Verified Web

இரு மாதங்களில் கருகிய ஈராயிரம் தளிர்கள்

2018-04-11 04:17:16 Administrator

எம்.எம்.ஏ.ஸமட்

 

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் நாடு இலங்கை. சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தவ­று­க­ளி­லி­ருந்து எவ்­வாறு திருத்­திக்­கொள்­வது என்ற போத­னைகள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால் அப்­போ­த­னை­களோ, ஆலோ­ச­னை­களோ வினைத்­தி­ற­னற்­ற­தா­கவே புரி­கி­றது.

பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள் நல்­வாழ்­வுக்­கான ஆலோ­ச­னைகள் ஆன்­மீக வழி­காட்­டி­க­ளி­னாலும், ஆசி­ரி­யர்­க­ளி­னாலும், உள ஆற்­றுப்­ப­டுத்­து­நர்­க­ளி­னாலும் அவ­ர­வர்­க­ளுக்­கு­ரிய தளங்­க­ளி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், இதில் துரதிஷ்­ட­வசம் என்­ன­வென்­றால், இவ்­வாறு வழிப்­ப­டுத்­து­கின்­ற­வர்­களில், வேலி­யாக இருக்­கின்­ற­வர்­களில் சிலர் மனோ இச்­சைக்கு அடி­மைப்­பட்டு வழி­த­வறி பாவச் செயற்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்­களின் இத்­த­கைய இழி­செ­யல்­க­ளினால் அப்­பாவிச் சிறு­வர்­களும் பெண்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

மத­கு­ரு­மா­ரினால் பாலியல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகும் சிறு­வர்கள், ஆரி­யர்கள், ஆலோ­சகர்­க­ளினால் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாகும் மாண­வர்கள், வைத்­தி­ய­ரினால் பாலியல் இம்­சைக்­குக்குள்­ளாகும் நோயாளிச் சிறு­வர்கள், தந்­தை­யினால் வன்­பு­ணர்­வுக்கு ஆளாகும் மகள், அண்­ண­னினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாகும் தங்கை, மாமா­வினால் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாகும் மரு­மகள் என பாது­காப்பு வேலி­க­ளாக இருக்க வேண்­டி­ய­வர்­க­ளினால் தளிர்­க­ளான சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகும் சம்­ப­வங்கள் தினமும் நடந்­தே­று­வதை ஊடகச் செய்­திகள் வாயி­லாக அறிய முடி­கி­றது.
சமூ­கத்தால் மதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களில்  ஒரு சிலரின் இத்­த­கைய பாலியல் கொடு­மைகள் ஏனை­ய­வர்­க­ளுக்கு தலைக்­கு­னிவை ஏற்­ப­டுத்­து­கி­றது. வேலி­களால் பயிர்கள் மேயப்­படும் நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டில் அண்­மை­க்கா­ல­மாக அதி­க­ரித்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ள­தோடு இவர்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கி­றது.

துஷ்­பி­ர­யோ­கங்­களைத் தடுக்கும் வழி­மு­றை­களும், சட்­ட­திட்­டங்­க­ளும் தண்­ட­னை­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும், அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும்  சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் நாட்டின் ஏதா­வது ஒரு பகு­தியில் தினமும் இடம்­பெற்றுக் கொண்­டுதான் இருக்­கி­றது என்றால் இதற்­கான கார­ணத்தை ஒவ்­வொரு பெற்­றோ­ரும் பொறுப்­புள்ள பாது­கா­வ­லரும், சமூ­கத்தின் ஒவ்­வொரு உறுப்­பி­னரும், மனித நேய­முள்ள ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­து­கொள்­வது மாத்­தி­ர­மின்றி, அவற்றை தடுப்­ப­தற்­கான உரிய விழிப்­பு­ணர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வதும் அதற்­கேற்ப செயற்­ப­டு­வதும் இன்­றி­ய­மை­யா­த­தாகும்

துஷ்­பி­ர­யோ­கங்­களும் கார­ணங்­களும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் பல்­வேறு கார­ணங்­க­ளினால் இடம்­பெ­று­கின்­றன. பாலியல் ரீதி­யாக சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கு­கின்­ற­வர்கள் ஏதோ­வொரு வகை பாலியல் உளக்­கோ­ளா­ரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கலாம். உளக்­கோ­ளா­று­க­ளுடன் நவீன தகவல் தொழில்நுட்­பத்தின் வளர்ச்­சியின் விளை­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள அதி­க­ள­வி­லான வேண்­டத்­த­காத இணை­யத்­த­ளப்­பா­வ­னையும் அநா­க­ரி­க­மிக்க, கவர்ச்­சி­க­ர­மான ஆடை­ய­ணி­தலும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம் இடம்­பெ­று­வ­தற்­கான முக்­கிய கார­ணங்­க­ளாக அமை­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. 

அத்­தோடு, உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்­க­ணிப்பு ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு சமூ­கங்­களின் பொறு­ப்பற்ற தன்மை, சூழல் நெருக்­கீ­டுகள், குடும்ப நெருக்­கீ­டுகள் என்­பன கார­ண­மாக உள்­ளன. பொரு­ளா­தாரச் சிக்­கல்கள், வயதில் மிக நெருக்­க­மா­க­வுள்ள பிள்­ளைகள், தனி­யான பெற்­றோரின் பரா­ம­ரிப்பு, திரு­மணப் பிரச்­சி­னைகள், ஒரு சில ஆத­ர­வு­க­ளுடன் சமூ­கத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை, ஊட­கங்­களின் தாக்கம் போன்ற குடும்ப, சமூக சூழல் கார­ணி­களும் தீராத ஆரோக்­கியப் பிரச்­சி­னைகள், மது மற்றும் போதை­வஸ்துப் பாவனை, கோபத்தை அடக்க முடி­யாத தாழ்­வான சுய மதிப்­பு­டைய வயது, கல்வி மற்றும் தனிப்­பட்ட அனு­ப­வங்கள் ஆகி­ய­வற்­றுக்கு உட்­படும் தரக்­கு­றை­வான திறன்கள், சிறு­வர்­களின் விருத்தி தொடர்­பாக யதார்த்­த­மற்ற எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைக் கொண்ட பெற்­றோர்கள் மற்றும் பாது­கா­வ­லர்­களின் நடத்­தை­களும் சிறுவர் துஷ்­பி­ரயோகம் ஏற்­ப­டு­வ­தற்­கு­ரிய கார­ணங்­க­ளாக விளங்­கு­கின்­றன.
இத்­த­கைய கார­ணங்­க­ளினால் அல்­லது இவை தவிர்ந்த ஏனைய கார­ணங்­க­ளினால் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­கு­வதைத் தடுக்க வேண்­டு­மாயின். இத்­த­டுப்பு நட­வ­டிக்கைப் பணிகள் சமூகப் பணி­யாகக் கரு­தப்­பட்டு சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜையும் இவை தொடர்பில் விழிப்­பு­ணர்வு பெறு­வ­துடன் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­பதை தமது பொறுப்­பா­கவும் உணர வேண்டும். அப்­போ­துதான் இத்­த­கைய கய­வர்­க­ளி­ட­மி­ருந்து பிள்­ளை­களைக் காப்­பாற்ற முடியும்.

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள அரச மற்றும் தன்­னார்வ தொண்டு நிறு­வன அதி­கா­ரி­களும், செயற்­பாட்­டா­ளர்­களும் சமூ­கத்தின் ஒவ்­வொரு பிர­ஜை­யையும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன? ஏன் ஏற்­ப­டு­கி­றது. இதற்­கான கார­ண­மென்ன, துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்­த­கை­ய­வர்­களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்­ப­டு­கி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாது­காக்­கலாம், அதற்­கான முறை­யான பொறி­மு­றைகள் எவை போன்ற பூரண அறிவை பெறு­வதும் அவ­சி­ய­மாகும். இவை குறித்த முறை­யான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கை­களை முறை­யா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலும் பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள் மற்றும் பொது­மக்கள் மத்­தியில் கிராமம் மற்றும் நகரம் தோறும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும். 

சிறுவர் உரி­மை­களும் துஷ்­பி­ர­யோங்­களின் வடி­வங்­களும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் பற்­றிய அறிவு அவற்றைத் தடுப்­ப­தற்­காகச் செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி ஒவ்­வொரு தனி­ந­ப­ருக்கும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. சிறு­வர்கள் என்றால் யார்? அவர்­களின் உரிமை என்ன? சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன? துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான கார­ணங்கள் எவை? துஷ்­பி­ர­யோ­கங்­க­ளி­லி­ருந்து  எவ்­வாறு சிறு­வர்­களைப் பாது­காக்க முடியும். போன்ற அறி­வுடன் கூடி­ய­தான விழிப்­பு­ணர்வு இன்று ஒவ்­வொரு தனி நப­ருக்கும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாக மாறி­யுள்­ளது. அது­மாத்­தி­ர­மின்றி வழங்­கப்­ப­டு­கின்ற விழிப்­பு­ணர்வு வினைத்­தி­றன்­மிக்­க­தா­கவும் அமைய வேண்­டி­யது அதி முக்­கி­ய­மா­ன­தாகும்.

ஏனெ­னில் இன்று நமக்கு சொந்­த­மில்­லாத ஒரு சிறு­வனோ, சிறு­மியோ துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்ட செய்தி நாளை நமது சொந்த உற­வான பிள்ளை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­பட்ட செய்­தி­யாகக் கூட வரலாம். அந்த நிலை­யி­லி­ருந்து நமது சிறு­வர்­களைக் காப்­பாற்ற வேண்­டு­மாயின் ஒவ்­வொரு தனி­ந­பரும் இவ்­வி­டயம் தொடர்பில் விழிப்­ப­டை­வது அவ­சி­ய­மாகும்.

18 வய­திற்கு குறைந்த சகலரும் சிறு­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டுவர். சிறு­வர்­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் சிறு­வர்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவும் ஐக்­கிய நாடு­களின் சிறுவர் உரி­மைகள் பட்­டயம் உரு­வாக்­கப்­பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­துடன், 1991ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறு­வர்­க­ளது அடிப்­படை உரி­மைகள் தொடர்பில் கொடுக்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­து­வத்­தையும் அதன் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள கொள்­கைகள், விதி­க­ளையும் அறிந்து கொள்­வதும் அவ­சி­ய­மாகும். 
பிறப்பின் போது பெய­ரொன்­றையும் இன அடை­யா­ளத்­தையும்  பெற்­றுக்­கொள்ளும் உரிமை, பெற்­றோரைத் தெரிந்து கொள்­வ­தற்கும் அவர்­க­ளது பாது­காப்பைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­மான உரிமை, பெற்­றோ­ரி­ட­மி­ருந்து தம்மைத் தனி­மைப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்­கான உரிமை, வாழ்­வ­தற்கும் முன்­னே­று­வ­தற்­கு­மான உரிமை, தமது கருத்தை வெளிப்­ப­டுத்தும் உரிமை, சிந்­திப்­ப­தற்கும் மனச்­சாட்­சிப்­படி நடப்­ப­தற்கும், சம­ய­மொன்றைப் பின்­பற்­று­வ­தற்­கு­மான உரிமை, போதிய கல்வி பெறும் உரிமை, சமூக உரிமை, தனி­யு­ரிமை, சுகா­தார வச­திகள் பெறும் உரிமை, ஓய்­வெ­டுக்­கவும் விளை­யா­டவும் உரிமை, சித்­தி­ர­வதை குரூ­ர­மான தண்­ட­னை­க­ளி­லி­ருந்து  தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதா­ரண வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­குள்ள உரிமை, சுதந்­தி­ரத்­திற்கும் பாது­காப்­பிற்­கு­மான உரிமை போன்ற பல்­வேறு உரி­மை­களை அனு­ப­விக்கும் உரிமை சிறு­வர்­க­ளுக்­குண்டு. இத்­த­கைய உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதும் துஷ்­பி­ர­யோ­க­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. 
பொது­வாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­னது பல்­வேறு வடி­வங்­களில் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்­க­ணிப்பு ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோகம் என பல்­வேறு கோணங்­களில் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

சிறு­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக தீங்கு இழைக்­கப்­படின் அது உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இதில் அடித்தல், காயப்­ப­டுத்தல், அங்­கங்­களைச் சிதைத்தல் போன்ற மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத தண்­ட­னை­களும் அடங்­கு­கின்­றன. குறிப்­பாக பெரும்­பா­லான உட­லியல் ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள் வீடு­களில் இடம்­பெ­று­கின்­றன. பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள், வயது வந்த சகோ­தா­ரர்கள், சில ஆசி­ரி­யர்கள், கள்ளக் காத­லர்கள், காத­லிகள், எஜ­மா­னர்கள் போன்­றோ­ரினால் சிறு­வர்கள் உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர். 

இவ்­வா­றான உட­லியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் ஒரு சில வெளிக்கொண­ரப்­ப­டு­கின்­ற­ போ­திலும் பல சம்­ப­வங்கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டாமல் மூடி­ம­றைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொது­வாக, சிறு­வர்கள் சுய­மாக விளை­யா­டுதல், கற்றல், நாளாந்த கரு­மங்­களைச் செய்தல், ஒளிவு மறை­வின்றிப் பேசுதல், விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­துதல், அறி­யாத விட­யங்­களை அறிந்­து­கொள்ள முய­லுதல், சுய­மாகச் சிந்­தித்தல், ஆராய்தல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்ற போது அவை பல­வந்­த­மாகத் தடுக்­கப்­ப­டு­மி­டத்து, உள­வியால் ரீதி­யான தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கு­வார்கள்.

இதனால் அவர்­களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்­ண­றிவு, விவேகம் போன்ற உள நிலைகள் பாதிப்­ப­டையும். இவ்­வாறு சிறு­வர்­களைப் பாதிப்­படையச் செய்யும் செயற்­பா­டுகள் உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. அநேக வீடு­களில் பிள்­ளை­களின் சுதந்­தி­ரங்கள் பறிக்­கப்­படும் வகையில் தங்­க­ளது எண்­ணங்­க­ளையும் ஆசை­க­ளையும் பெற்­றோர்கள் பிள்­ளைகள் மீது திணிக்­கின்­றனர். இதனால், சிறு­வ­யதில் ஏற்­ப­டு­கின்ற உளத் தாக்­கங்கள் அப்­பிள்­ளையின் எதிர்­கா­லத்தைப் பாதிக்கும் என்­பதை அநேக பெற்­றோர்கள் மறந்து செயற்­ப­டு­வது அவர்­களின் அறி­யா­மை­யாகும்.  ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்­சைக்­காக பிள்­ளை­களைத் தயார்­ப­டுத்தும் போது  பெற்­றோர்­களால் பிள்­ளைகள் மன அழுத்தத்­திற்கு உள்­ளா­கின்ற சம்­ப­வங்கள் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றுள்­ள­மையை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும்.

சிறு­வர்­களை ஏதா­வது பாலியல் செயற்­பாட்டில் ஈடு­ப­டுத்தும் போது சிறு­வர்கள் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டு­கின்­றனர். பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது பாலியல் இச்­சைக்­காக சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மின்றி, சிறு­வர்­களைத் தொடுதல், வரு­டுதல், பொருத்­த­மற்ற பாலியல் சொற்­களைப் பயன்­ப­டுத்­துதல், பாலியல் நொந்­த­ர­வு­களைக் கொடுத்தல், பாலியல்  செயற்­பா­டு­களை பார்ப்­பதில் ஈடு­ப­டுத்தல், ஆபாசப் படங்கள், புத்­த­கங்­களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்­பா­டு­களில் சிறு­வர்­களை ஈடு­படச் செய்­வ­தா­னது பாலியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

சம­கா­லத்தில் சிறு­வர்கள் மிக மோச­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். இவ்­வாறு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­ப­டுட்­டுள்­ள­வர்கள் ‘சேடி­சம’, ‘பிடோ­பீ­லியா’, ‘பெடி­சி­ஷம’, ‘மஸோ­சியம்,’ போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளா­று­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள் என உள­வியல் நிபு­ணர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.  

உணர்ச்சி ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கமென்­பது வெளிப்­ப­டை­யா­கவே மறுத்து விலக்­குதல், தனி­மைப்­ப­டுத்தல், அவ­மா­னப்­ப­டுத்தல், பய­மு­றுத்தல், கெடுத்தல், சுரண்­டிப்­பி­ழைத்தல், உணர்ச்சி ரீதி­யான துலங்­கல்களை மறுத்தல் மற்றும் சூழ­லுடன் இடைத்­தொ­டர்பை மேற்­கொள்ளும் சிறு­வர்­க­ளது பிர­யத்­த­னங்­க­ளுக்கு தண்­ட­னைய­ளித்தல் போன்ற செயற்­பா­டுகள் உணர்ச்சி ரீதி­யி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இவ்­வ­கை­யான துஷ்­பி­ர­யோக செயற்­பா­டு­களும் பெரு­வா­ரி­யாக இடம்­பெற்­றுத்தான் வரு­கின்­றன.

ஒரு சிறு­வ­னுக்­கு­ரிய உடை, உணவு, சுகா­தாரம், பாது­காப்பு, மருத்­துவம், கல்வி போன்ற அடிப்­படைத் தேவைகள் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது அச்­சி­றுவன் புறக்­க­ணிப்பு ரீதியி­லான துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­கின்றான். அது­த­விர, சிறு­வர்கள் தொழி­லுக்கு அமர்த்­தப்­ப­டு­வதும் அதனால் ஏற்­ப­டு­கின்ற இறுக்­க­மான செயற்­பா­டு­க­ளும் கூட சிறுவர் துஷ்­பி­ர­யோக வடி­வங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. துஷ்­பி­ர­யோகம் பற்­றிய உண்­மை­யான தக­வல்­களை சிறு­வர்­க­ளுக்கு கற்­பித்தல் மற்றும் சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­தினால் இல­குவில் பாதிக்­கப்­படும் தன்­மையைக் குறைப்­ப­தற்கும் ஆரோக்­கி­ய­மான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் தேவை­யான திறன்­க­ளையும் பண்­பு­க­ளையும் அவர்­களில் விருத்தி செய்தல் அவ­சியம். இந்த அவ­சிய நட­வ­டிக்­கை­களில் பாட­சாலை மற்றும் தனியார் கல்வி நிறு­வன ஆசி­ரி­யர்­களின் வகி­பங்கு அளப்பரி­யது. 

கருகும் தளிர்­களும் பொறுப்­பா­ளர்­களும்

18 வய­திற்குக் குறைந்­த­வர்­களே சிறு­வர்­களாக் கரு­தப்­ப­டு­கி­றார்கள். இவ்­வ­யதுச் சிறு­வர்­களே பாட­சாலை மாண­வர்­க­ளா­கவும் உள்­ளனர். கல்வி அமைச்சின் 2013ஆம் ஆண்டின் தர­வு­களின் பிர­காரம் நாடு பூரா­க­வு­முள்ள ஏறக்­கு­றைய 10 ஆயிரம் பாட­சா­லை­களில் 40 இலட்சம் மாண­வர்கள் கல்வி கற்­கி­றார்கள். இவர்­களின் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஏறக்­கு­றைய இரண்டு இலட்­சத்து 30 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

ஆனால், ஆசி­ரி­யர்கள் என்­ப­வர்­களின் பணி மாண­வர்­களின் பரீட்சை அடைவு மட்­டங்­களை அதி­க­ரிப்­ப­தற்­கான கற்­பித்­த­லாக மாத்­தி­ர­மின்றி,  மாண­வர்­களின் பாது­காப்பு உட்­பட ஏனைய விட­யங்­க­ளிலும் கவனம் செலுத்­து­வ­தாக இருக்க வேண்டும். 

கல்­வித்­துறை வியா­பா­ர­மாக்­கப்­பட்­டதன் விளை­வாக ஒரு சில ஆசி­ரி­யர்கள் பண மையக் கல்­விக்கு அடி­மைப்­பட்­டுள்­ளனர். இதனால், பாட­சா­லை­களில் கற்­பித்தல் என்ற பணி பாட­சா­லைக்கு அப்பால் முறை­யாக இடம்­பெ­று­கி­றது. இவ்­வாறு கற்­பித்தல் பணி இடம்­பெறும் ஒரிரு தனியார் வகுப்­புக்­களில் இவ்­வா­றான துஷ்­பி­ர­யோ­க ­சம்­பங்கள் நிகழ்­கின்­றன. தமது பிள்­ளை­களின் எதிர்­காலம் ஒளி­ம­ய­மாக வேண்டும் என்­ப­தற்­காக தனியார் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கும் ஏனைய வதி­விட நிலை­யங்­க­ளுக்கும் அனுப்­பப்­படும் பிள்­ளை­களை பாது­காக்க வேண்­டிய பொறுப்பு இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கும் ஆலோ­சகர்­க­ளுக்கும் உண்டு. ஆனால், வேலி­யாக இருக்க வேண்­டிய இத்­த­கைய ஓரிரு ஆசி­ரி­யர்­க­ளி­னாலும் வதி­விட நிலைய ஆலோ­சர்­க­ளி­னாலும் மாண­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை பெரும் கொடு­மை­யாகும்.

சம­கா­லத்தில் மாண­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ளன. இதன் பிர­காரம்  இவ்­வ­ரு­டத்தின் முதல் இரண்டு மாதங்­களில் வளரும் தளிர்­க­ளான 1532 சிறு­வர்கள்  உட­லியல், உள­வியல் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோங்­க­ளுக்கு உள்­ளாகி கரு­கிப்­போ­யுள்­ளனர். இவ்­வா­றான துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள், கம்­பஹா, கொழும்பு, களுத்­துறை, குரு­நாகல், இரத்­தி­ன­புரி மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே அதி­க­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தற்­கான முறை­ப்பா­டுகள் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு கிடைத்­துள்­ள­தாக அதி­கார சபை குறிப்­பிட்­டுள்­ளது. கடந்த 2017இல் 8,548 துஷ்­பி­ர­யோக முறைப்­பா­டு­களும் 2016இல் 9,361 முறைப்­பா­டு­களும் 2015இல் 10,732, சிறு­வர்­களும் 2014இல் 10,315 சிறு­வர்­களும்; சித்­தி­ர­வதை, கல்வி உரிமை மறுத்தல், பாலியல் வன்­கொ­டுமை, பாலியல் தொல்லை, உள­வியல் போன்ற துஷ்­பி­ர­யோ­கங்கள் சிறு­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

 சிறு­வர்கள் என்­ப­வர்கள் வளரும் தளிர்கள், இவர்கள் பாட­சாலை மாணவர்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும், விழிப்புணர்வும் பாடசாலைகளில் முறையாகவும், வினைத்திறனுடன்  தொடராக வழங்கப்படுவது காலத்தின் கட்டாய செயற்பாடு எனக்கருதி அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதைத் தடுப்பதற்கான பொறுப்பை வகிக்க முடியும். 

அத்துடன், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரோக்கியமிக்க பொறிமுறைகளினூடாக தகைமையுள்ளவர்களைக்  கொண்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். 

அமைச்சுக்களினாலும், நிறுவனங்களினாலும் உளவள ஆலோசகர்களுக்கான நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது வெறும் பட்டச் சான்றிதழ்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாது பட்டம் உள்ளவர்களை மாத்திரம் இணைத்துக்கொள்ளாது, இத்துறையில் கூடிய அனுபவமும், பரந்த அறிவும், மக்களை இலகுவில் கவரக்கூடிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் திறனும் கொண்டவர்களும் இந்நியமனங்களின்போது இணைத்துக்கொள்ளப்படுவது சிறுவர் துஷ்பிரயோக தடுப்புத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனெனில், சில பாடசாலைகளிலும், பிரதேச செயலகங்கள் ஊடாகவும்; முன்னெடுக்கப்படுகின்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் வினைத்திறனற்றதாகக் காணப்படுவதற்கு உளவள ஆலோசனைத்துறையில் அனுபமற்றவர்களின் பட்டச் சான்றிதழ்கள் மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை காரணமெனவும் சுட்டிக்காட்டப்படுவதை நிகாரிக்க முடியாது.

வேலியாகவுள்ள காமுவர்களினதும் ஏனைய வன்னெண்ணம் கொண்டவர்களினதும் கொடூரத்திற்கு  வளரும் தளிர்களான அப்பாவிச் சிறுவர்கள் கருகிவிடாமல்; பாதுகாக்கப்பட வேண்டுமாயின், சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் வெற்றியளிக்கக் கூடிய பொறிமுறையினூடாக வினைத்திறனுடன் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுதோறும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். அரசியல் தலையீடுகள், மற்றும் செல்வாக்குகளின்றி  இந்நடவடிக்கைகளுக்கு தகைமையும் அனுபவமும் கொண்டவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதும் முக்கியமாகும்.