Verified Web

கிந்தோட்டையில் ஒரு மினி அளுத்கம

2017-11-28 05:18:41 MBM.Fairooz

 

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த 17.11.2017 வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அசம்பாவி­தங்­களைத் தொடர்ந்து அவற்றை அறிக்­கை­யி­டு­வ­தற்­கான மறுநாள் சனிக்­கி­ழமை விடிவெள்ளி அங்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்­டது. 
இதன்­போது 2014 ஜூன் மாதம் அளுத்­க­மவில் இடம்­பெற்ற வன்முறைகளை நாம் அறிக்­கையிடச் சென்ற ஞாப­கங்­களே கண் முன் நிழலாடின. அளுத்­க­மவில் எவ்வாறு படையி­னரின் ஒத்­து­ழைப்புடன் இனவாதிகள் முஸ்­லிம்­களைத் தாக்கி சேதங்களை விளை­வித்­ததாக அந்த மக்கள் சொன்னார்­களோ, அதனையொத்த கதை­க­ளைத்தான் கிந்­தோட்டை மக்­களும் எம்­மிடம் சொன்னார்கள். நாம் சந்­தித்த மக்களின் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் அவர்­க­ளது திகில் அனுபவங்களையும் 'விடிவெள்ளி' வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்கிறோம். 


கிந்தோட்டையிலிருந்து எம்.பி.எம். பைறூஸ் 
படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்

''எஸ்.ரி.எப். இன் உத­வி­யு­ட­னேயே  தாக்­கி­னார்கள்''

எம்.எப்.எம்.பைரூஸ், ஹிழ்ர் பள்­ளி­வாசல் வீதி 

பதற்­ற­மான சூழல் இருந்­ததால் வீட்­டினுள் உள்ள  பெண்கள் தூரப்­ப­கு­தி­க­ளுக்கு சென்­று­விட்­டார்கள்.  மேலும் சிலர் குண்­டர்கள் வரும் சத்தம் கேட்­டதும் பின்­பக்­க­மாக சென்று  ஒளிந்து கொண்­டார்கள். 

அன்­றி­ரவு பதற்றம் பரவ ஆரம்­பித்த அதே சம­யத்தில் எமது வீட்டின் முன்­னுள்ள வீதியால் எஸ்.ரி.எப். ஜீப் ஒன்று சென்­றது. நான் அதனை நிறுத்தி ''அதோ வந்­து­விட்­டார்கள்...  அவர்­களை விரட்­டி­விட்டு எமக்கு பாது­காப்பு தாருங்கள்" என்று அந்த வாக­னத்­தி­ல் தொங்கிக் கொண்டு எஸ்.ரி.எப். அதி­கா­ரி­க­ளிடம் கெஞ்­சினேன். அதற்கு அவர்கள் அப்­படி யாரும் இங்கு வர­வில்லை என்று பதி­ல­ளித்­தார்கள். அந்தக் கணமே 20 பேர் கொண்ட குழு­வினர் வந்து தாக்க ஆரம்­பித்­தனர். இதனை எஸ்.ரி.எப். இனரும் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர்.

அம்­பிட்­டிய பகு­தியில் வீடு­களை உடைத்­து­விட்டு வந்­துதான் இந்த வீட்­டுக்கு வந்து உடைத்து மோட்டார் சைக்­கி­ளையும் இழுத்துப் போட்டு நெருப்பு வைத்­தார்கள். இந்தக் குண்­டர்கள் வீடு­களைத் தாக்­கு­வ­தற்கு எஸ்.ரி.எப். இனர் தமது வாக­னத்­தி­லி­ருந்து வெளிச்­சத்தைப் பாய்ச்சி உத­வி­னார்கள். இதனை நான் என் கண்­களால் கண்டேன். 

பின்னர் பொலிசார் கூட வந்­து­விட்டு திரும்பிச் சென்­று­விட்­டார்கள். பாது­காப்பு படை­யினர் எம்மை பாது­காக்க எந்த முயற்­சி­யையும் செய்­ய­வில்லை. தாக்­கு­தல்கள் நடை­பெ­றாத இடத்தில் நூற்­றுக்கு மேற்­பட்ட பொலிசார் நின்­றி­ருந்­தார்கள். முஸ்­லிம்­களின் வீடுகள் தாக்­கப்­பட்ட இடங்­களில் ஒருவர் கூட பாது­காப்­புக்கு இல்லை.  பள்­ளி­வா­ச­லுக்கு கூட எஸ்.ரி.எப். முன்னாலேயே தாக்குதல் நடத்தினார்கள்.   தாக்குதல்தாரிகளின் கைகளில்  பெற்றோல் கேன்கள் இருந்ததை நான் கண்டேன். 


''எனது பெயரைக் கூறி தேடி வந்து தாக்கினார்கள்''
எம்.சி.எம்.நஸீர் (பிரதேச சபை சாரதி)

நானும் எனது  மகளின் பிள்­ளைகள் மூவரும்  வீட்டின் நடு அறையில் இருந்தோம்.  அப்­போது  வீதியில் பல வீடு­களை தாக்­கிக்­கொண்டு செல்லும் சத்தம்  கேட்­டது. வீட்டின் வெளிக்­க­தவை நன்­றாக பூட்டி  வைத்­தி­ருந்தோம்.  அதை உடைத்­துக்­கொண்டு  உள்ளே வந்து பின்­பக்­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த மோட்டார் சைக்­கிளை உடைத்­தார்கள். நான் இந்த மோட்டார் சைக்­கிளை வாங்கி ஒரு மாதம் கூட ஆக­வில்லை. வீட்டின் கதவை உடைத்து  உள்ளே வர முயற்­சித்­தார்கள்.  ஆனாலும் அவர்­களால் அதனை உடைக்க முடி­ய­வில்லை. யன்­னல்­களை உடைத்­தார்கள். 

பின்னர்  இரண்­டா­வது முறை­யா­கவும் வந்து, "வெளியே வா"  என்று கூப்­பிட்டு வீட்­டுக்கு அடித்­தார்கள்.  ஆனாலும் நாங்கள் வெளியே வர­வில்லை.  பின்னர் அவர்கள் இங்­கி­ருந்து  போன பிறகு தான் நாங்கள்  வீட்டை விட்டு வெளி­யேறி வேறி­டத்­திற்கு போனோம்.
இந்தப் பகு­தியில்  என்­னு­டைய  பெயரை அனை­வரும் அறி­வார்கள். "நஸீரின் வீடு எங்கே?" என்று கேட்டுக் கொண்டு தான் வந்­தி­ருக்­கி­றார்கள். எனவே என்னை நன்கு  அறிந்த இப்­ப­கு­தியில் உள்­ள­வர்கள் தான் தாக்­கு­தல்­க­ளுக்கு வந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது புரி­கி­றது.  தாக்­கு­தல்­தா­ரி­களை அழைத்து வந்து என்­னு­டைய வீட்டைக் காண்­பித்த சிங்­கள இளை­ஞ­ருக்கு நான் தான் பிர­தேச சபையில் வேலை வாங்கி கொடுத்தேன். அவர் எனக்குச் செய்த நன்றிக் கடன் தான் இது. 

''கொள்ளையடிப்பதே நோக்கம்''

பைஸர், அம்பிட்டிய

இரவு 10 மணி இருக்கும்.  200–300 பேர் வரை­யான குழு­வினர் வந்து இந்தப் பகு­தியில் உள்ள வீடு­களை தாக்­கி­யி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளு­டைய பிர­தான நோக்கம் வீடு­களை கொள்­ளை­ய­டிப்­ப­தே­யாகும்.  என்­னு­டைய வீட்டில் பிர­தான வாயிலை உடைத்து உள்ளே வந்து நாலா­பு­றமும் உள்ள வீட்டின் யன்­னல்­களை எல்லாம் உடைத்­துள்­ளார்கள்.  வீட்டின் உள்ளே வந்து தள­பா­டங்­களை உடைத்து அலு­மா­ரியில் இருந்த சுமார் 25,000 ரூபா பணத்­தையும் எடுத்­துக்­கொண்டு சென்­று­விட்­டார்கள். 

குண்­டர்கள் வரு­வ­தாக கேள்­விப்­பட்­டதும் பிர­தேச இளை­ஞர்கள் எல்லாம் சேர்ந்து வெளியில் ஒன்று கூடி அவர்­களை எதிர்த்து நின்­றார்கள். ஆனாலும், அவர்கள் நூற்­றுக்­க­ணக்கில் வந்­ததால்  தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை. நாம் வேறு பகு­திக்கு பாது­காப்­பாகச் சென்று விட்டோம். 

கிட்­டத்­தட்ட 2 மணித்­தி­யா­லங்கள் இந்தப் பகு­தியில் நின்று தாக்­குதல் நடத்­தி­னார்கள்.  எங்கள் இளை­ஞர்கள்  கற்­களை எறிந்து மாத்­தி­ரமே அவர்­களை தாக்­கி­னார்கள்.  ஆனால், அவர்­களோ பெற்றோல் குண்டுகள்,போத்தல்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். 

''அலுமாரியை உடைத்து நகைகளை திருடிச் சென்றுள்ளார்கள்''

எம்.எஸ்.சித்தி பெ ள சியா, அம்பிட்டிய

இரவு 8 மணி இருக்கும். வீட்டில் நான் மாத்­தி­ரமே இருந்தேன். ஆண்கள் வெளியே போய்­விட்­டார்கள். தாக்­கு­தல்­தா­ரிகள் வரு­வ­தாக தகவல் கிடைத்­ததும் நான் பயத்தில் உயிரைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக  வீட்­டை­விட்டு ஓடி விட்டேன். நான் பாது­காப்­பிற்­காக முன்­வீட்டில் போயி­ருந்தேன்.  திடீ­ரென்று  என்­னு­டைய வீட்­டிற்குள் நுழைந்து அனைத்­தை­யுமே அடித்து நொறுக்­கி­னார்கள். டீ.வி, கேஸ் அடுப்பு  போன்ற உப­க­ர­ணங்­க­ளையும்  உடைத்து நொறுக்­கி­யுள்­ளார்கள். 

எங்­க­ளு­டைய அலு­மா­ரியை உடைத்து காப்பு, மாலை உள்­ளிட்ட நகை­க­ளையும் திருடிச் சென்­றுள்­ளார்கள். 
எங்கள் வீட்டில் புகுந்து  தாக்­கு­வ­தையும் கொள்­ளை­ய­டித்துச் செல்­வ­தையும் முன்­வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டும் கேட்­டுக் ­கொண்­டுமிருப்­ப­தைத் தவிர  வேறு எதையும் எம்மால் செய்ய முடியவில்லை. 

 

 

''கடை எரிந்து முடிந்­ததும்  'போதும் போங்கள்' என்று கூறி படை­யினர் அனுப்பி வைத்தனர்''
முஹம்மட் சாமில், ஹிழ்ர் பள்­ளி­வாசல் வீதி 

நான் 6 மணி­ய­ளவில்  கடையை மூடி­விட்டு வீட்­டி­லி­ருந்தேன். கடையை தீ வைத்துக் கொளுத்தும் போது இரவு 8 மணி இருக்கும். கடையில் பின்னால் இருக்கும் எனது வீட்டில் இருந்து நடப்­ப­வற்றைப் பார்த்துக் கொண்­டி­ருந்தேன். சந்­தியில்  எஸ்.ரி.எப். 4, 5 பேர்  நின்­றி­ருந்­தார்கள். அவர்கள் முன்­னி­லை­யி­லேயே எனது கடையை பற்­ற­வைத்­தார்கள்.  எனது கடை பற்றி முடிந்­ததும்  “போதும் போங்கள்” என்று கூறி எஸ்.ரி.எப். அவர்­களை அனுப்பி வைத்­தார்கள்.  பள்­ளி­வா­ச­லுக்கு தாக்­குதல் நடத்­தி­ய­போது கூட எஸ்.ரி.எப். பார்த்­துக்­கொண்டு தான்  நின்­றார்கள்.  

என்­னு­டைய  இலத்­தி­ர­னியல் உப­க­ரண கடை முற்­றாக எரிந்து சேத­ம­டைந்­துள்­ளது. இதனால் எனக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

 

''எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்''
அஸ்கர், அம்பிட்டிய

என்­னு­டைய வீட்டின்  முன் கதவை  உடைத்துக் கொண்டு உள்ளே வந்­தார்கள்.  நான்  எனது வீட்டின் பூந்­தோட்­டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்­தி­ருந்தேன்.  என்னை வாளாலும்  போத்­த­லாலும் தாக்­கி­னார்கள். 20 முதல் 25 பேர் வரை சேர்ந்து  என்னை பிடித்து  கழுத்தில் கத்­தியை வைத்­தார்கள்.  ஆனால் வந்­த­வர்­களில் இரண்டு பேர்  எனக்கு அறி­மு­க­மா­ன­வர்­க­ளாக இருந்­ததால் அவர்கள் என்னை ஒன்றும் செய்­ய­வேண்டாம் என்று சொன்­னார்கள்.  அதன் பிறகு  கழுத்தில் இருந்து கத்­தியை எடுக்க வைத்து  அவர்­களை வெளியே அனுப்பி விட்டு என்னை உள்ளே போகச் சொன்­னார்கள்.  இரவு 9.30 முதல் 10.00 மணிக்­குள்­ளேயே சம்­ப­வங்கள் நடந்­தன.  என்­னு­டைய வீட்டில் கதவு, யன்னல், மின்­வி­ளக்­கு­களை உடைத்­துள்­ளார்கள்.  எஸ்.ரி.எப். பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் போதுதான் இதையெல்லாம்  செய்தார்கள்.

 

''சில்லறைக் கடையை உடைத்து  சூறையாடினர்"

இரவு 8.30 மணியில் இருந்து தான் எமது பகு­தியை தாக்­கி­னார்கள்.  முன்­வீட்டில் தாக்குதல் சத்தம் கேட்­கவும்  நானும் எனது மகளும், ராத்­தாவும்  மின்­வி­ளக்­கு­களை அணைத்து விட்டு குளி­ய­ல­றையில்  ஒளிந்து கொண்டோம். எங்கள் வீட்டு ஆண்கள்  வெளியே போயி­ருந்­தார்கள்.  இரவு 2.00 மணி வரையும் நாங்கள் குளி­ய­ல­றையில் தான் ஒளிந்­தி­ருந்தோம். வெளியில் முச்­சக்­கர வண்டி பற்றி எரியும் வெளிச்சம் தெரிந்­தது. வீட்­டுக்குள் நுழைந்து பொருட்­களை உடைக்கும் சத்தம் கேட்­டது.  வெளியில் உள்ள எமது சிறிய சில்­லறைக் கடை­யையும் உடைக்கும் சத்தம் கேட்­டது.  ஆனாலும்  நாங்கள்  குளி­ய­ல­றை­யி­லேயே  ஒளிந்து கொண்டு இவற்­றை­யெல்லாம் கேட்­டுக்­கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தோம்.  'அவர்கள்  எதை­யா­வது  செய்து விட்டு போகட்டும்; எங்கள் உயிரை காப்­பாற்­றுவோம்' என்­பதே எங்­க­ளது நிலை­யாகும்.  

சில்­லறைக் கடையில் இருந்த சவர்க்­காரம், பிஸ்­கட்­டுக்கள், இரண்டு சோடி புதிய சப்­பாத்­துக்­களை கூட எடுத்துச்  சென்­று­விட்­டார்கள்.  சோடா போத்தல்களை எடுத்து எறிந்து உடைத்துள்ளார்கள். 

''வீதியில் வழி மறித்து என்னைத் தாக்கினர்''

 மெளலவி லுத்புல் அலீம்,  (செய­லாளர் - கிந்­தோட்டை ஜம்­மி­யத்துல் உலமா, 
அர­புக்­கல்­லூரி விரி­வு­ரை­யாளர், தலைவர் - கிந்­தோட்டை  பைத்துல் ஸகாத்)  

இஷா தொழுது விட்டு  வெளியே ஒரு வேலைக்­காகச் சென்றேன்.  பிர­தே­சத்தில் பதற்றம் நில­வு­வ­தாக  நான் அறிந்­தி­ருந்த போதிலும்  எமது வீதியில்  அப்­படி ஒன்றும் நடக்­காது என்று நினைத்தே நான் வெளியே சென்றேன்.  நான் வீட்­டிற்கு திரும்பி வந்து கொண்­டி­ருந்­த­போது வீட்டில் இருந்து  தொலை­பேசி அழைப்பு வந்­தது.  அப் பகு­தியில்  சிலர் கூடி நிற்­ப­தா­கவும் கவ­ன­மாக  வீட்­டிற்கு வந்து சேரு­மாறும் சொன்­னார்கள்.  அப்­போது  எனது தம்­பியின் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு அப்­ப­கு­தியில் ஆட்கள் சிலர் நிற்­ப­தா­கவும்  துஆ­வுடன்  வரு­மாறும் கேட்­டுக்­கொண்டார்.  நான் வந்து கொண்­டி­ருந்த போது கிந்­தோட்டை சந்­தியில் வழ­மைக்கு மாற்­ற­மான அமைதி நில­வி­யது.  ஒரு முச்­சக்­கர வண்­டி­யையும் காண­வில்லை. 

முஸ்லிம் பகு­திக்குள் நான் நுழையும் போது அந்த இடத்தில் ஒரு பெரிய கூட்டம் நின்­றது. அதில் 30, 40 பேர் இருப்­பார்கள்.  பொலிஸும் இருந்­தார்கள்.  நான் அங்­கி­ருந்து மீண்டும் திரும்பிச் செல்ல யோசித்த போது  பொலிஸ் நின்­றதால் எனது வீட்டை நோக்­கியே பய­ணித்தேன்.  பொலிஸும் என்னைப் போகலாம் என்று தான் கூறி­னார்கள்.  நான் அவர்­களை கடந்து செல்­லும்­போது  ''அவனை பிடி... அவனை பிடி...'' என்று  சிலர் சத்தம் போட்­டார்கள்.  நான் அவர்­களை  திரும்­பிப்­பார்த்தேன்.  அப்­போது  ''மஹத்­தையோ  மஹத்­தையோ'' என்று  ஒரு குரல் கேட்­டது.  அது எனக்கு  பரிச்­ச­ய­மான குர­லாக இருந்­தது. நான்  அங்­கி­ருந்து  செல்ல முற்­பட்­ட­போது ஒருவன் மீண்டும் '' நிறுத்து நிறுத்து'' என்று சத்தம் போட்டு என்­னு­டைய  பைக்கை இழுத்தான். 

ஆனாலும் நான் நிறுத்­தாது சென்றேன்.   மீண்டும் பல­மாக பிடித்­தி­ழுத்தான்.  இதனைக் கண்ட பொலிஸார்  ''அவரை விடுங்கள்'' என்று  சத்தம் போட்­டனர்.  அந்த நேரத்தில் ஒருவன்  நன்­றாக ஓங்கி  எனது தோள்­பட்­டையில் அடித்தான்.  எதனால் அடித்தான் என்று  நான் கவ­னிக்­க­வில்லை.  அவன் தலைக்குத் தான் அடித்தான். ஆனாலும் நான் ஹெல்மட் அணிந்­தி­ருந்­ததால்  தலையில்  பட­வில்லை. நான் உடனே அங்­கி­ருந்து வேக­மாக தப்பி ஓடி வந்து விட்டேன்.  அங்­கி­ருந்த 30, 40 பேரில்  யாருமே  இப்­ப­கு­தியைச் சேர்ந்­த­வர்கள்  அல்ல. எல்லோரும் புதியவர்களாகவே இருந்தார்கள்.  அதன் பிறகு தான் ஊரில்  இப்படியொரு  பிரச்சினை நடப்பது தெரிய வந்தது.  

''மீண்டும் வெளிநாட்டுக்குப் போவோமா என யோசிக்கிறேன்''

 மெளலவி யாஸிர் (பயானி)

 தாக்­கு­த­லுக்கு வரு­கி­றார்கள் என அறிந்து என்­னு­டைய மோட்டார் சைக்­கிளை வீட்டின் பின்­பு­ற­மாக  கொண்டு சென்று  பாது­காப்­பாக நிறுத்தி வைத்தேன். வீட்டின் கத­வையும் நன்­றாகப் பூட்­டி­விட்டு  வீட்டின் மேல்­மா­டியில் போய் மறைந்­தி­ருந்தோம்.

முன் கதவை நீண்­ட­நே­ர­மாக பல­மாக தாக்கி உடைத்து உள்ளே வந்து வீட்டின் உள் கத­வு­க­ளையும் யன்­னல்­க­ளையும் உடைத்­தார்கள். அவர்­களில் ஒரு குழு­வினர் வீட்டின் பின்­பக்­க­மாக  சென்று மோட்டார் சைக்­கிளை தூக்­கிக்­கொண்டு வந்து வீட்டின் முன்­பாக  போட்டு  பற்­ற­வைத்­தார்கள்.  வீட்டின் உள்ளே வந்து  தள­பா­டங்­களை உடைத்­தார்கள்.  5, 6 பேர்  வீட்டின் படுக்கை அறைக்குள் வந்து  அலு­மா­ரியை உடைத்து  அதில் இருந்து லாச்­சியை எடுத்துக் கொட்டி  அதி­லுள்ள பெறு­ம­தி­யான பொருட்­களை  தேடி­னார்கள். என்­னு­டைய மனைவி நகை­களை  சிறிய பூச்­சா­டிக்குள்  மறைத்து பாது­காப்­பாக வைத்­தி­ருந்தார். அதைக் கூட  தேடி எடுத்து  அதற்குள் இருந்த சுமார் 1 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகை­களை  திரு­டிச்­சென்­றுள்­ளார்கள்.  அலு­மா­ரிக்குள் இருந்த அத்தர் குப்­பியைக் கூட  விட்டு வைக்­க­வில்லை.  அத­னையும்  கிண்டிப் பார்த்­துள்­ளார்கள். 

சுமார் 20 நிமி­டங்கள் வீட்டின் உள்ளே இருந்து திரு­டி­னார்கள். இதனை மேல்­மாடி படிக்­கட்டில் இருந்து நான் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன். கீழே வந்து அவர்­களை எதிர்க்க வேண்டும் என எனது கைகள் துடித்­தாலும் என்­னு­டைய மனைவி ஒரு கையில் குழந்­தை­க­ளையும் மறு­கையால் என்­னை­யும் பிடித்துக் கொண்டு 'போக வேண்டாம்' என அழுதார்.  அவர்கள் கைகளில் கத்­திகள், டோச் லைட் போன்­ற­வற்­றையும்  கொண்­டு­வந்­தி­ருந்­தார்கள். 

65 வய­திற்கு மேற்­பட்ட  எமது மாமா, மாமி, நான் என்­னு­டைய மனைவி  இரு குழந்­தைகள் ஆகியோர் மேலே  ஒளிந்­தி­ருந்தோம்.   அவர்­க­ளையும் பாது­காக்க வேண்டும், வீட்­டையும் பாது­காக்க வேண்டும் என்ற தர்­ம­சங்­க­டத்தில் நான் இருந்தேன்.  சமை­ய­ல­றைக்குள் வந்து  அங்­கி­ருந்த பொருட்­க­ளையும் உடைத்­தார்கள்.  

நான்  ஐந்து மாதங்­க­ளுக்கு முன்னர் தான் இந்த மோட்டார் சைக்­கிளை புத்தம் புதி­தாக வாங்­கினேன்.  நான் பல வரு­டங்­க­ளாக  டுபாயில் வேலை செய்து  உழைத்து வீடு கட்டி முடித்து நமது நாட்டில் நிம்­ம­தி­யாக குடும்­பத்­துடன் வாழலாம் என்று தான் வந்தேன்.  ஆனால்  எனது வீட்டையும் சேதப்படுத்தி எனது வாகனம், நகைகளையும் அழித்து விட்டார்கள். இப்பொழுது மீண்டும் டுபாய்க்கு போய்விடுவோமா என்று  யோசிக்கிறேன். 

''நண்பர் என்னிடம் தந்துவிட்டுச் சென்ற ஆட்டோவையும் எரித்துவிட்டார்கள்''
முஹம்மது ரிம்ஸர்

இரவு 11மணி­யி­ருக்கும்  அப்­போ­துதான் இந்த சம்­பவம் நடந்­தது. இந்த முச்­சக்­கர வண்டி என்­னு­டைய  நண்­ப­ரு­டை­யது.  அவர்  நுவ­ரெ­லி­யா­விற்கு ஒரு   வேலை­யாகப் போயுள்­ளதால் வண்­டியை  எனது வீட்டில்  நிறுத்தி விட்டுச் சென்றார். பாட­சா­லையில் படிக்கும் அவ­ரது மகளை ஏற்றிச் செல்ல உத­வு­மாறு கூறியே என்­னிடம் முச்­சக்­க­ர­வண்­டியைத் தந்தார். அதனைத் தான் இன்று தீ வைத்து எரித்து விட்­டார்கள். 

நானும் எனது நண்­பர்­களும் இவற்றை  ஓரி­டத்தில்  ஒளிந்­தி­ருந்து  பார்த்துக் கொண்­டி­ருந்தோம். நான் சுக­வீ­ன­முற்­றவர் என்பதால் என்னால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. 

 

''எங்கள் ஆட்டோவுக்கும் தீ வைத்து இரத்தினக் கற்களையும் திருடிச் சென்றார்கள்''

முஹமட் அப்ரார், அம்­பிட்­டிய

நாங்கள் வழமை போன்று  இரவு 8 மணிக்­கெல்லாம் தூங்­கி­விட்டோம்.  கடந்த இரண்டு, மூன்று நாட்­க­ளாக இந்தப் பகு­தியில்  பதற்றம் நில­வி­யது எங்­க­ளுக்குத் தெரியும்.   ஆனாலும், இப்­ப­டி­யெல்லாம் தாக்­கு­வ­தற்கு வரு­வார்கள் என்று நாம் நினைக்­க­வில்லை. அவ்­வா­றான தக­வல்கள் எதுவும் எங்­க­ளுக்கு கிடைக்­க­வு­மில்லை.  இப்­ப­கு­தியில் உள்ள ஏனை­ய­வர்கள்  முன்­கூட்­டியே தக­வல்கள் கிடைத்­ததால் அவர்­க­ளு­டைய முச்­சக்­க­ர­வண்­டி­களை  வேறு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு  கொண்டு போய்­விட்­டார்கள்.  ஆனால், எமக்கு  எதுவும் தெரி­யா­ததால்  நாம் தூங்­கி­விட்டோம். 

சத்தம் கேட்­டதும் தான் வெளியே வந்து பார்த்த போது நூற்­றுக்­க­ணக்­கானோர் வீட்டைச் சூழ்ந்து  தாக்­கி­னார்கள்.  நானும் வாப்­பாவும் உம்­மாவும் உள்ளே போய் ஒளிந்து கொண்டோம். பின்னர் பெற்றோல் குண்­டு­களை கொண்டு வந்து என்­னு­டைய முச்­சக்­க­ர­வண்­டியை  கொளுத்­தி­னார்கள்.  இரவு 8 மணி முதல் 11 மணி வரை  இப்­ப­கு­தியில் தாக்­கிக்­கொண்டே இருந்­தார்கள்.  பொலிஸ் ஜீப் எமது வீட்­டுக்கு  முன்னால் நின்று கொண்­டி­ருந்­த­பொ­ழுது தான்  இவர்கள் தாக்­கி­னார்கள். பொலிஸ் ஜீப்பின் வெளிச்­சத்தை பயன்­ப­டுத்தி தான்  தாக்­கி­னார்கள். 

முச்­சக்­கர வண்­டிக்கு நெருப்பு வைத்­ததால் அது முற்­றாக பற்றி எரிந்து வீட்டின் முகப்பு கூரையில் எரிந்து விழுந்­தது. பின்னர்  கரண்ட் வய­ரிலும்  தீப்­பற்­றி­யதால் நாங்கள் பயந்து போய் வீட்­டுக்­கான மின் இணைப்பை துண்­டித்தோம்.  பின்னர்  இரவு 12.30 மணி­ய­ளவில்  எல்­லோரும் போய்­விட இரண்டு பேர்  கொள்­ளை­ய­டிப்­ப­தற்­காக  எங்­க­ளது வீட்­டிற்குள் நுழைந்­தார்கள்.  உடனே  நானும் வாப்­பாவும்  கத்­தியை எடுத்துக் கொண்டு அவர்­களை எதிர்­கொண்டோம்.  அவர்கள் பயந்து ஓடி­விட்­டார்கள். 

பிறகு  எங்­க­ளுக்கு தெரிந்­த­வர்கள் வீட்­டிற்கு வந்து எங்­களை  பாது­காப்­பாக அழைத்துச் சென்று ஓரி­டத்தில் தங்க வைத்­தார்கள். காலையில் ஊர­டங்குச் சட்டம் முடிந்த பிறகு தான்  நாங்கள் வீட்­டிற்கு வந்தோம்.  

காலையில் வந்து பார்த்தால்  எங்கள் வீட்­டி­லி­ருந்த  நகை­க­ளையும் எனது தந்­தை­யிடம் பட்டை தீட்­டு­வ­தற்­காக  கொடுக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரத்தினக் கற்­க­ளையும் கள­வாடிச் சென்­றுள்­ளது தெரிய வந்­தது. இரவு 1 மணிக்குப் பின் வந்து தான் இதனை கள­வெ­டுத்­துள்­ளார்கள்.  

ஊர­டங்குச் சட்டம் போடப்பட்டு  இப்பகுதி  மக்கள் எல்லாம் வெளியேறிய பிறகு தான்  இதனை கொள்ளையடித்துள்ளார்கள். அருகில் உள்ள விகாரையில் கூட்டம் கூடியே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.