­சித்­தனர்.அதனைக் கண்ட நடு­நி­லை­யான ஒரு சிங்­கள ஆசி­ரியை அதனைத் தடுத்து நிறுத்­தி­ய­துடன் அது பற்றி அதே பாட­சா­லையில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­ய­ரிடம் கவ­லை­யோடு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

2.பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு­வரும் மனை­வியும் சிறிய மகனும் முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் சாப்­பிட்டு விட்டு பணம் செலுத்த கெசி­ய­ரிடம்     வந்த போது அந்த சிறிய மகன்  தனது பெற்­றோரைப்  பார்த்து  ‘முஸ்­லிம்­க­ளது கடை­களில் சாப்­பிட வேண்டாம் என்று எமக்கு எமது மத­குரு சொல்­லி­யி­ருக்­கி­றாரே. அப்­ப­டி­யி­ருக்க இங்கு ஏன் வந்­தீர்கள் ?’எனக் கேட்­டானாம்.அப்­போது தாய் மகனின் சப்­தத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அவ­னது வாயை கையால் மூடி­யி­ருக்­கிறாள்.

3.தெல்­தெ­னிய கல­வரம் நடந்த பின்னர்  ‘ஃபேஸ் புக்’­ த­டை­ செய்­யப்­பட்­டி­ருந்தது. அக்­காலப் பிரிவில் கம்­பஹா மாவட்­டத்தின் கிரா­ம­மொன்றைத் தாக்க கொழும்பின் பிர­பல சிங்­கள பாட­சா­லை­யொன்றில் க.பொ.(உ.த.) கணிதப் பிரிவில் கற்கும் 3 மாண­வர்கள் இரவு 2 மணி­ய­ளவில் மோட்டர் சைக்­கிளில் வந்­தனர். பொலீ­ஸா­ரிடம் மாட்டிக் கொண்ட அவர்கள் விசா­ரிக்­கப்­பட்ட போது முஸ்­லிம்­களால் தான்  தமக்கு ஃபேஸ்புக் பாவிக்க முடி­யாமல் இருப்­ப­தா­கவும் இதற்­காக முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு பாடம் புகட்­டவே தாம் வந்­த­தா­கவும் கூறி­யுள்­ளனர்.அவர்கள் தமது மோட்டார் சைக்­கிள்­களின் இலக்கத் தடு­களைக் கழற்றி­யி­ருந்­ததுடன்  பெற்றோல் குண்­டு­க­ளையும் வைத்­தி­ருந்­தனர். இந்த செய்தி ‘லங்கா தீப’ யிலும் வந்­தது. விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த அவர்கள் தற்­போது வழக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

4. 25.3.2018 ஆம் திகதி சண்டே டைம்ஸ் செய்தி இப்­படிக் கூறு­கி­றது:
“குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத் தின் அறிக்­கை­யின்­படி பாட­சாலை மாண­வர்கள் தமது பெற்­றோரின் தொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்தி இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கும் எதி­ரான வெறுப்பைத் தூண்டும் செய்­தி­களைப் பகிர்ந்­துள்­ளனர். “பல மாண­வர்கள் Social media  குழுக்­களை உரு­வாக்கி இவ்­வே­லை­களைச் செய்து வரு­கி­றார்கள். உதா­ர­ண­மாக, பெற்றோல் குண்­டு­களைத்  தயா­ரிக்கும் முறை பற்றிய தக­வல்­களை அவர்­களில் ஒருவர் பகிர்ந்­தி­ருக்­கிறார். மற்­று­மொ­ருவர் மத வழி­பாட்டுத் தலம் ஒன்றைத் தாக்­கு­வ­தற்கு ஒன்று கூடு­மாறு சிலரை அழைத்­தி­ருக்­கிறார்.” என குற்றப் புல­னாய்வு  அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார்” என அந்த பத்­தி­ரிகைச் செய்தி கூறு­கி­றது.

பொரு­ளா­தா­ரத்­துக்கு வேட்டு

1.முஸ்­லிம்­க­ளது கடை­யொன்­றுக்கு வந்த பெரும்­பான்மை இனத்­தவர் தமது ஊர் ஆல­யத்தின் பெயரைக் கூறி அதில் முஸ்­லிம்­க­ளது கடை­களில் சாமான் வாங்க வேண்டாம் என்று கூறி­யி­ருப்­ப­தா­கவும் அப்­ப­டி­யி­ருந்தும் அவர் வந்­தி­ருப்­ப­தா­கவும் எனவே சாமன்­களை குறைந்த விலைக்குத்  தரும்­ப­டியும்   கேட்­டி­ருக்­கிறார்.

2.முஸ்லிம் கடை ஒன்­றுக்கு வந்த பெரும்­பான்மை இனத்­தவர் ஒருவர் இலட்சக் கணக்­கான ரூபாய்கள் பெறு­ம­தி­யான சாமன்­க­ளுக்கு ‘பில்’ போட்டு விட்டு சமான்­களை எடுக்க முன்னால் அங்கு ‘ஆயதுல் குர்ஸீ’ தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்தைப் பார்த்து விட்டு அது ஒரு முஸ்லிம் கடை  தான் என்­பதை ஏற்­க­னவே தெரிந்­தி­ருந்தால் அங்கு வந்­தி­ருக்கப் போவ­தில்லை என்று கூறி­விட்டு சாமான்­களை எடுக்­காமல் போயி­ருக்­  கிறார்.

3.முஸ்லிம் ஒரு­வ­ரது த்ரீ வீலில் ஒரு பெரும்­பான்மை இனத்­தவர் பயணம் செய்து விட்டு  ‘மரக்­க­லயா’ வுக்கு ஹயர் தரப் போவ­தில்லை என்று கூறி இறங்கிச் சென்­றி­ருக்­கிறார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த நட­வ­டிக்­கைகள் எவற்றை உணர்த்­து­கின்­றன?

1.பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளது இளம் பிள்­ளை­க­ளது மனங்­களில் துவேசம் மிகவும் நுணுக்­க­மாக விதைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதுவும் பாட­சாலை மாண­வர்கள். இவர்கள் தான் எதிர்­கா­லத்தில் பொலிஸ் அதி­கா­ரிகள்,டாக்டர்கள்,காரி­யா­லய உத்­தி­யோ­கத்­தர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மீடியாக் காரர்கள். சமூ­கத்தில் தீர்­மானம் எடுக்கும் பத­வி­க­ளுக்கு வர இருப்­ப­வர்கள். எனவே நிலைமை எப்­படி இருக்கும்? அல்லாஹ் பாது­காக்க வேண்டும். முஸ்­லிம்கள் எப்­ப­டி­யெல்லாம் இவர்­களால் நசுக்­கப்­ப­டலாம். ஓரம் கட்­டப் ­ப­டலாம் என்று கற்­பனை பண்­ணவும் முடி­யாது.

2.முஸ்­லிம்­க­ளது பொரு­ளா­தாரம் வியா­பா­ரத்­தி­லேயே பெரும்­பாலும் தங்­கி­யுள்­ளது. அதில் கை வைத்தால் அவர்­களால் என்ன தான் செய்­யலாம்? முஸ்­லிம்­களில் 60% ஆன­வர்கள் வறுமைக் கோட்­டிட்குக் கீழால் தான் வாழு­கி­றர்கள். நாட்டின்   பெரும் பெரும் வியா­பார கம்­பெ­னிகள் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மாக இல்லை. எனவே, வியா­பா­பா­ரத்தில் ஒரு சிறிய சரிவு கூட அவர்­களைப் பெரிய அளவில் பாதிக்கும். என்ன தான் செய்­யலாம்?

3.முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான ஒரு பெரும் கலா­சாரப் படை­யெ­டுப்பை அதா­வது சிந்­தனைப் படை­யெ­டுப்பை துவேசம் கொண்ட விஷ­மிகள் செய்து வரு­கி­றார்கள். இது மிக ஆபத்­தா­னது. இஸ்லாம், முஸ்­லிம்கள், முஸ்­லிம்­க­ளது வியா­பாரம் பற்­றிய தப்­பான கருத்­துக்கள் பல மட்­டங்­களில் சூட்­சு­ம­மாகப் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. அவற்றின் வித்­துக்கள்  தூவப்­பட்டு வரு­கின்­றன. அவை சில போது உட­ன­டி­யாக நச்சுக் கனி­களைத் தரலாம்.அல்­லது நீண்ட, ஆழ­மான பதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தலாம். எல்­லாமே ஆபத்துத் தான்.

4.இப்­படி வாழ முடி­யுமா? முடி­யாது; வாழக்­கூ­டாது. முஸ்­லிம்­க­ளுக்கு சிங்களவர் தேவை. சிங்­க­ள­வ­ருக்கு முஸ்­லிம்கள் தேவை. ஏனைய மத, இனங்களைச்  சேர்ந்­த­வர்­களும் அப்­படித் தான். உலக இயக்­கத்தில் தங்கி வாழு­வது (Interdependence) என்­பது தவிர்க்­க­மு­டி­யாது. பகை­மையும் தப்­ப­பிப்­பி­ரா­யமும் நிலவும் கால­மெல்லாம் சமா­தான சக­வாழ்வு நில­வ­மாட்­டாது. அது வெறுப்­பாக வளர்ந்து மோதலும் யுத்­தமும் ஏற்­படும்.அதனை நோக்­கியே நாட்டை சிலர் நகர்த்­து­கி­றார்கள்.

என்ன செய்­யலாம்?

*  நாம் அனை­வரும் அல்­லாஹ்­வு­ட­னான தொடர்பை  வலுப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இக்லாஸ்,ஐவேளை தொழுகை, திக்ர்,அவ்­ரா­துகள்,தில­வதுல் குர்ஆன்,தவக்குல்,ஸப்ர்,முறா­கபா என்­பன முஸ்­லிமின் பல­மான ஆயு­தங்­க­ளாகும்.

*  முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள் தமக்கு மத்­தியில் நிலவும் கருத்து பேதங்­களை ஆர அமர அம்ர்ந்து பேசி தீர்த்துக் கொள்­வ­தோடு தமக்­கி­டையில் பொறுப்­புக்­களை சிறப்­பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஒரே வேலையை பலர் செய்­வது,முக்­கி­ய­மான வேலை­களை யாருமே கவ­னிக்­காமல் விடு­வது,தமக்கு இய­லாத வேலை­களில் ஈடு­ப­டு­வது,பொருத்­த­மா­ன­வர்கள் ஈடு­பட முன்­வரும் போது அவர்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடு­வது,ஓர் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் நல்­ல­ப­ணி­யொன்றைச் செய்யும் போது பிறர் ஒத்­து­ழைப்பு நல்­காமல் கைவிட்டு விடு­வது  ‘ஈகோ’­வுக்­காக பிறரை மட்டம் தட்­டு­வது போன்ற ஆறு  தவ­று­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவை தான் பல வகை­யான சமூக சீர்­கே­டு­க­ளுக்கு கார­ண­மாக அமை­வ­தோடு பல பணிகள் மந்த கதியில் இடம் பெறு­வ­தற்கும் பின்­ன­ணியில் உள்­ளன. 

 * சிங்­கள சகோ­தரர்­க­ளது உள்­ளங்­களில் உள்ள சந்­தே­கங்­களை அகற்ற மிக மிக தீவி­ர­மான முயற்­சிகள் எடுக்­கப்­பட வேண்டும். இதற்­காக மீடி­யாவை உச்சகட்டமாகப் பயன்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது.

* தற்­போ­தைய சூழல் உரு­வா­கு­வ­தற்கு முஸ்­லிம்­க­ளது அன்­றாட நட­வ­டிக்­கைகள் பெரு­ம­ளவு கார­ண­மாக அமைந்­துள்­ளன.எனவே அவர்கள் தமது மார்க்க வரம்­பு­க­ளுக்கு வெளியே செல்­லாமல் தமது வாழ்­வொ­ழுங்கை பண்­பா­டு­களை மைய­மாக வைத்து மறு சீர­மைக்க வேண்டும்.

* கல்வித் துறையில் சிரேஷ்­ட­மான இடங்­களை நோக்கி சமூ­கத்தை நகர்த்த வேண்டும்.அது சதி­களை அறி­யவும் முறி­ய­டிக்­கவும் தலை­நி­மிர்ந்து வாழவும் உதவும்.


* முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் உள்ள நல்­லுள்ளம் படைத்­த­வர்­க­ளது சகவாசத்தை அதிகப்படுத்தி சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்ப அவர்களுடன் இணைந்த உன்னதமான வேலைத் திட்டங்களை அமுலாக்க வேண்டும்.


* சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள பொறுப்பான பதவிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் தத்தமது பதவிகளும் பொறுப்புக்களும் அல்லாஹ்வால் தரப்பட்ட அமானிதங்கள் என்பதையும் அவற்றை சமூகம் வேண்டி நிற்கும் போது பயன்படுத்தாமல் இருப்பது மகா பெரிய துரோகம் என்பதையும் ஆழமாக உணர்ந்து செயற் பட வேண்டும்.பதவிகள், பட்டங்கள், பணம், அதிகாரம், செல்வாகு, உடற்பலம் போன்றவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கு அவற்றைப் பெற்றில்லாதவர்களை விட அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு அதிகமாகும்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!   


நாட்டில் சுபீட்சமும் மனதில் நிம்மதியும் நிலவ அவனது அனுக்கிரகங்கள் எமக்குக் கிடைக்கட்டுமாக!