Verified Web

இன்றைய நிலையில் சொல்ல நினைப்பது

M.Fouzer

முஸ்லிம் குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் அரசியல் விமர்சகராகவும் விளங்குகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் அரசியல்,சமூக, இலக்கிய செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

2018-04-11 04:25:31 M.Fouzer

தற்­போது இலங்­கை­யி­லி­ருந்து வந்து கொண்­டி­ருக்கும் செய்­திகள், மீண்டும் மீண்டும் மிக மோச­மான நிகழ்­கா­லத்­தி­னையும் எதிர்­கா­லத்­தி­னையும் கட்­டியம் கூறு­கின்­றன. கடந்­த­கால அனு­ப­வங்­க­ளி­லி­ருந்தும் வர­லாற்­றி­லி­ருந்தும் இலங்கை  எத­னையும் கற்றுக் கொள்ளத் தயா­ராக இல்லை என்­பதை  நிகழ்­கா­லத்தின் விளைச்­சல்­க­ளாக மாறி நிற்கும் இரத்தம் சிந்­து­தலும் உயி­ரி­ழப்­பு­களும்  இன­வன்­மு­றை­களும்  நமது முகத்தில்  காறி உமிழ்­கின்­றன. உண்­மைகள் கசப்­பா­ன­வைகள்தான் ஆனால் அவை தீர்வைக் கண்­ட­டை­வ­தி­லி­ருந்து பல்­லி­னங்­க­ளையும், சமூ­கங்­க­ளையும்  மக்­க­ளையும் தூரப்­ப­டுத்­து­வ­துதான் மிக ஆபத்­தாக அமை­கி­றது. அடிப்­ப­டையை அடை­யாளம் காணாமல் தலை­ய­ணை­யையும் தலைப்­பா­கையையும் (அர­சியல் கிரீ­டத்­தையும் ) காலத்­திற்கு காலம் மாற்­று­வது தீர்­வல்ல.

அன்­றாடம் நடக்கும் நிகழ்­வு­க­ளுக்கு உட­னுக்­குடன் எதிர்­வி­னை­யாற்­று­வது ஒரு­பு­ற­மி­ருக்க, நீண்­ட­கால அடிப்­ப­டையில் இந்த நிகழ்­வு­களைத் தடுப்­பது தொடர்­பாக  அறி­வு­பூர்­வ­மாக  செயற்­ப­டு­வதும் அவை தொடர்­பாக சிந்­திப்­பதும் இதற்­காக முன்கை எடுப்­பதும் இன்­னொரு முக்­கிய விட­ய­மாகும்.இலங்­கையில் வாழும் இனங்கள், சமூ­கங்கள், மதப்­பி­ரி­வி­ன­ரி­டையே மீள் நல்­லி­ணக்­கத்­தினை அடிப்­ப­டையில் கட்டி உரு­வாக்கும் வகையில் செயற்­ப­டத்­தக்க நீண்­ட­கால வேலைத்­திட்­ட­மொன்றை சிவில் சமூ­கங்­களின் மத்­தியில்  கட்­டி­யெ­ழுப்­பு­வது உட­னடித் தேவை­யா­க­யுவுள்­ளது. 

இதற்­கான சிறு சிறு முயற்­சிகள் நெருக்­கடிக் கால­கட்­டங்­களில் எடுக்­கப்­பட்­டாலும் அவை வெற்­றி­பெ­றா­மையும், பெரு­ம­ளவில் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள முடி­யா­மை­யாக இருப்­ப­தற்­கான கார­ணங்­களில் ஒன்று, ஒவ்­வொரு தரப்பு பற்றி மற்றத் தரப்­பினர் மோச­மான கருத்­துக்­க­ளையும் பகை முரண்­க­ளையும் கொண்­டி­ருப்­ப­தே­யாகும். இதனால், மக்­க­ளுக்குள்  நல்­லி­ணக்­கத்­தினை  முதன்­மைப்­ப­டுத்தும் பிரி­வினர் தமது பணியை முன்­னெ­டுப்­பதில் பின்­ன­டை­வையும் தோல்­வி­யை­யுமே சந்­தித்து வரு­கின்­றனர்.

கண்­டியை மையப்­ப­டுத்தி தற்­போது நிகழ்ந்­து­வரும் சிங்­கள – முஸ்லிம் வன்­சூ­ழலை உதா­ர­ண­மாகக் கொண்டு பார்க்­கும்­போது, சிங்­கள பெரும்­பான்மை மக்கள் மத்­தி­யி­லி­ருந்து நடை­பெற்று வரு­கின்ற வன்­செ­யல்­க­ளுக்கு எதி­ராக பல­மான எதிர்ப்போ, இதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான  திரட்­சி­யான சிவில் சமூகக் குரலோ எழாமல் இருக்­கி­றது இங்கு முக்­கி­ய­மா­னது. இந்த நிலை­மைக்கு பின்­வரும் கார­ணங்கள் இருக்­கலாம். 

1.முஸ்லிம் வெறுப்பு இன­வாதம் நிறு­வ­ன­ம­யப்­பட்­டுள்ள நிலையில், தனி நபர்­க­ளாக அல்­லது சிறு அமைப்­பு­க­ளாக நல்­லி­ணக்­கத்­தினை வலி­யு­றுத்தும் கருத்­துக்கள் குரல் இழந்­த­தாக, காய­டிக்­கப்­பட்­ட­தாக மாறி­யுள்ள சூழல்.

2 . முஸ்லிம் மக்­களின் சமூக வாழ் அர­சியல்,  பொரு­ளா­தார, மத அணு­கு­மு­றை­களின் கார­ண­மாக பெரும்­பான்மை சிங்­கள மக்கள் முஸ்­லிம்கள் தொடர்பில் அதி­ருப்தி உற்­றுள்­ள­மையால், இந்த வன்­செ­யல்­களை  நியாயப்­ப­டுத்தி கடந்து போகும் நிலை.

எந்­த­வொரு சிக்­க­லையும் முர­ணையும் அதன் அடிப்­படைத் தன்­மையை இனம்­கண்டு சீர்­செய்­யாமல், அதற்­கான முழுப்­ப­ரி­கா­ரத்­தி­னையும் கண்­ட­டைந்து விட முடி­யாது. சம்­ப­வங்கள், அதற்கு சொல்­லப்­படும் கார­ணங்கள் இடையில் நிகழ்­வ­னதான். அண்­மையில் அளுத்­கம, அம்­பாறை, இன்று திகன , இவை இந்த இன­வாத நிகழ்ச்சி நிரலில் ஒவ்­வொரு தரிப்­பி­டம்தான். இனியும் எதிர்­கா­லத்தில் இப்­ப­டி­யான பட்­டியல் தொட­ரத்தான் போகின்­றன. ஒவ்­வொரு சம்­ப­வங்கள்  நிகழும்போதும் உணர்ச்­சி­களை அள்ளி இறைப்­பதும், ஆவேசம் கொள்­வதும் பின் தட­ம­றி­யாமல் பழைய நிலை­மைக்குத் திரும்­பு­வதாலும் எந்தப் பய­னு­மில்லை. இவற்­றிற்குப் பின்­னுள்ள அர­சியல், இன­மான விட­யங்­க­ளை­யிட்டு நமக்கு ஒரு தெளிவும் தூரப்­பார்­வையும் அவ­சி­ய­மாகும்.

***

இலங்­கையின் கால­னித்­து­வத்­திற்குப் பிந்­திய அர­சியல் வர­லாறே இன முரண்­க­ளி­னதும் இனங்கள் மேலான  கொடூர வன்­செ­யல்­க­ளி­னதும் கூட்­டுத்­தி­ரட்­சின். இலங்கை அரசின் தன்மை என்­பதே இன­வா­தத்தால் கட்­ட­மைக்­கப்­பட்­ட­துதான். காலத்­திற்கு காலம் பத­விக்­கு­வரும் யூ.என்.பி., எஸ்.எல்.எப்.பி. தலை­மை­யி­லான அர­சாங்­கங்கள் இந்த இன­வா­தத்­தினை பேணும் அர­சியல் நிறு­வ­னங்­களே.   அரசின் சட்டம் ஒழுங்கைப் பேணும் நிறு­வ­னங்­க­ளான நீதித்­துறை, பொலிஸ், இரா­ணுவம் என்­பது  இந்த இன­வாத அரசின் கைப்­பொம்­மை­களே.  இவை இன சமத்­து­வத்­தினை உரு­வாக்க பாடு­படும் என்றோ, இம்­மக்­களை பாது­காக்­கு­மென்றோ  நம்­பு­வது அர­சியல் அறி­வீனம்.

கால­னித்­து­வத்­திற்குப் பின் 1933, 1946, 1983 என  பாரிய அள­வி­லான இன வன்­செ­யல்கள் இலங்­கையில்  நடந்­தே­றி­யுள்­ளன. பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கங்­களே இவ்­வன்­செ­யல்­களை திட்­ட­மிட்டு நடத்­தி­யுள்­ளன.  இவற்­றிற்கு பின்­பு­ல­மாக இருந்­துள்­ளன அல்­லது வேறு­பட்ட பெயர்­களில்  அமைப்­பு­களை உரு­வாக்கி ஊட்டி ஊக்­கு­வித்து வளர்த்து வந்­துள்­ளன என்­பது வெள்­ளி­டை­மலை. இறு­தி­யாக 2009 மே இல் தமிழ் மக்­களை கொன்று பாரிய இனப்­ப­டு­கொ­லையை நடாத்­தி­யது  இந்த அரசு. 2009 க்குப் பின்­னான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் முஸ்­லிம்­களை முதன்மை இலக்­காகக் கொண்­டது. அதன் விளை­வுகள் தான் கடந்த பத்­தாண்­டு­க­ளாக முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டு­வரும் அர­சியல், சமூக நிலை­மைகள். 

***
இந்த நிலையில், இலங்கை அரசோ, அல்­லது அதன் துணை நிறு­வ­னங்­களோ பெரு­ம­ள­வி­லான சந்­தர்ப்­பங்­களில்  பாதிக்­கப்­படும் மக்­களை பாது­காக்­கு­மென்றோ, அவர்­க­ளுக்கு நீதி தரு­ம்மென்றோ நம்­பு­வ­தற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாதிக்கப்படும் மக்களுக்குள்ள  வழிகளில் முதன்மையானது அனைத்து இன மக்களுக்குள்ளும் அதன் சிவில் சமூகத்துடன் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதும், தம் பக்கத்திலுள்ள தவறுகளை இனம் கண்டு சீர் செய்வதும் , மக்களின் நன்மதிப்பினை தமக்கு கவசமாக்கிக் கொள்வதுமேயாகும். இதுதான்  முன்னுள்ள தெரிவு. இதன் மூலமே  நிறுவனமயப்பட்டு ஆழ விருட்சம் பரப்பியுள்ள இனவாத கருத்து நிலையை ஓரளவு அடி பணிய வைக்க முடியும். பிற இன மக்களை பகைவராக்குவதன் மூலமும், வெறுப்பதன் மூலமும் தமக்குத் தாமே படுகுழிகளை தோண்டத்தான் முடியும். விளைவுகள்  அனைத்து தரப்புக்கும் கண் முன்னுள்ளவை.