Verified Web

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏன் இந்த தாமதம்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-12-04 10:05:13 A.R.A Fareel

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இத்­தனை காலமா? இதற்கு எட்டு வரு­டங்­க­ளுக்கும் மேலான கால அவ­காசம் தேவை­தானா? என்று இன்று கேள்வி  எழுப்­பப்­ப­டு­கி­றது.  ஏன் இந்தத் தாமதம்? இந்தத் தாம­தத்­திற்குக் காரணம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபார்சு செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலை­வரா? இல்­லையேல் குழுவின் உறுப்­பி­னர்­களா? என்­பதில் பல்­வேறு  விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இச்­சூழ்­நி­லையில்  முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான சிபார்­சுகள் கால­தா­ம­த­மா­வ­தற்கு உலமா சபை கார­ண­மல்ல என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்  எம்.ஜ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்­துள்­ளமை கவ­னத்திற் கொள்­ளத்­தக்­க­தாகும். 

உலமா சபையின் நிலைப்­பாடு மிகவும் தெளி­வா­ன­தாகும்.  முஸ்லிம் தனியார் சட்­டத்தில் உட­ன­டி­யாக அவ­ச­ர­மாக  திருத்­தப்­ப­ட­வேண்­டி­ய­வற்றை அவ­ச­ர­மாக திருத்திக் கொள்வோம். ஏனை­ய­வற்றை பிறகு ஆராய்வோம் எனவும்  அவர் கூறி­யி­ருக்­கிறார். 
இதே­வேளை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தெரி­வித்­துள்ள கருத்­துக்­க­ளையும் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக  நிய­மிக்­கப்­பட்ட குழு 8 வரு­டங்கள் கடந்தும் தனது அறிக்­கையை நீதி­ய­மைச்­சுக்கு இது­வரை சமர்ப்­பிக்­க­வில்லை. 

தாம­தத்­திற்குக் காரணம் குழுவின்  அமர்­வு­க­ளுக்கு  உறுப்­பி­னர்­களில் சிலர் சமூ­க­ம­ளிக்­காது இருக்­கி­றார்கள் என குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­ய­ரசர்  சலீம் மர்சூப் பல தட­வைகள் தெரி­வித்­தி­ருக்­கிறார். எனவே தாம­தத்­திற்குத் தலை­வரைக் குறை­கூற முடி­யாது.  

குழுவின் அமர்­வு­க­ளுக்கு சமூ­க­ம­ளிக்­கா­தி­ருக்கும் சில உறுப்­பி­னர்­களே தாம­தத்­திற்கு பொறுப்புக் கூற வேண்டும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு  அவர்கள் விரும்­பா­விட்டால் குழு­வி­லி­ருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். சமூ­கத்தின் மீது அக்­க­றை­யற்­ற­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டதே இதற்குக் காரணம் எனக் கூறலாம் என்று ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத்தின் தலைவர்  எம்.எஸ்.எம்.ரஸ்மின் கருத்து வெளி­யிட்­டுள்ளார். 

சிபார்­சுக்­குழு  உட­ன­டி­யாக  தனது அறிக்­கையை  நீதி­ய­மைச்சின்  செய­லா­ள­ருக்கு  அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் கூறி­யுள்­ளமை நோக்­கற்­பா­ல­தாகும். 

இதே­வேளை  முஸ்லிம்  தனியார் சட்­டத்­தி­ருத்த சிபார்சு  குழுவில்  அங்கம் வகிக்கும் முஸ்லிம் பெண்கள்  செயல்   ஆராய்ச்சி முன்­ன­ணியின்  தலைவி ஜெஸீமா இஸ்­மா­யிலை தொடர்பு கொண்டு  அறிக்கை தாம­தத்­திற்­கான  கார­ணத்தை  வின­வி­ய­போது, அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும், குழு அங்­கத்­த­வர்­களின்  கையொப்பம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும், விரைவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்தார். 

முஸ்லிம் தனியார் சட்டம் 

எமது நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழும் சிங்­க­ள­வர்கள் பொதுச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்­றனர். இப்­பொதுச் சட்­டத்­தினைப் போன்றே இலங்­கையில்  மேலும் மூன்று  சட்­டங்கள்  அமுலில் உள்­ளன. அவை முஸ்லிம் தனியார் சட்டம், தேச வழமைச் சட்டம், கண்­டிய சட்டம் என்­ப­ன­வாகும். தமி­ழர்கள் தேசிய வழமைச் சட்­டத்தின் மூலமும், கண்­டிய சிங்­க­ள­வர்கள் கண்­டியச் சட்­டத்தின் மூலமும்,  இஸ்­லா­மி­யர்கள் முஸ்லிம் தனியார் சட்­டத்தின் மூலமும் ஆளப்­ப­டு­கின்­றனர். 

எமது நாட்­டிற்கு முஸ்­லிம்கள் 8 ஆம் நூற்­றாண்டில் வருகை  தந்த காலத்­தி­லி­ருந்து அவர்­களின்  விவாகம் மற்றும் விவா­க­ரத்து தொடர்­பான விட­யங்கள் அவர்­க­ளது சட்­டங்கள் மூலமே ஆளப்­பட்டு வந்­துள்­ளன. 

இலங்கை  முஸ்­லிம்­க­ளுக்­கென  முத­லா­வது  எழு­தப்­பட்ட சட்ட மூலம் 1770 ஆம் ஆண்டு  பட்­டா­வி­யா­வி­லி­ருந்து  கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது அந்­நாட்டின்  விவாகம், வாரி­சு­ரிமை தொடர்­பான  சட்­டங்­களை  அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்­தது. ஒல்­லாந்தர் இலங்­கையின்  கரை­யோரப் பிர­தே­சங்­களை ஆட்சி செய்து கொண்­டி­ருந்த  காலப்­ப­கு­தி­யிலே இச்­சட்டம்  கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

இலங்­கையில்  ஆளு­ந­­ராகப் பதவி வகித்த  போல்க் என்­பவர்  முஸ்லிம் தலை­வர்­களின்  ஒத்­து­ழைப்­புடன்  முஸ்லிம்  சட்­டங்­களைத்  தொகுப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டார். ஆளுநர் போல்க் 1765–1785 காலப்­ப­கு­தியில் கட­மையில் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  ஆளுநர்  போல்க்கின் முயற்­சிகள் பற்றி அலெக் ஸாண்டர்  ஜோன்ஸ்டன்  தனது நூலில்  பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். 

இலங்கைத் தீவில்  முஹம்­ம­திய சட்டம் பற்றி மிகத் தெளி­வான  அறி­வு­டை­ய­வர்கள்  இருக்­கி­றார்­களா?  என்­பது  பற்றி  ஆளுநர்  போல்க்  ஆராய்ந்தார்.  விசா­ர­ணைகள் மேற்­கொண்டார். விசா­ர­ணை­களின்  முடிவில்  இத்­தீவில் முஹம்­ம­திய சட்டம்  பற்­றிய  அறி­வு­டை­ய­வர்கள்  இல்லை என்­பதை அறிந்து கொண்டார்.இதனால் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்­கான சட்­ட­வி­திகள் இருக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தமது சட்­டத்­திலும் அது தொடர்­பான விட­யங்­க­ளிலும்  என்­னென்ன  வழி­மு­றைகள்  இருக்­கின்­றன  எது இல்லை என்­பதில் முற்­றிலும் அறி­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இதனால்  ஒவ்­வொரு தலை­மைக்­கா­ரரும் தங்­க­ளது விருப்பு வெறுப்­பு­க­ளுக்­க­மைய  தீர்­மானம் எடுக்கும் நிலை ஏற்­பட்­டது. 

இதனைத் தொடர்ந்து பட்­டா­வி­யாவின்  ஆளுநர்  நாய­கத்­திற்கு  ஆளுநர் போல்க்­கினால்  ஓர் அறிக்கை  அனுப்பி வைக்­கப்­பட்­டது. அவ­ரது சிபார்சின்  அடிப்­ப­டையில் திரு­ம­ணமும்  வழி­யு­ரி­மையும்  தொடர்­பான சிறி­ய­தொரு கோவை வரை­யப்­பட்­டது. இக்­கோ­வையை ‘சோன­கர்கள்  அல்­லது  முஹம்­ம­தி­யர்­களும் ஏனைய உள்­நாட்­டி­னங்­களும்  தொடர்­பாக  சிறப்புச் சட்­டங்கள் என அழைக்­கப்­பட்­டது.  இது கரை­யோ­ரத்தில் வாழ்­கின்ற  எல்லா முஸ்­லிம்­க­ளுக்­கான ஏற்­பு­டைத்­தான வழி­யு­ரிமை, விவாகம், விவா­க­ரத்து  போன்ற  விட­யங்­க­ளுக்­கான சட்ட ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. 

1806 ஆம் ஆண்டில் அக்­கா­லத்தில் ஆளு­ந­ராக  இருந்த  அலெக்­சாண்டர் ஜோன்ஸ்டன்  பட்­டே­வியன் கோவையை  ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்தார். ஆங்­கில  மொழி­பெ­யர்ப்பு  20 முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்கு  வழங்­கப்­பட்­டது. அவர்கள் அதில் சில திருத்­தங்­களைச் சிபார்சு செய்­தனர். திருத்­தங்­க­ளுடன் 1806 ஆம் ஆண்டில்  இப்­பட்­டே­வியன்  கோவை முஹம்­ம­தியன் கோவை­யாக  உரு­வ­மைக்­கப்­பட்­டது. ஆரம்­பத்தில் கொழும்பு  பிர­தே­சத்­திற்கு மாத்­திரம்   அமுல்­ப­டுத்­தப்­பட்ட இக்­கோவை 1852  ஆம் ஆண்டின்  5 ஆம்  இலக்க  சட்­டத்தின் மூலம்  நாடு முழு­வ­துக்கும்  விஸ்­த­ரிக்­கப்­பட்­டது. 

19 ஆம் நூற்­றாண்டின்  முற்­ப­கு­தியில் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்த புத்தி ஜீவிகள் 1806 ஆம் ஆண்டின் முஹம்­ம­தியன்  கோவையில் உள்ள தவ­று­களைச்  சுட்­டிக்­காட்டி தமது  அதி­ருப்­தியை  வெளி­யிட்­டனர்.  இக்­கோவை இஸ்­லா­மிய  சட்­டத்தின் சரி­யான  கொள்­கை­களைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை என உண­ரப்­பட்­டது. இத­னை­ய­டுத்து  விவாகம்  தொடர்­பான விட­யங்­களை  உள்­ள­டக்­கி­யி­ருந்த முஹம்­ம­தியன் கோவையின் இரண்டாம் பிரிவு 1929 ஆம் ஆண்டில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மாக  மாற்­றப்­பட்­டது என்­றாலும் இது 1931 ஆம் ஆண்­டி­லேயே  அமுல்  நடத்­தப்­பட்­டது. இச்­சட்டம்  பல குறிப்­பி­டத்­தக்க திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

1929 ஆம் ஆண்டின் சட்­டத்தின் பிரிவு 50 பின்­வ­ரு­மாறு  தெரி­விக்­கி­றது.எந்­த­வொரு  விடயம் தொடர்­பாக சட்­டத்தில் ஏற்­பா­டுகள்  எது­வு­மில்­லா­துள்­ளதோ அவ்­ விடயம் தொடர்­பாக  இஸ்­லா­மிய சட்­டத்தில் பரி­காரம்  தேடப்­ப­ட­வேண்­டுமே தவிர 1806 ஆம் ஆண்டின் முஹம்­ம­தியன்  கோவையில் கூறப்­பட்­டுள்­ளது போல் வழக்­கா­று­க­ளி­லி­ருந்தோ பொதுச் சட்­டத்­தி­லி­ருந்தோ  பரி­காரம்  தேட முடி­யாது. 

 முஸ்லிம் சட்­டத்தை நிர்­வ­கிப்­ப­தற்­காக  காதி நீதி­மன்றம் எனும் விஷேட நீதி­மன்றம் நிறு­வப்­ப­ட­வேண்டும். காதி நீதி­மன்­றத்தின் மேன்­மு­றை­யீ­டுகள் காதிகள் சபைக்கும் அதன் பின்னர் உயர்­நீ­தி­மன்­றுக்கும்  செய்­யப்­ப­ட­வேண்டும். 
ஒரு குறு­கிய  காலத்­தினுள் இச்­சட்டம் 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க  முஸ்லிம், விவாக விவா­க­ரத்து சட்­டத்­தினால் முற்­றாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. இச்­சட்டம் இன்று வரைக்கும் அமுலில் உள்­ளது. இச்­சட்டம் 1954 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டம் 1955 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம், 1969 ஆம் ஆண்டின்  32 ஆம் இலக்க  சட்டம்  என்­ப­வற்­றினால் திருத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

திருத்­தங்­களை சிபார்சு செய்ய குழு நிய­மனம் 

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க  முஸ்லிம்  விவாக  விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு  செய்­வ­தற்­கா­கவே  தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர்  சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு இன்று 8 வரு­டங்­க­ளுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு  நிய­மிக்­கப்­பட்­ட­தாகும்.  இக்­கு­ழுவில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின்  தலைவர், செய­லாளர், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள், நீதி­ப­திகள், சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள்  ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர். 

17 பேர் கொண்ட  இக்­குழு கடந்த 8 வரு­டங்­க­ளாக முஸ்லிம்  தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய  திருத்­தங்கள்  தொடர்பில்  ஆராய்ந்து வரு­கி­றது. இந்த 8 வருட காலத்­தினுள் குழு உறுப்­பி­னர்கள் இருவர்  கால­மாகி விட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. 
2009 ஆம் ஆண்டு  அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த  மொர­கொ­ட­வினால்  நிய­மிக்­கப்­பட்ட இக்­குழு  அவ்­வ­ரு­டமே திருத்­தங்கள் தொடர்­பான  முன்­மொ­ழி­வு­களை புத்­தி­ஜீ­வி­க­ளி­ட­மி­ருந்தும் சமூக அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்தும், காதி நீதி­ப­தி­க­ளி­ட­மி­ருந்தும், பொது­மக்­க­ளி­ட­மி­ருந்தும் கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஆனால் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஆரம்ப காலத்தில் சிபார்­சு­க­ளுக்­கான முன்­மொ­ழி­வுகள் குறித்து சமூகம் அதி­க­ளவில் அக்­கறை செலுத்­த­வில்லை. 

ஆனால்  2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து  2017 ஆம் ஆண்டு வரை திருத்­தங்கள் தொடர்­பான  முன்­மொ­ழி­வுகள்  குறிப்­பிட்ட குழு­விற்கு அனுப்பி வைக்­கப்­பட்டுக் கொண்­டே­யி­ருந்­தன. இதனால் குழுவின் பணி­களை தொடர்ந்து மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. சில அமைப்­புகள் ஷரீ­ஆ­வுக்கு  முர­ணான முன்­மொ­ழி­வு­க­ளையும் சமர்ப்­பித்­தி­ருந்­தன. இதனால் குழுவில் அங்கம் வகிக்கும்  உலமா சபை இது­வி­ட­யத்தில் மிகவும் உறு­தி­யாக இருந்­தது. ஷரீ­ஆ­வுக்கு முர­ணான திருத்­தங்­களை உல­மா­சபை  தொடர்ந்தும் எதிர்த்து வந்­தது. இதனால்  குழுவின்  அங்­கத்­த­வர்­க­ளினால் ஓர் ஒரு­மித்த இணக்­கப்­பாட்­டுக்கு வர முடி­யா­மற்­போ­னது. 

உட­ன­டி­யாக  அறிக்கை கோரும் நீதி­ய­மைச்சு 

8 வரு­ட­கா­ல­மாக கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்­சு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு மேலும் காத்­தி­ருக்க தயா­ராக இல்லை என்ற வகையில்  நீதி­ய­மைச்சின் செய­லா­ளரின் கோரிக்கை அமைந்­துள்­ளது. 

நீதி­ய­மைச்சின் செய­லாளர்  ஜய­மான்ன கடந்த செப்­டெம்பர் மாதம்  19 ஆம் திகதி  முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின்  தலைவர் ஓய்வு பெற்ற  நீதி­ய­ரசர்  சலீம் மர்­சூபுக்கு  கடி­த­மொன்­றினை அனுப்பி  வைத்­துள்ளார்.  குறிப்­பிட்ட கடி­தத்தில் குழுவின் அறிக்­கை கால­தா­ம­தப்­ப­டுத்­தாமல்  அவ­ச­ர­மாக அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­துள்ளார். அத்­தோடு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழு தனது அமர்­வு­களை எதிர்­கா­லத்தில்  நீதி­ய­மைச்சின்  கேட்போர் கூடத்தில் நடாத்த வேண்­டு­மெ­னவும்  கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் நீதி­ய­மைச்சின்  அவ­தானம்  குழுவின் மீது  திரும்­பி­யுள்­ள­மையை அறிய முடி­கி­றது. 

குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே  கருத்து முரண்­பா­டுகள் 

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபார்சு குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே  சில விட­யங்­களில் கருத்து முரண்­பா­டு­களும் சந்­தே­கங்­களும்  நில­வு­கின்­ற­மையே அறிக்கை தாம­த­மா­வ­தற்குக் காரணம்  எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

குழு தனது அறிக்­கையைத் தயா­ரித்­துள்ள  நிலையில் கடந்த  செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதிய  அமர்வில் உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொள்­ள­வி­ருந்­தது, என்­றாலும் அன்­றைய தினம் சில உறுப்­பி­னர்கள் சமு­க­ம­ளிக்­கா­தி­ருந்­த­மையும், ஒரு சில விட­யங்­களில் இணக்கம் காணப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­த­மையும் கார­ண­மாக அன்­றைய தினம் கையொப்­பங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அமர்வு கடந்த 26 ஆம் திகதிக்கு (நவம்பர்) ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில் கடந்த 26 ஆம் திகதி  குழு அதன் தலைவர் சலீம் மர்சூப் தலை­மையில்  கூடி­ய­போது குழுவின் சில  உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றுமோர் அறிக்கை  சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இவ் அறிக்­கையை அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா  சபையின்  தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி  முப்தி கைய­ளித்தார். அவ்­வ­றிக்கை 10 விட­யங்கள் தொடர்­பான சிபார்சு அறிக்­கை­யாகும் என்­றாலும்  அன்­றைய தினம் அவ்­வ­றிக்­கையில் கையொப்­ப­மிட்­டி­ருந்த சிலர் சமூ­க­ம­ளித்­தி­ருக்­காமையினாலும் சமூ­க­ம­ளித்­தி­ருந்த உறுப்­பினர் ஒருவர் சுக­யீனம்  கார­ண­மாக அமர்­வி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­ற­த­னாலும் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. 

முஸ்லிம் தனியார்  சட்­டத்­தி­ருத்த  சிபார்சுக் குழு ஏற்­க­னவே  அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்து உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொள்­ள­வி­ருந்த நிலையில்  குழுவின்  உறுப்­பி­னர்கள் சிலர் கையொப்­ப­மிட்டு  மற்­றுமோர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதால் இப்­பணி மேலும் கால­தா­ம­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. 

இந்­நி­லையில் குழுவின் அமர்வு எதிர்­வரும் டிசம்பர் மாதம் 20 திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.  எனவே எதிர்­வரும் 20 ஆம் திகதி ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குழு உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், சிலரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையையும் சேர்த்து இரண்டு அறிக்கைகள்  நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் சமர்பிக்கப்படவுள்ளன. 

ஒரு அறிக்கையே சமர்ப்பிக்கப்படவேண்டும்

முஸ்லிம்களின் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் போது  நாம் ஓர் உறுதியான திடமான நிலைப்பாட்டிலே  இருக்க வேண்டும். 8 வருடங்கள் காத்திருந்து பல அமர்வுகளை நடாத்திவிட்டு நாம் பிளவுபட்டு  நிற்பது சமூகத்திற்கு  பாதகமாக அமையலாம். நீதியமைச்சும் எமக்குள் ஒற்றுமையின்மையை  உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கக்கூடாது. 

எமக்குள் சில விடயங்களில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அறிக்கையை தாமதப்படுத்தவும் கூடாது. இச்சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம்  இய்யத்துல் உலமா சபையினதும் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூபினதும் நிலைப்பாடு ஒரே வகையில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். 

ஒரே அறிக்கையாக முஸ்லிம்  தனியார் சட்ட திருத்த சிபார்சுகள்  அமையவேண்டும். இரண்டு  அறிக்கைகள் தேவையில்லை என உலமா  சபையின்  தலைவர்  அஷ்ஷெய்க்  எம்.ஐ.எம்.ரிஸ்வி  முப்தி தெரிவித்திருக்கிறார். குழுத் தலைவரின் கருத்தும் இவ்வாறாகவே அமைந்துள்ளது. எனவே பிரிந்து நிற்கும் உறுப்பினர்கள் இது விடயத்தில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் நிலைப்பாடாக  இருக்கிறது. 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஒரு உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் பெண்­களின் விட­யத்தில் அவர்­க­ளது உரிமை, பாது­காப்பு மற்றும் சலு­கை­களில் உல­மா­சபை உறு­தி­யாக இருக்­கி­றது. சட்­டத்தில் திருத்­தங்கள் ஷரீ­அத்­துக்கு முர­ணாக இருக்­கக்­கூ­டாது. ஷரீஅத் அனு­ம­தித்த அத்­தனை மாற்­றங்­களும் இடம்­பெ­ற­வேண்டும் என உல­மா­ச­பையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழுவின் அறிக்கை தாம­த­மா­வ­தற்கு உல­மா­சபை எவ்­வ­கை­யிலும் கார­ண­மில்லை. சட்­டத்தில் எந்த விட­யங்­களில் அவ­ச­ர­மாக திருத்­தங்கள் செய்­யப்­ப­ட­வேண்­டுமோ, எது அத்­தி­யா­வ­சி­ய­மாகப் படு­கி­றதோ அந்த விட­யங்­களில் திருத்­தங்­களைச் செய்து கொண்டு ஏனை­ய­வற்றை பிறகு ஆலோ­சிக்­கலாம் என்றும் அவர் கூறி­யுள்ளார்.
மேலும் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். ‘முஸ்லிம் தனியார் சட்டம் இந்­நாட்டின் சொத்து. இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்­துள்ள வரப்­பி­ர­சாதம். இதில் மாற்­றங்கள் தேவை என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஷரீ­அத்தின் விட­யத்தில் எதில் நெகிழ்­வுத்­தன்மை, தாராளத் தன்மை இருக்­கி­றதோ அதில் மாற்­றங்­களைச் செய்­யலாம். எந்த விட­யங்­களில் மாற்­றங்­களைச் செய்யக் கூடாதோ அதில் திருத்­தங்­களைச் செய்ய முடி­யாது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் நிச்­ச­ய­மாக அழ­காக காலத்­துக்குத் தேவை­யான மாற்­றங்கள் தேவை என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. பத்வா என்­பது ஷரீ­அத்­துக்கு உட்­பட்டு காலத்­துக்கு சந்­தர்ப்­பத்துக்கு ஏற்­ப­மாற வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழு 2009 ஆம் ஆண்டு முதல் நடாத்­திய 36 அமர்­வு­களில் ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை 30 இல் கலந்து கொண்­டி­ருக்­கி­றது. நானும் செய­லாளர் முபாரக் மௌல­வியும் கலந்து கொண்­டி­ருக்­கிறோம். எமது கருத்­து­களைப் பகிர்ந்து கொண்­டி­ருக்­கிறோம்.

உலமா சபையின் பத்வா குழுவில் அனைத்து மத்­ஹ­பு­க­ளையும், அமைப்­பு­க­ளையும் சேர்ந்த 40 உல­மாக்கள் இருக்­கி­றார்கள். இக்­குழு பல தட­வைகள் ஒன்று கூடி முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது; ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. அவர்­க­ளது ஆலோ­ச­னைகள் முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசுக் குழு­விடம் பகிர்ந்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என ரிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார்.

உல­மா­சபை பத்வா குழு­வைக்­கூட்டி தனது நிலைப்­பாட்­டினை 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதமே சிபா­ரிசு குழு­விடம் தெரி­வித்­து­விட்­டது. இக்­கூட்­டத்தில் 25 உல­மாக்கள் பங்­கேற்­றனர். இதே நிலைப்­பாட்­டினை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜாமி­ஆ­ந­ளீ­மி­யாவில் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்­திலும் உறுதி செய்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்­க­ளிலும் அதே நிலைப்­பாட்டின் முன்­மொ­ழி­வு­களை தெரி­வித்­துள்­ளது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தும் தனது முன்­மொ­ழி­வு­களை 53 பக்­கங்­களில் குழு­வுக்கு அனுப்பி வைத்­துள்­ளது. அந்தக் கருத்­துக்கள் தொடர்­பிலும் குழு ஆராய்ந்­துள்­ளது. குழுவின் அறிக்கை தாம­த­மா­வதை தௌஹீத் ஜமாஅத் கண்­டித்­துள்­ளது. குழு தனது அறிக்­கையை மேலும் தாம­திக்­காது நீதி­ய­மைச்­சுக்கு சமர்­பிக்க வேண்­டு­மென ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஏன் இந்தத் தாமதம்-?

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்கு எட்டு வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால அவ­காசம் தேவையா? என்ற கேள்வி பல தரப்­பு­க­ளி­லி­ருந்தும் எழுப்­பப்­ப­டு­கி­றது. குழுவில் நீதி­ப­திகள், ஜனா­தி­பதி சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள்,  அனு­பவம் வாய்ந்த பெண் பிர­தி­நி­திகள், உல­மா­ச­பையின் தலை­மைத்­துவம் என்று உயர்­த­ரத்­தி­னரே அங்கம் வகிக்­கின்­றனர்.
அவர்கள் திருத்­தங்­க­ளுக்­காக வாதிட்டுக் கொண்டு முரண்­பட்டுக் கொண்­டி­ருப்­பதில் எந்தப் பய­னு­மில்லை.

மொத்­தத்தில் எமக்­கென்று தனி­யான நீதிக்­கட்­ட­மைப்பு, காதி­நீ­தி­மன்­றங்கள் இருக்­கின்­றன என நாம் கனவில் மிதந்து கொண்­டி­ருக்­கிறோம். காதி நீதி­மன்­றங்கள் இன்று பாட­சா­லை­க­ளிலும், தனியார் வீடு­க­ளிலும் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு ஒரு சில ஆயிரம் ரூபா கொடுப்­ப­ன­வுகளே வழங்­கப்­ப­டு­கின்­றன. அவர்கள் நீதி­மன்ற அலு­வ­ல­கங்­களை நடாத்தும் கட்­டி­டங்­க­ளுக்கு மாதாந்தம் வாட­கை­யாக வெறும் ஆயிரம் ரூபாவே வழங்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் சட்­டத்தை மாத்­திரம் திருத்தி விட்டால் எல்லாம் சரி­யா­கி­வி­டுமா என்ற கேள்­வியும் எழுப்­பப்­ப­டு­கி­றது.

சிபார்சு குழுவில் அங்கம் பெற்றுள்ள சமுதாயத்தின் புத்தி ஜீவிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

சட்டத்திருத்தங்களை துரிதப்படுத்துவ தற்காக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவைச் சேர்ந்த அமைச்சர்களான கபீர்ஹாசிம், ரவூப்ஹக்கீம், ரிசாத்பதியுதீன், பைசர் முஸ்தபா, எம்.எச்.ஏ.ஹலீம் சந்திராணி பண்டார, சுதர்சனி பர்ணான்டோ புள்ளே என்போர் மௌனித்துவிட்டார்களா? சமூகம் பதிலுக்காக காத்திருக்கிறது.