Verified Web

இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்

Masihuddin Inaamullah

சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான இவர், ஜித்தாவுக்கான கவுன்சியூலர் ஜெனராகவும் கடமையாற்றியுள்ளார். அரசியல் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

2018-04-12 05:01:18 Masihuddin Inaamullah

இலங்­கையில் முஸ்லிம் விவ­கார திணைக்­க­ளத்தில் பதி­யப்­பட்ட சுமார் 2700 மஸ்­ஜி­துகள் இருக்­கின்­றன , அதேபோல் சுமார் 250 ற்கும் மேற்­பட்ட மத­ர­ஸாக்கள் இருக்­கின்­றன, சுமார் 3000 சிறுவர் பள்ளிக் கூடங்கள் இருக்­கின்­றன.

இவற்றில் சுமார் 8000 ஆலிம்கள் தொழில் செய்­கி­றார்கள். இந்த ஆலிம்­க­ளது தொழில்சார் உரி­மைகள் மற்றும் சலு­கைகள் குறித்து சமூகம் போதிய கவனம் செலுத்­தாமை நாம் இழைத்துக் கொண்­டி­ருக்கும் மிகப் பெரிய வர­லாற்றுத் தவ­றாகும்.

 பெரும்­பா­லான ஆலிம்­க­ளது சம்­பளம் அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் சிற்­றூ­ழி­யர்­க­ளது மாத கொடுப்­ப­ன­வு­க­ளையும் விட மிகவும் குறை­வா­கவே இருக்­கின்­றது. அவர்­க­ளுக்கு முறையான நிய­மனம், தொழில் சார் உத்­த­ர­வா­தங்கள், உரி­மைகள் சலு­கைகள் என எது­வுமே இல்லை.

பெரும்­பா­லான ஆலிம்கள் தமது கட­மை­க­ளுக்குப் புறம்­பாக ஊரில் கல்­யாணம், கத்தம், கந்­தூரி, பாத்­திஹா, ஜனாஸா சார் விட­யங்கள் என பல வரு­மான வழி­களை கடந்த காலங்­களில் (ஊர்­வ­ரு­மானம்) என நம்பி இருந்­தனர். இப்­பொ­ழுதும் பல இடங்­களில் இருக்­கின்­றனர்.

அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யமோ, ஊழியர் நம்­பிக்கை காப்­பீ­டு­களோ அல்­லது சேவைக்­குப்­பின்­ன­ரான கொடுப்­ப­ன­வு­களோ என எதுவும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தப்பட­வில்லை என்­ப­தனை நாம் அறிவோம்.

ஆலி­ம்கள் ஓய்­வூ­தியம்,EPF, ETF, காப்­பு­றுதி ஆகி­ய­வற்றை பெறு­வதில் வட்டி சார்ந்த பிர­ச்­சி­னைகள் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது, ஆனால் இஸ்­லாத்தில் மத குரு­மார்­க­ளுக்­கென விஷேட சட்­டங்கள் கிடை­யாது, அது ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­யாக இருந்தால் அதற்­கான மாற்­றீ­டுகள் என்ன என்­ப­தனை ஆலிம்­களும் சமூ­கமும் தீர்­மா­னித்­தாக வேண்டும்.

இலங்­கையில் இட­வ­ச­தி­யுள்ள மஸ்­ஜி­து­களில் எல்லாம் ஒரு ஹிப்ழு மத்­ரஸா அல்­லது கிதாபு மத்­ரஸா முளை விடு­வ­தற்கும் வேறு சில முறை­யாக நிறு­வனமயப்­ப­டுத்­தப்­ப­டாத குர்ஆன் மத­ர­ஸாக்கள் தோற்றம் பெறு­வ­தற்கும் ஆலிம்­க­ளுக்­கான தொழில் இல்லா பிரச்­சி­னையும் பிர­தா­ன­மான கார­ண­மாக அறி­யப்­பட்­டுள்­ளது.

இன்று இலங்­கையில் உள்ள சுமார் 250 ற்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்­களில் இருந்தும் வரு­டாந்தம் சுமார் 2500 ற்கும் மேற்­பட்ட ஆலிம்கள் பட்டம் பெறு­கி­றார்கள். முறை­யான தரா­தர நிர்­ணயம் செய்­யப்­பட்ட ஒரு­மு­கப்­ப­டு­த்­தப்­பட்ட பாட­வி­தானம் இன்னும் இல்­லாமை மிகப்­பெ­ரிய குறை­யாகும்.

வருடா வருடம் நாட்­டி­லுள்ள சுமார் 250க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்கள், குல்லி­யாக்கள், ஜாமி­யாக்­க­ளிற்கு சுமார் 4000 மாண­வர்கள் இல­வச வதி­விடக் கற்­கை­க­ளுக்­காக உள்­வாங்கப்படு­கின்­றமை, அவற்றில் பெரும்­பான்­மை­யினர் 8 ஆம் வகுப்­புடன் அரச இல­வசக் கற்­கை­களில் இருந்து விடு­விக்கப்படு­கின்­றமை போன்ற இன்­னோ­ரன்ன விட­யங்கள் மிகவும் நிதா­ன­மாக அறிவு பூர்­வ­மாக ஆராயப்படல் வேண்டும்.

2002- – 2004 காலப்­ப­கு­தியில் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பாட­வி­தா­னங்­களை ஒரு­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் தற்­பொ­ழுது நிறை­வுற்­றுள்ள போதும் அமுல்படுத்­து­வதில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன.

பெரும்­பா­லான மத்­ர­ஸாக்­க­ளுக்கு 8ஆம் வகுப்பு வரை அரச இல­வசக் கல்வி கற்­ற­வர்கள், சிறு வய­தினர் உள்­வாங்கப்படு­கின்­றனர், ஒரு­சில மத்­ர­ஸாக்­களில் சாதா­ரண உயர்­தர கற்­கைகள் இருந்­தாலும் முறை­யான பாட­நெ­றிகள் ஆசி­ரி­யர்கள் இல்­லாமை கார­ண­மாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற அடைவு மட்டம் கேள்­விக்­கு­றி­யா­கி­றது.

வாழ்­வா­தார கற்­கைகள் இல்­லாமை மாத்­தி­ர­மன்றி ஒவ்­வொரு வித­வி­த­மான கொள்­கைசார் சிந்­தனை சார், இயக்­கங்­கள் சார் கல்வித் திட்­டங்­க­ளையும், பெரிய ஹஸரத்­திற்கு தெரிந்த சில­பஸ்­க­ளையும் அவர்கள் கற்று வரு­வ­தாலும் சமூ­கத்தில் அவ்­வப்­பொ­ழுது சர்ச்­சை­களும் ஏற்­ப­டு­வதால் தமது தொழிலில் இருந்து முன்­ன­றி­வித்­தல்கள் இன்றி தூக்கி எறி­யப்­ப­டு­கின்­ற­மையும் பகி­ரங்க இர­க­சி­ய­மாகும்.

நூற்­றாண்டு காணும் இலங்கை உல­மாக்கள் நலன் பேண­வென ஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்ள அமைப்போ அல்­லது முஸ்­லிம்­ வி­வ­காரத் திணைக்­க­ளமோ இது­வரை ஆக்­க­பூர்­வ­மான தீர்­வு­களை கண்­ட­றிந்து அமுல்படுத்­தாமை பெரும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். வக்பு சபை மற்றும் முஸ்லிம் விவ­காரத் திணைக்­களம் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 2700 மஸ்­ஜி­து­களில் சுமார் 2000 (இரண்­டா­யிரம்) மஸ்­ஜி­து­களில் நில­வு­கின்ற சர்ச்­சைகள், பிணக்­கு­களை பார்ப்­ப­தி­லேயே காலத்தை கடத்­து­வ­தாக அண்­மையில் அதி­கா­ரி­களை மேற்­கோள்­காட்டி ஒரு செய்திக் குறிப்பு வெளி­வந்­தி­ருந்­தது.

இன்று பௌத்த பிரி­வே­னாக்­களைப் பொறுத்­த­வரை அவற்­றிற்கு அரச அங்­கீ­கா­ர­முள்ள தரப்­ப­டுத்­தப்­பட்ட பாடத்­திட்டம் அரச வளங்கள், சீரு­டைகள், அரச ஆசி­ரியர் சேவை, மத குரு­மார்­க­ளுக்­கென நிய­ம­னங்கள் என இன்­னோ­ரன்ன சலு­கை­களும் உரி­மை­களும் இருக்­கின்ற நிலையில், இந்த நாட்டில் வரி­யி­றுப்­ப­ளர்கள் நாங்கள் எமது சமய கலா­சார உரி­மைகள் குறித்த கரி­ச­னை­யின்­றியே காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கின்றோம்.

காலத்­துக்கு காலம் மாநா­டுகள், செய­ல­மர்­வுகள் பாரிய ஊடக விளம்­ப­ரங்­க­ளோடு இடம்­பெற்­றாலும் சமூகம் எதிர்கொண்­டுள்ள மிகப்­பெரும் சவால்­களில் ஒன்­றான மேற்­படி விவ­காரம் குறித்து ஆக்­க­பூர்­வ­மாக நாம் எத­னை­யுமே செய்­ய­வில்லை என்­பதே உண்­மை­யாகும். மாறாக, அவ்­வா­றான ஏதா­வது முனைப்­புக்­களில் ஈடு­பட விரும்­பு­வோ­ருக்கு எதி­ராக வழ­மை­போன்று முட்டுக்கட்­டை­களை போடு­வதில் மாத்­திரம் பிழைப்பு நடத்தும் சில தரப்­புக்கள் அவ­தா­ன­மாக இருக்­கின்­றன.

சமூகம் சார் விவ­கா­ர­மாக இருந்­தாலும் இன்று ஆலிம்கள் மஸ்­ஜி­துகள், மத்ர­ஸாக்கள், ஜாமி­யாக்கள், இஸ்­லா­மிய அமைப்­புக்கள் விட­யத்தில் பல்­வேறு தரப்­புக்­களின் கவனம் குவிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் நமது கவனம் ஈர்க்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் உலமாக்களதும் மஸ்ஜிதுகளதும் மிம்பர் மேடைகளினதும், அரபு இஸ்லாமிய நிறுவனங்களினதும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மாத்திரமன்றி, இன்று பெரிதும் கேள்விக்குட்படுத்தப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.

சமகால விவகாரங்கள் குறித்த போதிய அறிவும் தெளிவும் அவர்களுக்கு வழங்கப் படுதல் வேண்டும். புத்திஜீவிகள், சிவில் தலைமைகள், துறைசார் நிபுணர்களுடனான முறையான கருத்தாடல்கள், தொடர்புகள் அவர்களுக்கு இருத்தல் காலத்தின் கட்டாயமாகும்.