Verified Web

பொலிஸ்மா அதி­பரே வெட்கம்

2017-11-28 04:54:26 Administrator

கிந்தோட்டை அசம்பாவிதங்கள் தொடர்பில் 22.11.2017 இல் வெளியான“மவ்பிம” பத்திரிகையின்ஆசிரியர் கருத்தை தமிழில் தருகிறோம். 

தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார்

தீப்­பற்­றி­யெ­ரிந்த கிந்­தோட்டை இப்­போது அணைந்­துள்­ளது. ஆனால் சாம்­ப­லுக்குள் புதைந்­துள்ள நெருப்­புத்­தணல் மீண்டும் சிதறி வெடிக்­கக்­கூடும். இது குறித்து மிகவும் உன்­னிப்­புடன் இருக்க வேண்டும். அதனால் பொலிஸார் மீது பாரிய பொறுப்­பொன்று சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, கடந்த 20 ஆம் திகதி காலி நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்ற மக்கள் பொலிஸ் பிரிவைப் பலப்­ப­டுத்தும் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­தினார். அவ­ரது உரையில், கிந்­தோட்டை பேர­ழிவைத் தடுத்து நிறுத்­து­வதில் பொலி­ஸாரும், பொது­மக்­களும் தோல்வி கண்­டுள்­ளனர் என்று கவலை வெளி­யிட்­டுள்ளார். பொலிஸ் இந்த இடத்தில்  “தோல்வி” அடைந்­தி­ருந்தால் அதன் முழுப்­பொ­றுப்­பையும் வேறு­யா­ரு­மல்ல, பொலிஸ்மா அதி­பரே ஏற்க வேண்டும்.

வாகன விபத்­தொன்றின் விளை­வாக உரு­வான சிறு பிரச்­சினை சுமூ­க­மாகத் தீர்க்­கப்­பட்ட பின்னர் வெளியார் தலை­யீடு கார­ண­மாக விஸ்வ ரூப­மெ­டுத்துப் பற்­றி­யெ­ரிந்­தது. இதனால் 116 பாதக விளை­வுகள் சம்­ப­வித்­துள்­ளன. 74 வீடு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்­டுள்­ளன. 16 வர்த்­தக நிலை­யங்கள், 6 முச்­சக்­க­ர­வண்­டிகள், ஒரு லொறி, ஒரு வேன் வண்டி, மூன்று மோட்டார் சைக்­கிள்கள் என்று நாச அழி­வுகள் சம்­ப­வித்­துள்­ளன.

இந்த நாச­காரச் செயல்­க­ளுக்கு உடந்­தை­யா­ன­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் முன்னாள் பிர­தேச சபை உறுப்­பினர் உள்­ளிட்ட இரு­பது பேர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது இம்­மாதம் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைத்­தி­ருக்க நீத­வானால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அளுத்­க­மையில் இடம்­பெற்ற கறுப்பு ஜூன் நாசத்தைப் போலில்­லா­வி­டினும் இதுவும் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ‘அளுத்­கம’ அனு­பவம் இருக்­கையில், ‘கிந்­தோட்டை’ பாரிய பாதிப்­புக்கள் நிகழும் வரை பொலிஸார் பார்த்­தி­ருந்­த­துதான் இப்­போது எழுந்­துள்ள வினா­வாகும். வெளி­யி­டங்­களில் இருந்து  வந்­த­வர்­க­ளா­லேயே அளுத்­கமை அட்­ட­காசம் நடத்­தப்­பட்­டது. அப்­போது, அக்கலவரம், ஒரு சில அர­சி­யல்­வா­திகள், ஒரு சில பிக்­கு­மார்கள் மற்றும் மத­வா­தி­க­ளா­லேயே தூண்­டப்­பட்­டது. அதே பாணி­யிலே கிந்­தோட்­டை­யிலும் குழப்­பத்­துக்குத் தூப­மி­டப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

சகல இனங்­க­ளுக்­கி­டை­யேயும், எல்லா மத பக்­தர்கள் மத்­தி­யிலும்  இன­வா­திகள், மத­வா­திகள் மற்றும் சந்­தர்ப்­ப­வா­திகள் காணப்­ப­டு­கின்­றனர். பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவும், சிக்­கல்­களைப் பூதா­க­ர­மாக்­கவும் அவர்கள் வல்­ல­வர்கள். இத்­த­கை­யோ­ருக்கு இட­ம­ளிக்­கா­மலும் அதற்­கான வாய்ப்­பினைக் கொடுக்­கா­மலும் நடந்து கொள்ள வேண்­டி­யது பொலி­ஸாரின் பொறுப்­பாகும். அசம்­பா­வி­தங்கள் சம்­ப­வித்­ததும் அதன் பொறுப்பை மக்கள் தலை மீது கட்­டு­வ­தென்றால் பொலிஸ் ஒன்று அவ­சி­ய­மில்லை.

கிராம மட்­டங்­களில் மக்கள் பாது­காப்புக் குழுக்கள் இயங்­கு­கின்­ற­னவா? என்று தேடிப்­பார்ப்­பது பொலிஸ் பிரிவின் பணி­யாகும். பாது­காப்­புக்­குழு முறை­யாக செயற்­பட்­டி­ருந்தால் இத்­த­கைய அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்­தி­ருக்­காது என்று அடா­வ­டித்­த­னங்கள் நடந்து அழி­வுகள் ஏற்­பட்ட பின்னர் கருத்து வெளி­யி­டு­வதில் அர்த்­த­மில்லை.

பொலிஸார் மாத்­தி­ர­மல்ல குறிப்­பிட்ட பகு­தி­யி­லுள்ள அர­சி­யல்­வா­தி­களும் இதற்கு பொறுப்­பு­தா­ரி­கள்தான். பொலிஸ் பிரிவில் பல­வீ­னங்கள் காணு­மி­டத்தில் அந்த இடத்தில் தலை­யிட்டு சீர்­செய்ய வேண்­டி­ய­வர்கள் அர­சி­யல்­வா­திகள் தான். இதனால் சம்­பந்­தப்­பட்ட எந்தத் தரப்­பி­னரும் தம் பொறுப்பை சரி­யாகச் செய்யத் தவ­றி­யுள்­ள­மையே கிந்தோட்டையில் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

சந்­தர்ப்­ப­வா­தி­களும், இன­வா­தி­க­ளும்தான் இந்த சந்­தர்ப்­பங்­களில் மிகவும் அட்­ட­கா­ச­மாகத் தொழிற்­ப­டு­கி­றார்கள். சிறு தீப்­பொ­றி­யொன்றைக் கண்டால் அதனை ஊதி பாரிய தீச்­சு­வா­லை­யாக்­கு­வ­தற்கு இத்­த­கையோர் இரவு பகல் என்று பாராது பாடு­பட்டு காரியம் சாதிப்பர். அதற்­காக இணை­யத்­த­ளங்கள் முக­நூல்­களில் வதந்­திகள், வாய்­ஜா­லங்­களைக் காட்­டுவர். இயன்ற எல்லா ஊட­கங்­க­ளையும்  பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­திலும் இவர்கள் கை தேர்ந்­த­வர்­கள்தான்.

தீயை அணைப்­ப­தற்­காக இருக்கும் பொலி­ஸாரும் தீ மூட்­டு­வோ­ரிடம் தோல்­வி­ய­டைகிறார்கள். கிந்­தோட்­டை­யிலும் இந்த இய­லா­மை­யைத்தான் கண்­டு­கொண்டோம்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் கூற்­றுக்­க­மைய, மேற்­படி சம்­ப­வத்­துக்கு ஓர் இனம், ஒரு மதம் என்று நோக்கி செயற்­பட்­ட­மையே கார­ண­மாகும். இதனால் மனி­தா­பி­மா­ன­மற்ற பிர­தி­ப­லனே எமக்குக் கிடைத்­தது. இதனால் மக்­க­ளது குறையைத் தேடு­வ­தற்கு முன்னர் பொலி­ஸாரின் இய­லாமை குறித்தும் கண்­ட­றிய வேண்டும்.

பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு வணக்க வழி­பாடு குறித்து சொல்லிக் கொடுப்­ப­தற்கு முன்னர் சகல மக்கள் மத்­தி­யிலும் சரி சம­மாக நடந்­து­கொள்­வது பற்றி போதிக்க வேண்டும்.

தலைக்கு மேல் இரத்தம் வழிந்­தோ­டிய நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்­கெ­டுக்­காது பார்த்­துக்­கொள்ள வேண்டும்.
அளுத்­கம அசம்­பா­வி­தத்தில் இருந்து பொலிஸார் இன்னும் பாடம் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற உண்­மைதான் கிந்­தோட்டை சம்­ப­வத்தின் மூலம் தெரிய வரு­கின்­றது. மேலும் அரச அனு­ச­ர­ணையும் கிந்­தோட்டை சம்­ப­வத்­துக்கு கிடைத்­தி­ருந்தால் நிலைமை பார­தூ­ர­மான விளை­வு­களைத் தந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால், அரச மட்­டத்­தி­லி­ருந்தும் ஊட­கங்கள் மூலமும் கலவரத்துக்கு எதிராக கிடைத்த ஒத்­து­ழைப்­புக்­களால் இந்த கிந்­தோட்டை கல­வரம் மேலும் பர­வாது தடுக்­கப்­பட்­ட­மையே உண்­மை­யாகும்.

நகத்தால் கிள்­ளு­வதை கோட­ரியால் வெட்டும் நிலைக்கு வரு­வதைத் தடுக்க பொலிஸார் நடந்து கொள்­ள­வேண்டும். இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் பொலிஸார் தரா­தரம் பாராது கட­மையில் கண்ணாக இருக்க வேண்டும். தீ பற்றும்போதே உடனே அதனை அணைத்துவிடும் பொறுப்பு பொலிஸாரிடமே உள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இப்போது மக்களிடமிருந்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கிந்தோட்டை நிகழ்வும் இப்போது அதில் புதிதாக இணைந்துள்ளது.

பொலிஸாரின் இயலாமை குறித்து மீண்டும் பொதுமக்களிடமிருந்து விமர்சனக்கணைகள் எறியப்படாதிருக்க பொலிஸ்மா அதிபர் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். இந்த அவப்பெயரிலிருந்து விடுபட்டு சாதனையுள்ள பொலிஸ்துறை என்ற சிறப்பை உருவாக்குவதற்கு பொலிஸ்மா அதிபர் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். பொலிஸ்மா அதிபருக்கு இதற்கான காலம் இன்னும் கனிந்து கொண்டிருக்கிறது.