Verified Web

மது பாவனையை ஊக்குவிக்கும் பட்ஜட்

2017-11-15 01:04:48 Administrator

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளமையானது அதன் பாவனையை ஊக்குவிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.  நிதி அமைச்சர் இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''தவறான புள்ளிவிபர தரவுகளைக் கொண்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் மது பாவனைக்குத் தூண்டப்படுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் துணைபுரியும் அபாயம் காணப்படுகின்றது’' என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் பியருக்கான வரி குறைப்பு தொடர்பில் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அளித்த பதில் நகைப்புக்குரியதாகும். மென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவின் இந்தக் கூற்றை விமர்சித்து ஆங்கில பத்திரிகை ஒன்று நேற்றைய தினம் கார்ட்டூன் ஒன்றையும் வரைந்திருந்தது. அதில்  அமைச்சர் மங்கள பாடசாலைச் சிறுவன் ஒருவனை மென் பான குவளையிலிருந்து தூக்கி பியர் குவளைக்குள் அமிழ்த்துவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இதுவே யதார்த்தமுமாகும்.

அதேபோன்று மென் பானத்துடன் பியரை ஒப்பிடும் அமைச்சர் மங்களவின் இந்தக் கருத்தானது வெட்ககரமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வர்ணித்துள்ளது. இலங்கை நீரிழிவு சங்கமும் இதனைக் கண்டித்துள்ளது. 

இன்று மாணவர்கள் மத்தியில் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. முதலில் கூட்டமாக சேர்ந்து பியர் அருந்தப் பழகும் மாணவர்கள் பின்னர்  மதுவுக்கு அடிமையாகின்றனர். அந்த வகையில் புதிய வரவு செலவுத் திட்டத்தில் பியருக்கு விலை குறைக்கப்பட்டமையானது மாணவர்கள் இலகுவாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது. 

பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களை போதையிலிருந்து மீட்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அதன்பால் ஊக்குவிக்கும் வகையில் செயற்படக் கூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரி விலக்கு அளித்திருந்தமையும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். அப்பிரதேச அரசியல்வாதிகள், மத தலைவர்கள், பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதனைக் கூட இந்த அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாதிருப்பது வெட்கக் கேடானதாகும்.

இவ்வாறான பின்னணியில் பியர் பாவனையை ஊக்குவித்து இளம் சமுதாயத்தையும் மது பழக்கமற்றவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ள வரவு செலவுத்திட்டத்தின் குறித்த உள்ளடக்கம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். இது தொடர்பில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.