Verified Web

பாப்பரசரின் மியன்மார் விஜயமும் ரோஹிங்யாக்களும்

2017-11-28 23:44:42 Administrator

மியன்மார் நாட்­டுக்கு விஜயம் மேற்­கொண்ட பாப்­ப­ரசர் பிரான்சிஸ், "அனைத்து இனக் குழுக்­க­ளுக்கும் மரி­யாதை வேண்டும்" என்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­போதும் 'ரோஹிங்யா முஸ்­லிம்கள்' என்று குறிப்­பிட்டுக் கூறு­வதைத் தவிர்த்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

'ரோஹிங்யா சகோ­தர சகோ­த­ரிகள்' என்று குறிப்­பிட்டு அவர் தன் முந்­தைய உரை­களில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாகப் பேசி­யி­ருந்தார். எனினும் மியன்­மாரில் வைத்து இந்த வார்த்­தை­களை அவர் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. 

ரோஹிங்ய மக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் 'ரோஹிங்யா முஸ்­லிம்கள்' எனும் பதத்தைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் முன்­கூட்­டியே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. எனினும்  அந்தப் பதத்தைப் பயன்­ப­டுத்­து­வது, அந்­நாட்டில் வாழும் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு சிக்­கல்­களை உண்­டாக்கும் என்று மியன்­மாரில் உள்ள கத்­தோ­லிக்கத் திருச்­சபை பாப்­ப­ர­ச­ரிடம் கூறி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே பாப்­ப­ரசர் ரோஹிங்­யாக்­களை பெயர் குறிப்­பிட்டுக் கூறாது தவிர்ந்து கொண்­டுள்­ள­தாக ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. 

இனச் சுத்­தி­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யுள்ள மியன்­மாரில் நடக்கும் வன்­முறைச் சம்­ப­வங்­களில் இருந்து தப்­பு­வ­தற்­காக, சுமார் 6.2 இலட்சம் ரோஹிங்­யாக்கள் அண்டை நாடான பங்­க­ளா­தேஷில் தஞ்சம் அடைந்­துள்­ளனர்.

'ரோஹிங்யா' எனும் பதத்தை அங்­கீ­க­ரிக்க மறுக்கும் மியன்மார் அரசு அவர்­களை 'வங்­கா­ளிகள்' என்று அழைக்­கி­றது. அவர்­களை பங்­க­ளா­தேஷில்  இருந்து வந்த சட்­ட­வி­ரோதக் குடி­யே­றிகள் என்றும் அவர்­களை பூர்வக் குடி­க­ளாக கருத முடி­யாது என்றும் மியன்மார் அரசு தொடர்ந்தும் கூறி வரு­கி­றது. 

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் ரோஹிங்­யாக்கள் பற்றி  எதையும் குறிப்­பிட்டுப் பேசா­த­போதும், அவர்­களின் பூர்­வீக உரி­மை­க­ளுக்கு வலி­மை­யான ஆத­ரவு தரும் வகையில் அவ­ரது உரை அமைந்­தி­ருந்­த­தா­கவும் விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

"மியன்­மாரின் எதிர்­காலம் அமை­தியை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்க வேண்டும். சமூ­கத்தில் உள்ள ஒவ்­வொரு தனி நபரின் கண்­ணியம் மற்றும் உரி­மைகள், இங்­குள்ள ஒவ்­வொரு இனக்­கு­ழுக்கள் மற்றும் அவர்­களின் அடை­யா­ளத்­திற்­கான மரி­யாதை, சட்­டத்தின் ஆட்­சிக்­கான மரி­யாதை, எந்தத் தனி நபர் மற்றும் இனக் குழுக்­க­ளையும் புறக்­க­ணிக்­காத, அனை­வரின் நன்­மைக்கும் பங்­க­ளிக்கக் கூடிய ஜன­நா­யக அமைப்பு முறைக்­கான மரி­யாதை ஆகி­ய­வற்றை அந்த அமைதி அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்க வேண்டும்" என்று பாப்­ப­ரசர் தனது உரையில் குறிப்­பிட்­டுள்ளார்.

"மத வேறு­பா­டுகள் நம்­பி­கை­யின்மை மற்றும் பிள­வு­க­ளுக்­கான மூல­மாக இருக்கக் கூடாது. ஒற்­றுமை, மன்­னித்தல், சகிப்­புத்­தன்மை மற்றும் தேசத்தை திறம்­படக் கட்­ட­மைத்தல் ஆகி­ய­வற்றின் ஆதா­ர­மாக அது இருக்க வேண்டும்" என்றும் அவர் வலி­யு­றுத்­தினார்.

இதே­வேளை தலை­நகர் யங்­கூனில் பௌத்த, இஸ்­லா­மிய, இந்து, யூத மற்றும் கிறிஸ்­தவ சமயத் தலை­வர்­க­ளுடன் பாப்­ப­ரசர் நடத்­திய 40 நிமிட சந்­திப்­பின்­போதும், அவர் ரோஹிங்­யாக்கள் பற்றி நேர­டி­யாக எதுவும் குறிப்­பி­ட­வில்லை என வத்­திக்கான் அதி­கா­ரி­களின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எனினும் மியன்­மாரில் இருந்து பங்­க­ளாதேஷ் செல்லும் பாப்­ப­ரசர் அடை­யாள நிமித்­த­மாக ஒரு சிறு ரோஹிங்யா அக­திகள் குழுவைச் சந்­திப்பார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் மியன்­மா­ருக்கு விஜயம் செய்த பாப்­ப­ரசர் நாட்டின் செயல்­முறைத் தலை­வ­ராக உள்ள ஆங் சான் சூகி­யையும் சந்­தித்தார். இந்த சந்­திப்­பின்­போது ஆங் சான் சூகியும் தனது உரையில் ரோஹிங்­யாக்கள் பற்றிக் குறிப்­பி­ட­வில்லை. ரோஹிங்­யாக்கள் விவ­கா­ரத்தில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டு­வரும், நோபல் அமைதிப் பரிசு பெற்­ற­வ­ரான சூகிக்கு வழங்­கப்­பட்ட 'ஃபிரீடம் ஆஃப் தி இங்­கிலிஷ் சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட்' பட்டம் திங்­க­ளன்று பறிக்­கப்­பட்­டதும் இங்கு குறிப்­பிட்­டுக்­காட்­டத்­தக்­க­தாகும்.

பாப்­ப­ரசர் தனது விஜயத்தின் போது நேரடியாகவே ரோஹிங்யாக்கள் எனக் குறிப்பிட்டிருந்தால் சர்வதேச ரீதியாக அந்த மக்களுக்கு அங்கீகாரமொன்றைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும் என்பதுடன் மியன்மார் அரசுக்கு பெரும் அழுத்தமாகவும் அது அமைந்திருக்க கூடும். எது எப்படியிருப்பினும் பாப்பரசர் தொடர்ந்தும் ரோஹிங்யா மக்கள் விடயத்தில் கரிசனை செலுத்துவார் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.