Verified Web

ராஜபக்ஷாக்களை காப்பாற்றுபவர் யார்

2017-12-04 10:00:27 A.L.M. Satthar

சிங்களத்தில்: பேராசிரியர் சரத் விஜேசூரிய
தமிழில்:  ஏ.எல்.எம். சத்தார்

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற, பாரா­ளு­மன்றத் தேர்தல் பெறு­பேற்­றுக்­க­மைய ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கூட்­ட­ர­சாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்­டன. இதன் மூலம் ஐ.தே.கட்சி மக்கள்  பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஐ.தே.கட்­சிக்கும் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக கட்­சி­யினர் மத்­தியில் அதி­ருப்தி தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனாலும் நாட்டின் அவ­ல­நி­லையைக் கருத்தில் கொண்டு கூட்­டாட்­சிக்குப் பச்­சைக்­கொடி காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர். வர­லாற்று நெடு­கிலும் கீரியும் பாம்­பு­மாக  இருந்த இரு கட்­சி­களும் ஒன்­றாக இயங்­கு­வ­தற்­கான அடிப்­ப­டைக்­கா­ரணம், அதல பாதா­ளத்தில் வீழ்ந்­துள்ள நாட்டின் அர­சியல் சூழ்­நி­லையை சீர­மைத்துக் கொள்ளும் நனனோக்­கி­லேயே இரு துரு­வங்­களும் ஒன்­றா­யின. 

ஆனால் அர­சியல் மறு­சீ­ர­மைப்பு விட­யத்தில் கூட்­ட­ர­சாங்­கமோ காலம் கடத்தும் போக்­கிலே காலத்தை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. இதனை மக்­கள் ­வெ­றுப்­பு­ணர்­வோடு நோக்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஐ.தே.கவின் பின் வரிசை உறுப்­பி­னர்கள் பலரும், அரசின் இத்­த­கைய அசமந்தப் போக்­கினால் தம்மால் கிரா­மப்­ பு­ற­மக்­க­ளிடம் முகம் ­காட்ட முடி­யா­தி­ருப்­ப­தாக அங்­க­லாய்ப்­ப­தையும் காண­மு­டி­கி­றது.
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் இந்த விட­யத்தில்  அசட்­டை­காட்­டு­வ­தா­கவே தெரி­கி­றது. தனக்குப் பின்னால் கட்சி இருந்­தா­லென்ன? இல்­லா­விட்டால் என்ன? என்ற மன­நி­லையில் அவர் இருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் மஹிந்­தவை ஆத­ரித்து பொது வேட்­பா­ள­ருக்கு எதி­ரா­கவே செயற்­பட்­டனர். ஆனால் ராஜபக் ஷாக்­க­ளுடன் தொடர்ந்து பய­ணிக்க இய­லாது என்­பதை அப்­போது அவர்­க­ளது மனச்­சாட்சி உறுத்­திக்­கொண்­டி­ருந்­ததும் மறுப்­ப­தற்­கில்லை. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி இரண்­டாகப் பிள­வு­பட்டு தாமரை மொட்­டுக்கு வாய்ப்பைத் தேடிக்­கொ­டுப்­பதில் ஐக்­கிய தேசியக் கட்சி அனு­ச­ர­ணை­யாக அமை­கி­றது என்­பதே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­களின் கவ­லை­யாக இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

ராஜபக்  ஷாக்கள், அவர்­க­ளது நெருங்­கிய நண்­பர்கள், அவர்­க­ளது ஆட்­சியில் அதி­கா­ரி­க­ளாக இருந்­த­வர்கள் போன்­றோரின் அப்­போ­தைய மோச­டிகள் குறித்து சட்­டத்தின்  முன் நிறுத்­தாது சட்டம், ஒழுங்கு அமைச்சு அவர்­களைப் பாது­காத்து வரு­வ­தான குற்­றச்­சாட்டை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். காமினி செனரத் தொடர்­பான  விட­யத்தை முன்­னிலைப் படுத்­திக்­கொண்டு, இந்த அசிங்கம் அரங்­கேற்­றப்­ப­டு­வது நன்கு வெளிச்­சத்­துக்கு வரு­கி­றது. தன் மீது தொடுக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டைத் தான் நிரா­க­ரிப்­ப­தாக சாகல ரத்னா­யக்க அறிக்­கை­யொன்றின்  மூலம் தெரி­வித்­துள்ளார். இவர் தன்னை நிர­ப­ரா­தி­யெனக் காட்­டு­வ­தற்கு  முயற்­சிக்கும் இந்­நி­லையில், அவர் குறிப்­பி­டு­வது உண்­மை­யெனில் அவ­ரிடம் இப்­ப­டி­யொரு கேள்­வியைத் தொடுக்­க­லா­மல்­லவா?

பொலிஸ்மா அதி­ப­ருக்கு உய­ரி­ட­மொன்­றி­லி­ருந்து வந்த தொலை­பேசி அழைப்­பி­னூ­டாக நிலமே ஒரு­வரை கைது செய்­வ­தி­லி­ருந்து தவிர்க்­கும்­படி கேட்­கப்­பட்­டுள்­ளதாம். குறித்த நிலமே இது­வரைக் கைதா­க­வில்லை. இது சாகல ரத்­நா­யக்­கவின் தொலை­பேசி அழைப்­பாகும்.

எனவே, நில­மேயின்  கைது  இடம் பெறா­மைக்கு சட்­டமும் ஒழுங்கும் அமைச்சர், எமக்கு மாத்­தி­ர­மல்ல,  முழு நாட்­டுக்கும் பதில் சொல்­லி­யாக வேண்டும்.

அடுத்த விடயம், சபா­நா­ய­கரின் வாசஸ்­த­லத்­திற்குச் சென்றே, குறித்த விசா­ரணை செய்யும் அதி­கா­ரிகள் சிராந்தி ராஜபக் ஷவி­ட­மி­ருந்து, வாக்கு மூலம் ஒன்றைப் பெற்­றுள்­ளார்கள். அப்­போது சபா­நா­ய­க­ராக இருந்­தவர் சமல் ராஜபக் ஷ. இவர் சிராந்­தியின் மைத்­து­ன­ராவார். இது மிகவும் விச­னிக்­கத்­தக்க செயற்­பா­டாகும். இதற்கு சபா­நா­ய­கரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்லம் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை குறித்து நாம் பின்­பொரு சமயம் பிர­த­ம­ரிடம் வினா எழுப்­பினோம். அவர் அளித்த பதில், எம்மை மேலும் ஆச்­ச­ரி­யத்­திற்­குள்­ளாக்­கி­யது.
"முன்னாள் ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்­கி­ணங்­கவே அவ்­வாறு நடந்து கொண்டேன்" என்ற பதிலே அவ­ரி­ட­மி­ருந்து வந்­தது. பிர­தமர் அளித்த இந்த சிறிய பதிலில் பொதிந்­துள்ள ஆழ­மான விட­யத்தைப் புரிந்து கொள்­வ­தற்கு எங்­க­ளுக்கு ஒரு வரு­டத்­திற்கும் மேலான காலம் எடுத்­தது. அதா­வது முன்னாள் ஜனா­தி­ப­தியைத் திருப்­திப்­ப­டுத்தும் வகை­யிலே பிர­தமர் இயங்கி வந்­துள்ளார் என்ற உண்­மையை உண­ரத்தான் இவ்­வ­ளவு காலம் எடுத்­துள்­ளது.

“சிரி­லிய” கணக்குத் தொடர்­பான  விசா­ர­ணைகள் யாவும் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் அடுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கோவை­யி­டப்­பட்டு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அங்கு அது தேங்­கி ­கி­டப்­பது யாரின் வேண்­டு­கோளின் பேரில் என்­பது எவ­ருக்­குத்தான் வெளிச்சம். சிராந்தி ராஜபக் ஷ கைது செய்­யப்­படும் நிலையில் இருந்தார். அடிமைச் சேவகம் புரியும்  கும்­ப­லொன்­றுடன் பிக்­குமார் சிலரும் தாம­ரை­மொட்டின் உறுப்­பி­னர்­களும் குற்­ற­வியல் திணைக்­க­ளத்­துக்கு வந்து எதிர்ப்­பினைத் தெரி­வித்­தனர். தேசத்தின் தாய்க்­காக இவ்­வாறு ஈடு­ப­டு­வ­தாக தம் ஆதங்­கத்தை வெளி­யிட்­டனர். இதன் விளை­வாக தேசத்தின் தாய் நிர­ப­ரா­தி­யான நிலையில் வீட்­டுக்குச் சென்றார். இவ்­வாறு அவர் விடு­விக்­கப்­ப­டவும் அழுத்தம் கொடுத்­தவர் யார்?

தாமரை மொட்டை மலரச் செய்­வ­தி­னூ­டாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை நலி­வுறச் செய்து வரு­வ­தாக ஸ்ரீல.சு.கட்சி அமைச்சர், உறுப்­பி­னர்கள் முணு­மு­ணுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்கள் மூல­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். இதனால் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் பெரும் கவ­லை­யுடன் காணப்­ப­டு­கி­றார்கள். அரச அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு, கட்­சியை இரண்­டாகப் பிள­வு­பட வைத்து வரு­கின்­றனர். அர­சி­ய­லமைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­ளவும் ஐக்­கிய தேசி­யக்­கட்சித் தலை­மையின்  நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றும் சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் அங்­க­லாய்க்­கின்­றனர். இவ்­வாறு பல்­லவி பாடிக்­கொண்­டி­ருப்­பதன் மூலம் தம் விருப்பு வெறுப்­புக்­களை சாதித்­துக்­கொள்ள அவர்­களால் முடி­யாது. துணிச்­ச­லுடன் சவா­லுக்கு முகம் கொடுத்தே சாதித்­துக்­கொள்ள முய­ல­வேண்டும். தம் பய­ணத்தில் குறுக்­கிட்டுக் கொண்­டி­ருந்த நீதி அமைச்­சரை வெளி­யேற்­று­வதில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­று­பட்டு காரியம் சாதித்­ததை நாம் அறிவோம். ஆனால் அதே­போன்று சட்­டமும் ஒழுங்கும் அமைச்­சரை வெளி­யேற்­று­வதில் ஐ.தே.க. உறுப்­பி­னர்கள் பயப்­ப­டு­வ­தா­கவே தெரி­கி­றது. அமைச்­ச­ருக்குப் பதி­லாக பிர­தமர் வெளி­யேற்­றப்­பட்­டு­வி­டு­வாரோ என்ற பீதிதான் அவர்­க­ளுக்­கி­ருக்­கலாம். இத்­த­கைய இழு­ப­றிக்கு  மத்­தியில் கூட்­டாட்சி தொடர்­வதும் முன் நகர்­வதும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

 தனது தலை­மைத்­து­வத்­துக்கு சவால் வரும் போது தான் எமது தலை­வ­ருக்கு விழிப்பு வரும் என்று ஐ.தே.க.வின் முக்­கி­யஸ்தர் ஒருவர் கூறி­யுள்ளார். 

சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த போது அப்­போது பத­வி­யி­லி­ருந்த ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து கலைக்கச் செய்தார். இதனால் ரணில் பிர­தமர் பத­வியை இழந்தார். சந்­தி­ரிக்கா எடுத்த இந்த தீர்­மானம் குறித்து அண்­மையில் இடம்­பெற்ற தனிப்­பட்ட உரை­யாடல் ஒன்றின் போது தகவல் கசிந்­தது. ரணில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ராக மகிந்த ராஜபக் ஷவுடன் தண்­ணீ­ருக்­குள்ளால் வினை விதைக்க முனைந்த போதே ரணிலை கீழே இறக்கும் இந்தத் தீர்­மா­னத்­துக்கு வந்­த­தாக சந்­தி­ரிகா உண்­மையை இப்­போ­துதான் கக்­கி­யி­ருக்­கிறார். 

இன்று ஐ.தே.க.கட்­சியைச் சேர்ந்த அனை­வரும் தெரிந்து கொள்ள வேண்­டிய மற்­றொரு பிர­தான கார­ண­மொன்­றுள்­ளது. அதா­வது ரணில் விக்­ர­ம­சிங்க மஹிந்த ராஜபக் ஷவுடன் நீருக்­க­டி­யி­லான அர­சியல் உற­வொன்­றுடன் நீண்ட கால­மாக கைகோர்த்துக் கொண்­டி­ருக்­கிறார். இந்தப் பழக்­கத்­தி­லி­ருந்து ரணிலால் விடு­பட முடி­யா­தி­ருப்­பதும் உண்மை. 

ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அரச மட்ட நண்­பர்கள் 7, 8 பேர் இருக்­கையில் இவர்­க­ளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆப்த நண்பன் மஹிந்த ராஜபக் ஷதான் என்று சொல்­லக்­கூ­டிய நபர்கள் குறித்தும் நான் அறிவேன். 

மற்­றொ­ருவர், இப்­படிக் கூறு­கிறார். ரணில் வெளியில் எப்­படி நடந்து கொண்­டாலும் தினேஷ் குண­வர்­த­ன­வுடன் இருக்கும் நட்பும் கூட சிறிய அள­வி­ன­தா­ன­தல்ல என்ற கருத்தை முன்­வைத்­துள்ளார். நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில் மஹிந்த ராஜபக் ஷவும் தினேஷ் குண­வர்­த­னவும் இப்­போது பிர­த­மரின் குறிக்­கோளை நிறை­வேற்­று­வ­தற்கே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை ஏற்­க­வேண்­டி­யுள்­ளது. 

இத்­த­கைய நீருக்­குள்­ளான அர­சி­யலால் நாடு நன்­மை­ய­டையப் போவ­தில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போதும் பின்னர் நடந்த பொதுத் தேர்­தலின் போதும் அர­சி­யலில் ஆழ்ந்த சிந்­த­னை­யுள்ள பலர் ரணிலை எந்த வி­தத்­திலும் நம்ப முடி­யா­தவர் என்றே என்­னிடம் கூறினர். எப்­ப­டியும் ரணில் மஹிந்­த­வுடன் எதிரும் புதி­ரு­மாக இருந்­தாலும் இது­வ­ரையும் மஹிந்­தவைக் காப்­பாற்றிக் கொண்­டி­ருப்­பவர் ரணில் தான். ரணில் சொல்­வதைத் தான் சாக­லயும் பின்­பற்­று­கிறார் என்றும் ஆய்­வாளர் ஒருவர்  என்­னிடம் தெரி­வித்தார். திலக் மாரப்­ப­னவின் இடத்­துக்கே சாகல நிய­மிக்­கப்­பட்டார். இதுவும் கார­ணத்­து­ட­னேதான் காரியம் சாதிக்­கப்­பட்­டுள்­ளது. தனக்கு விரும்­பிய விதத்தில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் கையில் வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே தான் இவ்­வாறு நடந்­து­கொண்­டுள்ளார். 

பிர­த­மரின் இத்­த­கைய செயற்­பாட்­டினால் இன்று கட்­சியில் விரல் விட்­டெண்ணக் கூடி­ய­வர்­களே அவர் சார்­பாக உள்­ளனர். பெரும்­பா­லானோர் கட்சித் தலை­வ­ருக்­கா­க­வன்றி கட்சி உயிர்­வாழ வேண்­டுமே என்­ப­தற்­கா­கதான் கட்­சி­யோடு ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றனர். பிர­த­மரின் இத்­த­கைய போக்கு கட்­சிக்கு மட்­டு­மன்றி நாட்­டுக்கும் நல்லதாக அமையப் போவதில்லை. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் மீதுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவை இப்போது பிரதமரின் பொறுப்பில் வந்துள்ளன. எனவே பாராளுமன்றத்தின் பயணத்தை சீராக வழிநடத்துவதற்கு இன்னும் காலம் மீதமாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்திலாவது பிரதமர் ஒரு சில மாற்றங்களைச் செய்தும் தனது இதுவரையான போக்கை  மாற்றியமைத்துக்கொண்டு செயற்பட முன்வருவாராயின் அது கட்சிக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் நல்ல சகுனமாகவே அமையும். அதிருப்தியுள்ள சிதைந்துபோயுள்ள உள்ளங்களுக்கும் ஒத்தடமாக அமையும். எனவே புரையோடிப் போயுள்ள புண்ணை ஆற்றச் செய்வதில் முதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். உடனடி நடவடிக்கையாக சாகல ரத்னாயக்கவை சட்டமும் ஒழுங்கும் அமைச்சிலிருந்து அகற்ற வேண்டும். 

அவ்வாறு அவர் செய்யத்  தவறுவாராயின் ராஜபக் ஷாக்களை காப்பாற்றும் தேவையில் பிரதமர் இன்னும் இருந்து கொண்டுள்ளார் என்பதே அதன் அர்த்தமாகும். 

கட்சியினதும் நாட்டினதும் தலைவிதி இப்போது இந்த சிக்கலிலிருந்து விடுவித்துக் கொள்வதிலேதான் தங்கியுள்ளது.  

நன்றி: ராவய