Verified Web

நாட்டை பாதிக்கும் ஸ்திரமற்ற அரசியல்

2018-04-11 04:44:51 Administrator

தேசிய அரசாங்கத்தில் எழுந்துள்ள முறுகல் நிலைமைகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான மோதல்களும் குத்துவெட்டுக்களும் இன்று நாட்டை பாரிய பின்னடைவை நோக்கித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்தே நிலைமைகள் மேலும் மோசமடையத் தொடங்கியுள்ளன.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல நம்பிக்கையில்லாப் பிரேரணை முடிந்தாலும் அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள் தொடரவே செய்கின்றன. பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 எம்.பி.க்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.கட்சியினர் கோரி வருகின்றனர். இவர்களில் அடங்கும் 7 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையும் ஐ.தே.க. எம்.பி.க்கள் சமர்ப்பித்துள்ளனர்.

மறுபுறம் பிரதமர் ரணில் அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் தம்மால் இருக்க முடியாது என சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தைவிட்டு விலகி எதிரணியில் அமரப் போவதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த இழுபறிகளுக்கிடையில் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னராக அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் இடம்பெறப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் பெப்ரவரி மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம் ஒன்று இடம்பெற்றது. இந் நிலையில் தற்போது மற்றுமொரு மாற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு கட்சிகளும் தத்தமது கட்சிகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் நிர்வாகத்தை நடத்த எத்தனிப்பது கவலைக்குரியதாகும். சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளதைப் போன்று பிளவுபட்ட அரசியல் சூழ்நிலை நாட்டைப் படுபாதாளத்தில் தள்ளுவதாகவே அமைந்துள்ளது. 

கட்சியின் நலன்களை ஒருபுறம் வைத்துவிட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக தமது வேலைத்திட்டங்களை அமைத்துக் கொள்ளாதவரை இந்த ஸ்திரமற்ற சூழ்நிலையிலிருந்து ஒருபோதும் நம்மால் வெளிவர முடியாது போகும் என்பதே யதார்த்தமாகும்.

மக்கள் 2015 ஜனவரியில் அளித்த ஆணையை கடந்த மூன்று வருட காலங்களில் தேசிய அரசாங்கத்தினால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வருட காலத்திலாவது அதனைச் செய்வார்களா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு புறம் இனவாத மதவாத சக்திகள் நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கையில் மறுபுறம் அரசியல்வாதிகள் தமது நலன்களுக்காக நாட்டைப் பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்த சவாலிலிருந்து நாம் எவ்வாறு வெளிவரப் போகிறோம் என்பதுதான் நம்முன்னால் உள்ள மில்லியன் டொலர் கேள்வி.